பெரியார் வந்தார் அதனால் தப்பித்தோம்! மறுபடியும் சனாதனம் வந்தால் நமது கட்டை விரல்களுக்கு ஆபத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

பெரியார் வந்தார் அதனால் தப்பித்தோம்! மறுபடியும் சனாதனம் வந்தால் நமது கட்டை விரல்களுக்கு ஆபத்து!

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை

தாராபுரம்,நவ.24- தாராபுரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சனாதன ஆபத்துகளை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்தார்.

தாராபுரத்தில் தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர்  என் கயல்விழி செல்வராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக, தாராபுரம் அண்ணா சிலை அருகில் 23.11.2022 அன்று மாலை 5 மணி அளவில், தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, திராவிடர் கழக முதல் பொருளாளர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந. அர்ச்சுணன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் மாநில உரிமை விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

தாராபுரம் மாவட்ட தலைவர் க. கிருஷ்ணன் தலைமை ஏற்க, மண்டல இளைஞரணி செயலாளர் ஆ முனீசுவரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பேராசிரியர் காளிமுத்து, மாவட்ட திமுக அவைத்தலைவர் இரா. ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தமிழ் முத்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ் தென்னரசு, தமிழ் புலிகள் கட்சி மா. முகிலரசன், இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரத் தலைவர் என் கனகராஜ், திமுக மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, ஆகியோர் இந்த முப்பெரும் விழாவை வாழ்த்தி உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர்  இரா. ஜெயக்குமார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புத்தகங்களை, அறிமுகப்படுத்தி வாங்கி பயன்பெறுமாறும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு அகவையை முன்னிட்டு அனைவரும் விடுதலை சந்தாதாரர் ஆக வேண்டும் என்றும்  உரையாற்றினார்.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டச் செயலாளர்  க. சண்முகம், மாவட்ட துணைத் தலைவர்  முத்து முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள்  வழக்குரைஞர் நா. சக்திவேல், ந. மாயவன், ஒன்றிய செயலாளர் ச. முருகன், கோவை மாவட்ட தலைவர் மா. சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி, கோபி மாவட்ட தலைவர் ந. சிவலிங்கம், கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். காளிமுத்து, நகர் மன்ற தலைவர் பாப்புக் கண்ணன், திமுக நகர செயலாளர் முருகானந்தம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன், மாநில   இளைஞர் அணி அமைப்பாளர் கோவை பிரபாகரன், கழக வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் தம்பி பிரபாகரன், கழக மாவட்ட அமைப்பாளர் மயில்சாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் இளங்கோ, பழனி மாவட்ட தலைவர் முருகன், பழனி மாவட்ட செயலாளர் பொன். அருண்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.

சிறப்புரை ஆற்றிய தமிழர் தலைவர், தொடக்கத்தில் தாராபுரம் பகுதியில் இருந்து இயக்கப் பணி செய்து இன்று, நினைவில் வாழும் சுயமரியாதைச்  சுடரொளிகளான  சர்க்கரை மொய்தீன், நா சேதுபதி எம்.ஏ., வடிவேல், வி.எஸ். ஆறுமுகம், நாகசுந்தரம், தா.சா. பாலகிருட்டிணன், ரங்கசாமி, சக்திவேல் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களின் அடித்தளத்தில் தான் இந்த மேடை இருக்கிறது என்று நன்றியோடு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சரை சுட்டிக்காட்டி, இவரும் அரசமைப்புச் சட்டத்தின் மீதுதான் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆளுநரும் அதே அரசமைப்புச் சட்டத்தின் மீதுதான் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று குறிப்பிட்டுவிட்டு, "ஆர். என். ரவி ஆகிய நான் என்னுடைய திறமைக்கேற்ப, இந்த அரசமைப்புச் சட்டத்தை ஆபத்து வரும்போது பாதுகாத்து மக்களின் நலனுக்காக எனது கடமையை செய்வேன்" என்ற பகுதியை அரசமைப்புச் சட்டப் புத்தகத்தில் இருந்து படித்துக் காட்டினார். இப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு தான், மக்களின் உயிர் பிரச்சினையான ஆன்லைன் ரம்மி உட்பட 20 மசோதாக்களை ஊறுகாய் ஜாடிக்குள் போட்டு வைத்திருக்கிறார்" என்று ஆளுநரை கண்டித்தார்.

தொடர்ந்து, சனாதனம் என்பது என்ன? சனாதனத்திற்கும், மனு தர்மத்திற்கும் என்ன தொடர்பு? சனாதனப்படி நடந்தால் என்ன ஆகும்? ஏன் அறிவியல் படி நடக்க வேண்டும்? என்பதைப் பற்றி விளக்கினார். அப்படி சனாதனத்தை பற்றிக் குறிப்பிடும் போதுதான், ஏகலைவன்,  துரோணாச்சாரியார், கட்டைவிரல் போன்ற பாரதக் கதையில் வரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, "மறுபடியும் சனாதனம் வந்தால் நமது கட்டை விரல்களுக்கு ஆபத்து! ஏன் உயிருக்கே ஆபத்து! என்று எச்சரித்தார். சனாதனம் அறிவியல், இரண்டையும் உற்று நோக்கி பேசும் போது, இயல்பாக அவரது உரையில் நகைச்சுவை ததும்பியது. மேடையில் இருந்தோரும், மக்களும் ஒரே நேரத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வாய்ப்பு பெற்றனர்.  திராவிடர் இயக்கம் செய்த பல பல சாதனைகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை தமிழர் தலைவர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேசிய தமிழர் தலைவர் உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக நகர திமுக செயலாளர் இரா. சின்னப்ப தாசு நன்றி உரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments:

Post a Comment