கொலிஜியம் முறையில் நீதிபதிகளை நியமிப்பதை இப்போது கடுமையாக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. எதிர்ப்பது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

கொலிஜியம் முறையில் நீதிபதிகளை நியமிப்பதை இப்போது கடுமையாக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. எதிர்ப்பது ஏன்?

ஒன்றிய அரசின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கருத்து கூறுவதே இதற்குக் காரணம்?

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் கொலிஜிய முறையில் நியமனம் செய்யப்படுவதை 

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., எதிர்ப்பதற்குக் காரணம், இப்பொழுது உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து கூறுவதுதான்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒன்றிய அரசு அரசியல் ரீதியாக பா.ஜ.க. அரசு என்று அழைக்கப்பட்டாலும், அக்கட்சி ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியல்ல - மற்ற அரசியல் கட்சிகளைப்போல.

ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ ஏடான 'பாஞ்சன்யா' என்ன எழுதுகிறது?

அது ஆர்.எஸ்.எஸ். என்ற உயர்ஜாதியான பார்ப்பனர் தர்மத்தை - சனாதனத்தைப் பரப்ப, பாதுகாக்கவே பார்ப்பனத் தலைமையில் தொடர்ந்து 97 ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்பு - (பா.ஜ.க.) ஆட்சிக்கு, அதன் கொள்கைகளை அமல் படுத்த ஆணையிடும் ஒரு தலைமை அமைப்பு என்பது உலகறிந்த உண்மை.

அது அதனடிப்படைக் கொள்கையான பார்ப்பன - மனுதர்ம, சனாதனத்தினைப் பரப்பும் கொள்கையில் - இலக்கில் மாறாமல், அவ்வப்போது பல உத்திகள், தந்திரங்கள், வித்தைகள்மூலம் உருமாறிக் கொண்டே இருக்கும் ஒரு விசித்திர விபரீத இயக்கம்!

அதன் அதிகாரப்பூர்வ வார ஏடுகள் ஹிந்தி மொழியில் ‘பாஞ்சன்யா' ('''Panchjanya'') ஆங்கிலத்தில் 'Organizer' என்பன.

அண்மையில் வெளிவந்துள்ள ‘பாஞ்சன்யா' வார ஏட்டின் அட்டைப் பட முழு நீள கட்டுரை - நீதிபதிகளை உச்சநீதிமன்றமே - அது உருவாக்கிய ‘‘கொலிஜியம்'' முறைமூலம் நியமிக்கவும், மாறுதல் உத்தரவு போடவும் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்வதுபற்றி கடுமையான நடையில் விமர்சித்து கண்டனக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது!

''Of my Lord, By my Lord, For My Lord''  ‘‘நீதிபதிகளுக்கான நியமனங்கள், நீதிபதிகளால், நீதிபதிகளுக்காகவே'' பரிந்துரைக்கப் பட்டு நடைபெறும் நியமனங்கள் என்று கடுமையாக சாடுகிறது!

நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் 

நீதிபதிகளின் சொந்தக்காரர்களே!

அதுமட்டுமல்ல, ஓர் ஆங்கில நாளேட்டில் வந்துள்ள கட்டு ரையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘‘50 சதவிகித உயர்நீதிமன்ற நீதிபதி கள், 33 சதவிகித உச்சநீதிமன்ற நீதிபதிகள் (நியமிக்கப்பட்டவர்கள்) நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பொறுப்பில் உள்ள நீதிபதிகளின் சொந்தக்காரர்களே!'' என்பதை சுட்டிக்காட்டியுள்ளது!

அதோடு அக்கட்டுரையில் ‘‘ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி முந்தைய நெருக்கடி காலத்தை (இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த) ஆதரித்தார்; அதே நீதிபதி பின்னர் ஜனதா அரசு பதவிக்கு வந்த பிறகு நெருக்கடி நிலையைக் கண்டனம் செய்தார்'' என்று குறிப்பிடுவதை தமது வசதி யாக சுட்டிக்காட்டியுள்ளது.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் 

நீதிபதி பதவிகள் 

யார் யாருக்கு?

