‘‘வியர்வைக்கு வெகுமதி'' - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

‘‘வியர்வைக்கு வெகுமதி'' - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 வியர்வையை மட்டுமல்ல - குருதியையும் சிந்தி ஆட்சி - கட்சித் தலைமை என்ற இடத்திற்கு உயர்ந்துள்ளவர் தளபதி மு.க.ஸ்டாலின்!

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று கருதினால் - இது பெரியார் மண் - இங்கு நடக்காது - 

‘‘திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்!''

சென்னை, அக்.13  அதிகார பலத்தால் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது - இது பெரியார் மண் - ‘‘திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘வியர்வைக்கு வெகுமதி'' வாழ்த்தரங்கம்

நேற்று (12.10.2022) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘வியர்வைக்கு வெகுமதி'' என்ற தலைப்பில், தி.மு.க. தலைவராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது  வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய இந்த சிறப்பான, அருமை யான ஒரு வாழ்த்தரங்கம் என்ற பெருமைக்குரிய வகையில், வியர்வைத் துளிகளால், இரண்டாவது முறை - அவரை நோக்கிப் பதவி சென்றது - அவரால் அந்தப் பதவி பெருமை பெறுகிறது என்ற ஒரு சிறப்போடு, அவரைப் பாராட்ட, அவரைத் தேர்ந்தெடுத்தவர்களைப் பாராட்ட, அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி சொல்ல, அருமையான ஓர் ஏற்பாட்டை செய்து, இங்கே நம்மை யெல்லாம் திரட்டி, யார் யாரை எல்லாம் சிறப்பாக, இவர்களையும் சேர்த்து பாராட்டி, இவர்களும் அந்தப் பாராட்டில் பங்கு பெறவேண்டியவர்கள் -பங்கு பெற உரிமையும், உறவும் படைத்தவர்கள் என்ற பெருமையோடு, அருமை செயல்பாபு என்று நம்முடைய முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக அழைக்கப்பட்டு, நம்முடைய மாண்பமை அமைச்சரும், கிழக்கு மாவட்டம் - கிழக்குத்தான் சூரியன் உதிக்கின்ற மாவட்டம் - மற்ற வர்கள் அல்ல என்பது பெரிதல்ல - தொடக்கம் அங்கே தான் - அப்படிப்பட்ட ஓர் அருமையான செயலை, முதலில் நம்முடைய அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் - யாரை எல்லாம் அழைத்து வந்தார் என்பதே ஒரு வரலாறு.

முதல் பாராட்டு விழா பெரியார் திடலில்!

இந்த வரலாறு குறிப்பிடத்தகுந்த வரலாறு திராவிட இயக்கத்தில். முதல் முறையாக முதலமைச்சருக்குப் பாராட்டு - இரண்டாவது முறையாக  தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குப் பாராட்டு - பெரியார் திடலில்தான் - உரியாரை வைத்து நடக்கிறது. இது நரியாருக்குப் பிடிக்காது என்பது வேறு செய்தி. ஆனால், தெளிவாக இது நடக்கிறது.

நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் அனுபவ ரீதியாக மூத்தவர் அவர் இந்த இயக்கத்தில், அவர் இங்கே சிறப்பான வகையில் கருத்துகளை கொள்கை ரீதியாக எடுத்து வைத்தார்.

ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்றவர்

அதுபோலவே, துணைப் பொதுச்செயலாளர் அவர் களும் இந்தக் குருகுலத்தில் பயின்றவர்தான். ஈரோட்டுக் குருகுலத்தில் நேரிடையாக அவர்கள் பயிலக்கூடிய வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தத்துவ ரீதியாகப் பயின்றவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இவர்களையெல்லாம் ஒரு மாலையாகத் திரட்டி, பெரியார் திடலில், அந்த மாலையை அப்படியே நாம் அணிவிக்கவேண்டும் - இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவினு டைய முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக இருக்கின்றவரைப் பாராட்டவேண்டும் என்று ஏற்பாடு செய்து, பெரியார் திடலை, நம்முடைய அமைச்சர் அவர்கள், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அவர்கள், அருமைச் சகோதரர் மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இந்த ஏற்பாட்டை செய்திருக்கின்ற நிகழ்வில் கலந்துகொண்டு, தலைமை ஏற்றிருக்கின்ற சுதாகர் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கின்ற அருமை நண்பர்கள் ஏகப்பன் அவர்களே, வேலு அவர்களே, சிறீராமுலு அவர்களே, கே.எஸ்.எம்.நாதன் அவர்களே, நிர்மலா தேவி அவர்களே, எல்.சுந்தரராஜன் அவர்களே, பார்த்திபன் அவர்களே, பரிதி இளம்சுருதி அவர்களே, சுமதி அவர்களே, ரசூல் வடிவேலு, டி.வேலு, மலர்மாலை, அண்ணபூரணி, ஜெகதீசன் அவர்களே,

