Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
சரஸ்வதி பூஜை
October 02, 2022 • Viduthalai

தந்தை பெரியார்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவா லேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது. அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது- மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத் திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள், எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமான தாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், தராசு, படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழி லாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலை களையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத்தியக்கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத் திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய் வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றையதினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங் களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர் களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக் கிறார்கள். அதுபோலவே புஸ்தகங்களையும் பென் சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய் கின்றார்களே அல்லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழி லில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரண மாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட் டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.

வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.

அன்றியும் நாம் காகிதத்தையும் ஒழுக்கத்தையும் சரஸ் வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்கு மானால் பூஜை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்விவான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மை யிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல்வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

புரட்டாசி சனிக்கிழமை

இனி அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக் கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு “வெங்கிடாசலபதி கோவிந்தா” என்றும் “நாராயணா கோவிந்தா” என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் “கோவிந்தா” “கோவிந்தா”- “கோவிந்தா!” என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைகடையாக காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண்களும் பெண் களும் நெருக்கடியில் இடிபடு வதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேகவியாதிக் காரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டை யிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள் வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை “பிராமண சமார்த்தனை” செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத் திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.

திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங் களையோ கெட்ட செய்கைகளையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக் கின்றோமா? என்று கேட்ப துடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn