சுயமரியாதைக் குடும்பமாக அய்யா ஆரோக்கியராஜ் அவர்களின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக சிறந்தோங்கி இருப்பதற்குக் காரணம் இங்கே படமாக இருப்பவர்தான் பாடமாக அமைந்திருக்கின்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

சுயமரியாதைக் குடும்பமாக அய்யா ஆரோக்கியராஜ் அவர்களின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக சிறந்தோங்கி இருப்பதற்குக் காரணம் இங்கே படமாக இருப்பவர்தான் பாடமாக அமைந்திருக்கின்றார்

திருவெறும்பூர், அக்.16  இயக்கக் கொள்கையை ஏற்ற தினால், நாங்கள் வளர்ந்திருக்கின்றோமே தவிர, நாங்கள் மற்றவர்களுக்குப் பயன்படக்கூடியவர்களாக இருந்திருக் கின்றோமே தவிர, மற்றவர்களுக்கு உதவக் கூடியவர் களாக இருந்திருக்கின்றோமே தவிர, மற்றவர்கள் உதவியை நாங்கள் எதிர்பார்த்து வாழக்கூடியவர்களாக இல்லை என்ற சுயமரியாதைக் குடும்பமாக இந்தக் குடும்பம் சிறந்தோங்கி இருப்பதற்கு, இங்கே படமாக இருப்பவர்தான் பாடமாக அமைந்திருக்கின்றார் என்பது தான் மிகச் சிறப்பானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

திருச்சி ஞா.இருதயமேரி அம்மையாரின் படத்திறப்பு - நினைவேந்தல்

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களின் தாயார் மறைந்த ஞா.இருதயமேரி அவர்களின் படத்திறப்பு - நினை வேந்தல் நிகழ்வு கடந்த 6.10.2022 அன்று  காலை திருவெறும்பூர் அருகிலுள்ள வேங்கூர் வி.எஸ்.நகரி லுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறைந்த அம்மையாரின் படத் தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

அவரது  நினைவேந்தல் உரை வருமாறு:

என்றைக்கும் எங்களோடு கொள்கை சண்டை பிடிக்கின்ற ஒருவர் - அருமைப் புலவர் அய்யா முருகேசனார் அவர்களே, பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களே,

கழகத் தொழிலாளரணி செயலாளர் செயல்வீரர் சேகர் அவர்களே, திருச்சி மண்டல தலைவர் ஆல்பர்ட் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் செயல்வீரர் ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் செயல் வீரர் குணசேகரன் அவர்களே, திருச்சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் அவர்களே, லால்குடி மாவட் டத் தலைவர் அருமைத் தோழர் வால்டர் அவர்களே, பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் அருமைத் தோழியர் செந்தாமரை அவர்களே, 

இந்நிகழ்வில் பங்கேற்கின்ற கழக தொழில்நுட்பப் பிரிவு அணியின் பொறுப்பாளர் வி.சி.வில்வம் அவர் களே, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் மணவை. தமிழ்மாணிக்கம் அவர்களே,

அன்பிற்குரிய சகோதரியார் ரோஸ்லின் ஆரோக்கியராஜ்

இந்நிகழ்ச்சியில் நாமெல்லாம் துன்பத்தோடும், ஆறுதல் சொல்லவேண்டும் என்ற உணர்வோடும் இங்கே குழுமியிருந்தாலும், அம்மையாரின் மறைவின் காரணமாக நேரிடையான இழப்பிற்கு ஆளாகியிருக்கக் கூடிய எங்களுடைய செயல்வீரர், கொள்கையாளர், மாவட்டத் தலைவர் அய்யா முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களே, அவருடைய குடும்பத்தவர்களான அலெக்சாண்டர் அவர்களே, ஜேம்ஸ் அவர்களே, சாக்ரட்டீஸ் அவர்களே, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந் திருக்கக்கூடிய சகாயராஜ் குடும்பத்தினர்களே, அடைக் கலமேரி அவர்களே, ரெஜினா மேரி அவர்களே, விக்டோரியா அவர்களே, எலிசபத் ராணி அவர்களே, மற்ற நண்பர்களே, இவ்வளவு பெரிய இந்தக் கூட்டுக் குடும்பத்தைப்பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். இவர்களையெல்லாம் கட்டியணைத்து, அனைவரையும் அழைத்துச் செல்கின்ற மாவட்டத் தலைவருடைய வாழ்விணையர் அன்பிற்குரிய சகோதரியார் ரோஸ்லின் ஆரோக்கியராஜ் அவர்களே,

