ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

 சித்த மருத்துவத் தொழிலோடு நின்றுவிடாமல் ஹிந்தி, சமஸ்கிருத எதிர்ப்பில் களம் காணும் உங்களைப் பாராட்டுகிறோம்!

எது பிரிக்கிறது நம்மை என்பது முக்கியமல்ல - எது நம்மை இணைக்கிறது என்பதுதான்  முக்கியம்!

உங்கள் மொழி உணர்வுக்கும், இன உணர்வுக்கும் திராவிடர் கழகமும் - ‘விடுதலை'யும் உங்களுக்குத் துணை நிற்கும்!

சென்னை, நவ.3 சித்த மருத்துவத் தொழிலோடு நின்று விடாமல் ஹிந்தி, சமஸ்கிருத எதிர்ப்பில் களம் காணும் உங்களைப் பாராட்டுகிறோம்!  எது பிரிக்கிறது நம்மை என்பது முக்கியமல்ல - எது நம்மை இணைக்கிறது என்பதுதான்  முக்கியம்! உங்கள் மொழி உணர்வுக்கும், இன உணர்வுக்கும் திராவிடர் கழகமும் - ‘விடுதலை’யும் உங்களுக்குத் துணை நிற்கும் என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் - 

தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம்- தலைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம்

நேற்று (2.11.2022) மாலை  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம், தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம், தலைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

பெருமதிப்பிற்குரிய தலைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக அதேநேரத்தில், தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம், தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் ஆகியவை இணைந்து இன உணர்வோடும், மொழி உணர்வோடும், நியாய உணர்வோடும் மிகத் தெளிவாக ஹிந்தியை எந்தக் காரணத்தினாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட் டோம் - ஹிந்தியைத் திணிக்காதே என்பதை வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரையில் நடத்துவோம் என்று சொல்லி,  அதன்படி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. விடாது மழை பெய்தாலும், அடாது மழை பெய்தாலும், நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை கைவிடமாட் டோம்; எவ்வளவு மழையானாலும், இடியானாலும், மின்னலானாலும், எவ்வளவோ எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்துத்தான் எங்கள் மொழியைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறோம்; எங்கள் உரிமைகளைப் பாது காத்துக் கொண்டு வருகிறோம் என்பதற்கு அடையாள மாக இருக்கக்கூடிய, இந்த ஏற்பாட்டின் அமைப்பு களுடைய தலைவர்களான பெருமக்களே - நேரத்தின்  நெருக்கடியைக் கருதி, ஒவ்வொருவரையும் தனித்தனி யாக விளிக்காமல், அனைவர் சார்பாகவும், அனை வருக்கும் மூத்தவராக இருக்கக்கூடிய நம்முடைய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களுக்கும், மேடையில் இருக்கின்ற பேரறிஞர் பெருமக்களுக்கும், எதிரே போராட வந்திருக்கக்கூடிய அனைத்துத் தோழர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது அன்பான, மரியாதைக்குரிய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊதிக் கெடுக்கும் ஒன்றிய அரசு!

தோழர்களே, பகல் 2 மணியளவிலிருந்து மிகத் தெளிவாக இந்த உணர்வுகளை நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ‘‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி'' என்று கிராமப்புறங் களில் ஒரு பழமொழி உண்டு.

ஆனால், ஆண்டி ஊதிக் கெடுப்பதைவிட, இன்றைக்கு ஒன்றிய அரசே ஊதிக் கெடுக்கிறது - அதை நினைத்தால்தான் வேடிக்கையாக இருக்கிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக் கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி ஏற்றம் இவற்றில் கவனம் செலுத்தவேண்டிய ஒன்றிய அரசு, தேவையில்லாமல், எல்லோரும் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும்; ஹிந்தி தெரியாதவர்களுக்கு வேலை கிடையாது என்று சொல்லி, நம்முடைய இளைஞர்களின் எதிர் காலத்தையே நாசமாக்குகிறார்கள்.

