காந்தியாரைக் கொன்ற கோட்சே பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எசுக்கு காந்தியார் பிறந்த நாளில் பேரணிக்குத் தமிழ்நாடு அரசின்அனுமதி மறுப்பு சரியானதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

காந்தியாரைக் கொன்ற கோட்சே பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எசுக்கு காந்தியார் பிறந்த நாளில் பேரணிக்குத் தமிழ்நாடு அரசின்அனுமதி மறுப்பு சரியானதே!

அதேநேரத்தில், முற்போக்குச் சக்திகள் நடத்தவிருந்த மனித சங்கிலி அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும்!

காந்தியாரைக் கொன்ற கோட்சே பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எசுக்கு காந்தியார் பிறந்த நாளில் பேரணி நடத்த அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் முடிவு சரியானதே! அதேநேரத்தில் முற்போக்கு சக்திகள் நடத்தவிருந்த மனித சங்கிலிக்கு அனுமதி அளித்திருக்கவேண்டும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (2.10.2022) காந்தி அண்ணலின் 154 ஆம் ஆண்டு பிறந்த நாள். காந்தி நினைவிடத்திற்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்; காந்தி சிலைக்கு மாலை போட்டு காந்தியாரின் தொண்டறத்திற்கு மரியாதை செலுத்துவோரும் பலர் உள்ளனர்!

நம் நாட்டில் நடைபெறும் 

அதிநவீன வித்தை

காந்தியை 1948 ஜனவரி 30 இல்  மதவெறியன் கோட்சே சுட்டுக் கொன்றபோது, இனிப்பு வழங்கிய கூட்டமும்கூட நாட்டில் உள்ளது! நாடாளுமன்றத்திலேயே கோட்சேவைப் புகழ்ந்து பேசிடும் ஆளும் பா.ஜ.க. எம்.பி.,க்களும் உண்டு - அதுவும் ராணுவ வெடிமருந்து பயன்படுத்திய - தீவிரவாதச் செயல்பற்றிய வழக்குகளில் ஜாமீன் பெற்று- தேர்தலில் நின்று வென்று நாடாளு மன்றத்திலேயே ‘கோட்சே புகழ்' பாடிடும் நிலையில், அவர்களும்கூட ‘காந்தி நாமாவளி' பாடுகிற விசித்திரம் வேடிக்கை நம் நாட்டில் நடைபெறும் அதிநவீன வித்தையாகும்!

மறைமுகமாக காந்தியைக் கொன்று தூக்குத் தண்டனைக்குள்ளான கோட்சேவுக்கு தொடக்கத்தில் ஷாகா பயிற்சியளித்து ஈர்த்த - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், தமிழ்நாட்டில், அமைதிப் பூங்காவில் - மதவெறிக்கு இடந்தராத மனிதநேய பெரியார் மண்ணில் ‘திராவிட மாடல்' ஆட்சி மாட்சியுடன் ஒப்பற்ற முதல மைச்சராக  இந்திய மாநிலங்களிலேயே எடுத்துக் காட்டுடன் திகழும் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் பெருமையும், புகழும் பெற்ற தமிழ்நாட்டு மண்ணை - அதனை அமளிக்காடாக்கும் நோக்கத்திலேயே - காந்தியார் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி, 50 இடங்களில் ஊர்வலம் நடத்திட அனுமதி கேட்டதை, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஒருவரும் அனுமதித்து - சில நிபந்தனைகளைப் போட்டுத் தீர்ப் பளித்த நிலையில், தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்!

மக்கள் பாதுகாப்புக்கும், 

பொது அமைதிக்கும் கேடு ஏற்பட வாய்ப்புள்ளதால், அனுமதி மறுக்கப்பட்டது!

அதன் பிறகு தமிழ்நாட்டில் சிற்சில இடங்களில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு காவல்துறை அதன் கடமையைச் செய்துவரும் நிலையில், இப்படி அனுமதிப்பது, மக்கள் பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் கேடு ஏற்பட வாய்ப்புள்ளதால், அனுமதி மறுக்கப்பட்டது!

மக்கள் நலனைப்பற்றிய கவலையும், பொறுப்பும் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓர் ஆட்சிக்குத்தான் அதிகம் இருக்க முடியும் என்பதால், தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பு வரவேற்கத்தக்கதே!

