நாம் உயர்ந்தால் மட்டும் போதாது - மற்றவர்களையும் உயர்த்திட நாமும் தோள் கொடுக்கவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

நாம் உயர்ந்தால் மட்டும் போதாது - மற்றவர்களையும் உயர்த்திட நாமும் தோள் கொடுக்கவேண்டும்!

இதுவே நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்கும் உறுதிமொழி: தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, அக்.12   சுயமரியாதை இயக்கக் குடும்ப வழி வந்த - மறைந்த நீதிபதி கே.ஆர்.சத்தியேந்திரன் இன்று படமாக இருந்தாலும், எல்லோருக்கும் பாடமாவார். நாம் உயர்ந்தால் மட்டும் போதாது; மற்றவர்களையும் உயர்த்திட தோள் கொடுப்போம். இதுவே இவ்விழாவில் நாம் எடுக்கவேண்டிய உறுதிமொழி  என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா

கடந்த 3.9.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிபதி கே.ஆர்.சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் 

உரிமைப் பிரச்சினை!

உடனே மற்ற நீதிபதிகள், ‘‘ஏன் இவ்வளவு பிடிவாத மாக இருக்கிறீர்கள்; உங்களுடைய கருத்துதானே எங்களுடைய கருத்தும்.  அதை நாங்களே எழுதி விடுகிறோமே, நீங்கள் ஒப்புக்கொள்ளலாமே! நாங்களும் எழுத ஆரம்பித்துவிட்டோமே'' என்றார்கள்.

‘‘இல்லை, இல்லை - அதற்குக் காரணம் இருக்கிறது. இது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை. இதில் உங்களுக்கு வலி தெரியாது. நான் வலியை அனுபவித்த சமுதாயத்தைச் சார்ந்தவன்.

எனவேதான், இந்த வழக்கில் நான் தனியாக தீர்ப்பு எழுதுகிறேன்; அது என்னுடைய கடமை'' என்று அவர்களிடம் கூறினார்.

இயக்கத்திற்கு நன்றி செலுத்தவேண்டும்; 

அந்த வலியை நான் உணர்த்தவேண்டும்!

சக நீதிபதிகள் அமர்ந்திருக்கும்பொழுது அவர் சொன்னார், ‘‘நான் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறேன் என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம்; நான் எந்த சமுதாயத்திலிருந்து, எப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதிபதியாக வந்திருக் கின்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா?

இரவில், போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போடவேண்டும் என்று சொன்ன ஒரு காலகட்டம் இருந்தது. எங்கள் சமுதாயத்தில் பிறந்த காரணத் தினால். ஆனால், இன்றைக்கு அதே போலீஸ் காரரை நான் அழைத்து, நீதிபதியானதால், அவரிடம் விளக்கக் கேட்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு ஆகியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான இயக்கத்திற்கு நன்றி செலுத்த வேண்டும்; அந்த வலியை நான் உணர்த்தவேண்டும் என்று நினைக்கிறேன். அதை உங்களால் எழுத முடியாது; நான் எழுதவேண்டும் என்று நினைக் கிறேன் ''என்று சொல்லித்தான், தந்தை பெரியா ரையும், அம்பேத்கரையும் அவர்கள் எழுதிய தீர்ப்பில் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள் என்பதை இந்த அரங்கத்திற்குத் தெளிவுபடுத்திக் கொள் கிறேன்.

நன்றி உணர்ச்சி என்பதை அவர்கள் காட்டியது மட்டுமல்ல; பிறகு எப்படி தூக்கிவிடவேண்டும்; தோளிலே தூக்கினார்கள். கொஞ்சம்கூட அவர்கள் அஞ்சியதே கிடையாது; துணிச்சலாக அவர்கள் எழுதினார்கள்.

இன்றைக்கு இவ்வளவு பேர் வந்து சந்திக்கிறார்கள். அய்யா அவர்களே ஒரு காலகட்டத்தில் என்ன சொல்லுவார்கள் - இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், உறுப்பினர்கள் மற்றவர்களை சந்திக்கின்ற நேரத்தில், தந்தை பெரியார் பக்கத்தில்  நாங்கள் இருப்போம்.