இங்கே ஆறுதல் கூற வந்திருக்கக்கூடிய சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே, சகோதரிகளே, குடும்பத்த வர்களே, கொள்கைக் குடும்பத்தவர்களே, குருதிக் குடும்பத்தவர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அலட்சியமாக யாரும் நினைப்பதில்லை

இந்நிகழ்ச்சியில் நாம் ஆறுதல் கூறுவதற்காகத் திரண்டிருக்கின்றோம். 82 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை இருந்தாலும், இன்னும் அவர்கள் நூறு ஆண்டினைத் தாண்டி வாழ்ந்திருந்தாலும், ஒரு தாய் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்மைச் சுமந்து, பெற்று ஆளாக்கி, வாழ்க்கையில் எல்லாவிதமான துன்பத்தையும், துயரத்தையும் நமக்காகத் தாங்கியிருக் கின்ற எந்தத் தாயையும், எந்தப் பிள்ளையும், எவ்வளவு வயதானாலும், மறையட்டுமே, பரவாயில்லை என்று அலட்சியமாக யாரும் நினைப்பதில்லை.

9 பிள்ளைகளையும் நல்ல வண்ணம் அம்மையார் அவர்கள் வளர்த்திருக்கிறார்கள்

மனித குலத்திற்கு இருக்கின்ற ஒரு தனி ஆற்றல், பகுத்தறிவினுடைய சிந்தனைகள்தான். அவர்களுடைய வளர்ப்பு, அவருடைய 9 பிள்ளைகளையும் நல்ல வண்ணம் அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். அத்துணை பேரும் வாழ்வில் அவர்கள் தாழவில்லை. கடைசிவரை யில், எப்படி வளர்த்திருக்கிறார் என்பதற்கான அடை யாளம் நேரிடையாகத் தெரியாவிட்டாலும், ஒரு நிகழ்வின்மூலமாக எங்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

அம்மையார் அவர்களுக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு, திருச்சியிலுள்ள மருத்துவமனையில்  இருந்த பொழுது, நம்முடைய மாவட்டத் தலைவர் ஆரோக் கியராஜ் அவர்கள் கலங்கிப் போனார்; என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்தார்.

அம்மையாருக்குத்தான் வயதாகிவிட்டதே, பரவா யில்லை என்று நினைக்காமல், கடைசிவரையில் அவருக்கு என்னென்ன வகையில் மருத்துவ உதவி களைச் செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் செய் தார். அந்தக் காலகட்டத்தில் அவரை சந்தித்த நேரத்தில், அவருடைய துயரத்தை அடக்க முடியாமல், கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், அவர் இருந்த முறை இருக் கிறதே, அதுவே அந்தத் தாய் பிள்ளைகளை எப்படி வளர்த்திருப்பார் என்பதற்குச் சரியான அடையாளம்.

பல நேரங்களில் எல்லா பிள்ளைகளும் தந்தையிடம் கொஞ்சம்கூட அதிருப்தி அடைவார்கள்; சண்டை போடுவார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் வருவது சாதாரணம்.

தாய் என்று சொன்னால், தனித்தன்மை வாய்ந்தவர்

ஆனால், தாய் என்று சொல்லும்பொழுது,  தனித்தன்மை வாய்ந்தது. அதைத்தான் கவிஞர் நந்தலாலா அவர்களும் இங்கே சொன்னார்கள்; மற்ற நண்பர்களும் சுட்டிக்காட்டினார்கள். அந்தத் தாய் இந்தப் பிள்ளைகளை நன்றாக ஆளாக்கி யிருக்கிறார்.

அதைவிட ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், மூத்த பிள்ளையான நம்முடைய மாவட்டத் தலை வர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை ஏற்படுத்தியிருக்கிறார்.