ஆனால், மக்களின் ஒற்றுமையைக் கட்டமைத்து, ஒருங்கிணைப்பை விசாலப்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்குக் கட்சிகள், அமைப்புகள் இணைந்து, ‘மனித சங்கிலி'யை அமைதி வழியில் பல ஊர்களிலும் நடத்திட செய்த ஏற்பாட்டையும் சேர்த்து தமிழ்நாடு அரசு தடை விதித்ததை சரியான முடிவு என்று நம்மால் ஏற்க இயலாததாகும்!

எவ்வகையிலும் நியாயம் அல்ல!

நோய்க் கிருமிகள் பரப்புவோரையும், மருத்துவரை யும் ஒரே பார்வையில், தமிழ்நாடு காவல் துறையோ, தமிழ்நாடு அரசோ  ஒரே நோக்கோடு பார்ப்பது எவ் வகையிலும் நியாயம் அல்ல!

காந்தி பிறந்த மண்ணான குஜராத், மகாராட்டிரத்தி லிருந்து பிரிந்து தனி மாநிலம் ஆகாத நிலையில், காந்தியைச் சுட்டுக் கொன்றவன் வேறு மதத்தவன் அல்ல; ஹிந்துதான் - அதிலும் சித்பவன் பிரிவைச் சேர்ந்த மராத்திய பார்ப்பனர் என்ற செய்தி பரவியவுடன், நாசிக் மாவட்டம் தொடங்கி, பல அக்கிரகாரங்களில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டதாக, அன்றைய பம்பாய் மாநில உள்துறை அமைச்சரான மொரார்ஜி தேசாய் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்!

நூறாண்டுக்கு முன்பிருந்தே பார்ப்பனரல்லாதார் இயக்கம் - திராவிடர் இயக்கம் பரவிய மண்ணான தமிழ்நாட்டில் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது; தனிப்பட்ட முறையில் பார்ப்பனர் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்று மக்களை எச்சரித்து, அமைதியை ஏற்படுத்தியவர் ‘பார்ப்பன துவேஷி' என்று அவர்களால் இன்றளவும் கூறப்படும் தந்தை பெரியார் அவர்கள்தான்!

வரலாறு தெரியாத வக்கணை வாய்ச் சவடால் காவிகளும், அரை வேக்காட்டு அசடுகளும், கசடுகளும் புரிந்துகொள்ள இதோ ஓர் அரிய சான்றாவணம்:

தந்தை பெரியாரின் வானொலி உரை

19.2.1948 அன்று சன்னாநல்லூரில் (நன்னிலத்தில்) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சின் ஒரு பகுதி இதோ:

‘‘பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்த பார்ப்பனரைத் திட்டி விடுவதாலோ, அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ, எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது. நான் கூறுகிறேன் சுட்டது பார்ப்பான் அல்ல; சுட்டது கைத்துப்பாக்கி அதற்காக பார்ப்பான் மீது கோபித்துக் கொள்வதாயிருந்தால், அந்த அளவுக் கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின்மீது நாம் கோபித்துக் கொண்டாக வேண்டும். அதை முதலில் துண்டு துண்டாய் உடைத்துத் தூள் தூளாக ஆக்க வேண்டும்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட உதவியா யிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ, அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப் படுத்திய பார்ப்பான் மீதும் நாம் கோபித்துக் கொள்ள முடியும். பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு அவனுக்கு ஆதரவாயிருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்கவேண்டும். அவனும் அந்த துப் பாக்கிபோல் அவர்களுக்கு ஒரு கருவியாகத்தான் அமைந்து விட்டான்.

மதத்தின் பேரால் உள்ள மூட நம்பிக்கைக் கருத்துகளும், ஜாதியின் பேரால் உள்ள ஆசார அநுஷ்டானங்களும் மற்றும் கடவுள், சாஸ்திரம் இவைகளின் பேரால் உள்ள அறியாமையும்தான் இம்மாதிரி காரியத்தைச் செய்யும்படி அவர்களைச் செய்துவிட்டது. இனியேனும் இப்படிப்பட்ட காரியம் நடவாமல் இருக்கவேண்டும். இப்படிப் பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமா யிருந்ததோ அதை அழித்து ஒழிக்க வேண்டும்.''

பார்ப்பனர்கள் கதி 

என்னவாகியிருக்கும்?

அருமை நண்பர்களே, காந்திய வரலாற்றாளர்களே, பெரியாரை ‘வெறும் பார்ப்பன வெறுப்பாளராக' மட்டுமே வரைந்து காட்டும் வன்கண்ணர்களே, இந்த மாதிரி அன்று பேசியிராமல், பம்பாய் மாநிலத்தில் ஏற்பட்டதைப்போல, அக்கிரகார சூறைக்குப் பெரியார், சும்மா வெறும் கண் ஜாடை (Winking) செய்திருந்தால், தமிழ்நாட்டில் அன்று இருந்த பார்ப்பனர்கள் கதி என்னவாகியிருக்கும்?

