தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தது ஏன்?

குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டில்லி மாநகராட்சி மற்றும் குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களின் தேர்தல், 6 மாநில சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் ஒரு மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத்தை தவிர்த்து, அனைத்து இடங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்தது - இடைத்தேர்தல்களில் பாஜக வசமிருந்த தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது., 

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 37 வாக்கு மய்யங்களில் நடைபெற்றது.  அதே போல் இமாச் சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி 68 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையும் 8ஆம் தேதி நடைபெற்றது. 

  தேர்தல் ஆணையம் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் தேதிகளை ஒரே நேரத்தில் அறிவிக்காமல் - இரண்டு மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்த நிலையில்,  திடீரென்று அக்டோபர் 14 அன்று இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப் பட்டது.

இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதியை அறிவித்து விட்டு, பின்னர் குஜராத் மாநில தேர்தல் தேதியை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தது.  இதனால் மோடி குஜராத்திற்குப் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்தார். அதேபோல் அதிக எண்ணிக்கையிலான பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளையும் நடத்தினார். 

 புதிய அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை எல்லாம் மோடி நேரில் வந்து அள்ளிவீசிய பிறகு,   குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு வேளை இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதியின் போதே குஜராத் தேர்தல் தேதியையும் அறிவித்திருந்தால் ஒன்றிய அரசின் - பிரதமரின், உள்துறை அமைச்சரின் செயல்பாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்கம் ஏற்பட்டு இருக்காது.

இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சியினரும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் குஜராத்தில்  பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில் 157 இடங்களைப் பெற்று  பா.ஜ.க. வெற்றி பெற்றது.  குஜராத் தேர்தலின் போது பா.ஜ.க.வினர் பல்வேறு மோசடிகளை செய்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் மவுனம் காத்தது. 

 குறிப்பாக, தெற்கு குஜராத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மக்கள் யாரையுமே வாக்குப்பதிவு கருவிக்கு அருகில்கூட செல்லவிடாமல் - வாக்குச்சாவடி பணியாளர் களில் ஒருவரே வாக்காளர்களுக்குக் கையில் மை வைத்த பிறகு அவர்களை அப்படியே அனுப்பி விட்டு தானே சென்று தொடர்ந்து பொத்தானை அழுத்திவிட்டு வந்தது - சமூகவலைதளங்களில் பரவியது. இந்தக் காட்சிப் பதிவு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,  இந்த நிலையில் குஜராத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மோடி தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதானது - பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   குஜராத்தை தவிர மாற்ற இடங்களில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது குறித்து எந்த ஊடகமும் கருத்து தெரிவிக்கவில்லை.

இதுவரை தேர்தல் ஆணையத்துக்குப் பிரதமர்கள் நன்றி தெரிவித்ததுண்டா? 

பிரதமர் மோடியின் இந்த நன்றி தெரிவிப்பு  - பிரச்சினையை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை - சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் நடுநிலையில் இல்லை என்று நினைப்பதற்கு நியாயம் நிச்சயம் உண்டு!

எந்த எல்லைக்கும் சென்று எந்த அதீத செயலையும் தங்கள் வசதிக்காக நலன்களுக்காகச் செய்யக் கூடியதுதான் இன்றைய பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு என்பதைப் புரிந்து கொண்டு 2024 மக்களவைத் தேர்தலில் பாடம் கற்பிப்பீர் வாக்காளப் பெரு மக்களே! 

No comments:

Post a Comment