கூட்டுக் குடும்பத்தின் பெருமையைப்பற்றி நம் முடைய மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை அவர்கள் மிகச் சிறப்பாக சொன்னார்.

 பல்கலைக் கழகம் மட்டுமல்ல - ஒரு சுயமரியாதைப் பல்கலைக் கழகமாகும்

‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள். இந்தக் குடும்பம் பல்கலைக் கழகம் மட்டுமல்ல - ஒரு சுயமரியாதைப் பல்கலைக் கழகமாகும்.

முன் ஏர் எப்படி போகின்றதோ, அப்படித்தான் பின் ஏரும் வரும்.

நம்முடைய ஆரோக்கியராஜ் அவர்கள் மிகச் சிறப்பான வகையில் இந்தக் கொள்கையைப் பின்பற்றி னார் என்றால், அந்த அம்மையார் முகம் சுளிக்கவில்லை. இந்தக் கொள்கைப்படி நடப்பதற்குத் தாராளமாக அனுமதித்தார்.

நமக்கு ஜாதி அடையாளமோ, மத அடையாளமோ கிடையாது. ஆனால், சமுதாயம் எந்த அளவிற்கு மாறியிருக்கிறது, பெரியாருடைய கொள்கைகள் எந்த அளவிற்கு வெற்றிபெற்று இருக்கிறது என்பதற்கு அடை யாளம் என்னவென்றால், இன்றைய இளைய தலை முறையினருக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்.

பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான ஒரு சம்பவத்திற்கும், இன்றைய சம்பவத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு.

அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்தபொழுது...

அன்னை நாகம்மையார் அவர்கள், 1933 ஆம் ஆண்டு மே மாதம் இறந்துவிடுகிறார். அம்மையாரை அடக்கம் செய்த பிறகு, அப்பொழுது பெரியார் அவர்கள் எழுதியது இலக்கியமாகும்.

அடுத்த நாளே அவர் வீட்டில் உட்காராமல், பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

திருச்சி பாலக்கரையில் நடைபெற்ற கிறித்துவ திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்துகிறார்.

இதைக் கண்டித்து, பாதிரியார் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.

‘‘எங்கள் மதப்படி நடக்கவேண்டிய விஷயத்தை, எங்கள் மதத்தில் தலையிட்டு, மணவிழாவினை நடத்த விருக்கிறார்; அவர் அந்தத் திருமணத்தை நடத்தக் கூடாது'' என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

காவல்துறையினரும், பெரியாரை கைது செய்வ தற்காக வந்தார்கள். இந்த நிகழ்வு நடைபெற்றது 1933 ஆம் ஆண்டு. 90 ஆண்டுகளுக்கு முன்பு.

உடனே பெரியார் சொன்னார், ‘‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்; நான் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்த பிறகு'' என்று சொல் கிறார்.

காவல்துறையினரோ ‘‘அதெல்லாம் முடியாது'' என்று சொல்கிறார்கள். 

இது எப்பொழுது?

90 ஆண்டுகளுக்கு முன்பு.

இவர்தான் நமக்குப் பாதுகாப்பானவர்; இந்த இயக்கம்தானே நமக்குப் பாதுகாப்பு என்று சொல்கிறார்கள்

ஆனால், அதற்குப் பிறகு பார்த்தீர்களேயானால், பாதிரிமார்களே, பெரியார் பக்கத்தில் அமர்ந்து, திராவிடர் கழக நிகழ்வுகளில் அமர்ந்துகொண்டு - இவர்தான் நமக்குப் பாதுகாப்பானவர்; இந்த இயக்கம்தானே நமக்குப் பாதுகாப்பு என்று சொல்கிறார்கள்.

இந்த மாறுதல் எப்படி வந்தது?

இந்த மாறுதலுக்காக பெரியார் அவர்கள் ஏதாவது ஆயுதம் தாங்கினாரா?

இந்த மாறுதலுக்காக யாரிடமாவது நாம் வம்பு செய்திருக்கின்றோமா?

இந்த மாறுதலுக்காக அடிதடி சண்டை நடைபெற்று இருக்கிறதா? என்றால், எதுவும் இல்லை.