இந்த சிறப்பான நிகழ்வில், எங்களுடைய பெருமை மிகு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற உறுதியோடு, இந்த ஆத்திரத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி நாடாளுமன்றத்திலே ஒரு கலக்குக் கலக்கி, பெரியார் திடலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் - எங்களுடைய இளைஞர், அருமைச் சகோதரர், எங்களுடைய சகோதரருடைய மகன் என்ற பெருமையை என்றைக்கும் உரிய தயாநிதி மாறன் அவர்களே,

அதேபோல, சென்னை மாநகர மேயர் பிரியா அவர்கள், பெரியார் கொள்கையில் பூத்த மலராக இன்றைக்கு அவர்கள் காட்சி அளிக்கிறார். பெண்கள் பொறுப்புக்கு வரவேண்டும் - இதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் குறிக்கோள். அதற்குச் செயல்வடிவம் கொடுத்த பெருமை நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு. 

இன்னுங்கேட்டால், இங்கே அருமைப் பெரியவர்கள், தாய்மார்கள் எல்லோரும் அமர்ந்திருக்கின்றார்கள். எனக்கு முன் உரையாற்றிய நண்பர்கள் அனைவரும் சுட்டிக்காட்டினார்கள். நம்முடைய சேகர்பாபு அவர்கள் கூட்டம் போட்டால், அதில் ஒரு தனி முத்திரை இருக்கும் என்று சொன்னார்கள். அதில் பல முத்திரைகள் உண்டு.

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் நிறைவேற்றப்படவேயில்லை. அவர் கள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், 50 சதவிகிதத்தை எப்பொழுதும் நிரந்தர மாக தக்க வைக்கக்கூடியவர்கள், அவர் கூட்டக் கூடிய கூட்டத்தில் இருக்கக்கூடிய மகளிர் என்ற பெருமையை, நம்முடைய சகோதரிகள் எப்பொழுதும் பெறுவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பு அவருக்கு உண்டு. அதனால்தான், கொள்கைப்பூர்வமாக நாங்கள் இரண்டு பேரும் ஒத்துப் போகிறவர்களாக இருந்தாலும், சண்டையும் போடக்கூடியவர்கள்.

பொதுச்செயலாளர் சொன்னார், கொள்கை ரீதியாகப் பார்க்கிறோம் என்று.

ஆங்கிலத்தில் விஞ்ஞானப்பூர்வமாக ஒரு செய்தியை சொல்வார்கள், 

Unlike Poles attract each other

மாறுபட்டவர்களிடம் ஈர்ப்புகள் உண்டு என்று.

அதுபோன்று சில நேரங்களில், அவருக்குக் கொடுத் திருக்கின்ற பொறுப்பை அவர் செய்கிறார்.

நாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பு, சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக் காட்டுகிறோம்; ஏன், உரி மையோடு கண்டிக்கவேண்டிய நேரத்தில், கண்டிக்கக் கூடிய உரிமையும், உறவும் பெற்றவர்கள் நாங்கள்.

அதனால், எங்களுடைய நட்பு ஒருபோதும் சிதை யாது - கலையாது - மாறாது.

அதற்கு அடையாளம்தான் நம்முடைய முதலமைச் சருக்கு முதல் பாராட்டு விழா இங்கே!

பெரியார் திடலும் - 

முத்தமிழ் அறிஞரின் உவமையும்!

நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது, இங்கே வந்து உரையாற்றும்பொழுது, அய்யாவை அருகில் வைத்துக் கொண்டு சொன்னார். இந்தத் தகவலை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும், இது பழைய வரலாற்றுச் சுவடு.

‘‘ஓர் உவமை சொல்வார்கள், பாம்புக்கும், கீரிக்கும் சண்டை வரும். அதில் மிகப்பெரிய அளவிற்கு, பாம்பு, கீரியை அதிகமாகக் கடிக்கும். ரத்தம் சிந்தக் கூடிய அளவிற்குக் காயம் ஏற்படும். அந்தக் காயத்திலிருந்து, பாம்புக் கடியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டு மானால், அந்தக் கீரி என்ன செய்யுமாம்?  ஒரு பச்சிலை மூலிகையைத் தேடிப் போய், அதில் புரண்டு எழுமாம். அப்படி எழுந்தவுடன், ரத்தக் காயங்கள் எல்லாம் மாறிவிடும்; மீண்டும் புத்துணர்ச்சியோடு அந்தக் கீரி எழுந்து நிற்குமாம்.

அந்தப் பச்சிலைதான் எனக்குப் பெரியார் திடல். எனக்குப் பல நேரங்களில் பாம்புக் கடிகள் ஏற்படும்; இந்தப் பெரியார் திடலுக்கு வந்து, அந்தப் பச்சிலையை நான் பெற்றால், அந்தக் கடிகள் எல்லாம் காணாமல் போய்விடும்'' என்று சொன்னார்கள்.

எனவேதான், இன்றைக்கும் அந்த சூழ்நிலை இருக் கிறது. ஆகவேதான், பச்சிலை இங்கே இருக்கிறது.

எனவேதான், முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. தலை வராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், முதலில் இங்கே வருகிறார்கள்.

காரணம் என்ன?

நம்முடைய இன எதிரிகள், அவர்களுடைய பணியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாம் வியர்வைத் துளியை சிந்தி வெற்றி பெறுகிறோம். வியர்வைத் துளி மட்டுமல்ல நண்பர்களே, ரத்தமும் சிந்தித்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார், நம்முடைய முதலமைச்சர்.

நாசூக்காக, நம்முடைய செயல்வீரர் சேகர்பாபு அவர்கள், இந்தத் தலைப்பைக் கொடுத்திருக்கிறார்; வியர்வைத் துளியை மட்டும் சொல்லியிருக்கிறார்.

எதையும் ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப்பட்ட வர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்; தாய்க்கழகத்துக் காரர்கள்.

என்னுடைய கைகளில் இருப்பது இஸ்மாயில் ஆணைய விசாரணை அறிக்கை.

‘மிசா'வில் கைதானவர்!

சிறைச்சாலையில், மிசா கைதியாக, 44 ஆண்டு களுக்கு முன்பு, நாங்கள் எல்லாம் கைது செய்யப்பட்ட நேரத்தில், நம்முடைய ஆற்றல்மிகு முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. இளைஞரணியில் இருந்தவர். திருமணமாகி ஒரு மாதமாகி இருக்கும். அவரைத் தேடுகிறார்கள் என்று சொன்னவுடன், நம்முடைய அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ‘‘அவர் வெளியே போயிருக்கிறார்; வந்த வுடன், நானே உங்களுக்குத் தகவல் கொடுக்கிறேன்'' என்று சொல்லி, அதன்படியே, அவர் வந்தவுடன், காவல் துறையினரை வரச் சொல்லி, அழைத்துப் போகச் செய்தார்.

எங்களையெல்லாம் அதற்கு முன்தினமே கைது செய்து சென்னை மத்திய சிறைச்சாலையில் வைத்தி ருந்தார்கள்.

இரவு 9 மணிக்குமேல், சிறைச்சாலை முழுவதும் இருட்டு - அந்தக் கொட்டடியில், 9 ஆம் நெம்பர் பிளாக்கில் நாங்கள் எல்லாம் படுத்திருந்தோம்; ஒருவரை உள்ளே தள்ளியபோது, என்மேல் ஓர் உருவம் வந்து விழுந்தது; மங்கலான வெளிச்சத்தில் அவரைப் பார்த்து, யார்? என்ற கேட்டபொழுது, 

 ‘‘அண்ணன், நான் ஸ்டாலின்'' என்று அவர் சொன்னார்.

உடனே அவருடைய கரத்தைப் பிடித்தேன். இந்தக் கரம் அன்றும் பிடித்தது; இன்றும் பிடிக்கிறது; என்றும் பிடித்துக் கொண்டுதான் இருக்கும்.

ரத்தம் சொட்டுகிறது; நாங்கள் எல்லாம் பக்குவப்பட்ட வர்கள்; அவர் புதிதான இளைஞர். அவருடைய உணர்வு எப்படி இருக்கும் என்பதைப்பற்றி எங்களால் எண்ணிப் பார்க்க முடியும். அதிலும் திருமணமாகி ஒரு மாதமாகி இருக்கும் இளைஞர் அவர்.

