செயல்தான் முக்கியம் - பேச்சல்ல - ஆத்திர அரசியல்வாதிகளே புரிந்துகொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

செயல்தான் முக்கியம் - பேச்சல்ல - ஆத்திர அரசியல்வாதிகளே புரிந்துகொள்வீர்!

 கோவை வன்முறை கண்டனத்துக்குரியதே! ஜாதி மதக் கண்ணோட்டப் பார்வையின்றி

பிரச்சினையின் அடிப்படையில் முதலமைச்சர் துரிதமாக செயல்படுகிறார்; 

எதையும் அரசியலாக்கிக் குளிர்காய்வதுதான் பி.ஜே.பி.யின் வேலையா?

கோவையில் நடைபெற்ற கண்டிக்கத்தக்க வன் முறையில் ஈடுபட்டவர்கள்மீது துரித நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். எதையும் அரசியலாக்கிக் குளிர்காய  பி.ஜே.பி. திட்டமிடுகிறது. முதலமைச்சரைப் பொருத்தவரை பேச்சு முக்கிய மல்ல - செயலே முக்கியம் என்று செயல்படுவது பாராட்டுக்குரியதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

கோவையில் ஒரு காரில் காஸ் சிலிண்டர் வெடித்து அதில் ஒருவர் இறந்தார் என்ற செய்தி 23.10.2022 அன்று வந்தவுடனேயே, நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், காவல்துறை தலைமை அதிகாரிகளான டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஆகியோரை கோவைக்கு விரைந்து, முழு விசாரணை மற்றும் உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ள ஆணையிட்டு, தமிழ்நாடு அரசு இயந்திரத்தை வேகமாக முடுக்கிவிட்டார்.

காவல்துறையின் விரைவான நடவடிக்கைகள்!

கோவை மாநகர காவல்துறை ஆணையர் பால கிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் காலதாமதத்திற்குச் சிறிதும் இடந்தராமல், அதுபற்றிய தகவல்களைத் திரட் டித் தந்ததோடு, அது சம்பந்தமான புலனாய்வினையும் மேற்கொண்டு நடத்தி, கைது செய்யவேண்டிய குற்ற வாளிகளையும் (உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கர், முகமது அசாருதீன், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில்) கைது செய்துள்ளனர்.  மேல்நடவடிக்கை களிலும் ஈடுபட்டு வருகின்றனர்!

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சதா வெறும் வாயை மெல்லும் பா.ஜ.க. மற்றும் சில எதிர்க்கட்சியினர் இதை அரசியல் மூலதனமாக்கிட முயல்வது எவ்வகையிலும் நியாயமாகாது; அறச்செயலும் ஆகாது!  இந்தக் கொடுமை வன்மையான கண்டனத்திற்குரியது.

ஜாதி, மத கண்ணோட்டம் இல்லை

மதவெறியை எதிர்த்து நாட்டில் நடைபெறும் இன் றைய அறப்போர் மற்றும் அரசியல் தடுப்பு நடவடிக்கை களில் ஒருபோதும் ஜாதி, மதக் கண்ணோட்டம் எவருக்கும் தேவையில்லை.

ஜாதி வெறி, மதவெறி அடிப்படையில், எந்த ஜாதி, எந்த மதத்தவராயினும் குற்றமிழைத்தவர்கள் என்ப தற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருக்குமானால், இதில் தயவு தாட்சண்யம் காட்ட ஒருபோதும் தி.மு.க. அரசு தயங்காது என்பதை மதவெறி சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளில் நிரூபித்துக் காட்டி வருகிறது; அதில் இந்த கோவை வழக்கிலும் - குற்றவாளிகள் எந்த மதத்தவராக இருந்தாலும், நடவடிக்கை தயவு தாட்சண்யமின்றி பாயவே செய்கிறது!

இதுபோன்ற நேரங்களில், வெறுப்பு அரசியல் பின்னணியில் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருப்பதும் மிகவும் முக்கியம்.

தீவிரவாதம், பயங்கரவாதம் ஒரு மனநோய்!

குற்றத்தைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, குற்ற மிழைத்தவர்கள் யார் என்று பார்த்து, அதற்கேற்ப தண்டனையில் வன்மை, மென்மையாகத் தருவது  - மனுதர்மச் சட்ட காலமாகும்.

தற்போதைய குற்றவியல் சட்டத்தில் அது நீக்கப் பட்டது - பிரிட்டிஷ் ஆட்சியரால்!