முன்சீப்பாக இருப்பார்கள்; மாஜிஸ்ட்ரேட்டாக இருப்பார்கள்; உயர்நீதிமன்ற நீதிபதி என்ற அளவிற்கு அப்பொழுது மிகக் குறைவு.

அவர்களை சந்திப்பதற்காக பெரியார் அவர்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். தனிப்பட்ட முறையில், அவர்களுடைய பதவி உயர்வுக்கு மகிழ்ச்சியடைந் திருப்பார், அது வேறு.

எதற்காக என்னை சந்திக்க வந்தீர்கள்?

ஆனால், முதலில் தந்தை பெரியார் சொல்வது, ‘‘எதற்காக என்னை சந்திக்க வந்தீர்கள்? நீங்கள் எல்லாம் அந்தப் பதவியில் இருக்கவேண்டும் என்பதுதானே மிக முக்கியம். இங்கே வந்தீர்களென்றால், அதனால் ஆபத்து ஏற்படுமே. ஆகவே,  எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ, கிளம்புங்கள்'' என்று சொல்வார்.

இப்பொழுது அந்த நிலை மாறி, இன்றைக்குப் பெரியார் திடலுக்கு நீதிபதிகள் வந்து, மரியாதை செலுத்தக் கூடிய அளவிற்கு வந்திருக்கின்றது என்றால், அதுதான் ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய மாண்பு, சிறப்பு, பெருமையாகும்.

இன்றைய இளைஞர்களுக்கு, இந்தக் குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் பல பேருக்குத் தெரியாது - ஏனென்றால், குடும்பம் என்பது ரத்த உறவு அல்ல - குடும்பம் என்பது கொள்கை உறவு.

அந்த அடிப்படையில் ஒரு சம்பவத்தைச் சொல்லு கிறேன்.

சத்தியேந்திரன் அவர்களுக்கு கட்டாய ஓய்வு - எப்பொழுது? நெருக்கடி காலத்தில். நாங்கள் எல்லாம் மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்தபொழுது.

ஒருபக்கத்தில் ஒரு குற்றமும் செய்யாமல், ஜூனியர் சத்தியேந்திரன் - சுந்தரம் என்று வீட்டில் அழைப்பார்கள்.

அந்த இளைஞரை, வழக்குரைஞராக வந்திருக்கிறார் என்று சொல்லி, மாணவர் கழகத்தில் உரையாற்றச் சொல்லி, அவரை உற்சாகப்படுத்தினேன் - இளைஞர் களை மேலே கொண்டு வரவேண்டும் என்பதற்காக. அதற்காக  அவரை மிசாவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

நீதிபதி இஸ்மாயில் கமிஷன்

ஆனாலும், ஜூனியர் சத்தியேந்திரன் வாழ்ந்து கொண் டிருக்கிறார், எப்படி? இஸ்மாயில் கமிஷன் மூலமாக.

இன்றைக்கும் அந்த வரலாற்றில், எங்களுடைய பெயர்கள் எல்லாம் இருக்கிறது.

மிசாவில் கைது செய்துவிட்டார்களே, அவரை எப்படி வெளியே கொண்டுவருவது என்று அவர்கள் கவலைப்படவில்லை.

மிசாவில் சிறைச்சாலையில் இருந்த மற்ற கட்சிக் காரர்கள், வெள்ளைக் கடிதம் கொடுப்பார்கள் அடிக்கடி. 

ஆனால், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டுகளிடம் எல்லாம் மன்னிப்புக் கடிதம் எழுதும்படி வெள்ளைப் பேப்பரைக் கொடுக்கமாட் டார்கள்; ஏனென்றால், அந்தப் பேப்பர் வெறுமனே திரும்பித்தான் வரும்; இவர்கள் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்; ஏன் அவர்களிடம் வீணாகக் வெள்ளைப் பேப்பரைக் கொடுக்கவேண்டும் என்று எங்களைத் தாண்டிச் சென்றுவிடுவார்கள்.

கட்டாய ஓய்வு கொடுத்தார்கள்!

அவர் என்ன குற்றம் செய்தார்?

மரபணு சாமியாருக்குத் தண்டனை கொடுத்தது தவறா?

