90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை

 ‘திராவிட மாடல்' ஆட்சி என்பது இரும்புக்கோட்டை - இதில் மோதினால் உடையப் போவது மண்டைதான்!

இந்தியா முழுவதும் ‘திராவிட மாடல்' அரசு தேவை!

முதலமைச்சர் அவர்களே, நீங்கள் சட்டப் போராட்டம் நடத்துங்கள் -

நாங்கள் மக்கள் போராட்டத்தை நடத்துகின்றோம்!

சென்னை, டிச.3 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' அரசு - நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் நடத்தும் இந்தத் ‘திராவிட மாடல்' அரசு இந்தியா முழுவதும் பரவவேண்டும் என்றும், நீங்கள் சட்டப் போராட்டம் நடத்தினால் நாங்கள் மக்கள் போராட்டம் நடத்துவோம் - நம் கொள்கையில் வெற்றி பெறுவோம் என்றும் தம் ஏற்புரையில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் 

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

நேற்று (2.12.2022)  மாலை சென்னை கலைவாணர் அரங்கில், ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா''வில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

அனைத்துத் தலைவர்களுக்கும் 

வணக்கம்!

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும், மாறாத மன உணர்ச்சியோடும் நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சி யில், மீண்டும் வயதைக் குறைத்து - பணியை நிறைத்து எனக்கு இன்றைக்கு  ‘‘சரியான பணியைச் செய்து கொண்டிரு'' என்பதற்கு ஆணையிட்டு இருக்கிற என்னுடைய அருமைச் சகோதரர் மாண்புமிகு மானமிகு ‘திராவிட மாடல்' என்ற ஆட்சியை உலகம் போற்றக் கூடிய அள விற்கு, அவர்களுடைய விடியல் ஆட்சியின் மூலமாகத் தந்துகொண்டிருக்கின்ற முதலமைச்சர் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்து வரலாற்றுக் குறிப்புகளையே மிக ஆழமாகச் சொல்லி அமர்ந்திருக்கக் கூடிய திராவிட இயக்கத்தினுடைய போர் வாள் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் வைகோ அவர்களே,

எழுச்சித் தமிழர் நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களே,

அதேபோல, பண்பின் பெட்டகமாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் அன்பிற்குரிய அய்யா காதர்மொய்தீன் அவர்களே,

அதேபோன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் அன்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தமிழ்நாட்டு செயலாளர் அன்பிற்குரிய தோழர் முத்தரசன் அவர் களே, வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பான வகையில், என்னோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, இந்த விழாவை இந்த அளவிற்கு வற்புறுத்தி ஏற்பாடு செய்வதற்கு அடித்தளமாக இருந்து, நிகழ்ச்சிக்கும் தலைமையேற்று இருக்கக்கூடிய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே,

இன்றைக்குத் தவிர்க்க முடியாத அளவிற்கு ஒரு துயர நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயத் தின் காரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் இங்கு வர வாய்ப்பு இல்லாவிட்டாலும், வருகை தந்துள்ள தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செய்தித் தொடர்பாளரும், சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான தோழர் கோபண்ணா அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் சிறப்பான வகையில், ஓர்இரட்டிப்பு மகிழ்ச்சி - ஒரு போனஸ் மகிழ்ச்சி என்று சொல்லக்கூடிய அளவிலே, பன்னாட்டு விருது என்ற பெயரால், என்னுடைய பெயரால் கடந்த 22 ஆண்டு களுக்கு முன்பிருந்து, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் காலத்தில் ஆரம்பித்து விருது வழங்கி வருகின்ற, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர், அருமைத் தோழர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே, பேராசிரியர் முனைவர் இலக்குவன்தமிழ் அவர்களே, பேராசிரியர் அரசு.செல்லையா அவர்களே, டாக்டர் திருமிகு அன்பிற்குரிய அருமை நண்பர் பாராட்டுதலுக் குரிய தோழியர் சரோஜா இளங்கோவன் அவர்களே, இந்த அமைப்பினுடைய பொருளாளர் அருட்செல்வி வீரமணி அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற எங் களுடைய மாவட்டத்தின் அமைச்சர் சேகர்பாபு அவர்களே, மூத்த அமைச்சரான நம்முடைய பாசறையைச் சார்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களே,

