வறுமையில் தள்ளப்பட்ட 5.6 கோடி பேர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

வறுமையில் தள்ளப்பட்ட 5.6 கோடி பேர்

புதுடில்லி,அக்.15- கடந்த 2020இல் ஏற்பட்ட கரோனா பேரிடர் காரணமாக இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கை:

பன்னாட்டு அளவில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொழிலக நடவடிக்கைகள் நிலை குலைந்து உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்தது. கரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020இல் மட்டும் உலகளவில் 7.1 கோடி பேர் மிக வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதில், 79 விழுக்காடு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, கரோனா பேரிடரால் மட்டும் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு ஆளாகினர். பன்னாட்டு தீவிர வறுமை விகிதம் கடந்த2019இல் 8.4 விழுக்காடாக காணப்பட்ட நிலையில் 2020இல் அது 9.3 விழுக்காடாக அதிகரித்தது.

அதன்படி, 2020இல் 7.1 கோடிபேர் தீவிர வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டதையடுத்து உலக அளவில் உள்ள மொத்த ஏழை மக்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்ந்தது.

பன்னாட்டு அளவில் வறுமையின் அதிகரிப்பில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பங்கே மிகப்பெரிய அளவில் இருந்தது. இருப்பினும், சீனா விஷயத்தில் இந்த கருத்து எதிர்மறையாகவே இருந்தது. ஏனெனில், சீனா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும் கடந்த 2020இல் ஏற்பட்ட வறுமையின் அதிகரிப்பில் அந்த நாட்டின் பங்கு சிறிய அளவுக்கே இருந்தது.இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அங்கு வறுமையின் பிடியில் சிக்கியோர் எண்ணிக்கை மிகக் குறைவு.

வறுமையை அளவிட உதவும் நுகர்வோர் பிரமிட்கள் குடும்ப ஆய்வு (சிபிஎச்எஸ்) குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு வெளியிடவில்லை. உலகளாவிய மற்றும் பிராந்திய வறுமை மதிப்பீடுகளில் முக்கியமான இடை வெளியை நிரப்ப சிபிஎச்எஸ் தரவு மிக உதவியாக உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர், சீன வளர்ச்சியில் மந்தநிலை, உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு ஆகியவை உலக வளர்ச்சியில் பாதிப்பை ஏற் படுத்தி இருப்பதால் 2022இல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மேலும் தடைபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதான் ஒன்றிய பிஜேபி அரசு சில்லரை பணவீக்கம் 7.41 விழுக்காடு

புதுடில்லி,அக்.15- இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த அய்ந்து மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் அடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 7 விழுக்காடாக இருந்தது. இந்நிலையில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தை அதிகபட்சம் 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால்,கடந்த 9 மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேலாக நீடிக்கிறது.

உணவுப்பொருள்கள் சார்ந்த பணவீக்கம் செப்டம்பரில் 8.60 விழுக்காடாக உச்சம் அடைந்துள்ளது. ஆகஸ்டில் அது 7.62 விழுக்காடாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் காய்கறிகள் 18.05 விழுக்காடு, மசாலப் பொருள்கள் 16.88 விழுக்காடு, தானியங்கள் 11.53 விழுக்காடு, பால் தயாரிப்புகள் 7.13 விழுக்காடு, பழங்கள் 5.68 விழுக்காடு அளவில் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை10.39 விழுக்காடு, ஆடை, காலணி போன்றவற்றின் விலை 10.17 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து பன்னாட்டு அளவில் பணவீக்கம் தீவிரமடையத் தொடங்கியது. கச்சா எண்ணெய் விலை, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உச்சம் அடைந்தது.

இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசும்,ரிசர்வ் வங்கியும் தீவிரப்படுத்தி உள்ளன. ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மட்டும் நான்கு முறை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதுவரையில் மொத்தமாக 190 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. எனினும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது.


No comments:

Post a Comment