ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : தரைவழி தொலைபேசிச் சேவையில் 22 ஆண்டுகளாக களத்தில் இருக்கும் அரசுத் துறையை (பி.ஸ்.என்.எல்) பின்னுக்குத்தள்ள 3 ஆண்டுகளுக்கு முன் சேவையை ஆரம்பித்த ரிலையஸ்ஜியோ நாட்டின் முதல் சேவைத்துறையாக வளர்ந்திருப்பது பற்றி உங்கள் கருத்து?

- க.தணிகாசலம், அரக்கோணம்

பதில் 1 : முந்தையது அரசின் பொதுத்துறை மூலம் சேவை. பின்னது அம்பானிகளின் - கார்ப்பரேட்டின் தனியார் சேவை. இதுதான் "குஜராத் மாடல் வளர்ச்சி" - புரிந்துகொள்ளுங்கள்.

---

கேள்வி 2 : விவசாயத்துக்கான உரங்கள் இனி பாரத் பெர்டிலைசஸ்  என்கிற பெயரில்தான் தேசம் முழுமையும் விற்பனை செய்யப்படும் என்றால் ஸ்பிக், இப்கோ போன்ற நிறுவனங்களின் நிலை என்ன? விவசாயிகள்  உரங்களை எப்படி தரம் கணித்து வாங்க முடியும்?

- ப.வேணுகோபால், வேலூர்

பதில் 2 : விவசாயிகளுக்கு நன்மையை இப்படித்தான் ஒன்றிய அரசு செய்கிறது போலும்!

---

கேள்வி 3 : அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை (Electoral Bonds) மூலமாக அளிக்கப்படுவதால், கள்ளப்பணம் ஒழிக்கப்பட்டு முழுமையான வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதா?

- மோ.கிருஷ்ணன், திண்டிவனம்

பதில் 3 : இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது; அவ்வழக்கில் என்ன தீர்ப்பு என்பதன் மூலம் உங்கள் கேள்விக்குரிய விடை கிடைக்கும்!

----

கேள்வி 4 : கேரள மாநில ஆளுநர் தன்னை அதிகம் விமர்சிக்கும் மந்திரிகளை பதவி நீக்கம் செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறாரே! முதல்வர் பரிந்துரை இன்றி ஒரு மாநில ஆளுநர் அப்படிச் செய்ய முடியுமா?

- தா.விஜயலட்சுமி, திருச்சி

பதில் 4 : அவர் கேரளாவில் ஏதோ தனி கவர்னர் ஆட்சி நடைபெறுவது மாதிரி நினைத்துப் பேசுகிறார் போலும்! அவ்வாட்சியில்கூட மந்திரிகள் கிடையாது என்பதையும் அவருக்கு நினைவூட்ட வேண்டும் போலிருக்கிறது!

---

கேள்வி 5 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு மசோதாவை  அ.இ.அ.தி.முக. சார்பாக ஆதரிக்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறாரே... எதிர்க்கட்சித் தலைவரும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும் வெளியில் உள்ள நிலையில் அது சட்டப்படி ஆதரவுநிலை ஆகுமா?

- தீ.கலைவேந்தன், மதுரை

பதில் 5 : பரிதாபத்திற்குரிய அ.தி.மு.க.வின் நிலை இப்படியா ஆக வேண்டும். மகாவெட்கக் கேடு!

---

கேள்வி 6: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்த ஒரு நபர் கமிஷன்  -ஆளுநரோ, மத்திய அமைச்சர்களோ கூட அம்மையாரைச் சந்திக்க இயலாத நிலை பற்றி ஏதேனும் கூறியிருக்கிறதா?

- வே.செல்வபெருமாள், மேல்மருவத்தூர்

பதில் 6 : Terms of Reference  என்று எதைஎதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று  வரையறை வகுத்துள்ளதால், அதற்குள்ளேயேதான் விசாரணைக் கமிஷன் அறிக்கை தர முடியும். இது அதில் வருகிறதா என்பது சந்தேகமே!

---

கேள்வி 7: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார் ஜுன கார்கே வெற்றி பெற்றிருப்பதால்  காங்கிரஸ் வளர்ச்சிப் போக்கில் மாற்றம் ஏற்படுமா?

- மா.கன்னியப்பன், உத்திரமேரூர்

பதில் 7 : நிச்சயம்; நல்ல திருப்பம் ஏற்படும். புத்தாக்கமாக அது அமையும்.

----

கேள்வி 8: பட்டாசுகளை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், ஆண்டுக்காண்டு பட்டாசு விலைகள் உயர்ந்தாலும், எஙகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.150க்கு மேல் கூலி கிடைப்பதில்லை என ஏக்கப் பெருமூச்சு விடும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர் குறைகளை நிவர்த்திக்க முயல்வாரா?

- மு.வேதாசலம், வேளச்சேரி

பதில் 8 : உரிய முறையில் முதல் அமைச்சருக்கு இப்பிரச்சினை - தொழிலாளர் பிரச்சினை - எடுத்துச் செல்வோம். நிச்சயம் முன்னுரிமை கொடுப்பார். இது தொழிலாளர் நல அரசு ஆயிற்றே!

---

கேள்வி 9: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அருணா ஜெகதீசன் அறிக்கை மீது எவ்வித சமரசமுமின்றி உரிய நடவடிக்கை  காவல் துறை அதிகாரிகள் மீது பாயும் என எதிர்பார்க்கலாமா?

- கோ.வீராசாமி, வந்தவாசி

பதில் 9 : நிச்சயம் இந்த அரசு செய்யும்.

---

கேள்வி 10: அமெரிக்காவில் பிராமணர் சங்க மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதிலிருந்து பிராமணியத்தின் நச்சுத் தன்மையை உலக நாடுகள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன எனக் கருதலாமா?

- ஆ.சிவசண்முகம், பெரம்பலூர்

பதில் 10 : சமூக வலைத்தளங்களில் வருகிற செய்தி சரியானது தானா என்பதை உறுதி செய்த பின் கருத்துச் சொல்வதே முறை!


No comments:

Post a Comment