தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும் தொடரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும் தொடரும்

 'திராவிட மாடல்' மாட்சியும், தோழமைக் கட்சிகளும் - மக்கள் ஆதரவும் நமக்குண்டு!

 9 ஆண்டுகாலமாக மதவாத நச்சுக்கரங்களில் நாட்டு ஆட்சி! மீட்டெடுப்பது நமது கடமை!

மக்கள் தயாராகிவிட்டனர்; எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து

மதவாத ஆட்சியை ஒழித்திட-செயல்பட முந்தவேண்டும்!

இறுதி மூச்சுவரை எம் பணி தொடரும்

நாட்டை 9 ஆண்டுகாலமாக மதவாத சக்தி ஆண்டுகொண்டுள்ளது. மக்கள் தயாராகி விட்டனர். எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மதவாத சக்தியை, ஆட்சியை வீழ்த்த முனைந்துவிட்டனர். நம் பிரச்சாரப் பயணமும் இன்னொரு பக்கத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கழகக் கொள்கை உறவுகளே, பகுத்தறிவாளர்களே, இன உணர்வுச் செம்மல்களே, ஜனநாயகக் காவலர்களே,

இன்று (1.1.2023) புத்தாண்டு பிறந்த நிலையில், கழகக் கொள்கை உறவுகளான பெரியார் பன்னாட்டு அமைப்பு உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தாலும், ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்'' என்பதற்கே அருந்தொண்டாற்றி வரும் எமது அருமைத் தோழர்களே, உங்களுக்குப் பாசம் பொங்கும் வாழ்த்துகள்!

தந்தை பெரியார் மறைந்து  49 ஆண்டுகளாகியும் இலட்சியத்தால் ஈர்க்கும் சக்தியாக உள்ளார்

உடலால் தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகள் ஆனாலும், கொள்கைப் பயணத்தில் இலட்சிய மயமாகி அங்கிங்கெனாதபடி இளைஞர்கள் ஏந்தும் அறிவுச் சுடராக அய்யா தந்தை பெரியார் காட்சியளிப்பதோடு, அவர்களது அறிவுப் போர்க் களத்தில் அரும்பெரும் பேராயுதமாக காட்சியளித்து, அவர்களை ஈர்க்கும் இணையற்ற சக்தியாகவே பெரியார் திகழ்கிறார்கள்.

கடந்த ஆண்டில் அடர்த்தியான கழகப் பணிகள், நாட்டினரை வியக்கச் செய்துள்ளது; நமது கொள்கை எதிரிகள் மருளுகின்றனர்.

ஆரியத்தின் எரிச்சலே இதற்கான அளவுகோல்!

‘திராவிட மாடல்' ஆட்சியும், அதன் ஒப்பற்ற முதல மைச்சரும் நாளும் சாதனைக் களத்தில் சரித்திரம் படைப்பது 2024 இல் ஓர் அரசியல் திருப்பம் ஏற்படுத்துவதற்குரிய நம்பிக்கை ஒளியாகும்!

இந்தியாவின் எல்லா பகுதிகளின் பார்வையும் தெற்கு - குறிப்பாக தமிழ்நாட்டின்மீது - அதன் ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஆற்றல்மிகு தலைமையின் ஒருங்கிணைப் பின்மீது எதிர்பார்ப்பாகவே இருக்கிறது!

‘யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே'' என்ற பழமொழிகேற்ப, தாய்க்கழகத்தின் தமிழ் நாட்டுப் பிரச்சாரப் பணியும், அதன் பிறகு தேவைப்படும் அனைத்திந்திய ஒருங்கிணைப்பு கொள்கைப் பணியும் நம்மீதுள்ள கடமைச் சுகங்களான சுமைகளாகும்!

நமது பயணம் இலக்கை நோக்கியே!

கடந்த ஆண்டில், “குடிசெய்வார்க்கில்லை பருவம்'' என்று உழைத்த கருஞ்சிறுத்தைகளே, உங்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு - வாழ்த்துகள் - கோடி நன்றிகள்! நன்றி எதிர்பாராதவர்கள் நாம் என்றாலும்கூட!

திராவிடர் திருநாள் பொங்கல் முடிந்த பிறகும் ஒரு மாதம் தொடர் நிகழ்ச்சிகளால் நான் குறையும் மெழுகுவத்தியாக ஆகாமல், விரியும் ஒளிச்சுடர் ஏந்தும்  வெளிச்ச பணியாளனாகவே வருகிறேன் - வளருகிறேன். அனைத்துத் தோழமைக் கட்சிகளின், முதலமைச்சரின், தி.மு.க. கொள்கைக் குடும்ப உறவுப் பாசமும்தான் காரணம்!

இராணுவக் கட்டுப்பாட்டையும் விஞ்சும் கழகக் கட்டுப்பாடு - எடுத்துக்காட்டாக எப்போதும் எவருக்கும் தெரிகிறது -புரிகிறது!

களத்தில் நிற்கும் போர் வீரர்கள் ஓய்வைப்பற்றி கவலைப்பட முடியுமா?