அதேபோன்று, புலம் பெயர்ந்தோருக்கெல்லாம் சிறப்பான புதுவாழ்வு தரக்கூடிய அருமை நண்பர் மஸ்தான் அவர்களே,

எல்லா மக்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசில்லாத மா.சு. அவர்களே,

இந்தக் கொள்கைகளைத் திரட்டி என்றைக்கும் முழங்கக்கூடிய சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், இயக்கத்தி னுடைய துணைப் பொதுச்செயலாளராகவும், இந்த இயக்கத்தின் வார்ப்பாகவும் இருக்கக் கூடிய ஆ.இராசா அவர்களே,

துணை மேயர் அவர்களே, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் அருமை நண்பர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

மற்றும் இங்கே இருக்கக்கூடிய இயக்கப் பொறுப் பாளர்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒலிக்காத மணியல்ல!

இங்கே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஓர் ஆணையிட்டு இருக்கிறார்.

முதலமைச்சருடைய உத்தரவை ஆணையாகக் கருதி, ஏற்றுக்கொள்ளவேண்டும். 

மணி ஒலித்திட வேண்டும் என்று சொன் னார்கள்.

ஒலிக்காத மணியாக இது ஒருபோதும் இருந் ததில்லை. ஓசைகள் யாருக்குக் கேட்கவேண்டுமோ, அவர்களுக்குக் கேட்டே தீரவேண்டிய அளவிற்கு இந்த மணி ஓசை இருக்கும்.

மணி ஓசை முன்னால் - யானை வரும் பின்னால்!

அதுபோல, எங்கள் ஓசை வரும் - இந்த ஆட்சியி னுடைய செயல்திறன் என்கிற யானை இருக்கிறதே, அது பின்னால் வரும் என்று சொல்லக்கூடிய ஓர் அற்புதமான ‘திராவிட மாடல்' ஆட்சியை உலகம் கண்டு வியந்து கொண்டிருக்கிறது. எதிரிகள் நிலைகுலைந்து கொண் டிருக்கின்றார்கள்.

அதன் காரணமாகத்தான், என்ன பேசுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆட்சியின்மீது குற்றம் சொல்வதற்கு எதுவுமே இல்லை.

தேடுகிறார்கள், தேடுகிறார்கள், தேடுகிறார்கள்!

வாடுகிறார்கள், வாடுகிறார்கள், வாடுகிறார்கள்!

ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள், ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், என்ன சொல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

மறக்கவே முடியாத 

‘மிசா' சிறைச்சாலைக் கொடுமை!

சில சம்பவங்களைக் குறிப்பிட்ட நேரத்திலே, மாண்பு மிகு  முதலமைச்சர் அவர்கள், குடும்பப் பாசத்தோடு சொல்கிறேன், என்னுடைய அருமைச் சகோதரர் அவர்கள், நெருக்கடி காலம் - 45 ஆண்டுகளுக்கு முன்பு - இந்த இடத்திலிருந்து மிக அருகில்தான் இருந்தது அந்த சிறைச்சாலை. அப்படிப்பட்ட இடத்தில், அவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வந்து கீழே விழுந்த நேரத்தில், அவருக்குத் திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. முதல் சிறைவாசம் அவருக்கு. நாங்களோ கொஞ்சம் அனுபவம் உள்ளவர்கள். ஆனாலும், மிசா காலத்தில்தான் நாங்கள் அடிபட்டது கொடுமையானது!

வெளிநாட்டில் நம்முடைய தோழர்கள் சந்தித்த நேரத்தில், உங்களுடைய வாழ்க்கையினுடைய சிறந்த பகுதி எது என்று என்னிடத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

இதுவரை சிறந்த பகுதி எதுவென்று சொல்ல முடியவில்லை. ஆனாலும், இனிமேல் வரலாம் என்றேன்.

