அண்ணல் காந்தியின் பல்கலைக் கழகத்தை அபகரிக்க ஆர்.எஸ்.எஸ். துணிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

அண்ணல் காந்தியின் பல்கலைக் கழகத்தை அபகரிக்க ஆர்.எஸ்.எஸ். துணிவு!

ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மையுடன் துணைவேந்தர்களைத் தூக்கி எறியும் ஆளுநர்கள்

‘‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுவதா?''

பி.ஜே.பி. ஆட்சியில் ஆளுநர்களைப் பயன் படுத்தி ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்டவர் களை துணை வேந்தர்களாக நியமிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு வரும் போதெல்லாம், கல்வியைக் காவி மயமாக்குவதில் தீவிரம் காட்டும் முயற்சியின் ஒரு திட்டமாகவே பல்கலைக் கழகத் துணைவேந்தர்களைக் காவி மய மாக்கிட வெகுவேகமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிலும் கடந்த 8 ஆண்டுகால ஒன்றிய ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருவதில் பல மாநிலங்களில் - குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் - ஆளுநர்கள்மூலம் அதிவேகமாக, திட்டமிட்டே இதற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன!

ஆளுநர்களின் அட்டகாசங்கள்!

தமிழ்நாட்டிலும்கூட கடந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களது ஆளுமைவரை தொடர்ந்து இப்பணி நடந்து வருவது கண்கூடு!

கேரளாவில் இது உச்சகட்டத்திற்குச் சென்றுள்ள தோடு, ஒரு பெரும் கல்வியாளர்கள் போராட்டமே வெடித்துக் கிளம்பும் நிலையும் உள்ளது!

முன்பு டில்லி பல்கலைக் கழகங்களிலும் இதே நிலைதான்!

இப்போது ஒரு திடுக்கிடும் செய்தி குஜராத்திலிருந்து வந்துள்ளது.

‘‘குஜராத் வித்தியா பீடம்'' என்பது ஒரு பழம் பெருமை வாய்ந்த அமைப்பு - அண்ணல் காந்தியடி களால் உருவாக்கப்பட்ட அமைப்பு.

பட்டமளிப்பு விழாவுக்கு முதல் நாள் 

வேந்தரை மாற்றுவதா?

அதில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடை பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, பல்கலைக் கழக வேந்தர் (Chancellor) தேர்வு நடைபெறுவதில் ஆச்சாரிய தேவ்ரத் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரரையே அடுத்த வேந்தராக நியமித்து அறிவிப்பு வெளியான நிலையில், அதனை அவர் ஏற்கக்கூடாது என்று குஜராத் வித்தியா பீட பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழுவில் உள்ள டிரஸ்டிகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, தங்கள் பதவிகளை இராஜினாமாவும் செய்துவிட்டனராம்!

ஏற்கெனவே வேந்தராக இருந்த சிலாபட் என்ற அம்மையார் தான் செவ்வாயன்று நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்க வேண்டியவர். (இவர் சுயதொழில் பெண்கள் அமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த சமூக சேவகியாவார்).

கரையான் புற்றெடுக்க 

கருநாகம் புகுவதா?

குஜராத் ஆளுநருக்கு இந்த டிரஸ்டிகள் (ஆட்சி மன்றக் குழுவினர்) ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதி யுள்ளனர். அதில், ‘‘காந்தியக் கொள்கை, விழுமியங்கள், நடைமுறைகளில் நம்பிக்கையும், அனுபவமும் உள்ள ஒருவரையே, குஜராத் வித்தியா பீடம் என்ற காந்தி யடிகள் ஏற்படுத்திய பல்கலைக் கழகத்திற்கு நியமிப் பதே சரியான பொருத்தமாக இருக்கும்; எனவே, இந்த ஆர்.எஸ்.எஸ்.காரரின் நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம்'' என்று எழுதியுள்ளனர்.

‘‘இந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை (Transparency) இல்லை. ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்'' என்று கேட்டுள்ளனர்.

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

‘‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதை''தானே இது?

காந்தியைக் கொன்ற கோட்சே பயிற்சி பெற்ற நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். - இப்போது அவரது கொள்கை - நிறுவனத்தையும் ‘கொன்று'விட இப்படி யொரு முயற்சி போலும்!

அந்தோ விபரீதம்! வேதனை!!

இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

கி.வீரமணி 
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 
25.10.2022


No comments:

Post a Comment