நம்பி மோசம் போன விவசாயிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

நம்பி மோசம் போன விவசாயிகள்!

பிரதமரின் கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாயிகள் உதவி நிதி திட்டம் - இந்தப் பி.எம். நிதியைக் குறைத்துக் கொண்டே போகிறது ஒன்றிய அரசு.   மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து மொத்த விவசாயிகளையும் முடக்கப் பார்த்தவர்களின் அடுத்த சதித் திட்டமாக இது இருக்குமோ என்று அனைத்து விவசாயிகளும் அச்சப்படும் நிலை! ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆகும்’ என்று பிரதமர் ஆவதற்கு முன்னால் மோடி நீட்டி முழங்கினார். முதல் அய்ந்தாண்டுகள் ஆண்டார். இரண்டு மடங்கு ஆகவில்லை.  உள்ளதும் போச்சே என்று கைபிசையும் நிலை!  இரண்டாவது அய்ந்து ஆண்டுகளையும் முடிக்கப் போகிறார். விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்தியா முழுமைக்குமான அளவீட்டின் அடிப்படையில் சோகக் கதையாகவே தொடர்கிறது.விவசாயிகள் மீதான பா.ஜ.க.வின் பாசம், பசப்புத்தனமானது என்பது அம்பலமாகி விட்டது.

விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்கப்படுத்தல் மற்றும் வசதி செய்தல்) மசோதாவின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற நடைமுறையே முற்றிலுமாக வழக்கொழிந்து போகும். இந்த மசோதா விவசாயிகள் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தவிர்த்து விட்டு யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. இதன் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும் குறைந்தபட்ச ஆதார விலையும் இன்ன பிற வசதிகளும் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படும்.விவசாயிகள் (முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியின் மீதான ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை மசோதாவின்படி, விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதுதான் விலையாக மாற்றப்படும்.அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதாவின்படி, பொருட்களைப் பதுக்கி வைத்து தேவையைப் பெருக்கி, அதன் மூலம் விலையைக் கூட்டி அதிக லாபம் பார்க்கலாம். அவசியப் பொருட்களை பட்டியலில் இருந்து நீக்கி விட்டது. ஸ்டாக் வைக்கும் வரையறையையும் தளர்த்தி விட்டது.

இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக இந்திய விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தார்கள். தலைநகர் டில்லியையே முடக்கினார்கள். அவர்கள் நடத்திய படையெடுப்பு - இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என்று சொல்லும் வரைக்கும் தொடர்ந்தது. ‘இரும்பு மனிதர்’ மோடியை அடிபணிய வைத்தார்கள் இந்திய விவசாயிகள்.

அந்த மூன்று சட்டத்தையும் திரும்பப் பெற்றது என்பது, ‘நாம் தவறு செய்துவிட்டோம்’ என்ற நிலைப்பாட்டில் அல்ல. ‘வேறு வழியில்லாமல்தான்’. அரசியல் காரணங்களால்தான். ‘இந்தச் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மிகத் தவறாகக் கருதியதால் தான்’ என்றே ஒன்றிய அரசு சொன்னது.  

அனைத்துமே கார்ப்பரேட் மயமாக வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது பி.ஜே.பி. அதில் இருந்து வேளாண்மையும் தப்பவில்லை. இதனை மறைப்பதற்காகத்தான், ‘பிரதமரின் கிசான் சம்மன் நிதி’ என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார்கள். 2019ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. தகுதியான விவசாயக் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவார்கள். மூன்று தவணையாக ரூபாய் 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதன் படி பார்த்தால் மாதம் 500 ரூபாய் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இவை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

2019 ஆம் ஆண்டு முதல் தவணைத் தொகையைப் பெற்றவர்கள் 11.84 கோடிப் பேர். 11 ஆவது தவணையாக கடந்த ஜூன் மாதம் பெற்றவர்கள் 3.87 கோடி பேர்தான். எந்தளவுக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்பதை வைத்துப் பார்த்தாலே எந்தளவுக்கு ஆட்களின் எண்ணிக்கையை திட்டமிட்டுக் குறைத்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

11.84 கோடிப் பேருக்கு தரப்பட்டு வந்த தொகையானது 9.87 கோடியாகவும் - 9.30 கோடியாகவும் - 8.59 கோடியாகவும் - 7.66 கோடியாகவும் - 6.34 கோடியாகவும் - குறைந்து கொண்டே வந்தது. இப்போது 3.87 கோடியாக ஆகிவிட்டது. எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை முதலில் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். காலம் செல்லச் செல்ல அந்தத் திட்டத்தில் இணைக்கப்படுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக  ஆகும். ஆனால் பி.எம்.கிசான்- பின்னோக்கி மிகமிக வேகமாகப் போயிருக்கிறது.

‘‘இந்தத் திட்டத்தை மெதுவாக முடக்குவதற்கு ஒன்றிய அரசு முயற்சிப்பதையே இது காட்டுகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தவிர்க்க இந்தத் திட்டம் மற்றொரு தேர்தல் கால மோசடி”

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியக் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவேன் என்பதைப் போலத்தான் இதுவும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று வாக்குறுதி கொடுத்தார் மோடி. அப்படிப் பார்த்தால் 2014 முதல் இன்று வரையிலான 8 ஆண்டு காலத்தில் 16 கோடி பேருக்கு அவர் பணி ஆணைகளை வழங்கி இருக்க வேண்டும்.

முதல் முறை ஆட்சி முடிந்து இரண்டாம் முறை முடியப் போகும் இந்த நேரத்தில், அவசர அவசரமாக 71 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி ஆணைகளை பிரதமர் வழங்கி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு தரப்பையும் 'ஜூம்லா' செய்வதுதான் பா.ஜ.க. - அதுதான் கிசானிலும் வெளிப்படுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் விரோத மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரம் மக்கள் கையில் தான் இருக்கிறது!

 

No comments:

Post a Comment