கவிஞர் நந்தலாலாவின் கவினுறு படைப்பு இதோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

கவிஞர் நந்தலாலாவின் கவினுறு படைப்பு இதோ!

வாழ்வியல் சிந்தனைகள்- கி.வீரமணி

பண்பாட்டு ஆய்வாளர் திரு. ஆர். பாலகிருஷ்ணன், (அய்.ஏ.எஸ். ஓய்வு) அணிந்துரையில் குறிப்பிடுவதுபோல, கவிஞர் நந்தலாலா அவர்கள் ஒரு பன்முக ஆளுமையர்; நல்ல நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர்; சிறந்த முற்போக்கு இலக்கியக் கர்த்தாவும்கூட - எழுத்திலும் அவர் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவர்தம் படைப்பு அமைந்துள்ளது! அவர் 24 அருமையான கருத்தோவியங்களை 'திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 'ஊறும் வரலாறு' என்ற அருமையான தகவல் திரட்டினை சுவைபட 'ஆனந்த விகடன்' வார ஏட்டில் தீட்டினார்; அது  ஓர் அருமையான அறிவுக்கு விருந்தாகும் நவில்தரும் நூலாக வெளி வந்துள்ளது. படிக்கும் வாய்ப்புப் பெற்று மகிழ்ந்தேன்.

திருச்சியை தனது தலைநகரமாக்கிக் கொண்டார் ஈரோடு தந்த வள்ளல் தந்தை பெரியார்! காரணம் தமிழ்நாட்டின் நடுநாயக நகரம்; காவிரிக் கரையில் அமைந்த வளம் கொழிக்கும் மாநகரம் என்பதால் அந்த திருச்சி மாநகரத்திற்குரிய அரிய வரலாறு - அங்கே அமைந்துள்ள வரலாற்று பெருமையைத் தன்னுள் அடக்கிய தகவல்கள் களஞ்சியமாகவும், அதே நேரத்தில் அரிய இலக்கியப் படைப்பாகவும் இந்நூல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 

திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் எத்தனையோ அரசியல், சமூக, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு வித்தூன்றி வளர்ந்த வரலாற்று ஆல மரமாய் அந்நகரம் திகழும் பல்தரப்பட்ட சிறப்புகளை - திருச்சிராப்பள்ளி என்னும் மூதாட்டியின் அணிகலன்களின் பெருமைகள், கச்சேரியில் பாகவதர்கள்  பாட்டுக்கச்சேரியில் 'ஆலாபனம்' செய்து கேட்போரை பரவசப் படுத்துவதுபோல், ஒவ்வொரு கட்டுரையும் சுவைமிக்கதாய் அமைந்துள்ளது. அதில்கூட அவர் ஒருசார்பு நிலையில் நின்று எழுதாமல், நடுநிலை துலாக்கோல் முள்ளாக மதிப்பீடு செய்து எழுதியுள்ளார்!

புதை பொருள் ஆராய்ச்சியாளர்களின் மொகஞ்சதாரோ - கீழடி போல இவர் ஒரு நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த அமைப்புகள், நினைவுச் சின்னங்கள், குடியிருப்புகள், அறிவுச் சோலைகள், துவின் கோயில்கள் வரை- மன்னர்கள் வரலாறு முதல் மக்கள் தலைவர்களின், மக்கள் கலைஞர்களின் மகத்தான சாதனைகளை ஒரு சிறு குளிகைக்குள் அடைத்து நம்மை விழுங்கி செரிமானம் செய்துகொள்ள வைக்கிறார்.

"ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட

என்னை எழுதென்று சொன்னது வரன்"

என்பார் புரட்சிக் கவிஞர்!

அதுபோல கவிஞர் நந்தலாலா முதலில் தகவல் திரட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையத்தைப்பற்றி எழுதிட எண்ணித்தான் துவங்கியிருப்பார்.ஆனால் பலவும் 'தன்னைப் பற்றி எழுதி தரணிக்குச் சொல்லுங்கள், ஒரு 'க்யூ' வரிசையில் நின்று கவிஞர் நந்தலாலாவை கேட்டுக் கொண்டு, அழகுப் போட்டிக்கு அணி வகுப்பு  பலரும் நடத்துவதுபோல், இந்த அறிவுப் போட்டிக்கு, ஒவ்வொரு அமைப்பும் முன்னி ருந்து நமக்கு கொள்ளை இன்பம் குலவும் கவிதையைப் போல இன்பத்தைத் தந்து மகிழச் செய்கின்றன!

திருச்சி பெரியார் மாளிகை வரலாறு, நடந்த நடப்புகள் - வரலாற்றுச் சுவடுகளாக அவரது மையாலும் திறமையாலும் வெளிச்சம் தருகிறார்.

படித்தேன்; படிப்போம்! அரிய செய்திகளை அறிந்து மகிழ்வோம். வாரீர்! புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

கவிஞர் நந்தலாலாவுக்காக நமது அறிவுச் செறிவை வளப்படுத்திக் கொள்க!

பல ஊர்களிலும் ஊறும் அவரது எழுத்துப் படையெடுப்பு, வெல்லட்டும் நம் வாழ்த்துகள்! சொல்லட்டும் புது கதைகளை!!

No comments:

Post a Comment