`மண்ணின் தந்தை' பிர்சா முண்டா (15-11-1875) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

`மண்ணின் தந்தை' பிர்சா முண்டா (15-11-1875)

பிர்சா முண்டா... நாடாளுமன்றத்தில் இருக்கும் ஒரே பழங்குடி இனத்த வரின் ஒளிப்படம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பழங்குடி இன மக்களுக்காக போராடிய  - 25 வயது வரை மட்டுமே வாழ்ந்த பழங்குடி மக்களுக்கான போராளி.

பழங்குடி மக்களால் `மண்ணின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர் பிர்சா முண்டா.

 இன்றும் வட இந்தியாவில் பழங்குடி மக்கள் என்றாலே சூனியக்காரர்கள், திருடர்கள், பூச்சிகளை உண்பவர்கள் என்று கூறி அவர்களை அடித்துக்கொலை செய்யும் அவலம் தொடர்கிறது. 

இத்தகைய அநீதிக்கு எதிரான பழங்குடி மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதல் குரல் பிர்சா முண்டாவுடையதே. 

 1875ஆம் ஆண்டு அன்றைய பீகார் மாநிலதில் தந்தை சுக்ணா முண்டா, தாயார் கர்மி ஹட்டு முண்டா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா முண்டா. அப்போதைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்ச லோடு எதிர்த்துப் போராடினார் பிர்சா முண்டா. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் "காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம்" எனும் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து பிர்சா முண்டா "நீர் நமது! நிலம் நமது! வனம் நமது" எனும் முழக்கத்தை எழுப்பி பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். 1895ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19-தான். அதுவே பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமாகும். பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்கள் உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது "ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்து படை திரட்டிப் போராடினார்.

"உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" எனும் கோட்பாட்டுக்கு அப்போதே செயல் வடிவம் தந்தார் பிர்சா முண்டா. இதனால் பழங்குடிகள் இவரை `தார்தி அபா' என்று அழைத்தனர். `தார்தி அபா' என்றால் `மண்ணின் தந்தை' என்று பொருள். 1899ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்' என்று பெயர்.

பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக பிர்சா முண்டா சிறைப் படுத்தப்பட்டு 1900ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியன்று காலரா நோயால் அவர் இறந்ததாக அறிவித்தனர். ஆனால், அவருக்கு உணவில் நஞ்சு கலந்து கொடுத்து கொல்லப்பட்டதாக சிறையில் அவருடன் இருந்தவர்கள் கூறியதாக ஆய்வாளர்கள் எழுதி யுள்ளனர். பிர்சா இறந்தபோது அவ ருக்கு வயது வெறும் 25 மட்டும்தான். பிர்சா முண்டா இறந்து சரியாக எட்டு ஆண்டுகள் கழித்து சோட்டாநாக்பூர் சட்டம் (Chotanagpur Tenancy Act 1908)  கொண்டுவரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா மறைந்து நூறாண்டுகள் கடந்த பின்பும் ஆதிவாசிகள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியே வருகின்றனர்.

மனிதன் சக மனிதனை ஜாதி, மதம், மொழி, இனம், நிறம் என எவ்வகையிலும் பிரிக்காமல் ஒருவரோடு ஒருவர் சமத்துவத்தோடு வாழும் நாளே மனித சமூகத்தின் விடுதலை நாளாகும். பிர்சா முண்டா போன்ற போராளிகளை வரலாறு நமக்கு அடையாளம் காட்டியது, நாம் அவர்களின் லட்சியப் பயணத்தில் பங்குகொள்ளத்தான் என்பதை நாம் உணர வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் ஒரே பழங்குடி இனப் போராளியின் படம் பிர்சா முண்டாவின் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டு மன்றி விமான நிலையம் முதல் பல்கலைக்கழகம் வரை அவர் பெயரை சூட்டி அவரை பெருமைப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. பிர்சா முண்டாவின் வரலாறு `வேற்றுமை களைந்து ஒற்றுமை காண்போம்' என்பதை நமக்கு உணர்த்துகிறது.


No comments:

Post a Comment