படத் திறப்பு கூட  ஒரு கொள்கைப் பிரச்சார நிகழ்ச்சிதான்!

கொள்கையைப் பரப்புவதால்தான். இந்தப் படத் திறப்பு கூட ஒரு கொள்கைப் பிரச்சார நிகழ்ச்சிதான்.

இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம் மறைந்த அம்மையாரின் சிறப்புகளைப்பற்றி சொன்னார்கள். இதுவே வேறு நிகழ்ச்சிகள் என்று சொன்னால், அவர்கள் கடைசியாக உரையை முடிக்கும்பொழுது என்ன சொல்லியிருப்பார்கள், ‘‘ஆத்மா சாந்தியடைய வேண்டும்'' என்று சொல்லுவார்கள்.

ஆனால், அதுபோன்று இங்கே யாரும் சொல்ல வில்லை; ஏனென்றால், நாமெல்லாம் பகுத்தறிவுவாதிகள்.

அரசியல் தலைவர்கள் வெளியிடுகின்ற இரங்கல் அறிக்கையைப் பார்த்தீர்களேயானால், ‘‘ஆத்மா, இறைவன் திருவடி நிழலில் ஓய்வெடுத்துக் கொள்ள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்'' என்று சொல்வார்கள்.

அது என்னமோ அலைந்து கொண்டிருப்பது போன்றும், இவர்கள் எல்லாம் மனு போட்ட பிறகு, அது இறைவன் திருவடி நிழலில் ஓய்வெடுத்துக் கொள்வது போன்றும் சொல்கிறார்கள்.

ஏமாற்றுகிறவர்களுக்கு இடமில்லை; பகுத்தறிவிற்கு மட்டும்தான் இடம் உண்டு!

இதற்கெல்லாம் இங்கே வேலையில்லை. காரணம் என்னவென்றால், ஏமாற்றுகிறவர்களுக்கு இடமில்லை; பகுத்தறிவிற்கு மட்டும்தான் இடம் உண்டு என்று சொல்லக்கூடிய ஓர் அரங்கமாக, ஒரு குடும்பமாக இந்தக் குடும்பத்தைப் பெரியார் மாற்றியமைத்திருக்கிறார்.

அதனுடைய விளைவுதான் இந்தக் குடும்பம் - அதனால்தான் சொன்னேன், நல்ல குடும்பம் ஒரு பகுத்தறிவுப் பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை அருமையாக உருவாக்கியிருக்கிறார்.

மறைந்த ஒருவருக்கு படத்திறப்பு நிகழ்வை ஏன் நடத்துகிறோம்?

ஒருவர் மறைந்த பிறகு, அவருடைய படத்திறப்பு நிகழ்வை ஏன் நடத்துகிறோம் என்றால், அந்தத் துக்கத்திற்கு ஒரு முடிவு காணவேண்டும் என்பதற்காகத்தான்.

பிள்ளைகள் வெளியூரில்,  வெளிநாட்டில் எல்லாம் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்து, ஒருவருக்கொருவர் துயரத்தை ஆற்றிக்கொள்ள வேண்டும். அந்தத் துயரத்தை ஆற்றிக் கொள் வதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்பதற் காகத்தான் படத்திறப்பு நிகழ்வு. இது ஒரு பிரச்சார நிகழ்வு. இது ஒரு சடங்கு அல்ல.

மற்றவர்களுக்கு இது ஒரு சடங்காக இருக்கலாம் - புரோகிதர், சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் இருக்கும்.

இதுபோன்ற எதுவும் இல்லாமல், நாம் படத்திறப்பு நிகழ்வை நடத்துகின்றோம்.

இந்த நிகழ்வு என்பது அடிப்படையில், மனிதர்களை அழைத்து நம்முடைய துயரத்தைத் துடைத்துக் கொள்வதற்காகத்தான். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, நீங்கள் அடுத்த பணியை செய் யுங்கள் என்று தெரிவிப்பதற்காகத்தான்.

இந்த உலகத்திற்குப் பெருமை என்னவென்றால், நேற்று இருந்தவர், இன்றைக்கு இல்லை என்பதுதான்.

துயரத்தைப்பற்றி சொல்லும்பொழுது, புத்தருடைய தத்துவங்கள் மிக முக்கியமானவை.

