கொள்கை - கட்சி - ஆட்சி - மாட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

கொள்கை - கட்சி - ஆட்சி - மாட்சி!

தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி அவரின் படைப்புகள் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, அதன் வெளியீட்டு விழா நேற்று மாலை (24.11.2022) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

நூற்றாண்டு விழா என்பதை வெறும் பாராட்டு விழாவாக நடத்தாமல் பயனுள்ளதாக - நூற்றாண்டு விழா நாயகரின் படைப்புகளின் வெளியீட்டு விழாவாக நடத்துவது ஆக்கப் பூர்வமான சிந்தனை - செயல்பாடு என்று விழாவில் பங்கு கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியது சிந்திக்கத்தக்கதாகும்.

 மானமிகு டி.கே. சீனிவாசன் அவர்கள் ரயில்வே துறையில் பணியாற்றிய நிலையில் தாமரைச் செல்வன் எனும் புனைப் பெயரில் எழுதி வந்தார்.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க. என்ற நிலையில் அடிப்படைக் கொள்கையில் ஆழமானவரான, ஏற்றங் கொண்டவராக இருந்திருக்கிறார். 

விழாவுக்குத் தலைமை தாங்கி நூல்களை வெளியிட்ட சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விழாவில் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் முக்கியமானது.

கட்சி என்று சொன்னால் அது வெறும் ஒரு சொல்லல்ல; கொள்கைக் கோட்பாடு கொண்டது. அந்த நிலையில் கட்சியில் இருந்தால்தான் கட்சி பலமாக இருக்கும்.

கட்சி ஆட்சிப் பீடம் ஏறுவது என்பது பலமான தொண்டர்களின் செயல்பாட்டால் தான் - கொள்கையில் உறுதியாக இருந்தால்தான்.

கட்சி - அடுத்து - ஆட்சி என்று வரும்போது அது வெறும் பதவியில்லை - ஆட்சியைப் பயன்படுத்தி அடிப்படைக் கொள்கையோடு மக்கள் நலன் பேணுவதாகும். 

ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு சமரசம் செய்து கொண்டு போகக் கூடாது; காரணம் தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல; பகுத்தறிவுக் கொள்கையும், நோக்கமும் கொண்டது என்பதை மறந்து விடக் கூடாது.

அதன் காரணமாகத்தான் தமிழ்நாடெங்கும் 234 தொகுதிகளிலும் பாசறைக் கூட்டங்கள் தி.மு.க. இளைஞரணி சார்பில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது முடிவல்ல - இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் என்ற முறையில் கட்டளையிடுகிறேன்" என்ற முதல் அமைச்சரின் உரை முத்தாய்ப்பானது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறி, நாட்டை மீண்டும் மனுதர்ம யுகத்துக்கு கடத்திச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு கூட்டம் அதிகார பலத்துடன், பண பலத்துடன் தனது 'பராக்கிரமத்தைக்' காட்டிக் கொண்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில் முதல் அமைச்சரின் இந்தக் கருத்துகள், அறிவிப்புகள் காலத்தால் வழங்கப்பட்ட அருங்கொடை - அறிவுக் கொடை என்றே சொல்ல வேண்டும்.

அதுவும் இளைஞர்களுக்கு மத்தியில் திராவிட இயக்கத் தின் இலட்சியத்தை விதைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

திராவிட இயக்கம் மக்கள் இயக்கமாக வேர்ப் பிடித்துத் தழைத்ததற்குக் காரணம் எழுத்தும், பேச்சும் தானே!

மக்கள் மத்தியில் மண்டிக் கிடந்த மூடநம்பிக்கைகளைப் பொசுக்கித் தள்ளி, பகுத்தறிவு வெளிச்சத்திற்கு இருட்டிலிருந்து மக்கள் வெளி வருவதற்குக் காரணமாக இருந்தது இந்த இரு வழி அணுகுமுறையாகும்.

இடையில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கக் கூடும் என்றாலும் "திராவிடத்தால் எழுந்தோம், கல்வி உரிமை பெற்றோம், உத்தியோகப் படிக்கட்டுகளை மிதித்து உள்ளே சென்றோம்" என்ற நன்றி உணர்ச்சி மட்டும் மங்காமல் இருந்ததால்தான் திராவிட இயக்க ஆட்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

அது மேலும் வலுப் பெற வேண்டுமானால் கட்சியினர் - அதிலும் இளைஞர்கள் இலட்சியக் கூர் ஈட்டிகளாக வார்த்து எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மாணவர் பருவத்திலேயே சுயமரியாதை இயக்க - திராவிட இயக்க இலட்சியத்தைக் கருத்தில் ஏந்தி, கடைசி மூச்சு அடங்கும் வரை, அந்த இலட்சியம் பரவுவதற்காகப் பணியாற்றி, வரும் தலைமுறையினருக்குத் தன் படைப்புகள் மூலம் அரும் சொத்துகளை வழங்கிச் சென்ற மானமிகு டி.கே. சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் இத்தகைய சிந்தனைகள் கூர்மையாகப் பரிமாறப்பட்டன. இது - இந்த விழாவின் உச்சமாகும்.

இந்தத் திசையில் சிந்தித்து தம் தந்தையின் படைப்புகளை மூன்று தொகுதிகளாகக் கொண்டு வந்த திராவிடர் இயக்கச் செம்மல் மானமிகு டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்! 

No comments:

Post a Comment