இன எதிரிகளின் வியூகங்களை நமது அறிவுக் கண்மூலம் 'ஸ்கேன்' செய்து அதன்மீது பாய ஆயத்தமாக வேண்டாமா?

ஒரு நூற்றாண்டுக் கால கொள்கை லட்சிய வெற்றிக் கனியை, பக்காக் கொள்ளைக்காரர்கள் பறித்தோடிட இடந்தராது, வரும் தலைமுறைகளிடம் பாதுகாப்புடன் ஒப்படைத்து, புதிய சமூகம் காண இலக்கை நோக்கிய தாகவே நம் பயணம் அமையவேண்டாமா?

கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பு பா.ஜ.க. என்னும் விஷக்கரங்களில்...

நாலாபுறமும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. காவிகள் அவர்களது விஷக் கரங்கள் - 9 ஆண்டுகால ஆட்சி யில், பண்பாட்டுப் படையெடுப்பு, சமஸ்கிருத ஹிந்தி கலாச்சாரத் திணிப்பு, சமூகநீதி பறிப்பு, பக்திப் போதைமூலம் மகளிர் பகுத்தறிவினைச் சிறையிடல், மாநிலங்களின் தனித்துவத்தை அழித்து, ஒரே கல்வித் திட்டம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என்று கூறி, ‘‘ஒரே, ஒரே''மூலம் ஒரேயடியாக நம் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுவதற்கு முழு முயற்சியுடன் அரசியலை ஆயுதமாகக் கொண்டு, அப்பாவி பாமர மக்களை மத மயக்கத்தின்மூலம் ஏமாற்றுவதற்குத் திட்டம் போட்டு, கார்ப்பரேட் 'கோடீசுவரர்களின்' துணையோடு, ஊடகங் களை ஊதுகுழல்களாக்கி, 2024 ஆம் ஆண்டில் ''வித் தைகள் - வியூகங்களின்''மூலம் மீண்டும் அரியணை ஏறி, மக்களாட்சிக்கு விடை கொடுத்து, தனி நபர் பாசி சத்திற்குக் கால்கோள் விழா நடத்த முழு ஆயத்தமாகி உள்ளது - மக்களுக்கு ஓரளவுக்கு விளங்கி விட்டது!

மதவாத சக்தியை  மண்டியிடச் செய்ய வேண்டாமா?

மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர்; எதிர்க் கட்சி அரசியல் தலைவர்கள், தங்களைப்பற்றி நினைக் காமல், நாட்டை, மக்களாட்சியைக் காப்பாற்றுவதுபற்றிய ஒரே இலக்கின் (One Point Programme)  மூலம் மதவெறியை - ஆட்சியை மண்டியிடச் செய்ய முன்வரத் தொடங்கிவிட்டனர்!

தீயணைப்பு வீரர்களாகக் கருதி, திக்கெட்டும் ஒருங்கிணையவேண்டும்.

சர்வாதிகாரத்தை, சரித்திரம் நீண்ட நாள் வாழ விட்டதில்லை என்பதை எவரே மறுக்க முடியும்?

''மலையாயிற்றே என்று மலைப்பது மாவீரனின் குணம் அல்ல; சிற்றுளியால் மலையையும் பெயர்க்கும் வல்லாற்றல் எமக்குண்டு'' என்று சூளுரைத்து, சுயமரியாதை உணர்வுடன் களத்தில் நின்றால், வெற்றி நமதே! வீழ்வது எதிரிகளே!!

நமது கழகப் பணிப்  பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!

இருட்டு தொடருவ தில்லை என்பதே இயற் கையின் தத்துவம்; விடியல் வெள்ளி முளைத்து, அதனை விரட்டுவது  விஞ்ஞானபூர்வ உண்மை இல் லையா?

நம் கழகப் பணி பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!

அயர்வின்றி, கடமையாற்ற, களம் நம்மை அழைக்கிறது! ஆயத்தமாவோம்!!

அதனால்தான் அறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி - நமது பாதை என்றும் ஈரோட்டுப் பாதையே என்பதால், தொடர் பிரச்சாரத்தை அங்கே தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை தமிழ்நாடு முழுவதும் பெருநகரம்,  பெருகிராமம் வரை இந்தப் பெரியார் தொண்டன், “திராவிட மாடல்'' ஆட்சியின் காவலனாக கவசமேந்தி கழகத் தோழர்களுடன் புறப்பட ஆயத்தமாகிறோம் - ஆயுத்தமாகிறோம்!

பயணங்கள் முடிவதில்லை -  பாதை தெளிவாக இருப்பதால்!

இறுதி மூச்சுள்ளவரை இப்பணி என்ற உணர்வு எம்மை கடமையாற்றிட வைக்கும்; இளமையையும் என்றும் வழங்கும் என்பது உறுதி!

பயணங்கள் முடிவதில்லை - பாதைத் தெளிவாக இருந்தால்!

வாரீர், ஆதரவு தாரீர்!!

நன்றி!!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.1.2023


No comments:

Post a Comment