பிறந்தவர்கள் மறைவது என்பது இயல்பு

ஒரு பெண்ணின் பிள்ளை இறந்து விடுகிறது; அந்தப் பெண் புத்தரைப் பார்த்து, ‘‘நீங்கள் ஒரு பெரிய மகான், என்னுடைய பிள்ளைக்கு உயிர் கொடுக்கவேண்டும்'' என்று சொல்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு எப்படி உணர்த்துவது; சொன் னால் கேட்கமாட்டார். அதற்காக அவர் சொன்னதாக ஒரு கதை உலாவுகிறது. அது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியாது. ஆனால், அது தத்துவ ரீதியாக சரியானதாகும்.

‘‘சரிம்மா, உன் பிள்ளையை உயிர் பிழைக்க வைத்துவிடுகிறேன்; அதற்காக நீ என்ன செய்யவேண்டும் என்றால், ஒரு கிண்ணத்தில் எண்ணெய் வாங்கி வரவேண்டும்'' என்று சொல்கிறார்.

‘‘அவ்வளவுதானே, உடனே நான் வாங்கி வருகிறேன்'' என்று சொல்கிறார் அந்தப் பெண்.

‘‘ஆனால், ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், இறப்பு நடக்காத வீட்டில் நீ எண்ணெய் வாங்கி வரவேண்டும்'' என்று சொல்கிறார்.

இந்த அம்மாவும், ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி, ‘‘உங்கள் வீட்டில் இறப்பு ஏதாவது நடைபெற்று இருக்கிறதா?'' என்று கேட்கிறார்.

எல்லா வீட்டிலும் இறப்பு நடந்திருக்கிறது என்று சொன்னவுடன், அந்த அம்மா களைத்துப் போய், மீண்டும் புத்தரிடம் செல்கிறார்.

‘‘இதுதான் எல்லோருக்கும் இயல்பு. பிறந்தவர்கள் மறைவது என்பது இயல்பு'' என்று புத்தர் சொல்கிறார்.

இன்றைய வரையில் அதுதான் இயல்பு.

இன்றைக்கு அறிவியல் வளர்ந்ததால், உடலில் எந்த பாகம் தேய்மானம் ஆகிறதோ, அந்தப் பாகத்தை மாற்றிவிடுகிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து இந்நிலையே நீடிக்குமா? என்று சொல்ல முடியாது.

இன்னும் நூறு, இருநூறு ஆண்டுகளில் இறப்பைத் தவிர்க்கக் கூடிய நிலை வரலாம்!

பிறக்கிறார்கள்; பிறந்தவர்கள் சாகிறார்கள், சாகி றார்கள் என்று சொல்லுகின்ற நிலைகூட, இன்னும் நூறு ஆண்டுகள், இருநூறு ஆண்டுகள் கழித்து இறப்பைத் தவிர்க்கக் கூடிய அளவிற்குக்கூட வரலாம்.

அப்பொழுது உலகத்திற்கு வேறு பிரச்சினைகள் வந்துவிடும்.

பிறந்தவர்கள் எல்லோரும் இறக்காமல் உயிரோடு இருந்தால் என்னாகும்? அது விவாதத்திற்குரிய செய்தி யாகும்.

ஆகவே, ஒரு துயரம், துன்பம் என்று சொன்னால், அதை மற்றவர்கள் பகிர்ந்துகொண்டு, ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதுதான் அடிப்படை.

அடுத்தாக, இந்தக் குடும்பத்தினுடைய பெருமை என்னவென்றால், மறைந்த அம்மையார், இந்தப் பிள்ளைகளை வளர்த்ததோடு மட்டுமல்ல, அவர்களுக்கு நல்ல வழிகாட்டக்கூடிய அளவிற்கு, கடைசிவரையில் அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், கூட்டுக்குடும்பத்தைப்பற்றி சொன் னார்கள். குடும்பத்தில் எத்தனை பேர் என்று கேட்டேன், 16 பேராம். ஒருவேளை சாப்பாடு என்றால், 16  பேருக்கு சமையல் செய்யவேண்டும். எல்லோரையும் அர வணைத்துச் செல்வது தலைவருடைய துணை வியார் ரோஸலின் அம்மையார்தான்.