இதுவரையில் நடந்ததைப்பற்றி ஒன்று சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

நாங்கள் எல்லாம் சிறைச்சாலையில் அடிபட்டு அந்த அனுபவத்தைப் பெற்றோமே, மிசா காலத்தில், அந்த சிறைச்சாலை அனுபவம்தான் எங்களுடைய வாழ்க் கையில் பெறற்கரிய பேறு - சிறந்த அனுபவம். காரணம், அவ்வளவு மோசமான ஒன்றை, இனிமேல் வாழ்க்கையில் எந்த இடத்தில் சந்தித்தாலும், அதனை ஏற்கக்கூடிய பக்குவத்தை அது தந்திருக்கிறது - பாடத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்று சொன்னேன்.

அந்த நிகழ்ச்சியை இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நினைவூட்டினார்.

எதிரிகள், ஓடுகிறார்கள், தேடுகிறார்கள் என்று ஏதோ வார்த்தை அலங்காரத்திற்குச் சொல்லவில்லை நண்பர் களே!

இப்படிப்பட்ட இவ்வளவு பெரிய கொடுமை நடந்து, அதற்குப் பிறகு ஜஸ்டிஸ் இஸ்மாயில் அவர்கள் ஓர் ஆய்வுக் குழு. நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் போன நீதிபதி அவர்.

அவருடைய தலைமையில் ஓர் ஆய்வுக் குழு அமைத்து, விசாரணை செய்யப்பட்டது. சிறைச்சாலை யில் எப்படிப்பட்ட கொடுமைகள் நடந்தன என்று சொன்ன நேரத்தில், அது அப்படியே பதிவாகியிருக்கிறது. எப்படி அவர் அடிபட்டார்? என்னென்ன சூழ்நிலையில் நடந்தது? என்பதை அரசாங்கத்தினுடைய விசாரணை ஆணையம் - ஆளுநர் அமைத்த விசா ரணை ஆணையத்தில் பதிவாகி இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை, நீதிபதியினுடைய விசாரணை ஆணையம் - அதிலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அப்படியே மறைத்து - அவர் மிசா சட்டத்தில் கைதாகி சிறைச்சாலைக்குப் போனதில்லை என்று ஒரு பா.ஜ.க. தலைவர் பேசுகிறார் என்றால், அவர்களிடம் கோணிப் புளுகன் கோயபல்சுகூட தோற்றுப் போகக்கூடிய அளவிற்கு இருக்கிறான் என்றால், வேறு சரக்கு இல்லை அவர்களுக்கு - இதைவிட குற்றம் சொல்வதற்கு வேறு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஆகவேதான், அவர்கள் எதை வேண்டுமானாலும், அவமானம் செய்யும் வகையில் சொன்னாலும், அதற்குப் பதில் சொல்லும் வண்ணம் நான் ஆதாரத்தோடு அன் றைக்கு எடுத்துக்காட்டினேன்.

எனவேதான், மணியோசை எப்பொழுதெல்லாம் ஒலிக்கவேண்டுமோ, அப்பொழுதெல்லாம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

மதவாதத்தை ஒழிக்க 

ஒன்றுசேரும் காலம் இது!

மதவாதிகள், மதக் கருத்துகள் ஒருபக்கத்தில் இருந்தாலும், மற்றவர்களையெல்லாம் ஒருங் கிணைக்க வேண்டும் - வேகமாக - ஆபத்து வந்துவிட்டது - ஊர் கிராமத்துக்காரர்கள் எல்லாம் வாருங்கள் என்று அவர்களை கூட்டவேண்டு மானால், இப்பொழுதுகூட மாதா கோவிலில் மணி அடிப்பார்கள் - அந்த மணி அடித்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று கிராமத்தில் ஒருமுறை உண்டு.

அதுபோல, இப்பொழுது மணி அடிக்கவேண் டிய நேரம் - எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டிய நேரம். அதைத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் சொன்னார்கள்.

மிகப்பெரிய அளவிற்கு, இதுவரையில் காலங் காலமாக நம்முடைய தலைவர்கள் அரும்பாடு பட்டார்கள் - சமூகநீதிக்காக.