இந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு, அவருக்குக் கட்டாய ஓய்வு கொடுத்தார்கள்.

அவரை விட்டால், மேலே வந்துவிடுவார்; அப்படி அவர் மேலே வரக்கூடாது என்பதற்காகத்தான் கட்டாய ஓய்வு.

பொய் வயது கொடுத்து, தலைமை நீதிபதியாக இருந்தவர் - மனுதர்மத்தில் தலையில் பிறந்த ஜாதி என்பதற்காக - நோகாமல், சங்கடமில்லாமல் அப்படியே வீட்டிற்குச் சிறப்பாக அனுப்பி வைக்கப்பட்ட வரலாறும் - நம்முடைய உயர்நீதிமன்றத்தின் வரலாறுதான். அதை இல்லையென்று யாரும் மறுக்க முடியாது.

கட்டாய ஓய்வு என்றாலும், நீதிபதி சத்தியேந்திரன் அவர்கள் இந்தக் கொள்கையிலிருந்து மாறிவிட்டாரா? என்றால் இல்லை. அதனால்தான், இங்கே இருப்பது படமல்ல - பாடம் என்றேன்.

அய்யா ராமசுப்பிரமணியம்!

அதேபோல, அய்யா ராமசுப்பிரமணியம் அவர்கள், இந்த அரங்கத்திற்கு எத்தனை முறை வந்திருப்பார்கள்!

சிவகங்கை சண்முகநாதன் போன்றவர்கள் எங்கள் அறக்கட்டளைக்குத் அவர் தலைவராக இருந்தார். 

ஒன்றை உங்களுக்கு நினைவூட்டவேண்டும்; பெரிய குளம் என்ற ஊரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசுகிறார், நாங்களும் சென்றிருந்தோம்.

பொதுக்கூட்டம் முடிந்ததும், அய்யா அவர்கள் வேனில் புறப்படவிருக்கிறார்; அதற்கு முன்பாக, அங்கே இருந்த பயணியர் விடுதியில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது, சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம்; வழியில் நிறுத்தவேண்டாம் என்று சொன்னார்கள், பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்.

அன்றைய காலகட்டத்தில், ராமசுப்பிரமணியம் அவர்கள் அங்கே மாவட்ட முன்சீப்பாக இருக்கிறார். அவர் அய்யாவை சந்திக்கிறார்.

என்ன இங்கே இருக்கீங்க? என்று பெரியார் கேட்டார்.

அய்யா, நான் இந்த ஊரில்தான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அய்யாவிடம் 10 நிமிடம் பேசினார்.

அய்யா உங்களுடைய உரையை நான் தள்ளியிருந்து கேட்டேன். உங்களைப் பார்த்து, நலம் விசாரிக்க வந்தேன் என்று சொன்னார்.

பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்லிவிட்டு, அங் கிருந்து அய்யா அவர்கள் புறப்பட்டு வந்துவிட்டார்.

உயர்நீதிமன்றத்திலிருந்து 

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அடுத்த 10 நாள்களுக்குப் பிறகு, ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தது.

நீங்கள் பெரியாரை சந்தித்தீர்களா?

ஏன் சந்தித்தீர்கள்?

எந்த அடிப்படையில் சந்தித்தீர்கள்?

அதற்குரிய விளக்கத்தைக் கொடுக்கும்படி நோட்டீஸ் வந்தது.

அந்த நோட்டீசைப் பார்த்து அவர் பயப்படவில்லை.

அந்த நோட்டீசைப்பற்றி கேள்விப்பட்டதும், அய்யா அவர்கள் மிகவும் பதறிப் போனார்.

என்னை சந்தித்திருக்கவேண்டிய அவசியம் இல்லை - என்னுடைய உடல்நிலையைப்பற்றி மட்டுமே விசாரித்தார் என்றார்.

அந்த நோட்டீசுக்கு விளக்கம் எழுதினார். ராமசுப்பிர மணியம் அவர்கள் மிகத் தெளிவானவர், துணிவானவர். அந்த நோட்டீசைப் பார்த்து பயப்படவில்லை.

