காற்றை மாசுபடுத்துவது கொலைக் குற்றமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

காற்றை மாசுபடுத்துவது கொலைக் குற்றமே!

'தீபாவளி' என்பது மூடத்தனத்தைக் கருவாகக் கொண்ட ஓர் இந்து பண்டிகை என்பது ஒருபுறம்; ஆரியர் - திராவிடர் போராட்டத்தை உட் கருவாகக் கொண்டு அசுரனை - ஆரியக் கடவுள் அவதாரம் எடுத்து அழித்தது என்ற புனை சுருட்டு மற்றொருபுறம்.

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பல்வேறு முரண்பட்ட கதைகள் - அளப்புகள் இந்தத் தீபாவளிக்கு உண்டு.

இவை எல்லாம் எப்படி ஒழிந்தாலும், தீபாவளி பெயரால் காசைக் கரியாக்குவது என்ற நிலை இருந்தாலும், இவற்றை எல்லாம் கடந்து தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது என்ற செயல் எந்த வகையிலும் மன்னிக்கப்படவே முடியாத மக்களுக்கு மாபெரும் தீங்கிழைக்கும் ஆபத்தான செய்கையாகும்.

இதனால் ஏற்படும் காற்று மாசு என்பது பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகும். பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பில் அதன் பொறுப்பாளர் தோழர் கோ. சுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கையை (2ஆம் பக்கம் காண்க). படிக்கும்போது நெஞ்சமெல்லாம் பதறுகிறது குருதியே உறையும் நிலைதான்.

மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒரே நாளில் சென்னை வாசிகள் ஒவ்வொருவரும் 31 சிகரெட் புகைத்த அளவுக்குத் தீங்கு இழைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையை அறிவுள்ள ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

பண்டிகை, விழா என்ற பெயரில் துயரத்தையும், துன்பத்தையும், அழிவையும் வலியப் போய் விலை கொடுத்து வாங்குவதா என்ற கேள்விதான் எழுகிறது.

சூரிய கிரகணத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்று - பொய்யைக் கொட்டி அளக்கும் மத வியாபாரிகள், காவிகள், உண்மை யிலேயே கர்ப்பிணிப் பெண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் பட்டாசு வெடிப்பின் நச்சுப் புகையைப் பற்றி உதட்டை அசைக்காதது ஏன்?

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாசு கட்டுப்பாட்டின் அடிப்படையில் பட்டாசு வெடிப்பதை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஓர் அரசு உத்தரவிட்டால் அதிலும் அக்கப் போர் அண்ணாமலைகள், தாம் ஒரு கட்சியின் மாநில அளவிலான தலைவர் என்ற பொறுப்பை மறந்து "பட்டாசு வெடிப்பில் தலையிடலாமா? மதப் பண்டிகையில் மூக்கை நுழைக்கலாமா?" என்று அரசைக் குற்றம் சாட்டுவது -  எவ்வளவுப் பொறுப்பற்ற செயல் - ஒரு மாநிலப் பொறுப்புக்கு இலாயக்கற்றவர் என்று இதன் மூலம் தன்னைத் தானே அவர் அம்பலப்படுத்திக் கொண்டார் என்றே பொருள்.

பட்டாசு வெடிப்பால் சென்னையில் மட்டும் 211 மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்திருக்கின்றன.

இவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் நிலை என்ன? நெஞ்சில் ஈரம் இருந்தால் இந்த வகையில் சிந்திக்க வேண்டாமா? மதம் முக்கியமா? மனிதநேயம் முக்கியமா என்று சிந்திக்க வேண்டாமா?

கரோனா காலத்தில் பூரி ஜெகந்நாதருக்கே முகக் கவசம் (மாஸ்க்) அணிவித்த 'அதி' புத்திசாலிகள் ஆயிற்றே!

இந்திய அரசமைப்புச் சட்டம் மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது.

அந்தச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகப் பொறுப்பு இருக்க வேண்டிய ஆளும் தரப்பினர் அதற்கு எதிராக அஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கலாமா? மூடநம்பிக்கை நச்சுப் புகையைக் கிளப்பலாமா?

தீபாவளி பட்டாசு வெடிப்பால் எத்தனை எத்தனை விபத்துகள் - மனித உயிர் இழப்புகள்  - விழா என்பது கொண்டாடி மகிழவா? வீட்டில் இழவு விழவா?

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பட்டாசு வெடிப் புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே! மக்கள் நல அரசு என்பதற்கு அது அல்லவோ அடையாளம்!

காற்றை மாசுபடுத்துவது கொலைக் குற்றம். இதற்கொரு முடிவைக் காண்பது மக்கள் நல அரசுகளின் முக்கிய கடமையாகும். 

 


No comments:

Post a Comment