இதுதான் நுழைவுத் தேர்வின் அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

இதுதான் நுழைவுத் தேர்வின் அவலம்

'நீட்' - 'ஜேஇஇ' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் 'ஹேக்கர்களின்' உதவியோடு மாணவர்கள் தேர்ச்சி பெறும் உண்மை சி.பி.அய். விசாரணையில் வெளிவந்துள்ளது. 

 தொடர்ந்து நீட் உள்ளிட்ட பொது நுழைவுத்தேர்வுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு நடத்தும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு மோசடி செய்வது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்து பிறகு பிணையில் விடுவிப்பது தொடர்கிறது. 

 இந்த மோசடி வரிசையில் மற்றுமொரு மோசடியாக 'ஹேக்கர்கள்' எனப்படும் இணையத்திருட்டு மோசடி நபர்கள் மூலம் விடைத்தாள்களை திருத்தும் மோசடியும் தற்போது வெளிவந்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து கஜகஸ்தான் வழியாக டில்லியில் தரையிறங்கிய மிகைல் ஷார்கின் என்ற ரஷ்ய ஹேக்கர் சில மோசடி வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். துவக்கத்தில் இவரை சில பண மோசடிகள் தொடர்பான புகார்களின் கீழ் விசாரணைக்காகவே அழைத்துச் சென்றனர். ஆனால், இவரிடம் விசாரணை செய்த போது - அய்.அய்.டி.யில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் கரோனா கட்டுப்பாட்டால் இணைய வழியில் நடைபெற்றது.  அப்போது ஜேஇஇ முதன்மைத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

'அபினிட்டி எஜுகேஷன்' என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டது தெரிய வந்தது. இணையவழியாக நடைபெற்ற தேர்வில்  தேர்வுக் கூடத்துக்கு வெளியில் இருக்கும் மோசடிக் கும்பல் நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இத்தேர்வில் தேர்வர் களுக்கு பதிலாக, தேர்வெழுதிய நபர்களின் கணினிகளை 'ரிமோட் ஆக்சஸ்' மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வெளியிலிருந்து பதிலளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை சி.பி.அய். விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரிடம் சி.பி.அய். ஏற்கெனவே விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில்,  இணையத்திருட்டு மோசடிகளில் ஈடுபட்ட பலரது பெயர்களில் விசாரணைக்கு அழைத்துவந்த ரஷ்ய நபரின் பெயரும் இருந்தது அதிர்வை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்

ரஷ்ய 'ஹேக்கர்' மிகைல் ஷார்கின் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மோசடி செய்த 820 மாணவர்களுக்கு உதவி புரிந்து தேர்வெழுத உதவிய ரஷ்ய ஹேக்கர் மிகைல் ஷார்கின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இதையடுத்து அவரை 2 நாட்கள் சிபிஅய் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஒரு தொழில்முறை ஏமாற்றுக்காரர். டாடாவின் டிசிஎஸ் அய்.டி. நிறுவனம் அளிக்கும் 'அய்லியோன்' என்ற மென்பொருளை அத்துமீறி பயன்படுத்தி அவர் மோசடி செய்துள்ளார் - என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த மோசடியில் இன்னும் பல வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கை சி.பி.அய். தீவிரமாக விசாரித்து வருகிறது.

ஒன்றிய அரசு அனைத்துத் தேர்வுகளையும் வெளிநாடுகளில் உள்ள தனியார் தேர்வு முகவர்களிடம் ஒப்படைத்து விடுகிறது, இந்த முகவர்களுக்குப் பணம் மட்டுமே குறிக்கோள்;  அரசு, தனியார் என்று எல்லாம் பார்க்க மாட்டார்கள்.   இந்திய அரசு ஒரு பேப்பரைத் திருத்த ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சில தனி நபர்கள் அதே கேள்வித்தாளை மோசடியாக திருத்திக் கொடுக்க பல லட்சம் ரூபாய்களைத் தரும்போது அவர்கள் மோசடிக்குத் துணை போகிறார்கள். காரணம் அவர்களை இந்திய சட்டங்கள் எதுவுமே கட்டுப்படுத்தப் போவதில்லை. 

 2017 ஆம் ஆண்டில் முதல் முதலாக இந்த மோசடி வெளியானது. இந்த மோசடியில் வெற்றிபெற்ற பலர் இன்று மருத்துவர்களாகி வெளிவந்துவிட்டனர். இதுவரை ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் வேறொரு மோசடி வெளியாகி உள்ளது. 

இப்படிக் குறுக்கு வழியில் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் வந்தவர்கள் எல்லாம் தகுதி - திறமையின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு ஊஞ்சலாடுகின்றனர். தெரிந்து கொள்வீர் 'தகுதி- திறமை' பேசும் புரட்டர்களை!

'நீட்' என்பதே மோசடித் தேர்வு - பணம் இருப்பவர்கள் எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற ஒரே நோக்கத்தோடுதான் நடத்தப்படுகிறது என்பது இதன் மூலம் புலனாகி உள்ளது.

No comments:

Post a Comment