பல இராமசாமிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

பல இராமசாமிகள்

- கலி. பூங்குன்றன்

 தெலங்கானா ஆளுநராக இருக்கும் - புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் பொறுப்பையும் ஏற்றிருக்கும் தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் ஒரு கருத்தைப் பதிவு செய்யுள்ளார்.

“ஒரு ராமசாமி இல்லை. ராமானுஜர் என்ற ராமசாமி காலத்தில் இருந்தே சமூகநீதிப் போராட்டம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. என்னைப் பொருத்தமட்டில் ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான முழுப் பெருமையும் கிடையாது. பல ராமசாமிகளும் சமூகநீதிக்காகப் போராடி இருக்கிறார்கள்.”

- என்று குறிப்பிட்டுள்ளார். பெரியார் ராமசாமி மட்டும் சமூகநீதிக்காகப் பாடுபடவில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் கூறுவதில் இருந்தே ஒன்றை அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

பெரியார் ராமசாமி சமூகநீதிக்காகப் பாடுபட்டு இருக்கிறார். இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு இவருக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டு இருக்கின்றன.

பெரியார் இராமசாமியின் சமூகநீதிப் போராட்டத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியதுதானே - மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது தானே - பின்பற்ற வேண்டியதுதானே.

இராமானுஜர் சீர்திருத்தம் செய்யவில்லையா என்று கேட்கிறார். அவர் செய்த சீர்திருத்தம் - பாரதியார் செய்த சீர்திருத்தம் - தாழ்த்தப்பட்டத் தோழருக்குப் பூணூல்  போட்ட சீர்திருத்தத்தை தமிழிசை சவுந்தரராசன் எத்தனை இடத்தில் எடுத்துப் பேசி இருக்கிறார்? இதுவரை இல்லை என்றால் இனியாவது அதற்கான திட்டம் உண்டா?

காலங்கடந்தாலும் பரவாயில்லை - இனியாவது மன சாட்சியத்தோடு பரப்பிட முன் வரலாமே!

“பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (மனுதர்மம் அத்தியாயம் -5 சுலோகம் 148).

அர்த்தமுள்ள (?) ஹிந்து மதத்தின் இந்த மனுதர்மம் செயல்பாட்டுக்கு வந்தால் டாக்டர் தமிழிசையாக, ஆளுநர் தமிழிசையாக உயர்ந்திருக்க முடியுமா?

இந்த மனுதர்மத்தை தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் கொளுத்தியதன் நியாயத்தைப்பற்றி டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் எந்த இடத்திலாவது திருவாய் மலர்ந்திருப்பாரா?

தந்தை பெரியாரின் இந்த அரும்பெரும் தொண்டின் காரணமாகத்தானே சென்னையில் பெண்கள் மாநாடு (1938) நடத்தி பெரியார் என்ற பட்டத்தை அளித்துப் பெருமை பெற்றனர்.

பல இராமசாமிகள் சமூகநீதிக்காகப் போராடியுள்ளதாக ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார் - உண்மைதான்.

அதில் ஒருவர்தான் ஆந்திராவைச் சேர்ந்த  திரிபுரனேனி இராமசாமி  (ஜனவரி 15, 1887 - ஜனவரி 16, 1943). ஆந்திராவில் வாழ்ந்த ஒரு வழக்குரைஞர், நாடக ஆசிரியர் மற்றும் சீர்திருத்தவாதி.

இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில், அனகலூரு Angaluru கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இராமசாமி. தனது 23ஆம் வயதுக்குப் பின்னர் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி அடைந்த இராமசாமி அதே ஆண்டில் இரு நாடகங்களை எழுதினார்.

1914 இல், அவர் பிரிட்டனுக்குச் சென்று சட்டம் பயின்றார். அதே போல் டப்ளினில் ஆங்கிலம் இலக்கியம் மற்றும் நவீன அய்ரோப்பிய கலாச்சாரம் படித்தார். இந்த நேரத்தில், அங்கிருந்தபடியே ஆந்திராவில் வெளிவந்து கொண்டிருந்த ‘கிருஷ்ணா பத்ரிகா’ எனும் வார இதழில் எழுதினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்ட இராமசாமி பல தேசபக்திப் பாடல்களை எழுதினார்.

இந்தியாவிற்குத் திரும்பிய இராமசாமி சிலகாலம் தெனாலி நகரத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். அதன் பின்னர் ஜாதி ஒழிப்பு, சமுதாய சீர்திருத்தம் போன்றவைகளில் கவனம் செலுத்தலானார்.

தனது பகுத்தறிவு எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்ட இராமசாமி நடைமுறைக்கு ஒவ்வாத பல மூடநம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடினார். அவரது புகழ் பெற்ற நூலான சூத்ர புராண பழைய புராணங்களைக் கடுமையாகத் தாக்கியது.

பெரியார், அம்பேத்கர், புலே போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகளைப் போல இராமசாமியும் காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தார். புலே அவர்களைப் போலவே இவரும் ஆங்கில ஆட்சியையே விரும்பினார்.

இவர் எழுதிய சம்புக வதம் எனும் கவிதை நூல் காந்தியடிகள் மற்றும் இந்துக் கட்சியினர் விரும்பிய இராமராஜ்யத்தில் சூத்திரர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சத்தை உண்டாக்கியது.

இந்துத் திருமணச் சடங்குகளை எதிர்த்த இராமசாமி எளிமையான விவாக விதி ஒன்றை ஏற்படுத்தினார். எளிமைத் திருமணங்கள் பலவற்றைத் தாமே முன்னின்று நடத்தியும் வைத்தார்

தமிழ்நாட்டில் பிறந்த பெரியார் ராமசாமியும், ஆந்திராவைச் சேர்ந்த திரிபுரனேனி இராமசாமியும் ஏன் புராணங்களை எதிர்த்தனர்? இதற்கான காரணங்களை என்றைக்காவது தமிழிசை போன்ற ஹிந்துத்துவாவாதிகள் எண்ணிப் பார்த்ததுண்டா?

நமக்காகப் போராடியவர்கள் யார்? நமது உயர்வுக்கு அவர்களின் சிந்தனையும், உழைப்பும் எந்த அளவுக்கு உரமாக இருந்தன என்று எண்ணிப் பார்க்கும் சிந்தனை வற்றிப் போனது ஏன்?

படித்த பெண்கள் - பெரும் பதவியில் வீற்றிருக்கும் தமிழிசை போன்றவர்களே இது குறித்தெல்லாம் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லவா?

பாராட்ட வேண்டாம்; வாழ்த்துப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டாம்.

வசைபாடாமலாவது இருக்க வேண்டாமா? வசை பாடுகிறவர்களைக் கண்டிக்கும் கண்ணியமான அறிவுப் போக்கு மலர்ந்திட வேண்டாமா?

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் வருணாசிரம கொள்கையுடைய ஒரு ஹிந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் (அதுதான் ஒரே மதம்) என்கிற அமைப்புக்கு ‘ஜெ’ போடும் நிலை என்கிற அளவுக்குச் செல்ல வேண்டுமா? செல்லலாமா?

இது ஏதோ ஆளுநர் தமிழிசைக்கு மட்டுமல்ல ஹிந்துத்துவா பேசும் வானதிகளுக்கும் சேர்த்துதான்.

No comments:

Post a Comment