அவரைப் பார்த்து, கவலைப்படாதீர்கள், தைரியமாக இருங்கள்; துணிச்சலாக இருங்கள் என்று சொன்னோம். அதற்கு அடுத்துதான் அவருக்கு மிகப்பெரிய ஆறு தலைச் சொன்னவர், நம்முடைய மறைந்த மேயர் சிட்டி பாபு அவர்கள். அவருடைய டைரியில் இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எப்போது வெளியே வருவோம் என்று தெரியாது. வருவோமா? வரமாட்டோமா? என்கிற அச்சுறுத்தல் இருந்தது.

இஸ்மாயில் ஆணையம் அமைக்கப் பெற்று,  விசா ரணை நடத்தப்பட்டு, மிசா கைதிகள் எப்படியெல்லாம் தாக்கப்பட்டார்கள்; சிட்டிபாபு டைரி என்பது என்ன? எப்படி இளைஞர் ஸ்டாலின் அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் அறிக்கையாக அளித்தது.

தற்குறியாகப் பேசலாமா?

தமிழ்நாடு அரசின் மூலமாகப் போடப்பட்ட ஓர் ஆணையத்தின் அறிக்கை - 1978 இல் வெளியிட்டது. 1976 இல் நடைபெற்ற சம்பவத்தைப்பற்றி.

ஏன் இதையெடுத்து இந்த நேரத்தில் சொல்லுகிறேன்? , அவர் ரத்தத்தை சிந்தினார் என்பதற்காக மட்டுமல்ல நண்பர்களே! தியாகத்தை எடுத்துச் சொல்ல நாங்களே விரும்பமாட்டோம். ஆனால், எதற்காக இப்பொழுது சொல்கிறோம் என்றால், இந்த ஆட்சியைக் குறை சொல்வதற்கு, இந்த ஆட்சியின்மீது குற்றம் சொல்வதற்கு எதுவுமில்லை என்று சொல்கின்ற நேரத்தில், குறுக்கு வழியில் காவி மயமாக்கிவிடலாம் தமிழ்நாட்டை என்று நினைக்கின்ற அரைவேக்காடு அண்ணாமலைகள் எல்லாம் இன்றைக்கு என்ன பேசுகிறார்கள் என்றால், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மிசாவிலே கைது செய்யப்படவில்லை என்று சொல் கிறார்.

அட, அர்த்தமற்ற பிண்டங்களே, இதோ ஆதாரம் இருக்கிறதே, இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில் சொல்லவேண்டாமா? ஒரு தற்குறி பேசினால், மன்னித்துவிடலாம். ஆனால், நீங்களோ அய்.பி.எஸ். (ஓய்வு) என்று ஒரு மூன்று எழுத்துகள் இருக்கின்றன. ஆனால், அந்த மூன்று எழுத்தை வைத்துக்கொண்டு, தகுதிமிக்க ஒரு கட்சியினுடைய தலைமைக்குரிய பொறுப்போடு பேசவேண்டாமா?

இப்படி ஆதாரத்தோடு பதிலளிக்கவேண்டிய கட்டம் இருக்கிறது நண்பர்களே, அதற்குத்தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தலில் பதில் சொல்லவேண்டும்.

இது ஓர் இயக்கம் - கட்சியல்ல!

தி.மு.க. தலைவராக நம்முடைய முதலமைச்சர் அவர்களைத் தேர்ந்தெடுத்தது மட்டும் போதாது. இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் இப்படி பதில் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இங்கே அருமைச் சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெளிவாகச் சொன்னார்.

ஒரு கட்சி, ஓர் இயக்கம் - மிக அருமையான விளக்கம் சொன்னார்.

கட்சி என்பது தீர்ந்துவிடும், அதோடு சரி. ஆனால், இயக்கம் என்பது கொள்கை. அந்தக் கொள்கைக்கு எவ்வளவு காலம் பயணம் இருக்கிறதோ - எவ்வளவு காலம் லட்சியம் இருக்கிறதோ, அவ்வளவு காலத்திற்கும் அந்த இயக்கத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள் வருகிறார்கள்.

கட்சித் தேர்தலை நடத்திய நேர்த்தி!

தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என இன்றைக்கு அய்ந்தாவது தலைமுறை என்று தாங்கிக் கொண்டு வருகிறது என்றால், தயாநிதி மாறன் போன்ற வர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால், இது வளர்ந்து கொண்டே வருகிறது - ஏனென்றால், திராவிடம் ஆயிரங்காலத்துப் பயிர் - எந்தக் கொம்பனும் இதை அசைத்து விட முடியாது.