ஹிந்தி: நேரு கொடுத்த 

உறுதி என்ன?

நம்மைப் பொறுத்தவரையில், இந்தியா என்பது பன் மொழிகள், பல கலாச்சாரங்கள், பன்மதங்கள், பல்வேறு பண்பாடுகள் உள்ள ஒரு நாடாகும். அதனால்தான், வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்குவது எப்படி என்பதைத் தெளிவாகச் சொல்லித்தான், ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக வந்தாலும், எவ்வளவு காலம் நீங்கள் விரும்புகிறீர்களோ, அவ்வளவு காலத்திற்கு ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று பிரதமர் நேரு அவர்கள் கொடுத்த உறுதிமொழியாகும்.

காரணம், தமிழ்நாட்டில் இதேபோன்று கிளர்ச்சி நடந்து, பெரியார் அய்யா, அதேபோன்று அண்ணா காலத்தில், கலைஞர் காலத்தில் தொடர்ந்து  நடத்திய போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ் உணர்வோடு அன்றைக்கும் நாவலர் சோம சுந்தர பாரதியார், தமிழ்க்கடல் மறைமலையடிகளார் போன்றவர்கள் அத்தனைப் பேரும் ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார்கள்.

வரும் 4 ஆம் தேதி திராவிட மாணவர் 

கழகம் சார்பில் நாடு தழுவிய அளவில் 

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்!

அதே நிலை இன்றைக்கும் இருக்கிறது. திராவிட இயக்கங்கள் அதற்குரிய பணிகளைச் செய்தாலும், தமிழ் அறிஞர்களும், சித்த வைத்தியர்களும் சேர்ந்து நாங்களும் இந்த உரிமைகளைத் துறக்க மாட்டோம்; கடமைகளை மறக்கமாட்டோம் என்ற அளவில், இந்தப் போராட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் - அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை மறுநாள் திராவிட மாணவர் கழகம் சார்பில் நாடு தழுவிய அளவில், ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் ஆட்சி என்று சொன்னால், மக்களுடைய கோரிக்கைகளுக்குக் காது கொடுக்கவேண்டும். 

சிலர் புரியாமல்,  நாங்கள் ஹிந்தி மொழியைக் கற்கக் கூடாதா? என்று கேட்கிறார்கள்.

நாம் ஒன்றும் ஹிந்தி மொழிக்கு விரோதியல்ல. மொழியைத் திணிக்காதே என்றுதான் சொல்கிறோம்.

இங்கே இருந்து கொஞ்சம் தூரம் சென்றோம் என்றால், ‘தட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா' என்று இருக்கிறது. அதைப் போய் நாங்கள் இடிக்கப் போகிறோம் என்று ஒருபோதும் சொல்லப் போவதில்லை. 

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

ஹிந்தி மொழியை விரும்புகிறவர்கள் தாராளமாகப் படிக்கட்டும்.

ஹிந்தி படிக்காவிட்டால், வேலை கிடைக்காது என்று சொல்கிறர்கள்.

ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்திலிருந்து, தமிழ்நாட்டிற்கு நிறைய பேர் வேலைக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருவது மட்டுமல்ல, ஹிந்தியிலேதான் அவர்கள் பேசுகிறார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ஹிந்தி மொழி தெரிந்தவரையே அதிகாரி யாகப் போட்டால், கிராமப்புறங்களில் இருந்து வருபவர் கள் பணம் எடுக்கவோ, போடவோ வருகிறவர்களிடம் அந்த அதிகாரி எந்த மொழியில் பேசுவார்? ஹிந்தி மொழியில் பேசினால், கிராமத்திலிருந்து வருகிறவர் களுக்குப் புரியுமா? அவர்கள் கேட்கும் கேள்விக்கு, இவர் எப்படி பதில் சொல்வார்?

குறைந்தபட்சம் பொது அறிவுகூட இல்லாத அள விற்கு நிர்வாகத்தை நடத்துகிறார்கள் என்றால், அது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும், வேதனைக்கும் உரிய ஒன்றாகும்.