அய்யா ஆரோக்கியராஜ் குடும்பத்தில் 16 பேரும் ஒருமனதாகியிருக்கின்றனர்

அன்றைக்கு அவர்களை நேரிடையாக நான் பராட்டினேன். ஏனென்றால், நம்முடைய நாட்டில் இதுபோன்ற குடும்பங்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. இதில் சில மைனஸ் பாயிண்ட் இருக்கலாம். ஆனால், அதைப்பற்றியே கவலைப்படாமல், எல் லோரும் ஒத்த மனதாக இருக்கக்கூடிய அளவிற்கு, ஒருமனதாயினர் என்று சொல்வதைப்போல, இரண்டு பேர் ஒருமனதானாலே பெரிய விஷயம். இந்தக் குடும்பத்தில் 16 பேரும் ஒருமனதாகியிருக்கின்றனர்.

இதில் பார்த்தீர்களேயானால், ஜாதி, போயிருக்கிறது, மதம் போயிருக்கிறது; ஆனால், அன்பு தங்கியிருக்கிறது. 

பல நேரங்களில் கூட்டுக் குடும்பங்கள் என்பது, பூட்டுக் குடும்பமாக இருக்கிறது. ஆனால், அதுபோன்று இல்லாமல், விட்டுக் கொடுப்பது என்பது இருக்கிறதே, அது பெரிய விஷயம்.

சில நேரங்களில் தலைமை முடிவு செய்கிற விஷயத்தை முன்பே சொல்லவேண்டிய அவசியம் கிடையாது

நாம் மற்றவர்களைத் தயார் செய்யவேண்டும். ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன். முன்பு திருச்சி திராவிடர் கழக மாவட்டத் தலைவராக சேகர் இருந்தார்.  சேகரை, வேறொரு பொறுப்புக்குப் பயன் படுத்தவேண்டும் என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஆரோக்கியராஜை அழைத்து, நீங்கள் தலை வராக இருக்கவேண்டும் என்று சொன்னோம்; அவர் விரும்பவில்லை, இருந்தாலும் அவரையே நியமித்தோம். உடனே தோழர்கள் மத்தி யிலும், இன்னும் சிலருக்கும், ‘‘என்னங்க, சேகரை தலைவர் பதவியிலிருந்து ஏன் எடுத்துவிட்டார்கள்'' என்று சந்தேகம் வந்தது.

தலைமை ஏன் அதை செய்தது என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டார்கள். சில நேரங்களில் தலைமை முடிவு செய்கிற விஷயத்தை முன்பே சொல்லவேண்டிய அவசியம் கிடையாது; அது புத்திசாலித்தனமும் கிடை யாது, பண்பும் ஆகாது.

சேகருக்கு வேறொரு பொறுப்பைக் கொடுத்தோம்; ஆரோக்கியராஜூக்கு தலைவர் பொறுப்பைக் கொடுத் தோம். ஒரே இயக்கம், ஒரே இடத்தில் இருக்கக்கூடிய நிலையில்கூட, அப்படி இருக்குமோ? இப்படி இருக் குமோ? என்று நினைக்கின்றார்கள்.

சாதாரணமான சாதனையல்ல!

ஆகவே, நாள்தோறும் பிரச்சினையை சந்திக்கக் கூடிய ஒரு குடும்பத்தில், எல்லோரும் ஒன்றாக இருக்கின்றார்கள் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய சாதனை? சாதாரணமான சாதனையல்ல.

இயக்கத்தைப் பொறுத்தவரையில், கொஞ்சம் நிறை, குறையெல்லாம் இருக்கும். எல்லா வகையிலும் திருப்தி யானவர்கள்; எல்லா வகையிலும் இவர்கள் சரியான வர்கள் என்று சொல்ல முடியாது. நான் உள்பட, யாராக இருந்தாலும், நிறையும் இருக்கும், குறையும் இருக்கும்.

ஆனால், எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து, சமாளித்து செல்லக்கூடிய பண்பாடு இருக்கிறதே, அதுதான் மற்றவர் களை மிகப்பெரிய அளவிற்கு வாழ வைக்கக்கூடியது.