பெரியாரை இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்!

அடிப்படையில் தந்தை பெரியார் ஒரு மானுட - உரிமை காக்கும் மகத்தான காவலர்; வெறுப்பு அரசி யலை விதைத்து அறுவடைக்கு ஆயத்தமாகும் அற்பத் தனத்தின் முகவரி அல்ல அவர்! உலக மானுட உரிமைக் காப்பாளர்.

இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்!

அன்றைய காலகட்டத்தில் பம்பாய் மாகாணத்தில் நாகபுரியில் (நாக்பூர்) உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை நிலையமும், ஆத்திரப்பட்ட மக்களால் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை ஒரு நூலில் பதிவு செய் துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தத்துவகர்த்தாவெனக் கூறப்படும் (மாதவ் சதாசிவ் (எம்.எஸ்.)) கோல்வால்கர் எழுதிய ஒரு நூல், தமிழ் மொழி பெயர்ப்பும் வந்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட - சிற்சிலவிடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இனிப்பு, சர்க்கரை வழங்கி அந்த கொலைச் சம்பவத்தைக் கொண்டாடினார்கள் என்ற ஆத்திரமூட்டும் செய்திக்குப் பிறகும்கூட அந்நாளில் வந்த நிலையிலும் அமைதி தவழ்ந்தது.

யாரால்?

தந்தை பெரியாரால்!

நாசகார மதவெறி சக்திகளிடமிருந்து 

தமிழ்நாடு காப்பாற்றப்பட்டது!

காந்தியாரைக் கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று முதலில் ஒரு வதந்தி பரப்பப்பட்ட நிலையில், அன்றைய முதலமைச்சர் ஓமாந்தூர் ஓ.பி.இராமசாமி (ரெட்டியார்) அவர்கள் திருச்சி வானொலி நிலையத்தாரிடம் கூறி,  தந்தை பெரியார் அவர்களை (திருச்சியில் இருந்தார்) நேரில் கண்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க சில மனிதர்கள் ‘‘அப்பீல்'' செய்யும்படி சொன்ன நிலையில், வானொலி நிலையத்தார் தந்தை பெரியாரிடம் சென்று கேட்டுக் கொண்டதால், மதக்கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். (அது ‘விடுதலை'யில் வெளிவந்து - இன்று ஆவணப்படுத்தப் பட்டுள்ளது).

அதன்மூலம் ‘ஹிந்து - முஸ்லிம்' என்ற மதக் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற நாசகார மதவெறி சக்திகளிடமிருந்து தமிழ்நாடு காப்பாற்றப்பட்டது!

தந்தை பெரியார் அவர்கள் சன்னாநல்லூரில் பேசிய பேச்சு (உரை நூலாக ‘‘புதியதோர் உலகு செய்வோம்'' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது).

அய்யாவுக்குமுன் அக்கூட்டத்தில் ஆவேசமாக கோட்சே கூட்டத்தாரைக் கண்டித்துப் பேசியவர், இளைஞரான திருவாரூர் மு.கருணாநிதி (நமது கலைஞர்) அதனைக் கண்டித்தும், பொதுவாக இந்த ஆவேச உணர்வு பரவி, கலவரம் வந்துவிடக் கூடாதே என்பதற் காக அவரையே கூட மறைமுகமாக கண்டிக்கும் வண்ணமும் பேசினார் தந்தை பெரியார். (இதைக் கலைஞர்கூட சில ஆண்டுகளுக்குமுன் சுட்டிக்காட்டி நினைவு கூர்ந்துள்ளார்).

நீதிமன்றங்கள் புரிந்துகொள்ளட்டும்!

அவ்வளவு பொறுப்பும், பொதுநலப் பாதுகாப்பும் உள்ளதால்தான் இன்றும் அவர்களது தொடர்ச்சியாக இன்றைய நம் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் - வெறுப்பு அரசியலை - அதன் விளைவாகக் கலவரத் தூவலைத் தடுக்கவே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களைத் தடுத்து, கடமையாற்றி யுள்ளார்.

இதை நீதிமன்றங்களும் புரிந்துகொள்ள வேண்டும் - மக்கள் நலப் பாதுகாப்புக் கருதி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

3.10.2022


No comments:

Post a Comment