'மூல' நட்சத்திரம் கொலைக்கு மூலமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

'மூல' நட்சத்திரம் கொலைக்கு மூலமா?

கருநாடகாவில் ராமநகர் அருகே, குடும்பத்திற்குக் கேடு ஏற்படும் என்று கூறி மூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையைக் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து பெண் அளித்த புகாரின்பேரில் கணவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா டவுன் மஞ்சுநாத் படவானேயில் வசித்து வருபவர் நவீன். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும்  3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குக் கடந்த ஆண்டு (2021) ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மூல நட்சத்திரத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்குக் கேடு ஏற்படும்  என்ற மூடநம்பிக்கையில் இருந்த நவீனும், அவரது பெற்றோரும் மூல நட்சத்திரத்தில் குழந்தையை பெற்றதாகக் கூறி ஸ்ருதியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.  மேலும் மூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்து விடுவேன் என்றும், பெட்ரோலை ஊற்றி எரித்து விடுவேன் என்றும் கூறி நவீன் மிரட்டி வந்துள்ளார். மேலும் ஸ்ருதியையும், குழந்தையையும் வீட்டில் இருந்து நவீனும் அவரது பெற்றோரும் வெளியேற்றியுள்ளனர். இதனால் மனம் உடைந்த ஸ்ருதி தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது ராமநகர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் நவீன், அவரது பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

 மூல நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது என்றால் அனைவரும் கவலை கொள்வார்கள்; அதற்குக் காரணம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்கக் கூடாது. எனவே அவர்களுக்கு வரன் கிடைப்பதில் மிகவும் கஷ்டம் வருமாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்களாவும் இருப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு,  நல்ல ஆலோசனைகள் சொல்வார்கள். அப்பொழுது ஒரு சில கணவர்கள்  ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருப்பர், ஆனால் மாமனார்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பர். அதற்குக் காரணம் 'நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா?' என்று நினைப்பார். இதனால் மாமனாருக்கும், மருமகளுக்கும் அதிகமாக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் ஜோதிடத்தில் மூல நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனார் இறந்து விடுவார் என்று குறிப்பிடுகின்றனர். 

'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்!' என்ற மூடப் பேச்சு மொழி வழக்கத்தில் உள்ளது. காரணம் ஆண் தனது மனைவியின் குடும்பத்திற்குக்கூட ஆலோசனை கூறினால் அதை மதிப்போடு ஏற்பார்கள், 

அதே நேரத்தில் பெண் தான் புகுந்த வீட்டில் ஆலோசனை கூறினால் பெரும் பிரச்சினைகள் மற்றும் கவுரவக் குறைபாடுகள் ஏற்படும் என்பதால் இந்தப் பேச்சுமொழி உருவாகியது.

மூல நட்சத்திரம் என்பது எல்லாம் விஞ்ஞான ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றா? மூடநம்பிக்கையைத் திணித்து அந்தப் பாமரத்தனமான மூடநம்பிக்கையையே மூலதனமாக்கிப் பிழைப்பு நடத்தும் கூட்டம் செய்த தில்லுமுல்லுதான் மூலம் நட்சத்திரம் போன்ற மூடநம்பிக்கைகள்.

செவ்வாய்க் கிரகத்தில் குடியேறலாம் என்ற நிலை உருவாகி, முன்னதாகவே, இடத்தைப் பதிவு செய்யத் துடிக்கும் ஒரு கால கட்டத்தில், மூலம் நட்சத்திரம் என்பதும், அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒரு பெண்ணால் மாமனார் செத்துப் போய் விடலாம் என்பது எல்லாம் எத்தகைய அபத்தம்.

குறைந்த வயதில் மாமனார்கள் மண்டையைப் போடுவதில்லையா? நல்ல நேரம் நட்சத்திரம் பார்த்துத் திருமணம் செய்யப்பட்ட வீட்டிலேயே இந்த நிலை ஏற்படுவதில்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51ணீ(லீ) என்ற பிரிவு - மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பது - வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும் - குறிப்பாகப் படித்த மக்களும் மதக் கிறுக்கர்களாக இல்லாமல் திருந்தி, வாழ்க்கையைத் தொலைத்துவிடாமல் வளர்ச்சி பெறட்டும்!

No comments:

Post a Comment