பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடத்தால் வீழ்ந்தோமா?
வீறுகொண்டு எழுந்தோமா?

தொகுப்பு: மின்சாரம்

ஆரியம், திராவிடம் என்பது ஒரு பொய் - கற்பனை - மாயை புனை என்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பல் கூறி வந்தது. இப்பொழுது இன்னொரு கூட்டம் - தமிழ்நாட்டிலே பிறந்து, திராவிடர் இயக்கக் கொள் கைகளால் மனிதர்களான ஒரு சிலரோ - இதனை வேறு வகையில் உச்சரிக்கத் தொடங்கி விட்டனர். திராவிடம் தமிழர்களைத் தாழ்த்திவிட்டது. தமிழ்த் தேசிய உணர்வைக் கொன்றுவிட்டது; தமிழர்களின் அடையாளத்தைக் களவாடி விட்டது என்று கூறிக் கிளம்பியிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்குப் பார்ப்பன. ஊடகங்கள் 'ஜெ' போடுகின்றன. காரணம், வெளிப் படையே! தொங்கு சதைகள் கிடைத்தால் அவர்களின் தோளில் தொங்கிக் கரை சேரலாமே!.

உசுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பதும், குருதி குடிப்பதும் அவாளின் போர்த் தந்திரமாயிற்றே!

உண்மை என்ன? திராவிடம் என்பது மாயையா? வரலாற்று உண்மை கிடையாதா? திராவிடத்தால் வீழ்ந்தோமா? வீறுகொண்டு எழுந்தோமா? இதோ தந்தை பெரியார் குரலால் கேட்போம்.

திராவிடர் என்று சொல்லுவது - ஏன்?

நாம் இந்தியர் என்பதை மறுக்கிறபடியாலும், இனவுணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் 'திராவிடர்' என்னும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல; மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பன ரல்லாதார் என்கிறோம். 'அல்லாதார்" என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் 'அல்லாதார்' ஆக வேண்டும்?''
               ('குடிஅரசு', 9.12.1944)

'திராவிடர்' என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியமே இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல் பெரிய வரலாறுகள் வரை எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரமிருக்கிறது. பழக்க வழக்கங்களிலும் ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங் களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.    
                - ('விடுதலை', தலையங்கம், 18.9.1946)

சக்கிலியன், பறையன், பஞ்சமன், செட்டி, முதலி, நாய்க்கன் என்னும் ஜாதிப் பெயர்களெல்லாம் குத்திரன் என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த இழிவு நீங்குவதற்காகத்தான், மொத்தத்தில் ஒரே இனப் பெயரான திராவிடன் என்று சொல்ல வேண்டுமென்கிறேன்...
     ('விடுதலை', 11.4.1947)

சூத்திரர் என்பதற்குப் பதிலாகத்தான் திராவிடர் என்கிற பெயரா?

"பிராமணர், பிராமணர் மகாசபை வைத்துக் கொள் கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும், உரிமையும் கிடைக்கின்றது. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக் கொண்டால் உயர் ஜாதியானுக்கு அடி மையாயிருக்கும் உரிமை தான் கிடைக்கும். பார்ப்பா னின் தாசி மக்கள் என்ற பட்டம்தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால்தான், அப் பெயரால் எவ்விதச் சலுகையோ உரிமையோ கிடைக் காததால்தான் அப் பெயரில் உள்ள இழிவு காரணா மாகத்தான், அத் தலைப்பில் அதே இழி தன்மையுள்ள திராவிடராகிய முசுலீம்கள், கிறித்தவர்கள், வைசி யர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்து வருகிறார்கள். அதனால் தான், நம்மைச் சூத்திரர் என்று கூறிக் கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக் கொள்கிறோம். சூத்திரர் என்பவர்களுக்குத் 'திராவிடர்' என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார் களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.

'ஆரியராவது, திராவிடராவது' அதெல்லாம் இல்லை என்பவர்கள். இங்கே வாருங்கள். பேசாமல் மேல் துண்டு போட்டுக் கொண்டு நாலு வருணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்! பார்ப்பான் உங்களை யெல்லாம் ஒரே இடத்தில் விட்டு விட்டு உள்ளே நுழைகிறானா, இல்லையா பாருங்களேன்!

- (நூல்: 'மொழியாராய்ச்சி' பவானியில் உள்ள வள்ளுவர் பதிப்பகம் வெளியீடு)

பார்ப்பனர் புகுந்தால் என்ன ஆகும்?

