செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

 மருத்துவத் தேர்வில்கூட, ஏறத்தாழ 2,400 இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கொடுக்காமல் சமூக அநீதி நடைபெற்றுள்ளது!

சமூக அநீதிகளை எதிர்த்து அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் திராவிடர் கழகத்தின் பணி!

சென்னை, டிச.3 சமூக அநீதிகளை எதிர்த்து, அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் எங்களுடைய, திராவிடர் கழகத்தினுடைய, பெரியார் தொண்டர்களுடைய, திராவிட இயக்கத் தினுடைய பணியாக இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (2-12-2022) காலை சென்னை அடையாறு இல்லத்தில், தனது 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது பேட்டி வருமாறு:

என்றென்றைக்கும் களப் போராளியாகவே இருக்கக்கூடிய அவசியம் தவிர்க்க இயலாதது!

இன்றைக்கு எனக்கு 90 வயது என்ற ஓர் அடையாளம் கொடுக்கப்பட்டாலும்கூட, என் றைக்கும் ஒரே தலைமை, ஒரே கொள்கை என்ற அடிப்படையில், தந்தை பெரியாரின் தொண்டனாக இருக்கக்கூடிய எங்களைப் போன் றவர்கள், என்றென்றைக்கும் களப் போராளி யாகவே இருக்கக்கூடிய அவசியம், கொள்கைப் பயணத்தில் தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

எனவே, அந்த வகையில், இந்த 90 ஆவது வயதில்கூட, சமூகநீதிக்கு சனாதன கும்பலால் மிகப்பெரிய சவால் விடப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவற்றை எதிர்கொண்டு, ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பாதுகாக்கவும், இன்றைக்கு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தொடர்ந்த நல்லாட்சிக்குப் பேராதரவாகவும் இருக்கக் கூடிய அளவில், சமூகநீதிக்கு எதிராக இன்றைக்கு மிகப்பெரிய ஒரு வியூகம் வகுக்கப்படுகிறது.

திராவிடர் கழகம் போன்ற, சமூகப் புரட்சி இயக்கங்களுடைய களப்பணி!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள், தமிழ்நாட்டில் காலூன்றி, எந்த மண் சமூகநீதி மண்ணாக இருந்ததோ, அந்த மண்ணை மாற்ற வேண்டும் என்பதற்காக, காவி மயமாக ஆக்க வேண்டும் என்பதற்காக செய்யும் முயற்சிகளை முறியடிப்பதுதான், திராவிடர் கழகம் போன்ற, சமூகப் புரட்சி இயக்கங்களுடைய களப்பணி வேலையாகும்.

அதிலே முதல் தொண்டனாக என்னை அர்ப்பணித்துக் கொள்கிற நாளாகத்தான் இதை நான் கருதுகிறேன். மற்றபடி இதை ஒரு விழாக் கொண்டாட்டமாகக் கருதவில்லை.

உரிய இட ஒதுக்கீட்டை நிரப்பாமல், ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடிய கொடுமை

10 சதவிகித இட ஒதுக்கீடு, முற்பட்ட சமுதாயத்தில், முன்னேறிய ஜாதிக்காரர்களில் உள்ள ஏழைகளுக்கு மட்டும்தான் என்று சொல்லக்கூடிய அந்தக் கொடுமையிலிருந்து, தனியார் மயம் என்ற பெயராலே, பொதுத் துறை நிறுவனங்களை ஆக்கிரமிக்கக் கூடியதும், அதேபோல, உரிய இட ஒதுக்கீட்டை நிரப்பாமல், ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடிய கொடுமையும் நடந்துகொண்டிருக்கிறது.

அண்மையில், மருத்துவத் தேர்வில்கூட, ஏறத்தாழ 2,400 இடங்களைப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்குக் கொடுக்காமல், மறுக்கக் கூடிய சமூக அநீதி  நடந்துகொண்டிருக்கின்றது.

அறப்போர் வியூகங்களை 

நடத்துவதுதான் எங்களுடைய பணி!

எனவே,  இந்த சமூக அநீதிகளை எதிர்த்து, போர் வியூகங்களை நடத்துவதுதான், அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் எங்களுடைய, திராவிடர் கழகத்தினுடைய, பெரியார் தொண்டர்களுடைய, திராவிட இயக்கத் தினுடைய பணியாக இருக்கும்.

மக்கள் போராட்டத்தை 

திராவிடர் கழகம் நடத்தும்!

அந்த வகையில், சட்டத் துறையில், சட்டப் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்தினாலும், மக்கள் போராட்டத்தை திராவிடர் கழகம் போன்ற சமூகநீதி அமைப்புகள் போராளியாகக் களத்தில் நின்று நடத்தும் என்பதுதான் இன்றைய செய்தி!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment