முரட்டு சுயமரியாதைக்காரர் நெய்வேலி இரா. கனகசபாபதியுடன் ஒரு நேர்காணல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

முரட்டு சுயமரியாதைக்காரர் நெய்வேலி இரா. கனகசபாபதியுடன் ஒரு நேர்காணல்!

“மிசா சிறையில் மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொன்னாங்க, நான் கொடுக்கல! கடவுள் இல்லேன்னு சொன்னவன், 84 வயசுல ஜம்முன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்!”

சந்திப்பு: உடுமலை வடிவேல்

இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஊருக்கு ஒரிருவர்தான் பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள். ஏறக்குறைய எல்லாருமே முரட்டு சுயமரியா தைக்காரங்களா இருந்தாங்க. கலகக்காரங் களாகத்தான் இருந்தார்கள்! ஏன்? என்ன காரணம்? இது தனியே ஆய்வு செய்யக் கூடியதாகும். தொடக்க காலத்தில் பெரியார் தொண்டர்கள் `தனது குடும்பம்’, `பெற்றோர் கள்’, `மற்றவர்கள்’, `பார்ப்பனர்கள்’, `பணக்காரர்கள்’, இப்படி 5 முனைகளிலும் எதிர்ப்பு மூர்க்கமாக இருந்தது. அந்த மூர்க்கத்தை எதிர்கொள்ள முரட்டுத்தனம் தேவைப்பட்டது. அந்த முரட்டுத்தனம் இல்லேன்னா அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். இந்தக் கொள் கைதான் நம் இனத்தைக் கடைதேற்றும் என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்து விட்டது. இதை எப்படி எதிர்கொள்வது? எப்படியோ, அப்படித்தான் எதிர்கொண் டார்கள். அந்த முரட்டுத்தனம்தான் திரா விடர் இயக்கத்திற்கு அடித்தளத்தைப் போட்டுக்கொடுத்தது. அப்படி வலிமை யான அடித்தளத்தைப் போட்டுக்கொடுத்த தொண்டரான இரா.நெய்வேலி கனகசபா பதியை, சென்னை ஆர்க்காடு சாலையில் நி-6, ஜெயின் ஈஃபிக் கார்டன் அடுக்கு மாடிகள் குடியிருப்புக்குச் சென்று சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடல் திராவிடர் இயக்கத்தின் 70 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

கேள்வி: உங்களைப் பற்றியும், உங்க குடும்பத்தைப் பற்றியும் சொல்லுங்க.

பதில்: தஞ்சை மாவட்டத்தில் பூவனூர் கிராமம் நான் பொறந்தது. நாளு மே 26, 1939, அப்பா பேரு ஜி.ராஜகோபால், அம்மா ஜெகதாம்பாள். எனக்கு இரண்டு தம்பி, இரண்டு அக்கா. மொத்தம் அய்ந்து பேரு நாங்க. பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். எனக்கு 1960 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பொண்ணு, பேரு தமிழ்மணி, ஒரு பையன். பேரு தமிழ் செல்வன், பொண்ணுக்குக் காதல் திருமணம், மதம் மாறி திருமணம், அதே போல பையன், அவன் விரும்புன கேரளா பொண்ணையே திருமணம் பண்ணி வச்சோம். இரண்டு பேரும் நல்லாதான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. பேரன் இஞ்சினியரிங் முடிச்சிட்டு இங்கிலாந்துல படிக்கிறான். பையனோட பொண்ணு கனடாவில படிச்சிக்கிட்டு இருக்கு. கடவுள் இல்லேன்னு சொல்றவன் ஜம்முன்னு வாழ்ந்துகிட்டு இருக்கேன். (வாய்விட்டுச் சிரிக்கிறார்) 1997 இல் ஓய்வு பெற்றேன்.

கேள்வி: இப்பவே கருப்புச் சட்டைக் காரங்களுக்கு மணமகள் தேடுவது அவ்வளவு சுலபமில்லை. அன்றைக்கு எப்படி இருந்தது? 

ரொஞ்ம்ப சிரமம். நான் குத்துவரிசை, சிலம்பம் சண்டை கத்துக்கிட்டவன். அய்யா வோட கொள்கையை ஏத்துக்கிட்டவன். போதாதற்கு போக்கிரின்னு பேரு இருந்த தனால யாரும் பொண்ணு தர மாட்டேன் னுட்டாங்க. எங்க அக்காவே, “அவனுக்கு பொண்ணு குடுத்தா, கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிருவான்.” அப்பிடின் னுட்டாங்க. இதுக்காகவே நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேன். எங்கப்பா எங்க ஊருல இருக்கிற மகாலிங்கமுன்னு ஒருத்தர் மூலமா அய்யாவைப் பார்த்துப் பேசி, அய்யா என்னை வரச்சொல்லி, ஆனைமுத்து மூலமா தந்தி கொடுத்தாங்க. நான் திருச்சி பெரியார் மாளிகைக்குப் போனேன். அப்போ, அம்மா மணியம்மா இருக்காங்க, அய்யா (பெரியார்), ஆனைமுத்து, து.ம.வெங்கடேசன், பழனி ஜோசப் இவங்கெல்லாம் இருக்காங்க. நான் போயி அய்யாவைப் பார்த்தேன். அய்யா, “ஏங்க செஞ்சுக்க வேண்டியதுதானே? அய்யா (அப்பா) சொல்றாங்கள்ளே?” அப்பிடின்னாரு. “அய்யா, நான் கட்சி வேலையையே பார்த்துக்கிறேன்” அப்பிடின்னேன். “கட்சியா, கட்சி வேலை பார்க்கறீங்களாஞ்? கல்யாணம் பண்ணினா கட்சி போயிடுமா? உங்களோ டேயே கட்சி போயிடுமா?” அப்பிடின்னாரு. (சிரிக்கிறார்) அம்மா கைதட்டறாங்க. எனக்கு ஒன்னும் புரியலை. எங்கப்பாவுக்குச் சந்தோசம். அய்யாவே திருமணத்திற்கு வர் றேன்னு சொல்லிட்டாரு. எங்கப்பா, “நீங்க சொல்ற தேதிக்கு வாங்கய்யா” அப்பி டின்னாரு. ஆனா, அய்யா சொல்றாரு. “நான் சொல்ற தேதி உங்களுக்கு நாள் நல்லா இருக்காது. நீங்க நாளெல்லாம் பார்ப்பீங்க.” அப்பிடின்னுட்டாரு. (பேசமுடியாமல் நடந் ததை எண்ணி ஒருகணம் கலங்குகிறார். தொடர்ந்து தழுதழுத்த குரலில் பேசுகிறார்) அவ்வளவு மனுசன மதிக்கிறவரு பெரியார். கொள்கை என்ன? கடவுள் இல்லை! அப்ப எங்கப்பா, “நீங்க பெரியவரு. நீங்க வந்தா போதும்” இப்படியே சொன்னாரு. அய்யா, “செப்டம்பர் ஏழாம் தேதி தஞ்சாவூர் வர்றேன். அன்னிக்கு வச்சிக்கலாமா” அப்பிடின்னாரு. சரீன்னாச்சு.

தஞ்சாவூர் வந்து பொண்ணு பார்த்து எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு. அய்யா வர்ல. உடம்பு முடியாம ஆஸ்பிட்டல்ல அட்மிசன் ஆகியிருந்தாரு. அய்யா தந்தி குடுத்து, “என்னால வரமுடியல. பட்டுக்கோட்டை விஸ்வநாதன்; மாநில அமைப்பாளர், அவரை வரச்சொல்றேன்” அப்பிடின்னு கடிதம் அனுப்பினாரு. அந்தக் கடிதமெல்லாம் வச்சிருக்கேன். விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. கட்சிக்காரங்களெல்லாம் வந்திருந் தாங்க. தாலி கட்டற பிரச்சனை வந்துச்சு; தூக்கிப் போட்டுட்டேன். பொண்ணு வீட்டுக் காரங்களோட சண்டை. `எங்கப்பா கோவிச் சுக்கிட்டு போறாருன்னாங்க’ நான் போனா போகட்டுமுன்னேன்.’ அப்புறம் அழைச் சுட்டு வந்து உட்கார வச்சாங்க. அவங்க பேரு தமிழரசி, அவங்க காலை மிதிச்சேன். பார்த்தாங்க, முறைச்சேன், ஒத்துக்கிட்டாங்க. தாலி கட்டாம திருமணம் நடந்தது. இப்படித் தான் முதல் ராத்திரியும் நல்ல நேரத்தில நடக்கணும்னாங்க. நான் “நல்ல நேரத்தில தான் நாங்க சேருவோமுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும், வேணுமுன்னா கதவைத் திறந்து வைக்கட்டா?” ன்னு கேட்டேன். (வாய்விட்டுச் சிரிக்கிறார்) விட்டா போதுமுன்னு கம்முன்னு போயிட்டாங்க. 

இன்னிக்கு ரொம்ப ஈசியா நீங்க கட்சி நடத்தறீங்கய்யா - எங்க காலத்தில குடும்ப எதிர்ப்பு; பெற்றோர்; அடுத்தது சொந்தக் காரன்; பணக்காரன்; பார்ப்பான்; திமுக! அன்னிக்கு திமுக.வையும் எதிர்த்தோம். இத்தனையும் எதிர்த்துக்கிட்டுதான் கட்சி நடத்தினாங்க. இன்னிக்கு ஈசியா இருக் குன்னா பழைய காலத்தில போட்ட பவுண் டேசன்! நெய்வேலியில் உள்கிராமத்தில இளந்திரையன் போல இன்னிக்கு எத்தனை இளைஞர்கள் இயக்கத்தில் வேலை செய்யறாங்க! பார்க்கறதுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? முரட்டுத் தனம் இல்லேன்னா அன்னிக்கு நாங்க ளெல்லாம் வாழ்ந்திருக்க முடியாது. 

திருமணம் முடிஞ்சு வரவேற்புக்கு அவங்க (என் துணைவியாரின்) பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். பார்த்தா - கழட்டிப்போட்ட தாலி அவங்க கழுத்தில் இருந்தது. எல்லாரும் இருந்தாங்க. நான் சொன்னேன், “இந்த தாலி நான் கட்டல, நான் வேணும்னா இந்தத் தாலியைக் கழட்டி தூக்கி எறிஞ்சுட்டு வா! தாலி வேணுமுன்னா இங்கேயே இருந்துக்க” அப்பிடியின்னுட் டேன். தாலியைக் கழட்டிப் போட்டுட்டு வந்தாங்க. ஒரு சங்கிலி மட்டும் போட்டுக் கிட்டாங்க. அதில நம்ம கொடி; இரண்டு பேரோட பேரு; திருமணநாள் எல்லாம் வச்சு போட்டுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் இவங் களும் நம்ம கொள்கைதான். தன்னுடைய குடும்பத்தைத் திருத்தாம மேடையில் பேசி என்ன பயன்? என் பையனும் இதே கொள்கை தான். பொண்ணு கிறித்துவ மதத்திற்கு மாறிட்டாங்க. என் மருமக கிட்டயும், ”நீ சாமி படத்தைக் கொண்டு வந்து வீட்டில வச்சா தூக்கி எறிஞ்சிடுவேன்” அப்பிடின்னுட்டேன்.

கேள்வி: அய்யாவின் எந்தக் கருத்து முதலில் உங்களை ஈர்த்தது? 

பதில்: பார்ப்பனிய எதிர்ப்புதான்! தஞ்சை நீடாமங்கலம் பூவனூர் கிராமம் பிள்ளையார் கோயில் எதிரில் கூட்டம். பிள்ளையார் கோயில் மதில்மேல ஏறி நான் பெரியார் பேச்சைக் கேட்டுகிட்டு இருக்கேன். பார்ப் பனர்கள் தாழ்த்தப்பட்டவங்களை எவ்வ ளவு கேவலமாக நினைக்கிறாங்க? தமிழர்க ளாகிய நம்மை எப்படி நினைக்கிறாங்க அப்படின்னு அய்யா சொல்றாரு. இதெல் லாம் பெரியார் சொல்லக்கேட்டுத்தான், இந்த ஆதிக்கம் பத்தியே எனக்குத் தெரிஞ்சுது. அப்பவே “பெரியார் வாழ்க”ன்னு சொல்லிட்டு, கீழ குதிச்சேன். மகாலிங்கம் அப்பிடின்னு ஒருத்தர் இருந்தார் அங்கே! எனக்கு மூத்தவர், உத்திராபதி, இராமய் யான்னு கட்சிக்காரங்க இருந்தாங்க. அவங்க ளெல்லாம் வந்து என்னைக் கட்டிப்புடிச்சு, அய்யாகிட்ட அழைச்சுகிட்டுப் போயி, அறிமுகப்படுத்தி வச்சாங்க. அய்யா, சிரிச்சு கிட்டு தட்டிக்கொடுத்து, ”நல்லா இரு, நல்லா இரு” அப்பிடின்னு சொன்னாரு. 

கேள்வி: அந்த வயசுல உங்க இயக்கப் பணி என்னாவாக இருந்தது?

நீடாமங்கலத்தில் பெரியார் பிறந்த நாளைக்கெல்லாம் பள்ளிக்கூடம் போகாமல் சுயமரியாதைப் படிப்பகத்தில் உட்கார்ந்து கொண்டு, விடுதலையில் பெரியார் எழுதிய  கட்டுரையை மைக்கில் படிச்சுகிட்டு இருப் போம். அப்போ ஆன்னா ஆறுமுகம், பெரிய பணக்காரரு! விஸ்வநாதன் மாவட்டத் தலை வரா இருந்தாரு. இரண்டு பேரும் எனக்கு ரொம்ப உற்சாகம் ஊட்டுவாங்க. சைன் போர்டு எழுதறது; அய்யா வந்தாருன்னா விளம்பர போர்டு எழுதறது; சைக்கிளில் மெகா ஃபோன் வச்சு, ‘இன்று பெரியார் பேசுகிறார்! வாரீர்! வாரீர்! என்று கூட்டம் பற்றி அறிவிப்பு செய்யறது இப்படிபட்ட பணிகள் செய்தேன். அப்போது இராமன்னு ஒருத்தர் என்னோட இருந்தாரு. 

”1957 இல் அரசியல் சட்ட பிரிவு எரிப்புப் போராட்டம் கலந்துகிட்டேன். அதுக்கு அய்யா மன்னார்குடி மாநாட்டில் எங்களுக்கு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தாரு!” என்று சொல்லியபடியே எடுத்துக் காட்டுகிறார். பின்னாளில் ஆசிரியர் இதைப் பார்த்துவிட்டு, “இதை இன்னும் வச்சிருக்கீங்களா?” ன்னு ஆச்சரியப்பட்டார். 1957இல் தஞ்சாவூர் மாநாட்டுல, அய்யாவுக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுத்தாங்க! அதுல தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து மாநாடு நடக்கிற தஞ்சாவூர் அரண்மனை வரைக்கும் இரண்டு பக்கமும் தொண்டரணி வரிசையா நின்னாங்க, அதிலே வழியில் இருக்கிற பெரியார் சிலை பக்கத்தில் நானும் பேட்ஜ் அணிந்து நின்னேன். அங்கிருந்து பாதை திரும்புகிறது. அதைச் சுட்டிக்காட்டும் விதத்தில், வரிசையா வருகிறவங்களுக்கு, இரு கைகளையும் கூப்பி கும்புடு போட்டு (மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் சிரிக் கிறார்), அவர்கள் செல்லவேண்டிய பாதை யைச் சுட்டிக்காட்டிப் பணிசெய்தேன். எல்லோரும் போன பிறகு மாநாட்டுப் பந்தலுக்கு வந்துடணும். அங்கே பந்தலில் உள்ள தொண்டர்களுக்கெல்லாம் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பணிகளைச் செய்வோம். 

கேள்வி : இயக்கத்தில் நீங்க பங்கெடுத்த போராட்டங்கள் பற்றிச் சொல்லுங்க!

பதில் : இராமன் படம் எரிச்சுட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தேன் பாருங்க, நீடாமங்கலத்தில என்னை சிலம்பாட்டத் தோட ஊர்வலமா அழைச்சுகிட்டுப் போனாங்க. அதுக்கப்புறமா ஊரிலும், வீட்டி லும் எதித்தாப்ல பெஞ்சு போட்டு உட்கார வச்சிருக்காங்க என்னை. அதெல்லாம் செஞ் சுட்டு, விடியற்காலையில் கூப்பிட்டுப் பேசி எங்கப்பா, என்னை அறையில கட்டிவச்சு அடிச்சாங்க. (பலமாகச் சிரிக்கிறார்) ”உனக்கு நான் அப்பன் இல்ல; பெரியார்தான் அப்பன்” அப்படின்னு சொல்லியே அடிச்சாரு. தெருவுல இருக்கிற பெண்கள் வந்து, “ஏய் மாமா, ஏன் மாமா அடிக்கிறீங்க. விடுங்க மாமா” அப்பிடின்னு, அவங்களும் சத்தம் போட்டாங்க. அப்புறம் எல்லாரும் போன பிற்பாடு எங்கம்மா வந்து அவுத்துவிட்டாங்க. அப்புறம் அரசியல் சட்டம் எரிச்ச பிறகு, திருவாரூர் ரயில் நிலையத்தில் இருக்கிற ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் 

கொஞ்ச நாள் வேலை செஞ்சேன்.  “சுதேசமித்ரன், ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ், பேப்பர், பேப்பருன்னு” பேப்பர் விற்பனை செஞ்சேன். “விடுதலையும்” வரும்! அதுக்குப் பிறகு அங்கிருந்தும் வந்துட்டேன். எங்கப்பா தேடிட்டிருந்தாரு. வந்து திட்டி, கிட்டி அழைச்சுட்டுப் போயிட்டாரு. 

பிறகு நெருக்கடி காலத்தில் கைதானேன். அன்னிக்கு திண்டிவனத்தில் காந்தி சிலைக்குப் பக்கத்தில் பொதுக்கூட்டம். ஆசிரியர், அம்மா இருந்தாங்க. அப்போ அம்மா (அன்னை மணியம்மையார்), ஒரு போன் நம்பர் குடுத்து, இதிலிருக்கிற போன் நம்பருக்கு பேசி, ஆட்சிக்கு என்ன ஆச்சுன்னு கேட்டு வா.” அப்பிடின்னாங்க. அவங்க டி.பி.யில் (பயணியர் விடுதி) இருக்காங்க. திருச்சி சம்பந்தம்னு ஒருத்தர் இருந்தாரு. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மந்திரி ராஜாராமுக்கு நான் போன் பண்னேன். அவரு, “அம்மாகிட்ட சொல் லுங்க, ஆட்சியைக் கலைச்சிட்டாங்கன்னு” அப்பிடின்னாரு. இங்கிருந்து போறதுக்குள்ள மீட்டிங் முடிஞ்சிடுச்சு. நான் அம்மாகிட்ட சொன்னேன். அம்மா, “தன்னையும், ஆசிரிய ரையும் அரெஸ்ட் பண்றதா சொன்னாங்க” அப்பிடின்னாங்க. முதல் நாளு வந்த அரெஸ்ட் வாரண்ட் பூரா டெல்லியிலிருந்து வந்தது. அதுக்குப்பிறகு வந்ததெல்லாம் போலிஸ்காரனே தி.மு.க.வில் புடிக்காதவங் களையும், மத்தவங்களையும் பண்ணினது. 

நான் பொன்விழா மாநாட்டுல, “மயிலே மயிலேன்னா இறகு போடாது. கழுத்தில காலை வச்சுப் புடுங்கணும்” அப்பிடின்னு பேசிட்டேன். அதில்லாம நெய்வேலியில் நான் பண்ற கலகம் இதெல்லாம் சேர்ந்து, நான் வீட்டுக்குப் போறதுக்குள்ள வழியில் போலிஸ் நிற்குது. கைது பண்ணாங்க. எதிர்த் தாப்பிலதான் வீடு, “நான் கருப்பு சட்டை போட்டுக்கிட்டு வர்றேன்” அப்பிடின்னேன். வேணாமுன்னுட்டாங்க. அடுத்த நாள் சிதம் பரத்தில கமிட்டிக் கூட்டம் வச்சிருக்கேன். அம்மாவும், ஆசிரியரும் கலந்துக்க இருந் தாங்க. அதுக்குத்தான் டி.பியில் தங்கியிருக்காங்க.

அப்புறம் கொண்டு போயி சென்னை சென்ட்ரல் ஜெயில்ல வச்சாங்க. ஆசிரியரு, நானு, சைதாப்பேட்டை தட்சிணாமூர்த்தி, முரசொலி மாறன், ஆசைத்தம்பி, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்ப அவரு புதுசா கல்யாணம் பண்ணியிருந்தாரு. சின்ன வயசு. அப்புறம் ஜின்னா, கவிஞர் பொன்னிவளவன், திமுக வக்கீல் கணேசன், என்.வி.என்.செல்வம், ஆர்க்காடு வீராசாமி, சைதாப் பேட்டை பாலு எல்லாரும் ஒரு ஆண்டு சிறையில் இருந்தோம். மன்னிப்பு கடிதம் கொடுத்தா வெளிய விட்டுருவாங்கன்னு, சிதம்பரம் எம்.எல்.ஏ. எல்லார் கிட்டேயும் கையெழுத்து வாங்கிட்டு இருந்தான். நாங்களெல்லாம் போடல.

கேள்வி: நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேசன் பார்ப்பன சாம்ராஜ்யமுன்னு சொல் வாங்களே! ஒரு பெரியார் தொண்டர் நீங்க எப்படி அங்க வேலைக்குச் சேர்ந்தீங்க?

பதில்:  கொஞ்சநாள் வீட்டில் இருந்தேன். பிறகு எனக்கு வேண்டிய துணிமணியெல்லாம் எடுத்துட்டு நெய்வேலிக்குப் போயிட்டேன். எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க! அங்க போக முடியாதே எப்படி, அப்படின்னு. கட்சிதான் என்னை முன்னுக்குக் கொண்டு வந்துச்சு! இங்க இருக்கிறவங்களுக்கு என்னைத் தெரியும். அய்யா கூட என்னை போக்கிரின்னுதான் சொல்வாரு. ஏன்னா? பெரியாரைப் பத்தி யாராவது தவறாப் பேசினா, முதலில் `பட்’டுனு அடிச்சுப் போடுவேன். (வெடித்துச் சிரிக்கிறார்) சண்முகவேலு; எங்க ஊருக்காரருதான்! மேஸ்திரியா வேலை பார்த்தாரு. எனக்கு பெயின்டிங் வேலை தெரியும்னு சொல்லி, சைன் போர்டு எழுதுவேன் அப்பிடின்னு சொல்லி, அங்க சாஸ்திரின்னு ஒரு பார்ப்பான், A.E., அவங்கிட்ட சொல்லி வேலைக்குச் சேர்த்துவிட்டாரு. அங்க நான் மட்டும்தான் கருப்புச்சட்டை! 

கேள்வி: நெய்வேலியில் திராவிடர் கழகம் பற்றிச் சொல்லுங்க.

பதில்: நெய்வேலியில் நான்தான் திராவிடர் கழக அமைப்பைத் தொடங்கி னேன். கடைவீதியில் தனியாக லைட் வெளிச்சம் இருக்கிற இடத்தில் நின்னுகிட்டு போற வர்றவங்களைப் பார்த்து, “பெரியார் வாழ்க!”, “பொறுப்போம், மீறினால் அறுப் போம் பூணூலை” ன்னு கத்துவேன். இதுதான் வாசகங்கள் அப்போ! அதைப் பார்த்து கூட் டம் வந்து சேரும். முதல்ல 10 பேரு வருவாங்க! அப்புறம் 50 ஆகும்! நால்ரோடு சினிமா கொட்டாய் வரையிலும் போகும்! அதுல பெரும்பகுதி பார்ப்பன எதிர்ப்பாளர்கள் இருந்தாங்க! தி.மு.க.விலயும் இருந்தாங்க. ஒரு நாள் ஒரு சலவைக் கடை வச்சிருக்கிற ஒருத்தர் நான் இருட்டில் நின்னு கத்தறதைப் பார்த்துட்டு, பெட்ரோமாக்ஸ் லைட்டை ஸ்டாண்டோட புடிச்சிட்டு நிற்கிறாரு. நான் முடிக்கிற வரைக்கும் நிற்கிறாரு! வயசானவரு! லைட்டை தோள் மேல வச்சுக்கிட்டு! 

முடிஞ்ச பின்னாடி நான் போயி கேட்டேன். “ஏங்க அசையாம லைட் புடிச்சிட்டு நிற்கிறீங்க? என்ன விசயங்க?” அப்படின்னு கேட்டேன். அப்ப அவரு, என் பேரு ராமசாமி! இங்கதான் சலவைக்கடை வச்சிருக்கேன். அப்பிடின்னாரு! அவரு நம்ம உணர் வுள்ளவரு! (முதல் நபரைக் கண்ட பழைய வியப்பு! இப்போதும் அப்படியே முகத்தில் தெரிகிறது) அப்பதான் அறிமுகம்! அதுக்குப் பிறகு அவரோட ஒத்துழைப்பு வந்து, ஒவ்வொருத்தரா வந்து சேர ஆரம்பிச்சாங்க! பிறகு, பெரியார் சமூகக் காப்பு அணியில் பேரறிவாளனோட அப்பா குயில்தாசனோட சேர்ந்து பயிற்சியாளரா இருந்தேன்! மாநில திராவிட தொழிலாளர் கழகச் செயலாளராக இருந்தேன்!

(தொடரும்...)


No comments:

Post a Comment