இதனுடைய வேர் எங்கே இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. இதனுடைய பலம், வெறும் பதவி நாற்காலியில் இல்லை. மக்கள் மன்றத்தில் இருக் கிறது; மக்கள் கைகளில் இருக்கிறது. எனவேதான், அந்த மக்களுடைய ஆதரவினால்தான் அவர்கள் வரு கிறார்கள்.

சொன்னார்களே, இந்தியாவில், உலகத்திலே இப்படி ஒரு கட்சித் தேர்தல் நடந்ததுண்டா? என்று பொதுச்செய லாளர் கேட்டார்.

இத்தனை பேரையும் ஒருங்கிணைக்கக் கூடிய நிலையை எவ்வளவு அழகாகக் கையாண்டார்?

இங்கே சகோதரர் அமைச்சர் பொன்முடி அவர்கள் சொன்னார்கள், ‘‘நான் வேடிக்கையாக, நகைச்சுவையாக சொன்ன கருத்தை, இன்றைக்கு சிலர் எவ்வளவு திசை திருப்பிவிட்டார்கள்'' என்று வேதனையோடு சொன்னார்.

ஆம்! அவர்களுக்கு வேறு சரக்கில்லை; என்ன செய்வார்கள்?

சரக்கு இருந்தால், அதைச் சொல்வார்கள். சரக்கு இல்லையே, தேடிப் போகிறார்கள்; ஆகவே, வேடிக் கையைக்கூட எப்படியாவது விஷமத்தனமாக ஆக்க லாமா என்று கலகமூட்டியே தீருவார்கள்.

இதைத்தான் அண்ணா அவர்கள், ‘ஆரிய மாயை' யினுடைய சிறப்பு என்ன என்று சொல்லுகின்ற நேரத்தில்,

‘‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி! போற்றி!!'' என்றார்.

சிண்டு முடிவதில் பலவகை உண்டு.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. பொதுக் குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் படத்திற்கு மாலை வைக்கிறார். அந்தக் காட்சியை நாங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். இங்கே அமர்ந்திருக்கும் சிலர் அந்தக் காட்சியை நேரிலே பார்த்திருப்பீர்கள்.

மரியாதைக்காக செருப்பை காரில் விட்டுவிட்டு வந்துவிடுகிறார். உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சி ஒவ் வொருவருக்கும். பார்க்கிற எங்களுக்கே உணர்ச்சி பூர்வமாக இருந்தது.

தி.மு.க. பொருளாளராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

டி.ஆர்.பாலுவுடன் வந்த நண்பர் ஒருவர், அய்யா நீங்கள் செருப்பை மறந்துவிட்டு வந்துவிட்டீர்கள் என்று சொல்லி, செருப்பைக் கொடுக்கிறார்.

அய்யய்யோ, வேண்டாம் என்று சொல்லி, நீங்கள் ஏன் எடுத்துக்கொண்டு வந்தீர்கள்? என்று அவர் துடிப்பாகக் கேட்டார்.

இது ஒரு சாதாரண நிகழ்ச்சி - ஒரு மனிதாபிமான நிகழ்ச்சி - எதிர்பாராத நிகழ்ச்சி அவ்வளவுதானே!

அவ்வளவு பெரிய பொதுக்குழுவில்,  ஒருவர் செருப்பைத் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தார் என்று செய்தி போடுவதுதான் ஒரு பத்திரிகையா? இந்த நாட்டில் அந்தப் பத்திரிகைக்கு என்ன தரம் இருக்கிறது?

சரி, அதை எழுதக்கூடிய உங்களுக்கு, அதைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறதா? என்றால், அதுவும் கிடையாது.

14 ஆண்டுகள் செருப்பு ஆண்டதே!

14 ஆண்டுகள் ராமனுடைய செருப்பை தலையில் தூக்கி வைத்து ஆண்ட நாடு இது.

செருப்பை ஆள விட்ட உங்களுக்கு, செருப்பைப்பற்றி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

எனவே, இந்தக் கதையையெல்லாம் நாங்கள் சொல்ல ஆரம்பித்தால், எங்கே போய் நிற்பீர்கள் நீங்கள்? உங்களால் நிற்கவே முடியாது.

ஒரு சாதாரண மனுதர்மத்திற்கே நீங்கள் படாதபாடு படுகிறீர்கள். திசைதிருப்பலாம்; ஒட்டலாம், வெட்டலாம் என்று பார்க்கிறீர்கள்.

இந்த மேடை இருக்கிறதே, இது சாதாரணமானதல்ல. அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். நாங்கள் கருப்புச் சட்டைக்காரர்கள், காவலுக்குக் கெட்டிக்காரர்கள்.

திராவிடர் கழகம்- ஒரு தூசிப்படை!

அறிஞர் அண்ணா சொன்னார், திராவிடர் கழகத் தினுடைய பணி என்னவென்றால், தூசிப் படை.

இராணுவப் படை செல்வதற்கு முன்பு, ‘‘சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்'' போகும். அதற்குத்தான் ‘தமிழில் தூசிப் படை' என்று மொழி பெயர்த்தார்கள். இதனுடைய பணி என்னவென்றால், முன்னால் சென்று பாதை போட்டுக்கொண்டே போகும்; வழியில் இருக்கும் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அகற்றிக் கொண்டே போகும். இதுபோன்ற பணிகளைச் செய்வதுதான் எங்களுடைய வேலை. கோட்டைக்குப் போவது எங்களுடைய வேலையல்ல. கோட்டையில் யாரும் ஓட்டை போடாமல் தடுப்பதுதான் எங்களுடைய வேலை.

எங்களுக்கு எந்தப் பதவியின்மீதும் ஆசை கிடையாது. இன்னுங்கேட்டால், இறந்து போன பிறகுகூட, சிவலோகப் பதவி கிடைக்குமா? வைகுண்ட பதவி கிடைக்குமா? என்று பத்திரிகை அச்சடிக்கிறார்கள். அதில்கூட எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.

இந்தத் தாய்க்கழகம் நம்முடைய முதலமைச்சர் அவர்களைப் பார்த்துப் பூரிப்படைகிறது. இந்த ஆட்சியை நீங்கள் எளிதில் தள்ளிவிடலாம் என்று நினைத்துவிட முடியாது. என்றாலும், நாம் விழிப்போடு இருக்கவேண்டும்.

ஏனென்றால், இதற்கு முன் இருந்த எதிரிகள் - கலைஞர் காலத்தில், அதற்கு முன்பு அண்ணா காலத்தில், காமராஜர் காலத்தில், நீதிக்கட்சி காலத்தில், அன்று இருந்த எதிரிகளுக்கும், இப்பொழுது இருக்கின்ற எதிரிகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. அதைத்தான் நாம் எல்லோரும் கவனமாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

இங்கே அமர்ந்திருக்கின்ற உங்களை நான் அவரது சார்பாக மட்டும் பார்க்கவில்லை. அவருடைய தோழர்களாகிய நீங்கள், இயக்கத்திற்காக எதையும் செய்வதற்காகத் திரண்டிருக்கின்ற தாய்மார்கள், பெரியவர்கள் என்று மட்டும் பார்க்கவில்லை. கவசம் போல் இந்த இயக்கத்தைக் காப்பாற்றக்கூடிய இராணுவ வீரர்கள் - அறிவார்ந்த திண்ணைப் பிரச்சாரத்திலிருந்து, தெருப் பிரச்சாரத்திலிருந்து, எல்லா பிரச்சாரத்திலும், போராட்டக் களத்திலிருந்து அனைத்திற்கும் அத்துணை பேரும் துணிந்து வரக்கூடியவர்கள் என்றுதான் பார்க்கிறேன்.

திண்ணைப் பிரச்சாரம் - 

தெருப் பிரச்சாரம் நடக்கட்டும்!

இங்கே இருக்கின்ற தாய்மார்கள், இந்தக் கூட்டத்திற்கு மட்டுமல்ல, அவர் நடத்திய போராட்டங்களில்கூட, பல நேரங்களில் மண்டபம் கொள்ளாத அளவிற்குக்  கைதாகியிருக்கிறார்கள்; மற்றவர்களும் கைதாகியிருக்கிறார்கள்.

எனவே, இது வெறும் ஆட்சிக்காக அல்ல  - வெறும் காட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக என்பதை மறந்துவிடாதீர்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு முதலமைச்சரைப் பாராட்டினால் மட்டும் போதாது; வாழ்த்தினால் மட்டும் போதாது. நம்முடைய கடமை என்ன? அதை சொல்வதுதான் தாய்க்கழகத்தினுடைய வேலையாக - நான் உங்கள் தோழனாக, தொண்டனாக, பணியாளனாக உங்கள் முன்னால் நின்று, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வளவு நாள், ஒரு சாதாரண முகவரி தெரியாத அரைவேக்காட்டுப் பேர்வழிகள், பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை சீரழித்தார்கள்.

