கை தட்டி - லட்சுமி படம் போட்டு - சிறீஹரி எழுதினால் -இந்தியா வல்லரசாகி விடுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

கை தட்டி - லட்சுமி படம் போட்டு - சிறீஹரி எழுதினால் -இந்தியா வல்லரசாகி விடுமா?

ஒன்றியத்தில் மோடி அரசு வந்த பிறகு மக்கள் மனதில் அதிகாரவர்க்கத்தின் மூலம்  மூடத்தனங்கள் திணிக்கப்பட்டு அதை மக்களும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்கு - கை தட்டுங்கள், லட்சுமி படம் போடுங்கள், சிறீஹரி எழுதுங்கள் என்று கூறுவதை நம்பி இதனால் மாற்றம் ஏற்படும் என்று இருக்கிறார்கள் என்பது உண்மைதானோ?

தட்டுக்களை எடுத்து ஓசை எழுப்புங்கள்- பிரதமர் மோடி

கரோனா முழு ஊரடங்கு காலத்தில் ஒருநாள் மாலை மோடி தொலைக் காட்சியில் வந்து கரோனாவை விரட்டவும், மருத்துவர் களுக்காக, கரோனா முன்களப் பணியாளர் களுக்காகப் பாராட்டினைத் தெரிவிக்கவும் "மாலை 5 மணிக்கு 5 நிமிடம் கை தட்டுங்கள், தட்டுக்களை எடுத்துத் தட்டுங்கள். மணி அடியுங்கள், ஓசை எழுப்புங்கள்" என்று கூறினார். 

நடந்தது என்ன தெரியுமா?

"இண்டியா டிவி" என்ற ஹிந்தி தொலைக் காட்சியில் அதன் தலைமை இயக்குநரும், ஆர்.எஸ்.எஸ். மேனாள் மாணவர் அமைப் பின் தலைவருமான ரஜத் சர்மா,   மோடியின் பேச்சை வைத்தே ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பினார், 

 அந்த ஒருமணி நேர நிகழ்ச்சியில் ஒன் றிய அமைச்சர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் பெரும் கல்வியாளர்கள் எனப் பலர் போலித்தனமான அறிவியல் கருத்துக்களைக் கூறினர். 

அதில் இன்றும் ஹிந்தியில் முன்னணி நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் கூறும் போது "மோடி குறிப்பிட்ட நாள் என்பது மிகவும் முக்கியமானது, அமாவாசை அன்று மாலை 5 மணிக்கு குறிப்பிட்ட ஒரு புல னாகாத அதிர்வின் காரணமாக நோய்க் கிருமிகள் குழப்பத்தில் இருக்கும், அந்த நேரம் ஓசை எழுப்பினால் அதன் அதிர் வலைகளால் குழம்பி இருக்கும் கிருமிகள் இறந்து போகும்" என்றார். இதை   பகுத்தறி வாளர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம், 

ஆனால், "இந்தியாவில் குபேர விளக்கு வாங்கி அதில் பசும் நெய் ஊற்றி 7 நாள் கும்பிட்டால் வீட்டில் தங்கம் வாங்கும் அளவிற்கு செல்வம் சேரும்" என்று ஒரு காலத்தில் ஹிந்தியில் `சூப்பர்ஸ்டாராக' இருந்த  நடிகர் கோவிந்தா கூறியதை இன்றும்  நம்பும் கூட்டம் உள்ளதே!  இது படிப்பறி வில்லாத கூட்டமும் அல்லவே!

பிரதமர் மோடியின் கை தட்டுங்கள், ஓசை எழுப்புங்கள் என்ற பேச்சோடு, அமிதாப் பச்சனின் கிருமிகள் செத்துவிடும் என்ற கூற்றையும் எடுத்துக் கொண்டு தென் இந்திய பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது  வீட்டுச் செடி கொடிகளுக்கு இடையே புகுந்து கையில் தட்டை வைத்துத் தட்டிக் கொண்டு இருந்தார். 

முதலில்  அதை ஏதோ ஒரு திரைப் படத்தில் மனநோயாளியாக நடிக்கிறார் என்று தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால், அது உண்மை, தட்டிக்கொண்டே கரோனா கிருமியை சாகடிக்க முயற்சி செய்திருக்கிறார். இடையிடையே "கோ கரோனா கோ" என்று கூறிக் கொண்டே தட்டுக்களைத் தட்டினார்.  இன்றைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் குடும்பத் தோடு செடி கொடிகளுக்கு இடையே கரோனா கிருமியை விரட்டத் தட்டிக் கொண்டு இருந்தார்.

