ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மாணவ, மாணவியர்க்கு அளிக்கப்பட்டு வந்த 'ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்'பை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

- க.மணிமாறன், தஞ்சை

பதில் 1: மோடி தலைமையில் இயங்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் கொள்கை சமூகநீதியை ஒழிப்பது, மனுதர்ம முறைப்படி, ஒடுக்கப்பட்ட சமூக மக்கள், பெண்கள் கல்வியைத் தடுப்பது என்பதே. 

அதனை நோக்கிய பல மூடு திரைகள் மூலம் இப்படி பல படிப்படியான வழிகளால் தடுப்புச் சுவர், தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. 

இதைப் புரிந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பா.ஜ.க. விரிக்கும் வலைகளில் சிக்காமல் 2024இல் சரியாகத் தீர்ப்பு அளித்து நாட்டையும், சமூகநீதியையும், மனுதர்மம் அற்ற மனித தர்மத்தையும் காப்பாற்ற ஆயத்தமாக வேண்டும். 

கேள்வி 2:  கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் பாலினப் பாகுபாட்டோடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறு, வேறு நிபந்தனைகளை விதித்திருப்பது சரியா?

- பா.வேலுச்சாமி, திருத்தணி

பதில் 2: அரசமைப்புச் சட்ட விதிகளின்படியும், மனிதநேய உரிமைகளின்படியும் தவறு மட்டுமல்ல, குற்றமும்கூட! வன்மையான கண்டனக் குரலும், சட்டப் போராட்டங்களும் தேவை! தேவை!!

கேள்வி 3:  கள்ளக்குறிச்சி ஆண்கள் மேநிலைப்பள்ளியில் "பெரியார் 1000" வினா - விடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவினை "ஹிந்து முன்னணி" ஆட்சேபித்து புகார் அளித்ததுள்ளதே - இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

- ம.கரிகாலன், மதுரை

பதில் 3: திருடர்களுக்கு வெளிச்சம் பிடிக்குமா? எனவேதான் அறிவு வெளிச்சம் வராது அறியாமை இருட்டை விரும்புகின்றன இந்தக் காவிப் பிண்டங்கள் - அல்லது கூலிப்பட்டாளங்கள்! மக்களை திரட்டி அந்தக் கூலிக் காவிகளை ஒடுக்குங்கள்!

கேள்வி 4:  குஜராத்தில் பா.ஜ.க.வின் வெற்றி நியாயமானதா?

- த.சீனுவாசன், உத்திரமேரூர்

பதில் 4: தேர்தல் ஆணையத்தைத் தேடிப் பாருங்கள். எங்கே, அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்!

கேள்வி 5:  நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதுபோல் - எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் 2024இல் பா.ஜ.க.வை  வீழ்த்த முடியுமா?

- சா.பாலகிருஷ்ணன், வந்தவாசி

பதில் 5: நிச்சயம் முடியும் - மக்கள் சக்தியால். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் தன்முனைப்பை விட்டு, பொதுக் கொள்கை எதிரியை மட்டுமே இலக்காகக் கொண்டு ஒன்றுபட்டால் முடியும்.

கேள்வி 6:  கல்லூரிகளில் `ராகிங்'கை தடுக்க சட்டங்கள் இருந்தும் இன்னும் `ராகிங்' தொடர்வதும், அதனால் சில உயிரிழப்புகள் கூட நேர்வதும் நாகரிக சமுதாயத்திற்கு அழகா? இதை அறவே நிறுத்த என்ன செய்யலாம்?

- வே.சண்முகப் பிரியா, வேளச்சேரி

பதில் 6: கடும் நடவடிக்கை - சான்றிதழில் கை வைத்து சிலர் மீது நடவடிக்கை எடுத்து "ஆபரேஷன்" செய்தால் அடங்கிவிடும்.

கேள்வி 7: குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிட்டதால் யாருக்கு லாபம்?

- கா.கோவிந்தசாமி, விழுப்புரம்

பதில் 7: பிஜேபி. அதனால்தான் அத்தனை இடங்களைப் பெற முடிந்தது! அதன் "மாரீசமான்"தானே அது!

கேள்வி 8:  கடந்த நவம்பர் 15ஆம் நாள் உலக மக்கள்தொகை 800 கோடியைத் தொட்டுவிட்டதாக அய்.நா.சபை அறிவித்துள்ளதே! இதன் சாதக, பாதகங்கள் எப்படி அமையும்?

- கோ.பெருமாள், சோத்துப்பாக்கம்

பதில் 8: தந்தை பெரியாரின் முன்னோக்கு பற்றி மக்களிடம் பரப்புங்கள்."பகவான் கொடுக்கிறான்" என்று சொல்வோருக்குப் பெரியார் கேட்ட கேள்வி: "அந்த பகவான் ஏன் உணவு, வீடு, நிலம் - இவற்றை தராமல் இதை மட்டும் கொடுக்கிறான். பிறகு அவனைவிட பொறுப்பில்லாதவன் வேறு எவன் இருப்பான்?" என்பதை நினைவு கொள்ளுங்கள்.

கேள்வி 9:  பாலியல் வல்லுறவு வழக்குகளில் 'இருவிரல்' பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதே! இதை நீதிமன்றங்களின் விஞ்ஞானபூர்வமான முன்னேற்ற சிந்தனை ஓட்டமாக எடுத்துக்கொள்ளலாமா?

- மா.மணிமேகலை, வியாசர்பாடி

பதில் 9: நீதிமன்றங்களின் அறிவியல் அணுகுமுறை வரவேற்கத்தக்கது; மனித உரிமை பாதுகாப்பும் பாராட்டத்தக்கதே!

கேள்வி 10: ஜி-20 நாடுகளின் தலைமை இவ்வாண்டு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளதை ஓர் அரிய வாய்ப்பாகவும், இதனால் ஏதோ பெரிய சாதனைகளை நிகழ்த்திடப் போவதாகவும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஆரவாரிக்கிறதே! இதில் எந்தளவு உண்மை இருக்கிறது?

- சோ.காவேரிமைந்தன், திருவரங்கம்

பதில் 10: ரொட்டேஷனில் கிடைத்த வாய்ப்புக்கு ஏற்ப தங்களை இனியாவது உயர்த்திக் கொண்டால், கொடுத்தவர்களுக்கும், பெற்ற நமக்கும் பயனுள்ளதாக அமையும். அந்தத் `தகுதி' உண்மையானது என்று உலகுக்கு நிரூபிக்க வேண்டிய கடமை, பொறுப்பு மோடி அரசினைச் சார்ந்ததாகும்!


No comments:

Post a Comment