இந்த வரலாறை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்; பதவியாளர்கள் இருக்கிறார்கள், பதவிக்குப் போகவேண்டியவர்கள் இருக்கிறர்கள், பதவியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்; அதற்காக இந்த அரங்கத்தை நான் பயன்படுத்திக்கொண்டு, சத்தியேந்திரன் வெறும் படம் அல்ல - பாடம் என்றேன். இந்தக் குடும்பம் அவ்வளவு அற்புதமான பணியைச் செய்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் இதைச் சொல்லுகிறேன்.

வேறு யாராவது இருந்தால், நான் சந்திக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம்; நானும் பக்கத்தில் தங்கியிருந்தேன், எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்ந்தது என்று வேறு விதமான விளக்கங்களை சொல்லுங்கள் என்று எங்களைப் போன்ற வழக்குரைஞர்கள் சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்கும்.

ராமசுப்பிரமணியம் அவர்கள், கடைசிவரையில் 

‘விடுதலை’யினுடயை வாசகர்

ஆனால், ராமசுப்பிரமணியம் அவர்கள், கடைசிவரையில் ‘விடுதலை'யினுடயை வாசகர் அவர். கடைசியாக மருத்துவமனையில் இருக்கும்பொழுதுகூட, அவருடைய மகளான மணிமேகலையைப் படிக்கச் சொல்லி கேட்பார்.

அதேபோன்று, சண்முகநாதன், அதேபோன்று பாலசுப்பிரமணியன்.

அந்த நோட்டீசுக்கு ராமசுப்பிமணியம் என்ன பதில் எழுதினார் தெரியுமா?

தோழர்கள் அதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இராமச்சந்திர சேர்வையினுடைய ரத்தம் - அந்த உணர்வுகள் - அந்த வேர் அங்கே இருக்கிறது.

‘‘ஹி ஈஸ் ஆல்வேஸ் மை காட்பாதர்!’’

ஆம்! நான் இத்தனை மணிக்குப் பெரியாரை இந்த இடத்தில் சந்தித்தேன் என்பது உண்மை. சந்தித்து இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

காரணம் என்னவென்றால், ‘‘‘ஹி ஈஸ் ஆல்வேஸ் மை காட்பாதர்' - அவர் என்னுடைய வளர்ச்சிக்காக என்றைக்கும் இருக்கக் கூடியவர். அதனால்தான், நான் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறேன். அவர் தான் முழுக்க முழுக்க எனக்கு எல்லாம்.

எங்கே போனாலும் நன்றி உணர்ச்சியின் அடிப் படையில், என்னுடைய தந்தையை சந்திப்பதுபோல, தந்தை பெரியாரை சந்திக்கத்தான் செய்வேன். நாளைக்கும் அவர் வந்தால், சந்திப்பதை தவிர்க்க முடியாது'' என்று துணிச்சலாக எழுதிய பெருமை, ராமசுப்பிரமணியன்களுக்கு உண்டு.

உதவி பெற்றவர்கள் அத்துணை பேரும் நினைவில் வைத்திருக்கிறார்களா? நன்றியோடு இருக்கிறார்களா?

கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், ராமசுப்பிரமணியன் அவர்கள்தான் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவராக வருகிறார். அப்படி வந்து, எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார். உதவி பெற்றவர்கள் அத்துணை பேரும் நினைவில் வைத்திருக்கிறார்களா? நன்றியோடு இருக்கிறார்களா? என்பது வேறு செய்தி.

அம்மா சங்காமிர்தம் அவர்கள், குருசாமி அவர்களு டைய வாழ்விணையர். அவருடைய மருமகன். 

ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளின் 

உருவப் பொம்மைகளை எரித்தோம்!

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகள் ஜீவன்ரெட்டி, பரிபூரண அய்யங்கார் ஆகியோரின் உருவப் பொம்மைகளை நான் எரித்தேன். அந்தக் காலகட்டத்தில் நம்முடைய அரசாங்கம்தான் ஆட்சியில் இருந்தது. இருந் தாலும்கூட, 15 நாள்கள் எனக்கு ரிமாண்ட் கொடுத்து, வேலூர் சிறைக்குக் கொண்டு போனார் கள். சிறைச்சாலையில், சாதாரண வகுப்புதான் கொடுத்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட வில்லை.