வெற்றிடமல்ல - கற்றிடம்!

கலைஞர் அவர்கள் மறைந்த நேரத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாடு வெற்றிடமாகிவிட்டது என்று சிலர் சொன்னார்கள். அப்போது இதே மேடையில் நாங்கள் சொன்னோம் - ‘‘நீங்கள் தப்புக் கணக்குப் போடுகிறீர்கள், தளபதியைப்பற்றி. அவருடைய தலைமை என்பது இருக்கிறதே, அவருடைய வழிகாட்டுதல் என்பது இருக்கிறதே, அவருடைய ஆற்றல் என்பது இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல! 

நண்பர்களே, அவர் பொறுப்பேற்றால், அவர் பதவியேற்கவில்லை - அந்தப் பொறுப்பை ஏற்றால், அந்தப் பொறுப்பின்மூலமாக விளையக்கூடியது வெறும் வெற்றிடமல்ல - கற்றிடம்! கற்றிடம்!! கற்றிடம்!!!'' என்று சொன்னோம்.

இந்தியாவே இன்றைக்குக் கற்றிடம். அதனால்தான், இந்தியாவே வியக்கத்தக்க முறையில்பார்க்கக்கூடிய முதலமைச்சராக, ஓர் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.

காலையில் அவர், நடை பயிற்சியும் செய்கிறார்; சைக்கிளிலும் செல்கிறார்; சைக்கிளை மிக லாவகமாக ஓட்டுகிறார்; நேரில் பார்க்காவிட்டாலும், அந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருக்கின்றோம்.

ஆட்சி, கட்சியை நேர்த்தியாக ஓட்டக் கூடியவர்!

இரண்டு சக்கர மிதிவண்டியை சரியாக ஒட்டக்கூடியவர். ஆட்சி என்கிற சக்கரத்தையும் சரி, கட்சி என்கிற சக்கரத்தையும் சரி, ஓட்டும்பொழுது, யார் எதிரே வருகிறார்கள் என்று தெரியும் அவருக்கு. எப்படி ஓட்டுவது என்றும் தெரியும். யார் மோத வருகிறார்கள் என்றும் அவருக்குத் தெரியும். ஆகவே, அவர்களை எப்படி பள்ளத்தில் தள்ளுவது என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும்.

அதற்குக் காரணம் என்ன?

அவர் அருகே இருக்கும் தோழர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்கள்; உடல்வலிவோடும் இருக்கிறார்கள்.

உறவும், வரவும் தெளிவாக இருக்கக்கூடிய ஓர் அற்புதமான தலைவராக, அணைக்கக்கூடிய தலைவராக, அனைவரையும் தட்டிக் கொடுக்கக் கூடிய தலைவராக, ஊக்கப்படுத்தக் கூடிய தலைவராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் அமைந்திருப்பது ஒரு நல்ல அருமையான கூட்டணி. ஆட்சி என்பது பிறகு.

அந்தக் கூட்டணிக்கு 10 ஆண்டுகாலமாகத் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியாவில் இல்லாத ஒரு கூட்டணி தமிழ்நாட்டில் இருக்கிறது.

பெரியார் மண்ணில் அச்சுறுத்தல் எடுபடாது!

தமிழ்நாட்டில் ஒரு கட்சி இருக்கிறது - அது இப்பொழுது கோஷ்டியாக இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றப் படிக்கட்டிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்க்கட்சி என்று பெயரே தவிர, யாருக்கு, யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதே இப்போது அவர்களுக்குள் கேள்வியாக இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என்று சிலர் சொல்கிறார்கள்.

எப்படி வரும்?

அப்படியென்றால், ஜனநாயகத்தை நீங்கள் மதிக்கமாட்டீர்கள் என்றுதானே அர்த்தம். உங்களுக்கு அதிகாரம் இருப்பதினால், 356 அய் பயன்படுத்துவோம் என்று மறைமுகமாக மிரட்டி அச்சுறுத்திப் பார்க்கிறீர்கள்.

உங்களுடைய அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தப் பெரியார் மண்ணில் எடுபடாது.