ஆகவேதான், இதை நாம் எதிர்த்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்; அந்தப் போராட் டத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

2024 இல் புது விடிவு பிறக்கும்!

2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதற்கு ஒரு தெளிவான முடிவு வரும். இன்னும் ஓராண்டுதான் - உச்சகட்டத்தில் எல்லாம் சரி வரும். அப்பொழுது அவர்களுடைய நிலை தொங்குபாலம் போன்று ஆகும்.

தங்கும் பாலமாக இருக்காது - தொங்கும் பாலமாகத் தான் இருக்கும்.

ஆகவேதான், நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய மூன்று செய்திகளைச் சொல்லுகிறேன்.

இங்கே மூன்று கோரிக்கைகளைச் சொன்னார்கள். நிச்சயமாக அந்தக் கோரிக்கைகளை நாம் ஏற்கெனவே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

பொதுவாக நம்முடைய நாட்டில், மருத்துவத்தில் சித்த மருத்துவத்தைப் போன்று ஒரு சிறந்த மருத்துவம் வேறு கிடையாது. அதுதான் தமிழர்களுக்கு உரியது; தமிழ்ப் பண்பாட்டுக்கு உரியது - இயற்கையாகவே ஒத்துப்போனது.

இன்னுங்கேட்டால், ஆங்கில மருத்துவத்தினை விட சிறப்பானது என்பதால், பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், இந்த மருத்துவ முறையில்தான், பக்க விளைவுகள் கிடையாது. மற்ற மருத்துவத்தில் பக்க விளைவுகள் உண்டு.

ஹிந்தியைத் திணித்தால் அதனால், என்னென்ன பக்க விளைவுகள் வரும் என்று தெளிவாகத் தெரியும்.

ஆயுர் வேதமா? சித்த மருத்துவமா?

ஆகவேதான், மிகத் தெளிவான அளவிற்கு, பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் சித்த மருத்துவம் - மிகவும் எளிமையானது.

நம்மூரில் என்ன நினைக்கிறார்கள் என்றால், எளிமையாக எது கிடைத்தாலும், அதற்கு மரியாதை குறைச்சல் என்று நினைக்கிறார்கள்.

ஒருவரின் நாடியைப் பிடித்துப் பார்த்து, உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கிறது, சரியாக இருக்கிறது என்று சொன்னால், ‘‘என்னங்க, இரண்டே நிமிடத்தில் இப்படி சொல்கிறாரே, இது சரியாக இருக்குமா?'' என்று கேட்கிறார்கள்.

ஆங்கில மருத்துவ முறையில், எக்ஸ்ரே எடுங்கள், ஸ்கேன் எடுங்கள், இந்தப் பரிசோதனையை செய்து விட்டு வாருங்கள் என்றெல்லாம் சொன்னால்தான், அவருக்குத் திருப்தியாக இருக்கும்.

மேற்சொன்ன பரிசோதனைகளை எல்லாம் சித்த வைத்தியர், நாடியைப் பிடித்தே சொல்லிவிடுவார்.

ஆகவே, ஹிந்தி, சமஸ்கிருதம் - தமிழ் என்பதை யொட்டி எப்படி போராட்டமோ, அதேபோன்றுதான் மருத்துவத்திலும். வடநாட்டில் ஆயுர்வேதிக் என்று சொல்லக்கூடிய மருத்துவ முறைக்கும், சித்த வைத் தியத்திற்கும் போராட்டம்.

பாராட்டத்தக்க உங்கள் உணர்வு!

வடநாட்டில் ஆயுர் வேதிக் என்கிற ஆர்.எஸ்.எஸ். - ஹிந்தித் திணிப்பாளர்கள் இவை அத்தனையும் செய்கிறார்கள். காரணம் என்னவென்றால், அது வேதத்தை அடிப்படையாகக் கொண்டது.

நமக்கு அடிப்படையான திருவள்ளுவருடைய திருக்குறளை எடுத்துக்கொண்டால்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்

என்று சொன்னார். வேறொன்றும் தேவையில்லை என்று சொன்னார்.

எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்? அதி லிருந்து உருவானதுதான் நம்முடைய சித்தர்களுடைய சித்த வைத்தியம் என்று சொல்லக்கூடிய மருத்துவம்.

இவர்களையெல்லாம் ரொம்பப் பாராட்டவேண்டும். ஏனென்றால், நம் வரைக்கும் தெரிந்துகொண்டு, நம் வரைக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றில் லாமல், நாட்டையும், வீட்டையும், மொழியையும் பாது காக்கவேண்டும் என்ற உணர்வோடுதான் இங்கே வந்திருக்கிறீர்கள்.

உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்போம்!

நீங்கள் சொன்ன கோரிக்கைகளை ‘விடுதலை' யின் ஏட்டின்மூலம் அரசாங்கத்தினுடைய கவனத் திற்குக் கொண்டு செல்வோம்.

இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள முதலமைச் சர் அவர்கள் செவி சாய்க்கக்கூடியவராக - உணர்வு படைத்தவராக மக்களுடைய முதலமைச் சராக இருக் கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் என்று இருப்பதை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றியாகிவிட்டது. ஆனால், அதில் என்ன சிக்கல் என்றால், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கலைஞர் தொடர்ந்து சொன்னார்;  இருந்தாலும், உச்சநீதி மன்றம் இதற்குக் குறுக்கே தடையாக இருக்கிறது.

பல நேரங்களில், உச்சநீதிமன்றத்தினுடைய அனுமதி இல்லை என்று ஒன்றிய அரசு சொல்கிறது; நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையில் எவரின்  கவனத்தை ஈர்க்கவேண்டுமோ அப்படி முறையாக ஈர்த்து, நிச்சயமாக நாம் வெற்றி பெறுவது உறுதி; அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

நாம் வேறு ஒன்றும் கேட்கவில்லை;  தமிழ்நாட்டில், தமிழ் வரவேண்டும்; ஆனால் தமிழ் வரமாட்டேன் என்கிறது. தமிழ்மொழி சிறப்பானது என்று வெளியில் பேசினால் மட்டும் போதாது.

இரகசியமாக வைக்கப்பட்ட 

சித்த வைத்தியம்!

எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது; ஆனால், நம்முடைய பெருங்கவிக்கோ இருக்கிறாரே, அவர் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர். சில ஆண்டு களுக்கு முன்பு கேரளக் கடவுளைத் தேடிக்கொண்டு போனார்; நான்தான் வேண்டாம் என்று சொல்லி, இங்கே இருக்கிற திருத்தணி முருகனுக்குப் பணம் போட்டால், அது நம் மூருக்கு வரும்; கேரள கோவிலுக்கு அதைப் போட்டால், அந்தப் பணம் கேரள அரசுக்குப் போகும் என்று சொன்னதிலிருந்து, அவர் அய்யப்பன் கோவி லுக்குப் போவதில்லை.

ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்கூட, ஆங்கில மருத் துவத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது; சித்த வைத்தியத்திற்கு குறைந்த நிதியையே ஒதுக்குகிறார்கள். மக்களுக்கு எளிமையாகக் கிடைக்கக்கூடியது சித்த வைத்திய முறைதான். ஆரிய - திராவிடம்தான் ஆயுர்வேதத்திற்கும் - சித்த மருத்துவத்திற்குமான போராட்டம்!

அவர்களைப் பொறுத்தவரையில், முழுக்க முழுக்க இன்னும் பாகுபாட்டு உணர்வோடுதான் நடந்துகொண்டி ருக்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. அவற்றை மாற்றவேண்டும் என்ற உணர்வோடுதான் நாம் இந்தப் பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

இப்படி இருக்கக்கூடிய சூழலில், நம்முடைய உணர்வுகள் என்ன என்பதை நன்றாக  அவர்கள்  நினைத்துப் பார்க்கவேண்டும்.