அமைச்சர்களாக இருக்கிறவர்கள் எல்லாம் ஊர்வலத்தில் முழக்கமிட்டார்கள், ‘‘எங்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந் தலைவர் காமராசரும், முத் தமிழறிஞர் கலைஞரும் பெற்றுத் தந்த உரிமைகளை இழக்கமாட்டோம், இழக்கமாட்டோம்'' என்று ஊர்வலத்தில் முழக்க மிட்டவர்கள் இதோ அமைச்சர்களாக இருக்கிறார்கள் -அதுதான் இந்த ஆட்சிக்கே வலிமை. அதுதான் மிக முக்கியமானது. கொள்கை உணர்வு - அப்படிப்பட்டவற்றை விடுவோமா என்று கேட்டோமே, அந்தக் கேள்வி இன்றைக்குத் தேவைப்படுகின்ற கேள்வி மட்டு மல்ல - அதற்கு விடை காணவேண்டிய கட்டத்தை நாம் பெற்றிருக்கின்றோம்.

சட்டப் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள் - மக்கள் போராட்டத்தை 

நாங்கள் நடத்துகிறோம்

அதற்கு விடை காணவேண்டும்; அந்த வகையில், சட்டப் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள்; மக்கள் போராட்டத்தை நாங்கள் நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்கிற உறுதிமொழியைச் சொல்லும் நிலையில், எங்களுடைய முதலமைச்சர், ‘திராவிட மாடல்' ஆட்சி - ஏதோ சாதாரணமாக நீங்கள் நினைக்கவேண்டாம் - இது இரும்புக்கோட்டை - இது மணலால் கட்டப்பட்ட கோட்டையல்ல - இந்தப் பாறையில் மோதினால், உங்கள் மண்டை உடையுமே தவிர, கோட்டை சரியாது. காரணம், கோட்டையில் ஓட்டையும் போட முடியாது; கோட்டையில் அவர்கள் இருக்கிறார்கள்; கோட்டைக்குள் வேறு யாரும் நுழைந்துவிடவும் முடியாது. ஆரியம் வாலாட்டவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். அதனுடைய பணிகளை, இங்கே பெரியார் மண்ணிலே நுழைத்துவிடவும் முடியாது என்று காட்டும் வகையில்தான் நண்பர்களே, கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கிற அத்துணை கருஞ்சட்டைத் தோழர்களும் இருக்கிறோம். எங்களுக்குப் பதவியோ, மற்றவையோ கிடையாது - உயிர் துச்சமல்ல என்று கருதக்கூடிய அந்த உணர்வோடு இருக்கக் கூடியவர்கள் இருக்கிறோம்.

எனவேதான், உங்கள் பணி சிறக்கட்டும் - இந்த அணி அதைப் பாதுகாக்கும்.

அந்த உறுதிமொழியைச் சொல்வதுதான் என்னுடைய பதிலுரையாக இருக்குமே தவிர வேறு கிடையாது.

நாங்கள் பதவி வேட்டைக்காரர்கள் அல்லர்!

ஏனென்றால், எங்களை பதவியால் அளக்க முடியாது - அளக்கவேண்டிய தேவையும் இல்லை. ஒருபோதும் நாங்கள் புகழ் வேட்டையைத் தேடக் கூடியவர்கள் அல்ல.

உலக வரலாற்றிலே அப்படிப்பட்ட ஒரு தலைவர் என்ன சொன்னார், தொண்டர்களை அழைக்கும் நேரத்தில், ‘‘கெட்ட பெயர் எடுக்கிறவர்கள் என் பக்கத்தில் வாருங்கள்'' என்று சொன்னார்.

ஏனென்றால், போலித்தனமான நல்ல பெயருக்காக வரவேண்டிய அவசியமில்லை.

இந்த நாட்டினுடைய உரிமைகள், மொழி உரிமைகள், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள், சமூகநீதி உரிமைகள் அவை அத்தனையும் பாதுகாக்கவேண்டும் என்று சொல்லுகிறபொழுது,  கடந்த ஒன்றரை ஆண்டுகால ‘திராவிட மாடல்' ஆட்சி உலகத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு நூறாண்டு கால வரலாற்றைப் புரட்டிப் போட்டு இருக்கக்கூடிய அற்புதமான சாதனையை செய்த முதலமைச்சராக நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.

