கோவிட் பெருந்தொற்று எச்சரிக்கை தேவையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

கோவிட் பெருந்தொற்று எச்சரிக்கை தேவையே!

இதில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தவேண்டும் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் கூறுவதில் அரசியல் புகுந்துள்ளதோ என்ற அய்யம் ஏற்பட்டுள்ளது!

மற்றபடி பொதுமக்கள் கரோனா தொற்றில் அலட்சியம் காட்டக் கூடாது!

கரோனா தொற்றைக் காட்டி ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தச் சொல்வதில் அரசியல் இருக்கிறதோ என்ற அய்யப்பாடு பல தரப்புகளிலும் எழுந்துள்ளது. மற்றபடி பொதுமக்கள் கரோனா தொற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கோவிட் -19 பெருந்தொற்று முதன்முதலில் பரவிய சீனாவில், கடந்த சில நாள்களில், மீண்டும் உருமாறிய கோவிட் தொற்று, அதிகமாகப் பரவி, பலரை மரணத் திற்குள்ளாக்கியுள்ளது வேதனையான செய்தி - உலக மக்களைப் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.

இந்நிலையில், டில்லி போன்ற பகுதிகளில் நான்கு அல்லது 5 பேருக்கு உருமாறிய இத்தொற்று பரவியதால், முன்னெச்சரிக்கையாக, கவனத்துடன் மீண்டும் முகக் கவசம், கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது போன்ற தடுப்பு செய்கைகளை மக்கள் அனைவரும் கடைப்பிடித் தொழுகுதல் மிகவும் அவசரமான பணியாகும்.

அதேநேரத்தில், தேவையற்ற பீதியைக் கிளப்பி, மக்களைக் கவலையும், குழப்பமும் அடையச் செய்வதோ தேவையற்றதாகும்.

கோவிட்: இதற்குள்ளும் அரசியலா?

இப்போது இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் ஒன்றிய அரசின் பணி - எச்சரிக்கை போன்ற நடவடிக் கைகள் வரவேற்கத்தக்கன - என்றாலும், இதனுள்  ‘‘அரசியல்'' புகுந்துள்ளதோ என்ற அய்யம் பரவலாக ஏற்பட்டுள்ளது!

அதற்கு முக்கிய காரணம், ஒன்றிய அரசின் மக்கள் நல வாழ்வு - சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘ராகுல்காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தும் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளதுதான் அது.

கொடுந்தொற்றுக்கூட அரசியல் ஆயுதமாக, எதிர்க் கட்சிகளின் விமர்சனக் குரல்வளையை நெரிக்க வாய்ப்பாக மாற்றப்படுகிறதோ என்ற கேள்வி அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது!

காங்கிரஸ் கட்சி முதலில் கூறியது; அடுத்து மும்பை யின் சிவசேனா கட்சியும் இக்கருத்தையே கூறியுள்ளது!

தமிழ்நாடு முதலமைச்சரின் 

விரைவான நடவடிக்கைகள்!

நமது தமிழ்நாடு முதலமைச்சர் செயல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.12.2022) உடனடியாக மருத்துவ ஆலோசனைக் குழுவினர் கூட்டத்தைக் கூட்டி, கலந்து ஆலோசித்து, ‘வருமுன்னர் காப்போம்' என்பதற்கொப்ப பல தடுப்பு முறைகளை மேற்கொள்ள மருத்துவத் துறையைச் சார்ந்த அமைச்சர் - அதிகாரிகள் - மருத்துவர்களுக்கு ‘‘அச்சப்பட வேண்டாம்; அதே நேரத்தில், அலட்சியமாகவும் இருக்காமல், முன்னெச் சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறியிருப்பது, அவரது ஆளுமையின் பொறுப்பையும், வேகத்தையும், விவேகத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது!

நம் மக்களின் ஒத்துழைப்பு - முகக்கவசம் அணிதல், சோப்புப் போட்டுக் கைகழுவுதல், தடுப்பூசி போடாதவர்கள் ஊசிப் போட்டுக் கொள்வது போன்ற மருத்துவத் துறை வலியுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபாடு காட்டவேண்டுகிறோம்.

ஊர் அடங்கல், தொழில்கள், பள்ளிகளை மூடல் - பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு அனுமதி மறுத்தல் போன்றவற்றில் அரசுகள் ஈடுபடாமல், மக்களுக்குத் தேவைப்படும் அறிவுரைகளைச் செய்தாலே போதும்!

மக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை!

மக்களின் இயல்பு வாழ்க்கையும், கருத்துரிமை பரவல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் முகக்கவசத்தைக் கட்டாயம் அணியவேண்டுதலும் அவசியமானதாகும். அரசு மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் - அமைப்பின் பொறுப்பாளர்கள் - அவரவர் வசிக்கும் தெருக்களில் இந்த நிலையை - கோவிட்பற்றிய அலட்சியமின்மைபற்றி தெளிவுபடுத்தி, மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்.

பொருளாதாரமோ, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியோ கோவிட் தொற்று அச்சம் காரணமாக பாதிக்கப்படாத வகையில், அரசின் நடவடிக்கைகள் அமைதல் முக்கியம்! முக்கியம்!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

23.12.2022

No comments:

Post a Comment