படையெடுப்புகளில் மிக ஆபத்தானது பண்பாட்டுப் படையெடுப்பே! நமது முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார்-பின்பற்ற என்ன தயக்கம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

படையெடுப்புகளில் மிக ஆபத்தானது பண்பாட்டுப் படையெடுப்பே! நமது முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார்-பின்பற்ற என்ன தயக்கம்?

 சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதலமைச்சர் ஆற்றிய தமிழுணர்வு உரை

'தமிழில் பாடினால் கேவலம்' என்ற ஒரு காலகட்டம் இருந்தது

தமிழ் நீஷப் பாஷையா? தமிழன் கட்டிய கோவில்களில் தமிழ் உள்ளே இல்லையே, ஏன்?

தமிழ் மேடைகளில் தமிழ்ப் பாட்டுப் பாடுவது கேவலம் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது என்று நமது முதலமைச்சர் கூறியதை எடுத்துக் காட்டி, படையெடுப்புகளில் பண்பாட்டுப் படையெடுப்பு ஆபத்தானது என்பதை எடுத்துக் கூறி, முதல மைச்சர் வழிகாட்டியுள்ளார்; அவர் உரையில் உள்ள உணர்வைப் புரிந்துகொண்டு செயல்படுவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (21.12.2022) சென்னை அண்ணாமலை மன்றத் தில், தமிழிசை சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யும், மிக அருமையான அரிய ஆய்வுரையாகும்.

மேடைகளில் தமிழில் பாடுவது 

கேவலம் என்ற ஒரு காலம் இருந்தது

எளிய முறையில், எல்லோருக்கும் விளங்கும் வகை யில் பண்பாட்டுப் படையெடுப்பினை, பாதகங்களை நன்கு படம் பிடித்துக் காட்டியதோடு, இசைச் சங்கங்கள் இந்நாட்டில் செம்மொழி தமிழ்மொழியையும், அதனடிப் படையில் எழுந்து, மக்கள் இசையாக மலர்ந்த தமிழிசை யின் தனித்துவம் குறித்தும் உணர்ந்து, அதை அத்தகைய அமைப்புகள் பின்பற்றி இசை நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டுகோள் விடுத்த முக்கிய உரையாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமது உரையில்,

‘‘தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழ்ப் பாட்டைப் பாடுவது, கேவலம் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது. தமிழில் பாடினால், ‘‘மேடை தீட்டாகி விடும்'' என்று நினைத்தார்கள். தமிழை ‘‘நீஷபாஷை'' என்று பழித்தார்கள். தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டி இருந்தது.

தந்தை பெரியார் கேட்ட கேள்வி

தமிழில் பாடச் சொல்லி, இசை மேடைகளில் திராவிட இயக்கத்தினர் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் வேறு வழியில்லாமல், ஒரு பாட்டு பாடுவார்கள். அதற்கு ‘துக்கடா' பாட்டு என்று பெயர். தமிழையே ‘துக்கடா' ஆக்கி வைத்திருந்தார்கள்.

‘‘தமிழ் நீஷப்பாஷையாக இருந்தால், தமிழன் கொடுக்கும் காசு ‘நீஷக்காசு' ஆகாதா'' என்று கேட்டார் தந்தை பெரியார் அவர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'குடிஅரசில்' கலைஞர் 'தீட்டாயிடுத்து' என்று எழுதியதன் பின்னணி!

முன்பு திருவையாறு தியாகய்யர் சமாதியில் நடை பெற்ற இசை நிகழ்வு (ஆண்டுதோறும் கருநாடக சங்கீத சபாவில் முன்னிலைப்படுத்தப்பட்ட விழா) - அதில் இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள் தமிழில் பாடிவிட்டதால், ‘மேடை தீட்டாயிடுத்து' என்று கூறி, கழுவி சுத்தம் செய்தால் ஒழிய, பாடமாட்டேன் என்று அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் மறுத்து எதிர்ப்புக் காட்டியதை ‘குடிஅரசு' ஏட்டில் - தந்தை பெரியார் ஆணைப்படி - கலைஞர் அவர்கள் ‘‘தீட்டா யிடுத்து'' என்ற தலைப்பில் எழுதிய அருமையான பதிலடிக் கட்டுரை  பலரது பாராட்டுதலைப் பெற்றதோடு, தந்தை பெரியாரே வெகுவாகப் பாராட்டியது வரலாறாகும்!

படையெடுப்புகளில் 

ஆபத்தானது எது?

படையெடுப்புகளிலேயே இன, மொழி பண்பாட்டுப் படையெடுப்புதான் மிகமிக ஆபத்தானது. மற்ற அரசியல், பொருளாதார படையெடுப்புகள் கால்களில், கைகளில் பூட்டப்பட்ட விலங்குகள் - கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும், புரியும்!

ஆனால், இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு மூளை யில் போடப்பட்ட மிக ஆபத்தான, கண்ணுக்கு எளிதில் தெரியாமல், நம் மக்களை அடிமைகளாக்கும் அபாயம் மிக்க ஒன்று.

தமிழை நீஷப் பாஷை என்று பழித்ததோடு, அதனை இன்றளவும் கோவில்களில் ‘பூசெய்' (இது மருவி, ‘பூஜை'யாக்கப்பட்டது) தமிழ் - அதுவும்  தமிழ்நாட்டில், தமிழர்கள் உழைப்பில், பொருளில் கட்டப்பட்ட கோவில்களில் இல்லை. இரண்டே முக்கால் வீதம் உள்ள ஒரு வெகுச் சிறுபான்மையினர் ஆயிரம் ஆண்டுகளாகக் கும்பிடும் தமிழனின் மூளையை பக்திப் போதையில் அடிமையாக்கி இதை உணராமல் செய்ததின் விளைவு அல்லவா இது!

தமிழன் கட்டிய கோவில்களில் 

தமிழ் உண்டா?

‘‘தமிழ் தெரியாத கடவுள்களுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை?'' என்றும்கூட தந்தை பெரியார் கேட்டார்.

‘தமிழன் காசு மட்டும் நீஷக் காசு ஆகாதா?'' என்றார்!

பார்ப்பனர்களின் இரட்டை வேடம் அங்கே மட்டுமா?

சமைத்த காய்கறிக்கு ‘‘தீட்டு'' உண்டு; பச்சையாகத் தந்தால் ‘‘தீட்டு'' கிடையாது!

தண்ணீருக்குத் ‘‘தீட்டு'' உண்டு; ஆனால், பால், தயிர், மோர், நெய் இவற்றிற்குத் ‘‘தீட்டு'' கிடையாது. அவர்கள் பயன்படுத்துவார்கள். ஏனெனில், அவை விலை அதிக மாகும்; தண்ணீர்போல் தாராளமாகக் கிடைக்காதவை!

கரன்சி நோட்டுக்குத் ‘‘தீட்டு'' இல்லை; இப்படி எது எது ‘‘அவர்களுக்கு'' வசதியோ, தேவையோ, அதற்கெல்லாம் விதிவிலக்கு ‘பொத்தென்று' வந்து குதிக்கும்!

பக்தி போதையால் பாதிக்கப்பட்ட நம் மக்கள் இதை உணர்வதே இல்லை.

படித்த பாமரர்கள் தலையாட்டி பொம்மைகளா?

அதைவிடக் கொடுமை படித்தவர்கள் என்ற முத்திரையுள்ள ‘‘படித்த பாமரர்கள்'' - நம்மவர்களும் இதை உணராமல் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கின்றனர்.

இசைப் படையெடுப்பு மூலம் நம்மூளையில் விலங்கு மாட்டுகிறார்கள். இசை மேதைகள் வடமொழி மந்திரங்கள் இணைத்து, (புரிகிறதோ இல்லையோ) பாடி ‘‘சடகோபம்'' பெறுவதே பெருமையாகக் கருதினர்; காலங்காலமாய் அடிமை - மிடிமை ஓங்கி நிற்கும் அவலம் ‘தொடரும்' நிலை!

முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார்!

மேடைகளில் இப்படி விழிப்புணர்வு உரைகளை நம் பெரும் பொறுப்பில் உள்ளோர், பெரும் புலவர்கள், இலக்கிய வல்லுநர்கள் வற்புறுத்திடத் தயங்கக் கூடாது.

முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார் - மற்ற அறிவார்ந்த பெருமக்கள் பின்பற்ற இன்னமுமா தயக்கம்?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.12.2022

No comments:

Post a Comment