இந்தப் பொற்காலம் தொடரட்டும்!

இந்தப் பொற்காலம் தொடருவதற்காக, உங்களுடைய பலத்தை கூட்டுவதற்காக, உங்கள் பக்கத்தில்கூட அல்ல - உங்களுக்கு முன்னால் பாதுகாப்பாக இருப்பவர்கள் நாங்கள்.

பதவிக்கு ‘‘என்ட்ரி'' தேடக்கூடியவர்கள் அல்ல - பதவிக்குப்  போன உங்களுக்கு ‘‘சென்ட்ரி''யாக இருப்பவர்கள்

பதவிக்கு ‘‘என்ட்ரி'' தேடக்கூடியவர்கள் அல்ல - பதவிக்குப்  போன உங்களுக்கு ‘‘சென்ட்ரி''யாக இருப்பது எங்களுடைய வேலை என்பதை மட்டும் சொல்லி, அனைவருக்கும் நன்றி கூறி, முடிக்கின்றேன்.

இந்தியா முழுவதும் ‘திராவிட மாடல்' அரசு!

இளமை எப்பொழுதும் இந்தப் பணியைச் செய்யும் - இந்த நிகழ்ச்சி என்னை 90 ஆகப் பார்க்கவில்லை.

90, 90, 90 என்று சொன்னார்கள் -  90 என்ன 800-றா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு, அந்த உணர்வோடு திரும்புகிறேன்.

அது உங்களுக்குப் பாதுகாப்பு - உங்களுக்கு என்று சொன்னால், தனிப்பட்ட முறையில் அல்ல. 

‘திராவிட மாடல்' ஆட்சி இந்தியா முழுவதும் பரவும் - 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படும்.

ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் இப்படி இங்கே அமர்ந்திருப்போம் உயிரோடு என்று சிறைச்சாலையில் இருந்தபோது நினைக்கவில்லை.

சமூகநீதி - உறுதிமொழியை எடுக்கச் செய்துள்ளார் நமது முதலமைச்சர்

ஆனால், இன்றைக்கு அவர் முதலமைச்சராக இருந்து உத்தரவு போடுகிறார்.

எழுந்து நின்று உறுதி சொல்ல முடியாதவர்கள், மறுத்தவர்கள் எல்லாம்கூட இன்றைக்கு சமூகநீதிக்கு உறுதிமொழி சொல்லவேண்டிய அளவிற்கு, அவர்கள் உறுதிமொழியைச் சொல்கிறார்கள்.

அதற்காகத்தான் ‘வீரமணி சமூகநீதி விருது' - இந்த விருதைவிட பெரிய சாதனை என்னவென்றால், சொல்லக்கூடாதவர்கள் எல்லாம் உச்சரித்தார்கள் - சொல்லத் தயங்கியவர்கள் எல்லாம் உச்சரித்தார்கள்.

பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள் என்று அறிவித்தார்கள்.

அம்பேத்கர் பிறந்த நாள் - சமத்துவ நாள் என்று அறிவித்தார்கள்.

அந்தத் திறமை, அந்த ஆற்றல், அந்தத் துணிச்சல், அதுதான் ஸ்டாலின் என்பதற்குப் பெயர்.

அதுதான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதிலேயே எல்லாமும் அடங்கியிருக்கிறது.

பெரியார் மண்ணை 

காவி மண்ணாக்க முடியாது!

ஆகவேதான், அப்படிப்பட்ட வீரம் செறிந்த பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்கிவிட முடியாது; ஒருபோதும் காலி மண்ணாகவும் ஆக்கிவிட முடியாது.

எத்தனைக் காலிகளையும், காவிகளையும் நீங்கள் சேர்த்தாலும், அதைச் சந்திப்பதற்கு மக்கள் தயார்! மக்கள் தயார்!! மக்களை ஆயத்தப்படுத்த நாங்கள் தயார்! தயார்!!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

No comments:

Post a Comment