இந்தப் பகுதியை எடுத்துக்கொண்டால்கூட, அந்தக் காலத்திலிருந்து திராவிட இயக்கம்தான் சித்த மருத்துவக் கல்லூரியையும், பல்கலைக் கழகத்தையும் உருவாக்கியது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்தார்கள். அதற்கு முன்பு அதற்குப் பெயர் இண்டியன் இன்டகிரேட்டட் மெடிசன்ஸ் அன்ட் காலேஜ் என்றுதான் இருந்தது.

சித்த மருத்துவத்தைப் பரப்பாமல் விட்டுவிட்டார்கள். அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். அதனால், அது பரவாமல் போனது.

பெரியார் தொண்டர்கள் துணை நிற்பார்கள்!

நீங்கள் எல்லாம் அதை வெறும் தொழிலாக நினைக் காமல்,  அதைத் தொண்டாக கருதி நடத்தக் கூடியவர்கள்.  

ஆகவே, உங்களுடைய தொண்டுக்கு மரியாதைக் கொடுக்கின்ற வகையில், இந்தப் போராட்டம், நிச்சயமாக இதற்குரிய விளைவுகளை உண்டாக்கக் கூடிய அளவில் வரும். சிறிய அளவில்தான் இங்கே இருக்கிறோமோ, குறைந்த அளவில்தான் இங்கே திரண்டிருக்கின்றோமே என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.

138 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய நாட்டில், இராணுவத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு?

அதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகை எவ்வளவு? 8 கோடி மக்கள். ஆனால், காவல்துறையினரின் எண்ணிக்கை எவ்வளவு?

காவல்துறையை நம்பித்தானே நாம் இருக்கிறோம்; 8 கோடி மக்களுக்கு, 8 கோடி காவல்துறையினரா இருக்கிறார்கள்? இல்லையே!

காவல்துறைதான் நம்மைக் காப்பாற்றுகிறார்கள்; அதேபோன்று, நாட்டை இராணுவத்தினர் காப்பாற்றுகிறார்கள்.

அதேபோன்று, இதுபோன்ற இன உணர்வு படைத்தவர்கள்தான் நம்முடைய நாட்டை, இனத்தை, பண்பாட்டைக் காப்பாற்ற முடியும்.

எனவேதான், உங்களுடைய அன்பான, தேவையான பணியை, சரியான நேரத்தில், சரியான முறையில், நீங்கள் அருமையாகச்  செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள்!

நிச்சயமாக உங்களைப் போன்ற சமுதாயத் தொண்டர்களோடு பெரியார் தொண்டர்கள் உறுதுணையாக இருப்போம்!

உங்களுடைய கோரிக்கைகளை ‘விடுதலை'யில் எழுதுகிறோம்; அரசாங்கத்தினுடைய கவனத்திற்குக் கொண்டு செல்வோம்.

அதை செயல்படுத்தவேண்டிய அத்தனை முயற்சிகளையும் செய்வோம் என்று சொல்லி, உங்களுடைய முயற்சியை வாழ்த்துகிறோம்.

ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி பெறுவோம்!

நம்முடைய இந்தப் போர் என்பது ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். அதன்படி சில களங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்; ஆனால் போர் இன்னும் முடியவில்லை.

போரில் நாம் இறுதி வெற்றி பெறுவோம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

ஒன்றுபடுவோம், மாறுபட்ட செய்திகளைப்பற்றி நாம் கவலைப்படவேண்டாம். எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல - மொழி நம்மை இணைக்கிறது என்பது மிக முக்கியம். இனம் நம்மை இணைக்கிறது - எல்லாவற்றையும்விட, இயற்கை நீதியும், நியாயமும் நம் பக்கம் இருக்கிறது. ஆகவே, வெல்வது உறுதி!

விரட்டி வரும் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவோம் என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்..


No comments:

Post a Comment