103ஆம் சட்ட திருத்தம் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

103ஆம் சட்ட திருத்தம் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளுமா?

"பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் பொதுப் பிரிவினராக 18:2 சதவிகிதம் பேரை அடையாளம் கண்டிருப்பதாக" உச்சநீதிமன்றத்தில் கூறிய ஒன்றிய பாஜக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் கணக்கெடுப்பு எதுவும் நடத்தப் படவில்லை என்று மாற்றிக் கூறியுள்ளது.

"பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கான இட ஓதுக்கீடு பயனாளிகளை அடையாளம் காண எந்த வித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை" என்று ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது - அது மட்டுமல்லாமல், "இனிமேலும் கணக் கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை" என்றும் கூறியுள்ளது. 

இதன்மூலம் ஒன்றிய அரசு, இந்த விவகாரத்தில் முன்பு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றி தவறாக வழி நடத்தியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு என்ற பெயரில், உயர்ஜாதி யினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் 103ஆவது சட்டத்திருத்தத்தை, கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் (மாதம் ஒன்றுக்கு சுமார் 66 ஆயிரம் ரூபாய்) வருமானம் ஈட்டுபவர்களை 'ஏழை' என்றும் வரையறுத்தது. "இந்தச் சட்டம் அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று கூறிவிட்டு, அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோரை இணைக்காமல் உயர்ஜாதி என்று கூறப்படுவோருக்கு மட்டும் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது சரியல்ல. ரூ.8 லட்சம் ஆண்டு வருமானம் என்ற வரையறையும் பொருத்தமல்ல. எனவே இவற்றை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

ஆனால், மோடி அரசானது, இப்போது வரை உரிய திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. எனினும், 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தீர்ப்பளித்தது. 

5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் 103- ஆவது சட்டத்திருத்தம் செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து அடிப்படையில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இ.டபிள்யு.எஸ். இடஒதுக்கீட் டிற்கான வருமான அளவு கோலை கேள்விக்கு உட்படுத்திய உச்சநீதிமன்றம், "குடும்ப ஆண்டு வருமானத்திற்கான 8 லட்சம் ரூபாய் அளவு கோலை நிர்ணயிப்பதற்கு என்ன தரவுகள் பரிசீலிக் கப்பட்டன? எந்த அடிப்படையில் 10 சதவிகிதம் பேருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது" என்ற கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்தக் கேள்விகளுக்கு வாய்மொழியாக விளக்கம் அளித்திருந்த ஒன்றிய பிஜேபி அரசு, "பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் பொதுப் பிரிவினராக 18.2 சதவிகிதம் பேரை அடையாளம் கண்டிருப்பதாகவும், 'நிதி ஆயோக்'கின் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் தொகுக்கப்பட்ட தரவுகளில் இருந்து இந்த விவரங்கள் கிடைத்தன" என்றும் குறிப்பிட்டிருந்தது. உச்சநீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது அத்துடன், இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. "பொருளாதாரத்தில் பின்தங்கி யவர் என்ற வகைப்படுத்தல், சம்பந்தப்பட்ட தரவுகள் மற்றும் காரணிகள் அடிப்படையிலேயே அமையும். அது யாருக்கு எல்லாம் பொருந்தும் என்பது தேவைப்படும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். இந்த விவகாரத்தில் அரசின் அதி காரத்தை விரிவடைய செய்யும் அரசமைப்புச் சட்ட திருத்தத்தை கேள்வி கேட்க முடியாது" என நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறினார். 

இந்த தீர்ப்பு வெளியாகி 1 மாதத்திற்கு மேலாகி விட்ட நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறும் பயனாளிகள் குறித்து. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சஜிதா அகமது, குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்பிய கேள்விக்கு. ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது அதில் "பொருளாதாரத்தில் நலிந்த பிரிவின ருக்கான இடஒதுக்கீடு பயனாளிகளை கண்டறிய கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை   அதேபோல பயனாளிகளை கண்ட றிய கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை" என்று விளக்கம் அளித்து, அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது "பொரு ளாதாரத்தில் நலி வடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் பொதுப் பிரிவினராக 18.2 சதவிகிதம் பேரை அடை யாளம் கண்டிருப்பதாக" உச்ச நீதி மன்றத்தில் கூறிய ஒன்றிய பாஜக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் கணக் கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்று மாற்றிக் கூறியுள்ளது.

ஆக உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலைக் கூறி, தனது 103ஆம் அரசமைப்பு  திருத்த சட்டத்திற்கு ஆதரவான தீர்ப்பைப் பெற்றுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி தரப்பில் தரப்பட்டுள்ள இந்தத் தகவலை முக்கியமாகக் கருத்தில் கொண்டு, 103ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்று எதிர்பார்க்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு - எங்கே பார்க்கலாம்.

No comments:

Post a Comment