அவர்கள் மட்டுமா? அமிதாப்பச்சன், மகன் அபிசேக், மருமகள் அய்ஸ்வர்யா மற்றும் பேத்தியோடு வீட்டு மாடியில் மணி யாட்டிக் கொண்டு தட்டை எடுத்து கரண்டியால் தட்டிக்கொண்டு இருந்தார். 

எதிர்காலத்தில் அவரது பேத்தி - இந்தக் காணொலியைக் கண்டு தனது தாத்தா இவ்வளவு வெகுளியாக(?) இருக்கிறாரே என்று  நினைப்பதும் இல்லாமல் தானும் இவர்களின் பேச்சைக் கேட்டு தட்டை கரண்டியால்  தட்டிக்  கொண்டு இருந்தோமே என்று வெட்கப்படுமே!

கிருமி ஒழிப்பில் ஜோதிடம் பார்த்து  அதன் படியே நடந்த நடிகர் அமிதாப்  பச்சன் கூறியதைப் போன்று கரோனா கிருமி அழியவில்லை.  அதே போல் மோடி கூறியதுபடி நடந்த கரோனா மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் துயரங்களும் தீரவில்லை. 

மராட்டிய மாநிலத்தில் தனக்கு அறிமுக மான பல மருத்துவர்கள் கரோனாவால் இறந்து விட்டனர். அவர்கள் குடும்பங் களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன? என்று மகராட்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது கிடைத்த பதில், "மருத்துவர்களில் பலர் கரோனாவால் இறக்கவில்லை. பலர் துணை நோய்களால் இறந்தனர். ஆகவே, அவர்கள் கரோனா இறப்பின் கீழ் வரவில்லை" என்று கூறி விட்டார்கள்.

கரோனா நோய் வருவதற்கு முன்பு அவர்களுக்கு எந்த நோயும் இல்லை, கரோனா தொற்றின் காரணமாக மாரடைப்பு, சுவாசக் கோளாறு மூளைக் காய்ச்சல், எதிர்ப்புச் சக்தி குறைதல், ரத்த அணுக்கள் குறைவு உள்ளிட்ட பல பாதிப்புகள் காரணமாகவே மரணித்தனர். மருத்துவ அறிக்கையில் கட்டாயம் கரோனா பாதிப்பின் காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறந்தார் என்று தான் இருக்கும், ஆனால், அரசு அவர்கள் சுவாசக் கோளாற்றல் இறந்துவிட்டனர் என்று கூறுகிறது. ஆக மருத்துவர்களுக்காக, முன்களப் பணியாளர் களுக்காக கை தட்டியும் கூட செத்துப் போன வர்களின் குடும்பங்களுக்கு பைசாவிற்குக் கூடப் பயனில்லை. 

லட்சுமி படம் போடுங்கள்- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்று அய் .ஆர்.எஸ். இந்தியாவில் மிகவும் உயந்த பதவி ஆகும். இந்தப் பதவியில் இருந்த அண்ணா ஹசாரே  துணையோடு கட்சி தொடங்கி  டில்லி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, 

"நீங்கள் எந்த வணிக நிறுவனத்திற்கும் செல்லுங்கள். அங்கு கல்லாப் பெட்டியின் மேலே, கல்லாப்பெட்டியின் உள்ளே லட்சுமி - கணேசர் படம் இருக்கும். இதற்கு என்ன பொருள்? இவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு பணம் இருக்கும். ஆகவே, இந்திய ரூபாயின் ஒரு பகுதியில் காந்தியும், மற்றொரு பகுதியில் லட்சுமி - கணேஷ் படமும் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் இந்தியாவின் பொருளாதாரம் எங்கோ சென்றுவிடும்" என்று கூறினார். முதலில் இந்தச் செய்தி  வந்த போது அனைவரும் இது ஒரு வாட்ஸ் அப் வதந்தி என்றுதான் நினைத்தனர். ஆனால், ,கெஜ்ரிவாலின் காட்சிப் பதிவைப் பார்த்த பிறகு பலர் வியப்பில் ஆழ்ந்தனர். 

 ஆனால், இவரது பேச்சிற்கு மக்களி டையே பெரும் ஆதரவு எழுந்தது போல் காட்டப்பட்டது, சமூகவலை தளங்களில் எல்லாம்,"ஹிந்தியாவில் ஹிந்து கடவுளுக்கு ஹிந்திய ரூபாய் நோட்டில் இடம் கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கைகள் எழுந்தன. 