அந்த வகையில், இந்தக் குடும்பம் ஒத்தைக் குடும்பமாக, சிறப்புமிகுந்த குடும்பமாக இருக்கிறது. மறைந்த அம்மையாருக்கும் சரி, இந்தக் குடும்பத்தை வழி நடத்தக்கூடிய ரோஸ்லின் அம்மையாருக்கும் சரி, இவர் களோடு ஒத்துழைப்பு நல்கக்கூடிய சகோதர, சகோதரி களுக்கும் சரி,  நான் இந்த இயக்கத்தின் தொண்டர் களுக்கும் தொண்டன் என்ற முறையில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஏனென்று கேட்டால், அய்யா ஆரோக்கியராஜ் அவர்களை மாவட்டத் தலைவராக நியமித்ததற்குப் பிறகு, அவர் வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டார் என்றால், இரவுதான் வீட்டிற்குச் செல்வார். வீட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ என்று தெரியாது. எல்லாவற்றையும் அவருடைய துணைவியார் பார்த்துக் கொள்வார்.

அவருக்கு கேர் ஆஃப் பெரியார் மாளிகைதான்!

நான் திருச்சியிலிருந்து சென்னைக்குப் புறப்படும் பொழுது, இரவு 11 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்து என்னை வழியனுப்பிவிட்டுத்தான் செல்வார்.

அவருடைய துணைவியார் அவர்கள், அய்யா ஆரோக்கியராஜை எங்களுக்குக் கொடுத்துவிட்டார். அவருக்கு கேர் ஆஃப் பெரியார் மாளிகைதான். 

ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கு மகாலிங்கத்திற்கு அடுத்தபடியாக இவர்தான் தாளாளர்.

பெரியார் நூற்றாண்டு வளாகத்திற்குச் சென்று பார்த்துக் கொள்வார். கைவல்யம் முதியோர் இல்லத் திற்குச் சென்று பார்த்துக் கொள்வார். இயக்கத் தோழர்கள் வந்தார்கள் என்றால், அவர்களை கவனிப்பது, உப சரிப்பது போன்றவற்றை செய்வார்.

இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறார் என்று எனக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் தெரியும்!

மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், மற்ற தோழர் களோடு கலந்து பேசுவார். வீட்டிற்கு எப்பொழுது திரும்பிப் போவார் என்று தெரியாது. அவர் இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறார் என்று எனக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் தெரியும். அவர் நகரத்தின் ஒரு பகுதியில் இருந்துதான் வருகிறார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தத் தகவல் தெரிந்த வுடன், எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

நீங்கள் கழகத்தைப் பாருங்கள்; நான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறேன் என்று அவருடைய துணைவியார் இருந்து வருகிறார்.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் தேவை. அதேபோன்று என்னுடைய குடும் பத்தை எடுத்துக்கொண்டாலும், என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஏதோ கெஸ்ட் அவுசில் சாப்பிடுவது போன்றுதான் இருப்பேன். ஏதாவது தகவல் சொன் னால்தான் எனக்கே தெரியும்.

மறைந்த இருதயமேரி அம்மையார் அவர்கள், பாராட்டுக்குரியவர் - நினைவுகூரத்தக்கவர்!

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இப்படி யொரு வாழ்விணையர் அமைவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இந்தக் குடும்பம் ஒரு சிறந்த குடும்பமாக இருப்பதற்கு அவர்கள்தான் அடித்தளம். எல்லாவற் றிற்கும் மேலாக, மருமகளை தேர்ந்தெடுத்தார்களே மறைந்த இருதயமேரி அம்மையார் அவர்கள், பாராட் டுக்குரியவர் - நினைவுகூரத்தக்கவர். அதேபோன்று, இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடிய சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் எல்லோருமே பாராட்டப்படக் கூடியவர்கள்.

இது ஒரு பகுத்தறிவுக் குடும்பம்; சுயமரியாதைக் குடும்பம். ஆக, இந்தக் கொள்கையைக் கடைப்பிடித் ததால், யாரும் வீழ்ந்துவிடவில்லை; யாரும் தாழ்ந்துவிடவில்லை.