ஆட்சி உங்களிடத்தில் இருக்கலாம் -

சட்டம் உங்களிடம் இருக்கலாம் -

ஆளுநர்கள் உங்களிடம் இருக்கலாம் -

ஆனால், அதையும் தாண்டி எங்களிடம் என்ன இருக்கிறது?

இந்தக் கூட்டணியிடம் என்ன இருக்கிறது?

நம்முடைய முதலமைச்சரின் பின்னால் என்ன இருக்கிறது?

உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம், மக்கள் இருக்கிறார்கள்! மக்கள் இருக்கிறார்கள்!! மக்கள் இருக்கிறார்கள்!!!

மக்கள் சக்திதான் முடிவு செய்வது. ஆகவே, அந்த சக்தி சாதாரணமானதல்ல என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அவர்களுக்கு என்ன தைரியம் இருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை, வாக்காளர்களைக் கொச்சைப்படுத்தும் அளவிற்கு, ‘‘நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும்'' என்று சொல்வார்கள்.

முடியுமா?

அண்ணாதான் சொன்னார், மிக அடக்கத்தோடு, தமிழ்நாடு என்று பெயர் வைக்கும்பொழுது, ‘‘ஓராண்டு சாதனையாக- முப்பெரும் சாதனைகள் செய்தேன். என்னுடைய ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று நினைக்கிறார்கள்; அவர்களால் முடியுமா? என்றுகூட நான் சவால் விடமாட்டேன். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது - ஆனால், எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, நாங்கள் செய்ததையெல்லாம் மாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள்.

அதில் கை வைத்தால்,

சுயமரியாதைத் திருமணச் சட்டம்

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்

இருமொழிக் கொள்கை - தமிழ், ஆங்கிலம்தான், இந்திக்கு இங்கே இடமில்லை என்ற முப்பெரும் சாதனைகளில் கை வைக்க நினைத்தால், என்னாகும் என்று அச்சப்படுவீர்கள்? அந்த அச்சம் உங்களுக்கு எவ்வளவு காலம் இருக்கிறதே, அவ்வளவு காலமும் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆளுகிறான் என்று பொருள்'' என்று அண்ணா சொன்னார்கள்.

அதே தத்துவம்தான் இன்றைக்கும் - என்றைக்கும் - அதை மறந்துவிடாதீர்கள்.

எனவேதான், இந்த இயக்கத்தை நீங்கள் அச்சுறுத்தக்கூடாது. அப்படி அச்சுறுத்தி இந்த இயக்கத்தைப் பணிய வைக்க முடியாது. அப்படி ஓர் ஆற்றல்மிகுந்த தலைமை. அந்தத் தலைமைக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற படை - அதற்கு ஆதரவாக இருக்கின்ற மக்கள் - இவர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள்.

தெளிவான கொள்கை -அதைவிட கலைக்க முடியாத ஒரு கூட்டணி - கலையாத ஒரு கூட்டணி - காரணம், இது பதவிக்கான கூட்டணியல்ல - கொள்கைக்காக கூட்டணியைக் கூட்டிய தலைவர் இந்தியாவிலேயே நம்முடைய தலைவர்தான் என்ற பெருமை படைத்தவர் அவர்.

‘‘திராவிடம் வெல்லும் - 

நாளைய வரலாறு இதைச் சொல்லும்!''

இதையும் மீறி நீங்கள் வாலாட்டினால், இழப்பு எங்களுக்கு அல்ல. அந்த நான்கு பேர் தப்பித் தவறி சட்டசபையில் நுழைந்திருக்கிறார்கள் அல்லவா - அவர்களும் காணாமல் போய்விடுவார்கள், அவ்வளவுதான். அதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் - காவிக்கு இடமில்லாமல், காவியைத் தமிழ்நாட்டில் துடைத்தெறியவேண்டுமானால், நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அது உங்கள் கைகளில் இருக்கிறது. அதைத்தான் நீங்கள் செய்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும்; 

எனவே, திண்ணைப் பிரச்சாரம் - தெருமுனைப் பிரச்சாரம் - அதேபோல, பூத் கமிட்டி என்பது மட்டுமல்ல - தெருக்கமிட்டி போட்டு, பிரச்சாரக் கமிட்டி போட்டு, எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள்!

வெல்லுவோம்!

‘‘திராவிடம் வெல்லும் - அதை நாளைய வரலாறு சொல்லும்! சொல்லும்!!'' என்று கூறி முடிக்கிறேன்.

வாழ்க தளபதி!

வளர்க திராவிடம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார். 

No comments:

Post a Comment