ரூர்கலே  அய். அய்.டி.யைச் சேர்ந்த  ஒரு பேராசிரியர், "ரூபாய் நோட்டில் சாமி படங்களை ஆங்கிலேயர்களே அச்சிட் டனர். ஒருபக்கம் தாமரை, ஒருபக்கம் சீதா, ராமன், லட்சுமணன், ஹனுமான் போன்ற படங்கள் இருந்தன. பின்னர் அவற்றை நிறுத்தி விட்டார்கள்" என்கிறார். 

 கருநாடகாவைச் சேர்ந்த  ஹம்பி பகுதி பிரபல சாமியார் ஒருவர் "இந்திய ரூபாய் நோட்டில் ஹனுமான் படம் வேண்டும், பிறகு பாருங்கள், இந்திய பொருளாதாரம் டாப்பில் (உயரத்தில்) போகும்" என்கிறார். அதாவது "ஹனுமான் பறப்பது போல்  ரூபாய்  நோட்டை தூக்கிக் கொண்டு சென்று விடுவார்" என்கிறார். ஹம்பியில் உள்ள ஹனுஹுண்டியில் தான் ஹனுமான் பிறந்தார் என்று கருநாடக மக்கள் நம்புகின்றனர். 

 மருந்துச் சீட்டில்  சிறீஹரி எழுதுங்கள்-மத்தியப்  பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் 

இதே போல் தான் 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்த சிவ்ராஜ் சிங் சவுகான், அண்மை யில் மருத்துவர் கருத் தரங்கம் ஒன்றில் பேசும் போது, "மருத்துவர்கள் மருந்துச் சீட்டை எழுதும் முன்பு சிறீஹரி என்று எழுதி பிறகு சிகிச்சை களை எழுதுங்கள். கடவு ளின் அருளால் நோயாளி கள்  குணமடைந்து விடுவார்கள்" என்றார். 

 2008ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல் மூலம் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தேர்ச்சி பெற்று வந்துள்ளனர். தனக்கு முன்னால் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு எப்படி மருத்துவம் படிக்க சீட் கிடைத்து, மருத்துவர் கள் ஆகி வெளியே வந்தார்கள் என்பது சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு நன்கு தெரியும் ஆகையால் தான், அன்று அவர் களிடம் வாங்கிய(??) நன்றிக் கடனுக்காக "மருத்துவம் பார்க்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை, மருந்துச் சீட்டில் சிறீஹரி எழுதுங்கள், நோயாளி குணமாகிவிடுவார், உங்கள் வேலை எளிதாகி விடும்" என்று கூறினார். 

இவரது இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புக் கிளம்பும் என்று பார்த் தால் "ஆமாம் ஆயூர் வேதத்தில் மந்திரங்  களை எழுதி மருந்து கொடுக்கும் முறை உள்ளது, சிறீஹரி என்று எழுதுவதோடு ஓம் நமோ நாராயணா, ஓம் பகவதே, நமோதன்வந்திரேயா என பல மந்திரங்களை எழுதும் போது சிகிச் சையில் மேலும் பலன் கூடி நோயாளிகள் விரைவில் குணமடைவார்கள்" என்று ஒன்றிய ஆயூஸ் அமைச்சரகத்தின் சார்பில் கூறப்படுகிறது. 

 அதாவது, கைதட்டுங்கள், லட்சுமி படம் போடுங்கள், சிறீஹரி என்று எழுதுங்கள் எனக் கூறியவர்கள் பெரும் பதவியில் உள்ளனர். இவர்களின் இந்தப் பேச்சுகள் குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்தால் இவர்களின் பேச்சிற்குத் திரைப் பிரபலங்கள், பேராசிரியர்கள் மற்றும்  அமைச்சரக அதிகாரிகளே இந்த மடமைப் பேச்சிற்குத் துணை போகின்றனர்.

கை தட்டுவதால், லட்சுமி படம் போடுவதால், மருத்துவர்கள் தங்களது மருந்துச் சீட்டில் சிறீஹரி எழுதுவதால் இந்தியா வல்லரசாகி விடுமா?

இவர் களின் பேச்சை அப்படியே நம்பும் மக்க ளுக்கு மாற்றாகப் பகுத்தறிவை ஊட்ட வேண்டிய ஊடகங்களும் மூடநம்பிக்கைக் கதைகளை ஓட்டிக்கொண்டு மக்களை மூடர்களாக்கி கொண்டு இருக்கின்றன. இதனால் நாடு பல நூற்றாண்டு காலம் பின்னோக்கிச் சென்றுவிடும் அபாயம்தான் உள்ளது.

No comments:

Post a Comment