தந்தை பெரியாருக்குக் கம்பன்மீது கோபம், ஆத்திரம் ஏன்? ‘‘பெரியார் பேருரையாளர்'' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

தந்தை பெரியாருக்குக் கம்பன்மீது கோபம், ஆத்திரம் ஏன்? ‘‘பெரியார் பேருரையாளர்'' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை அக்.5   கம்பன்மீது தந்தை பெரியார் அவர் களுக்குக் கோபம்,, ஆத்திரம் ஏற்பட்டது. ஏனென்றால், நம்முடைய இனத்தைக் காட்டிக் கொடுத்தார் என்பதினால். அவ்வளவு பெரிய புலமை இருந்து என்ன பயன்? என்று கேட்டார் என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

‘‘பெரியார் பேருரையாளர்’’  பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா

30.9.2022 அன்று மாலை  தஞ்சாவூர் பேருந்து  நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற் றாண்டு அரங்கத்தில் ‘பெரியார் பேருரையாளர்’ பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவிற்குத்  தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட்!

காரணம், பெரியாருக்கு சுயநலம் இல்லை - பெரியாருக்கு மனிதப் பண்பாடு, மனிதநேயம்தான் முக்கியம்.

ஆகவே, பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட் - ஒரு பேரங்காடி. அந்தப் பேரங்காடியில், எல்லா பொருள்களும் இருக்கின்றன. யார் யாருக்கு என் னென்ன பொருள்கள் வேண்டுமோ, அவரவர்கள் அந்தந்தப் பொருள்களை எடுத்துச் செல்கிறார்கள். எல்லோரும், எல்லாப் பொருள்களையும் வாங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க மாட்டோம். நாங்கள் அந்தப் பேரங்காடியில் பணியாற்றக் கூடியவர்கள்.

பெரியாருடைய கருத்துகள் கொஞ்சம்கூட மாறாமல், இன்னும் அதை ஆழமாகப் படித்து எப்படி எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்கு உதாரணம் அய்யா இராமநாதன் அவர்கள்.

எங்களைப் போன்றவர்களுக்கு 

மிகவும் வியப்பு!

பெரியாருடைய கருத்தோடு ஈர்க்கப்பட்டவர் புரட்சிக்கவிஞர்.

பெரியார், புரட்சிக்கவிஞர் ஆகிய இரண்டு பேராலும் ஈர்க்கப்பட்டவர் நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் அய்யா இராமநாதன் அவர்களாவர்கள்.

அப்படி இராமநாதன் அவர்களால் ஈர்க்கக்கப்பட்டு இருக்கக்கூடியவர் புரட்சிக்கவிஞர் என்று சொல்லும் பொழுது, பெரியாரிடத்தில் பல காலம் படித்து, இன்னமும் வாழ்நாள் மாணவர்களாக திகழ்ந்துகொண்டிருக்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாடல் களுக்கு அவர் பாடம் சொல்லும் முறை மிகவும் வியப்பாக இருக்கும்.

சிதம்பரத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் அய்யாவை அழைத்து வருகிறார்கள். 

புரட்சிக்கவிஞர் எழுதிய பாடலை விளக்கிச் சொல் கிறார்கள்.

‘‘அவர்தாம் பெரியார் பார்!’’ என்று கவிதை எழுது கிறார்.

‘‘தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம்

பெரியார் பார்!''

என்று மற்றவர்கள் வேகமாக சொல்லிக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால், அய்யா இராமநாதன் அவர்கள் விளக்கம் எத்தகையது?

அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்! 

‘‘அன்பு மக்கள் கடலின்மீது

அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்!''

என்ற இரண்டு வரியை எடுத்துக்கொண்டு, அறிவுத் தேக்கம் என்பது என்ன பொருள் என்று எழுதியிருப்பார் இந்தப் புத்தகத்தில்.

நீர்த்தேக்கம் என்று எப்பொழுது வந்தது என்றால், ஏரிக்கு அடுத்து வேறு சொல் இல்லை. அதற்குப் பிறகுதான் ‘டேம்' என்று வந்தது. அதற்காகத்தான் ‘தேக்கம்' என்று விளக்கங்களைச் சொன்னார்.

நூற்றாண்டு விழா நாயகர் இராமநாதன் அய்யா அவர்கள்மீது தந்தை பெரியாருக்கு இருந்த பற்று என்பது எங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

புலவர்களால் நாடு நாசமாய்ப் 

போயிற்று - கெட்டுப் போயிற்று!

பொதுவாக தந்தை பெரியார் அவர்களுக்கு, புலவர்கள்மீது  கோபம். உங்களுக்கெல்லாம் அது நன்றாகத் தெரியும். நீங்கள் எல்லாம் நம்முடைய குடும்பம் - ஆகவே, மனந்திறந்து நான் பேசலாம், அதிலொன்றும் தவறில்லை.

புலவர்களால் நாடு நாசமாய்ப் போயிற்று - கெட்டுப் போயிற்று என்று கடுமையாகப் பேசுவார் தந்தை பெரியார்.

ஒரு வேடிக்கை என்னவென்று சொன்னால், இதை அருகிலிருந்து எழுதியவரே புலவர் இராம நாதன் அவர்கள்தான்.

அரசியல் கெட்டுப் போனதற்குக் காரணமே, வக்கீல்கள்தான்!

அய்யா மேடையில்  இதனைக் கூறி உரையாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, அய்யா இராமநாதனைப் பார்த்து வேடிக்கையாக, ‘‘உங்களைப் பற்றிப் பேசுகிறார் பாருங்கள் அய்யா'' என்பேன்.

அய்யா அடுத்து பேசும்பொழுது, ‘‘அரசியல்  கெட்டுப் போனதற்குக் காரணமே, வக்கீல்கள்தான்'' என்பார்.

உடனே புலவர் இராமநாதன் அவர்கள், ‘‘பாருய்யா'' என்பார்.

‘‘நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

நெறிகெட்டு வளைந்ததெல்லாம்

நிமிர்த்து வைப்பார்.''

தந்தை பெரியார் சொல்வதற்கு உள்நோக்கம் கிடை யாது. சமுதாய நோக்கம், இனநல நோக்கம், அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்றுதான்.

இதைத்தான் நம்முடைய புலவர் இராமநாதன் அய்யா அவர்கள் மிக அழகாக இந்த புத்தகத்தில் எடுத்துச் சொல்லியிருப்பார்.

சங்க இலக்கியங்களைப்பற்றி எல்லோரும் பேசு வார்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்று எல்லோருக்கும் தெரியும்.

பெரியாருக்கு என்ன இலக்கியம் தெரியும்?

தந்தை பெரியார் அவர்கள் எப்படிப்பட்ட சிந்தனை யாளர் என்று நிறைய பேருக்குத் தெரியாது. ‘‘பெரியாருக்கு என்ன இலக்கியம் தெரியும்? அவர் என்ன இலக்கியத் தைப்பற்றி பேசுவது?'' என்று சிலர் நுனிப்புல் மேய்வது போன்று கேட்பார்கள்? 

ஆனால்,  இராமநாதன் அய்யா அவர்கள்தான் சுட்டிக்காட்டினார்; அப்படி கேட்பவர்களுக்குப் பதில் சொன்னார்.

1935 இல் பகுத்தறிவு ஏட்டில் 

தந்தை பெரியார் எழுதினார்!

இராமநாதன் அய்யா அவர்கள், கடவுள் மறுப்பைப் பற்றி விளக்கம் சொல்லிக் கொண்டு வருகின்ற நேரத்தில் ஒரு செய்தியை சொன்னார்.

தந்தை பெரியார் அவர்கள், 1935 ஆம் ஆண்டு ‘பகுத்தறிவு'  ஏட்டில், என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? என்று கேட்பார்.

நிறைய பேர் என்ன நினைப்பார்கள், பெரியார் அவர்கள் கம்பரைத் தாக்குகிறார்; ஆகவே, அவர் கம்ப ராமாயணத்தைப் படித்ததில்லை என்று.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் போன்று, எல்லா இராமாயணங்களையும் படித்தவர்கள் யாரும் கிடையாது. எல்லாப் பதிப்புகளும் அவரிடம் இருந்தன.

நம்முடைய இனத்தைக் காட்டிக் கொடுத்தார் கம்பன்!

கம்பனைப்பற்றி பேசுகிறபொழுது, கம்பன்மீது தந்தை பெரியார் அவர்களுக்குக் கோபம், ஆத் திரம் ஏற்பட்டது. ஏனென்றால், நம்முடைய இனத் தைக் காட்டிக் கொடுத்தார் என்பதினால். அவ் வளவு பெரிய புலமை இருந்து என்ன பயன்? என்று கேட்டார்.

‘‘நீங்கள் இலக்கியத்தை குறை சொல்கிறீர்களே'' என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. கேள்வி எழுப்பினார்.

பெரியார் திரும்பக் கேட்டார், ‘‘நல்ல ஓவியர், சிறப் பான ஆற்றல் உள்ளவர் ஒருவர் ஓவியம் வரைகிறார் - அவர் உன்னுடைய தாயை நிர்வாணமாக ஓவியம் வரைந்தால், அந்த ஓவியருடைய திறமையை நீங்கள் பாராட்டுவீர்களா?'' என்று.

இராமநாதன் அய்யாவின் தனித்தன்மை!

இதுபோன்ற விஷயங்களையெல்லாம் இராமநாதன் அய்யா எடுத்து விளக்கிச் சொல்வார். அவருடைய தனித்தன்மை அதுதான். மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

அப்பொழுது சொல்கிறார், ‘‘கம்ப இராமாயணத்தில் கடவுள் மறுப்பு இருக்கிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அதை பெரியார் சொன்னார்'' என்றார்.

நாங்கள் எல்லாம் கம்ப இராமாயணத்தைப் படித் திருக்கிறோம்; அப்பொழுது எங்களுக்குக்கூட அந்த சிந்தனை வரவில்லை.  தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு ஏட்டில் எழுதும்பொழுதுதான், தெரிந்தது.

கம்பன் பாட்டில், அய்யா அவர்கள் எவ்வளவு ஆழமாக இருந்தார் என்பதற்கு உதாரணம் உள்ளது.

ஆத்திக - நாத்திக வாதத்தில்....

கடவுள் உண்டா? இல்லையா? என்கிற பிரச்சினை இருக்கிறது பாருங்கள்- எப்பொழுது கடவுள் உண்டு என்று ஆரம்பித்தார்களோ, அப்பொழுதே இல்லை என்று ஆரம்பித்தார்கள் என்று ஆத்திக - நாத்திக வாதத்தில் சொல்வார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்; ஏனென்றால், இது அறிவார்ந்த அரங்கம்.

அதை, கம்பன் பாட்டில் இருந்து தந்தை பெரியார் அவர்கள் 1935 ஆம் ஆண்டு சுட்டிக்காட்டியதை, பின் னாளில், இராமநாதன் அய்யா அவர்கள் பாடம் நடத்தும்பொழுது  விளக்கிச் சொல்லுகிறார்.

கம்ப இராமாயணம்

கோலம்காண் படலத்தில்.....

‘‘சில்லியல் ஓதிக் கொங்கைத் திரள்மணிக் கனகச் செப்பில்

வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின் தீட்டிப்

பல்லியல் நெறியில் பார்க்கும் பரம்பொருள் என்ன? யாருக்கும்

இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார்''

சீதையை சிங்காரிக்கிறார்கள்.

‘‘என்னடா, இவர்கூட கம்ப இராமாயணத்தைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டாரே'' என்று நினைக்காதீர்கள். இது மிக முக்கியமான பகுதி.

எந்த இடத்தில் கொண்டு போய் அவர்கள் கடவுள் தத்துவத்தை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்; தந்தை பெரியார் அவர்கள் இவ்வளவு ஆழமாக இதை எப்படிப் படித்திருக்கிறார் என்று. எப்பொழுது, 1935 இல், எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில். நம்மில் பலர் பிறக்காத காலத்தில்  பகுத்தறிவு ஏட்டில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதை நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் இராமநாதன் அய்யா எடுத்துச் சொல்கிறார்.

(தொடரும்)


No comments:

Post a Comment