ஆர்.கே.சாமி அவர்கள்

ஜாதியாலோ, மதத்தினாலோ யாரும் பிரிந்துவிட வில்லை. இவர்களுடைய வீட்டை நான்தான் திறந்து வைத்தேன் என்று சொன்னார்கள். அதேபோன்று நம்முடைய ஆர்.கே.சாமி அவர்களைப்பற்றி குண சேகரன் அவர்கள் சொன்னார். 

அவர் மிகப்பெரிய கொள்கை வீரர் - முரட்டுத் தனமான கொள்கை வீரர். கொள்கையிலிருந்து மயிரி ழையளவுகூட நகரமாட்டார். அந்தக் குடும்பத்துப் பிள்ளைகள், இந்தக் குடும்பத்தோடு தொடர்புள்ளவர்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது.

இயக்க வரவுகள், இயக்கக் குடும்பம், கொள்கை குடும்பம் - அந்தக் கொள்கையை ஏற்றதினால், நாங்கள் வளர்ந்திருக்கின்றோமே தவிர, நாங்கள் மற்றவர்களுக்குப் பயன்படக்கூடியவர்களாக இருந்திருக்கின்றோமே தவிர, மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்களாக இருந் திருக்கின்றோமே தவிர, மற்றவர்கள் உதவியை நாங்கள் எதிர்பார்த்து வாழக்கூடியவர்களாக இல்லை என்ற சுயமரியாதைக் குடும்பமாக இந்தக் குடும்பம் சிறந் தோங்கி இருப்பதற்கு, இங்கே படமாக இருப்பவர்கள்தான் பாடமாக அமைந்திருக்கின்றார்கள் என்பதுதான் மிகச் சிறப்பானது.

அப்படிப்பட்ட இந்தக் குடும்பத்தவர்கள், இந்தத் துயரத்தை மறந்து, மீண்டும் சிறப்பான வகையில், எல்லா வகையிலும் இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டான குடும்பமாக இருக்கும் என்ற அளவில் வரவேண்டும் என்று சொல்லி, இந்தக் குடும்பத்திற்கு ஆறுதலை சொல்லிக் கொள்கிறேன்.

ஆயிரங்காலத்துப் பயிராக இந்தக் கொள்கைகள் வளர்ந்திருப்பதற்குக் காரணம்!

இந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தவேண்டும். மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை வரைக்கும் இந்தக் கொள்கைத் தலைமுறை வந்தாயிற்று. நம்முடைய சிறப்பு என்னவென்றால், மற்ற அமைப்பு களுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அரசியல் கட்சி நண்பர்கள் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது, உரிமையோடு சொல்லிக் கொள் கிறேன் - திராவிடர் கழகத்தைப் பொறுத்தளவில் அதற்கு என்ன ஒரு சிறப்பு என்றால், பெரியார் தொண்டர்களைப் பொறுத்தவரையில் சிறப்பு என்னவென்று சொன்னால், அவர் மட்டும் கட்சியில் இருப்பார்; அவர் வீட்டில் வேறு விதமாக இருப்பார்கள் என்று சொல்வதல்ல. அவரும் இருப்பார், வீட்டில் பொடிசு கடைசியாக இருக்கிறதே, அந்தப் பிஞ்சுகூட ‘பெரியார் வாழ்க!' என்று சொல்லும்; ‘ஆசிரியர் தாத்தா' என்று சொல்லும்.

ஆயிரங்காலத்துப் பயிராக இந்தக் கொள்கைகள் வளர்ந்திருப்பதற்குக் காரணம், அப்படிப்பட்ட உணர் வுகள்தான்.  எங்களுக்கு விழாக்கள் என்று சொன்னால், பெரியார் விழாக்கள்தான், பகுத்தறிவு விழாக்கள்தான். எங்களுக்கு நல்லது, கெட்டது என்றாலும், நாங்கள் இவர்களோடுதான் பகிர்ந்துகொள்வோம்.

இந்தக் குடும்பம் எல்லா வகையிலும் எடுத்துக் காட்டான குடும்பம். வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க மறைந்த அம்மையாரின் நினைவுகள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

No comments:

Post a Comment