தீவிரவாதம் - பயங்கரவாதம் ஓர் ஆபத்தான மன நோய்! அதற்கு பயிற்சிக் களங்கள் எந்தெந்த கட்சிகள் என்பதும் நாடறிந்த செய்தியாகும்.

முதலமைச்சரின் பாராட்டத்தக்க நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நேற்று (26.10.2022) தலைமை அதிகாரிகளுடன் (உள்துறை சம்பந்தப்பட்ட) ஆலோசித்து, அதன்படி சிறிதும் தாமதிக்காமல், இதில் வேறு சில மாநிலங்களில் உள்ளவர்களோடு குற்றம் இழைத்தோருக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்பதால், இந்த விசாரணையை என்.அய்.ஏ. என்ற தேசிய புல னாய்வு முகமைக்கு ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்.

இதை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும்கூட வரவேற்றுள்ளார். மறுபுறம் போராட்டம், கடையடைப்பு ஏன்?

இப்படி நடவடிக்கைகள் முறையாக நடந்து வருகை யில், பா.ஜ.க. கடையடைப்பு என்று போராட்டம் அறி வித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பி.ஜே.பி. ஆர்ப்பாட்டம்நடத்தியதுண்டா?

அண்ணாமலை அவர்கள் பா.ஜ.க. தலைவரானதிலிருந்து எங்கு, எது நடந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தி.மு.க. அரசுக்கு எதிராக நடத்தி, கட்சி வளர்ச்சிக்கான கனவு காணுகிறார்.

இதுவரை தமிழ்நாட்டு மக்களின் உரிமை - கல்வி, உத்தியோகம், மருத்துவம், தொழில் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை  உருவாக்குவதற்கு அதிக நிதி உள்பட ஏதாவது தமிழ்நாட்டு வளர்ச்சிக்குரியதை மய்யப்படுத்தி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டா?

‘‘பொய் நெல்லைக் குத்தி பொங்கலிட'' நினைத்தால், அக்கட்சிக்கு மிஞ்சுவது ஏமாற்றமே! தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

பள்ளிக் கூடங்கள் முதல் எதுவென்றாலும் உடனே ஆர்ப்பாட்டம், தேர்வில் ஆள்மாறாட்டவாதியைக் கைது செய்தால், அதனை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் என்றால், வெட்கப்படவேண்டாமா, பா.ஜ.க.?

எப்படி சிரிப்பது என்றே புரியவில்லை!

எதிலும் அரசியல்தானா?

மனித உயிர்களுடன் விளையாடும் பெருங்குற்றங் களான இதுபோன்றவற்றில் எந்த ஓர் அரசியல் கட்சி அரசியலாக்கி, அந்த நெருப்பில் குளிர் காய நினைப்பது- மிக மோசமான சமூக விரோத நடவடிக்கையாகும்!

உடனே எந்தெந்தப் பிரிவில் நடவடிக்கை என்றெல் லாம் ஏதோ ‘‘அதிகாரத்திற்குத் தாங்களே ராஜாக்கள்'' போல சிலர் பேசுவது, அவர்களது ஆளுமைபற்றித் தெரியாத அறியாமையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும்.

பேச்சு முக்கியமல்ல - செயல்தான் முக்கியம் - இதுவே நமது முதலமைச்சரின் அணுகுமுறை

இதுபோன்ற விசாரணையில், பல்வேறு செய்திகளை உடனடியாக புலனாய்வுத் துறை உரிய தலைமைக்கு மட்டும் தெரிவித்து, நடவடிக்கையை மேற்கொள்வதுதான் வழமை; எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்திவிட முடியாது; கூடவும், கூடாது என்பது கனிந்த நிர்வாக அனுபவம் உள்ளவர்களின் மூதுரையாகும்!

அதுபோலவே, ‘‘முதலமைச்சர் போன்றவர்கள் ஏன், இதுபற்றிக் கருத்துக் கூறவில்லை'' என்று கேட்பது ஏற்கத்தக்கதல்ல.

எல்லாவற்றிற்கும் ஒரு முதலமைச்சர் பதில் கூறிக் கொண்டே இருக்கவேண்டுமா?

உடனே அவசரப்பட்டு விளம்பர வெளிச்சம் தேடக்கூடியவர் அல்ல நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; செயல்தான் அவரது ஆயுதம்; பேச்சல்ல!

அவசர ஆத்திர அரசியல்வாதிகளே, புரிந்து கொள்ளுங்கள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 
27.10.2022


No comments:

Post a Comment