வாசக நேயர்களே! ஊன்றிப் படித்து ஒத்துழைப்புத் தாருங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

வாசக நேயர்களே! ஊன்றிப் படித்து ஒத்துழைப்புத் தாருங்கள்!

அன்பார்ந்த நமது இயக்க ஏடுகளின் வாசகப் பெருமக்களே, இயக்கப் பொறுப்பாளர்களே!

புதிய ஆண்டு 2023 பிறக்கும் நிலையில், புத்தாண்டு - பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ஆசிரியரின் வேண்டுகோள் அறிக்கை!

உலகம் பெரியார் மயம் - பெரியார் உலக மயம்!

தொற்றுகள் அச்சுறுத்தல் இன்னும் குறைந்த பாடில்லை என்றாலும், ஜாதித் தொற்று, மதவெறித் தொற்று, மூடத்தன நம்பிக்கைத் தொற்றுகள், சமூக அநீதி ஆதிக்கத்தின் வெறித் தொற்றுகள் ஆகிய கொடுந்தொற்றுகளை எதிர்த்துத் தடுப்பூசி, கவசங் களாகவே நமது இயக்கப் பணிகள் நாளும், ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்ற முறையில், அஞ்சாத, அயராத பணியாக தொடர்கின்றது. தந்தை பெரியார் என்ற நம் பேராசான் உடல் ரீதியாக மறைந்தாலும், கொள்கை லட்சிய வடிவில் உலகளாவிய நிலையில் அங்கு இங்கினாதபடி எங்கும் பரவி வருகிறார்.

‘‘உலகம் பெரியார்  மயம், பெரியார் உலக மயம்'' என்ற உண்மை உலா வருகிறது!

அத்தனைக்கும் காரணம் கொள்கையின் வலிமை, அவற்றை பரப்ப எந்த விலையும் கொடுக்கத் தவறாத கருப்பு மெழுகுவர்த்திகளாகிய நமது ஒப்பற்ற தோழர்களின் சலிப்பறியாத உழைப்பு - ஒத்துழைப்பு.

அதற்கு மேலும் அய்யா தந்த அறிவாயுதங்கள் - நமது பட்டறையில் நாளும் முனை மழுங்காது கூர்மைப்படுத்திட களம் காணும் அரிய வாய்ப்புகள்!

சந்தாக்கள் கூடுகின்றன - ஆனாலும்...

‘விடுதலை' நாளேடு - அதன் 88 ஆம் ஆண்டில் கிடைத்த சத்துணவு - சந்தாக்கள் திரட்டல் - சரியான வாய்ப்புப் பாய்ச்சல்!

உழைத்தவர்களுக்கு ஆக்கம் தந்த அனைத்து வாசக நேயர்களுக்கும், நன்கொடை, ஆயுள் சந்தா மற்றும் சந்தாக்கள் வழங்கியவர்கள், முகவர்கள் அத்துணைப் பெருமக்களுக்கும் எமது தலைதாழ்ந்த வணக்கத்துடன் கூடிய நன்றிக் குவிப்புகள்!

அய்யா தொடங்கி, இப்போது மாதம் இருமுறை ‘உண்மை', ஆங்கில மாத இதழான ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்', ‘பெரியார் பிஞ்சு' என்ற குழந்தைகள் திங்கள் ஏடு இவற்றை நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்ற நாட்டவரும், மொழியினரும்கூட படிக்கின்றனர்!

நாளும் சந்தாக்கள் கூடுகின்றன - என்ற செய்தித் தித்திப்பான செய்திகள்தான்!

ஆனால், ஒரு கசப்பான உண்மையையும் கொள்கை உறவுகளான உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக...

அதுதான் கடந்த 7 ஆண்டுகளாக நாம், நமது ஏடுகளை பெரும் நட்டத்தோடு பரப்பி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய்கள் நட்டத்துடன்.

காரணங்கள் நீங்கள் அறியாதவையல்ல.

காகித விலை உயர்வு, அச்சுமை முதல் அனைத்தும் விலை உயர்வினால் தாக்கப்பட்டுள்ள நிலை.

‘விடுதலை' உள்பட ஏராளம் அச்சிட்டும் லாபத்திற்குப் பதில் நட்டப் பெருக்கமே ஏற்படுகிறது.

நாம் வியாபாரத்திற்காக இதில் இறங்கவில்லை; கொள்கை பரப்புவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தாங்கொணாத நட்டம் என்பதால், பல பிரபல நாளேடுகள்கூட கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் மூடப்பட்டன. ஆனால், நமது ஏடுகளை நாம் நிறுத்தவே இல்லை என்பதையும் அறிவீர்கள்.

'விடுதலை'யைத் தவிர மற்ற இதழ்களின் சந்தாக்களின் நன்கொடை உயர்வு!

எனவேதான், கீழ்க்காணும் வகையில் நமது ஏடுகள் - ‘விடுதலை' தவிர மற்ற இதழ்களுக்கு தனி இதழ் நன்கொடை, ஆண்டு சந்தா நன்கொடை, ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்'  ஆங்கில இதழ் சந்தா நன்கொடை, ‘பெரியார் பிஞ்சு' (வரவேற்பு அதிகம்).

‘கூடுதல் சர்குலேசன்' என்றாலும், மேலும் ‘கூடுதல் நட்டம்' என்ற நிலைதான்.  முன்பு இருந்ததைவிட நட்டம் அதிகமானதைக் கணக்கிட்டு, தணிக்கை அதிகாரிகள், கழகத்தவர் எல்லாம் கலந்து ஆலோசனை செய்து, கீழ்க்கண்ட வகையில் 2023 ஜனவரி முதல் சந்தா - நன்கொடைத் தொகைகளை உயர்த்தி இருப்பதை தங்களுக்குத் தவிர்க்க இயலாத அறிவிப்பாக அறிவிக் கின்றோம்.

இதன் பெருக்கம் நாளும் தேவை -

விளம்பர வருவாய் நமக்கு அறவே இல்லை - எங்கோ ‘‘அத்திப்பூத்ததுபோல'' என்பதைத் தவிர.

ஆகவே, ஒத்துழைப்பை நம்பி, இந்தப் பணியில் உங்கள் தோழர்களாகிய நாங்கள் இறங்குகிறோம் - வெற்றியாக்குக!

கீழ்க்காணும் வகையில் செய்வது தவிர்க்க இயலாதது.

2023 ஜனவரி முதல்

இதழ்                               தனி இதழ் ஆண்டு  சந்தா

உண்மை                               ரூ.40 ரூ.900

பெரியார் பிஞ்சு               ரூ.50 ரூ.600

தி மாடர்ன் ரேசனலிஸ்ட்     ரூ.50 ரூ.600

கழகப் பொறுப்பாளர்களே, முற்போக்காளர்களே, ஒத்துழைப்புத் தாரீர்!

கழகப் பொறுப்பாளர்களே, பகுத்தறிவாளர்களே, இன உணர்வாளர்களே, முற்போக்காளர்களே உங்கள் ஆதரவு மூலம் இனி அறிவாயுதங்களைப் பரப்ப ஒத்துழைப்புத் தாருங்கள்!

பல புதிய அம்சங்களும் இடம் பெறும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

27.12.2022


No comments:

Post a Comment