நீதித்துறை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கத் தின்கீழ் இருக்கிறது என்றும் அக்கட்டுரை குறிப்பிட்டுள் ளது.

இப்படியெல்லாம் கடுமை யான குற்றச்சாட்டுகளை அடுக்குகின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி இதுதான்!

இப்போதுதான் - இவை நடக்கின்றனவா?

2014 இல் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி ஏற்பட்ட நாளிலிருந்து இன்றுவரை 8 ஆண்டுகள் ஆகிய நிலை யில், நியமனங்கள் எப்படி நடந்தன? இப்போது மட்டும் ஏனோ திடீர் ‘ஞானோதயம்?'

கொலிஜியத்தை ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பது ஏன்?

கொலிஜியம் முறைதான் செயலுருவில் செயல்படும் என்பதை  இதற்குமுன் இவ் வேடு அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எதிர்த்து இவ்வளவு பகிரங்கமாகப் போர்க் கொடி உயர்த்தியதா? ஏன் அப்போது செய்யாமல், இப்போது மட் டும் அவசரம் என்றால், அண் மைக்காலத்தில், உச்சநீதிமன் றத்தின் பல நடவடிக் கைகள் ஆளும் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை எதிர்த்து கேள்விகளை எழுப்புவதாலேயே இப்படி பந்தை அடிக்காமல், பந்து அடிப்போரின் காலை அடிப்பதுபோன்று போக்கு காணப்படவேண்டும் என்பதற்குத்தானா என்பதே நமது கேள்வி.

மற்றபடி, முன்பு நீதிபதிகள் நியமனங்கள்பற்றி நம்மைப் போன்றவர்களும், முற்போக்கு ஏடுகளும் சுட்டிக்காட்டியபோது, ‘மவுன சாமியார்களாக' இருந்தவர்கள் இப்போது ஓங்கிக் குரல் கொடுப்பதன் தாத்பரியம் என்ன?

கொலிஜியம் முறையை எதிர்த்து நாம் முன்பே குரல் கொடுத்தோம்; ஆனால், ''''National Judicial Commission'' '' அமைப்பு வெறும் அரசின் மற்றொரு கையடக்க இயந்திரமாக இல்லாமல், அதில் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் பங்கு பெறவேண்டும் - பரவலான பொதுப் பிரதிநிதித்துவம் பெற்றதாக அது இருக்கவேண்டும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேயி காலத்திலிருந்தே சமூகநீதி அமைப்புகளை டில்லியில் ஒன்று திரட்டி, மனு கொடுத்ததை இவர்கள் யாரும் கண்டுகொள்ளவே இல்லையே!

தவறான ஆட்சியின் பல நடவடிக்கைகளும் உச்சநீதிமன் றத்தால் - நீதித் துறையால் கேள்வி எழுப்பப்படுகிறது என்பதால் தானே இந்த ‘திடீர் ஞானோதயம்' - வெகுண்டெழுந்து வெடித்து நடக்கிறதோ என்ற கேள்வி நியாயமானதல்லவா?

நீதிபதி தேர்வில் மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லுபவர்கள் யார்?

இதில் சமூகநலப் பார்வை அறவே இல்லை. வெறும் அரசியல் பார்வை - அதுகூட தங்களுக்குத் ‘‘தலையாட்டும் தம்பிரான்கள்'' கிடைக்கமாட்டார்களோ என்பதுதான் இருக்குமா என்கிற சந்தேகத்திற்கு இந்த திடீர்த் தாக்குதல் இடம் தருகிறதா, இல்லையா?

நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்! நீதிபதிகள் தேர்வு முறையில் பல மாற்றங்கள் வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை; ஆனால், இதைச் சொல்பவர்கள் யார்? ஏன் சொல்லுகிறார்கள்? அதை இப்பொழுது ஏன் சொல்லுகிறார்கள்? என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வியாகும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

16.12.2022

No comments:

Post a Comment