2500 ஆண்டுகளுக்கு முன் சித்தார்த்தர் என்ற புத்தர் தோன்றி ஜாதியைக் கண்டித்தார். கடவுள், ஆத்மா என்று கூறுவதெல்லாம் பித்தலாட்டம் என்று கூறினார். பெரிய ராஜாவுக்கு மைந்தராகப் பிறந்தவர் அவர். தமது ராஜபோகம் எல்லாம் துறந்து காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை தமது கருத்துகளை எல்லாம் எடுத்துக் கூறினார்.

ஆனால், புத்தருக்குப்பிறகு பார்ப்பனர்கள் புத்தரு டைய  அறிவு மார்க்கத்தில் தாங்களும் பிச்சுக்களாகச் சேர்ந்து அதனை ஒழிக்க முற்பட்டார்கள்; இரவோடு இரவாக சமண பவுத்த மடங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறார்கள் புத்தரின் அருமையான கொள்கைகளை இந்த நாட்டை விட்டே ஒழித்துக் கட்டி விட்டனர்.
              ('விடுதலை', 6.4.1958)

தமிழ் பேசும் அத்தனைப் பேரும்  திராவிடர் ஆக முடியுமா?

தமிழர் என்பது மொழிப் பெயர் - திராவிடர் என்பது இனப் பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகி விட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில் தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் - மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொள்ள முடியாது.

'தமிழர்' என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்துகொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான். அப்படி முன் வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ்டானங்களையும், பேத உணர்ச்சி யையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக் கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக் கொள்ளமாட்டோம்.
    (நூல் 'மொழி ஆராய்ச்சி', பவானி வள்ளுவர் பதிப்பகம் வெளியீடு, 1948)

திராவிடர் என்பது நாம் கற்பித்த ஒரு பெயரா?

'திராவிடம்' என்பது நமது நாட்டினுடைய பெயராகும். 'திராவிடர்' என்பது இந்நாட்டின் பழங்குடி இனத்துக்கு ஏற்பட்ட உலகப் பெயராகும். திராவிடர் என்பதை நம்மில் சிலர் மறுக்கிறார்கள், வெறுக் கிறார்கள். திராவிடர் என்பது என்ன, நாம் கற்பித்த ஒரு பெயரா? இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே! ஆரியர் என்ற பெயர் தோன்றிய அன்று ஏற்பட்ட பெயர் தானே திராவிடர் என்பது?

(மேற்கண்ட ஆதாரமே)

திராவிடம் என்பது எது?

தமிழ்நாடு என்பது திராவிடநாடு என்றும் திராவிட நாடு என்பதானது இன்னது என்றும் வெகு காலமாகவே அய்ரோப்பிய அறிஞர்கள் முதல் பல உலக ஆராய்ச் சிக் காரர்களாலும், இந்திய சரித்திர ஆராய்ச்சியாள ராலும் எல்லை காட்டி வகுக்கப்பட்டிருக்கிறது என்றும், நான் இது விஷயமாய்ப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப் பற்றி விளக்கிப் பேசியே வந்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலா கிய மொழிகளைத் தாய் மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் இன்று திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந் ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது. இந்த விஸ்தீரணத்திற்குட்பட்ட முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், தாழ்த்தப்பட்ட மக் களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும் ஆகிய எல்லோரும் திராவிடர் கள் என்ற தலைப்பின் கீழ் வருவார்கள்."                                                                                            ('குடிஅரசு', 26.11.1939)

தமிழ் - இன, கலாச்சாரப் போராட்டத்துக்குப் பயன்படுமா?

தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படி பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள். திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் எடுத்துக் காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம்.

ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித் தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச் சாரத்தைத் தடுத்துத்தான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக - அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக, குத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அக்கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. கலாச்சாரத்தின் பேரால் - இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நாம் விடுதலை பெற்றவராவோம். மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகி விடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலைநிறுத்தப் பட்டிருக் கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம் பாடும் வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடமாட்டா."                                                                            ('விடுதலை', 27.11950)

திராவிடர் என்பது எதைக் குறிக்கிறது?

திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமை யான இழிநிலை, முட்டுக்கட்டை நிலை மாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது - திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.
                            ('குடிஅரசு', 14.7.1945)

திராவிடன் தமிழ்ச் சொல்லா?

திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தானிருக் கட்டுமே. இன்று இந்தக் கருத்து இருக்க வேண்டும்; இழிவுள்ள சகல மக்களும் ஒன்றுசேர அவ்வார்த் தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. நாம் எல்லோரும் காபி சாப்பிடுகிறோம். அது என்ன மொழி என்று சிந்திக்கிறோமா? வாய்க்குள்ளே செலுத்தும் காபி என்ன மொழி என்று  நீ சிந்திப்ப தில்லை; நீ போற்றும் இந்து மதம் என்ன மொழி என்று நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத் தானா உன் காது கூசுகிறது?.
                        ('விடுதலை', 6.12.1947)

திராவிடம் என்கிற பேச்சே தமிழ் வார்த்தையாகும். எப்படி எனில் திரு இடம் என்பது திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம். நமது பண்டிதர்கள் பலர், "தமிழ் என்பது த்ரளமாகி, நிரமிழமாகி, திராவிடமாகிவிட்டது' என்று சொல்வ துண்டு. ஆனால் ஒரு வார்த்தையானது 4, 5 தடவைகள் மாறியிருக்கும். என்பதைவிட நான் சொல்லுகிறபடி ஒரே மாற்றம்தான் ஆகியிருக்கலாம் என்பது பொருத்த மாக இல்லையா? அது எப்படியிருந்தாலும் சரி; திரா விட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்பன வற்றை தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்மக்கள் என்ற கருத்தில்தான் வழங்குகிறார்கள். ஆதலால் திராவிடர் என்பவர் தமிழரே ஆவார்கள். 

திராவிடர் என்பது நாட்டைப் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஒவ்வொரு மக்களுக்கும் நாட்டைப் பொறுத்தும், மொழியைப் பொறுத்தும்தான் பெயர் வருகிறது. மலையாளிகளுக்கு மலைப்பாங்கைப் பொறுத்தே அந்தப் பெயர் வந்தது. இந்த முறையில் பார்த்தோமேயானால், திராவிட நாடு, தமிழ்நாடு என்பது மேன்மையையும் இனிமையையும் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும்.

(17.11.1942இல் திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை)

திராவிடம் என்பது கற்பனையா?

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இவை நம் நாட்டையும், நம் மக்களையும் குறிப்பிடும் சரித்திரச் சம்பந்தமான பெயர்களாகும்.

                                            ('குடிஅரசு', 14.7.945)

திராவிடன் என்பதற்குப் பதில்  தமிழன் என்று ஏன் கூறக்கூடாது?

திராவிடர் என்பதற்குப் பதிலாகத் 'தமிழர்கள்' என்று என் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், தாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ் நட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; தமிழே பேசுகிறோம்; தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்க ளைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூறமுடியும்!' என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ் (திராவிட) பண்பு' உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்கக் கூடுமானாலும் - இன்று அது மொழிப் பெயராக மாறி விட்டிருப்பதால் அம்மொழி பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்து விடு கிறார்கள். அதோடு ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்தச் சேர்க்கையை பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் தான் நாம் சூத்திரர்களாகிறோம் - ஆகவே நம் கூட்டத்திலிருந்து அவர்களை விலக்கிப் பேசத்தான் நம்மைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் தமிழன் என்று சொல்லும் ஏமாளிகளைத் தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமே யொழிய - திராவிடர் என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது..

தன்னையும் திராவிடன் என்று கூறிக்கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவாளானால் உடனே நீ திரா விடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்? அதை முதலில் கத்தரித்துக் கொள்' என்போம். அதற்கும் துணிவா னானால் 'திராவிடரில் ஏது நாலு ஜாதி? நீ பிராமணன் அல்ல. ஹிந்து அல்ல என்பதை ஒப்புக் கொள்' என்று கூறுவோம். அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்பட மாட்டான். அதற்கும் உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால் பிறகு நமக்கு அவனைப் பற்றிக் கவலை ஏது? ஜாதி வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பது தானே நமது ஆசை? ஜாதியைக் கைவிட்டு ஜாதி ஆசாரத்தைக் கைவிட்டு 'அனைவரும் ஒன்றே' என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம்? தமிழர்கள் என்று கூறுபவர்கள் இவ்வித நிபந்தனையின்மீது பார்ப்பனர்களைத் தம் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையே! சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டிற்குத் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர்தானே வரவேற்புக் கமிட்டித் தலைவர். மற்றும் இரண்டு மூன்று அய்யர்கள் தம் பூணூல் - பூச்சுகளுடனேயே தமிழர் கூட்டத்தில் 'தாமும் தமிழர்கள்" என்று கலந்து கொண்டார்களே! அப்படித்தானே நடக்கும்.

(சிதம்பரத்தில் 29.9.1948இல் பெரியார் சொற்பொழிவு, 'விடுதலை', 5.10.1948)         


No comments:

Post a Comment