என்னுடைய வாழ்விணையர் இங்கே வந்திருக்கிறார். அவரிடம் நான், ‘‘நீங்கள் யாரும் வேலூர் சிறைச்சாலைக்கு வந்து பார்க்கவேண்டாம்'' என்று சொல்லிவிட்டுப் போனேன்.

ரிமாண்ட் முடிந்து என்னை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார்கள். விடுதலை செய்யப் போகி றார்களா? அல்லது ரிமாண்டை நீட்டிக்கப் போகி றார்களா? என்று நினைத்துக்கொண்டே சென்றோம்.

‘‘ஆசிரியரின் ரிமாண்டை நீடிக்கவேண்டும் என்ற திட்டத்தில்தான் இருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது, அதன்படி செய்யுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

சத்தியேந்திரன் அவர்கள் இதைப்பற்றி விசாரித்தி ருக்கிறார். சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது, இந்திரா காந்தியினுடைய ரிமாண்டை நீடிக்க முடியாது என்று சொல்லி, நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். அதை உங்களுக்கு ஞாபகப்படுத்தி விட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.

நாங்கள் தயாராகத்தான் இருந்தோம். எங்களுடைய ரிமாண்டை நீட்டிக்கப் போகிறார்கள் - மறுபடியும் சிறைச்சாலைக்குச் செல்லப் போகிறோம் என்று.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சிறைச்சாலை ஒரு நல்ல கல்லூரி - பல்கலைக் கழகம்

அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. சிறை வாழ்க்கைதான் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உண்மையான, சிறப்பான ஒரு நல்ல கல்லூரி, நல்ல பல்கலைக் கழகம்.

உண்மையாகச் சொல்கிறேன், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் சிறைச்சாலையில் எத்தனையோ ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள். எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.

வெளியில் இருக்கும்பொழுது நாங்கள் நேரத்திற்குச் சாப்பிட முடியாது. ஆனால், சிறைச்சாலையில், நேரத் திற்குச் சாப்பிடலாம்; நிறைய படிக்கலாம்.

ஆகவே, எங்களைப் பொறுத்தவரையில், சிறைச் சாலைக்குப் போவதைப்பற்றி கவலைப்படமாட்டோம்.

ஆகவேதான், இந்தக் குடும்பம் எல்லா வகையிலும் தங்களைப்பற்றி கவலைப்பட்டது இல்லை. சமுதாயத் தைப்பற்றித்தான் கவலைப்பட்டு இருக்கிறது.

திராவிடர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை; பட்டுப் போனதில்லை

சமுதாய சிந்தனைகள் - அதனுடைய விளை வுகள்தான் மிகப்பெரிய அளவிற்கு வந்திருக் கின்றன. அப்படிப்பட்ட ஒரு சமுதாய சிந்தனை களை அய்ந்து தலைமுறைகளுக்கு வேகமாகப் போயிருக்கிறது. காரணம், வேர் பழுதுபடாதது - எனவே, விழுதுகள் சிறப்பாக இந்த விழாவினைக் கொண்டாடுகின்றன என்று சொல்லி, நீங்கள் எல்லோரும் இவ்விழாவிற்கு வந்திருக்கின்றீர்கள் - இந்தப் படத்திறப்பின் மூலமாக திராவிடர் இயக்கம் மற்றவர்களை உயர்த்தும்; திராவிடர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை; பட்டுப் போனதில்லை. அவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். தாங்கள் உயர்ந்தது மட்டு மல்ல, தங்களுடைய தோளின்மூலமாக மற்ற வர்களையும் உயர்த்தி இருக்கிறார்கள்.

நாம் உயர்ந்தால் மட்டும் போதாது; மற்றவர்களுக்குத் தோள் கொடுத்து உயர்த்தவேண்டும்!

நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுது, நாம் உயர்ந் தால் மட்டும் போதாது; மற்றவர்களுக்குத் தோள் கொடுத்து உயர்த்தவேண்டும் என்ற உணர்வை இங்கே இருக்கும் படத்தின்மூலம் பெறுவோம், பெறுவோம் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வாழ்க சத்தியேந்திரன் புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment