திருச்சி: தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் - நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் வினா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

திருச்சி: தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் - நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் வினா

 அரசியலில் ஓர் அரசு போகும்; ஒரு கட்சி தோல்வியுறும்; ஒரு முதலமைச்சர் வீட்டிற்குப் போவார்; இன்னொரு 

புதிய முதலமைச்சர் வருவார்; ஆனால், பெரியார் என்றைக்கும் பெரியாராகவே மதிக்கப்படுகின்றார்

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல - உலக வரலாற்றில் இப்படி ஒரு ஈர்ப்பு - ஏறத்தாழ 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குரிய சூழலில் வேறு எங்காவது உண்டா?

திருச்சி, அக்.15   அரசியலில் ஓர் அரசு போகும்; ஒரு கட்சி தோல்வியுறும்; ஒரு முதலமைச்சர் வீட்டிற்குப் போவார்; இன்னொரு புதிய முதலமைச்சர் வருவார். ஆனால், பெரியார், என்றைக்கும் பெரியாராகவே மதிக்கப்படுகின்றார் என்றால், இந்திய வரலாற்றில் மட்டுமல்ல - உலக வரலாற்றில் இப்படி ஒரு ஈர்ப்பு - ஏறத்தாழ ஒரு 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குரிய சூழலில் வேறு எங்காவது உண்டா? என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- நூல்கள் வெளியீட்டு விழா

திருச்சியில் கடந்த 6.10.2022 அன்று  மாலை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் அவர்களின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நூல்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பெரியாருடைய தத்துவம், யாரையும் கொல்வது கிடையாது; அது எதிரிகளாக இருந்தாலும்.

இரண்டே இரண்டு வார்த்தைத்தான் -

திருந்து அல்லது திருத்து.

என்னிடம் தவறு என்றால், என்னைத் திருத்து - உன்னிடம்  தவறு என்றால், திருத்திக் கொள்!

அறிவாயுதத்தினுடைய இரண்டே சொற்களில், திருந்து அல்லது திருத்து.

அறிவாயுதத்தைப் பயன்படுத்தினால், 

சிந்தனைகள் ஒளிரும்!

நல்லிணக்கம் ஏற்படக்கூடிய அளவிற்கு வரும் பொழுது, போர் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரத்தம் சிந்தக் கூடியதாக இருக்கும். ஆனால், அறிவாயுதத்தைப் பயன்படுத்தினால், சிந்தனைகள் ஒளிரும்; சிந்தனைகள் சிதைக்கப்படாது; அதற்குப் பதிலாக மேலும் மேலும் அது விதைக்கப்பட்டு, விதைக்கப்பட்டு மேலும் மேலும்  கிளர்ந்தெழுந்து வளரும்.

இதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய மிகப் பெரிய ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பில், அவர்கள் ஒரு பெரிய தத்துவ வார்த்தைகளாக இன்றைக்கு இருக்கிறார்.

இன்றைக்கும் அவருடைய கருத்தைப்பற்றி வரவேற்புரையாற்றிய திலகவதி அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள்.

‘‘நான் எப்பொழுதும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாகத்தான் இருந்திருக்கின்றேன்’’ என்று தந்தை பெரியார் சொன்னார்.

கொள்கைக்காரனாக இருந்ததினால், மிகப்பெரிய விளைவு ஏற்பட்டது. ஒரு சிறிய உதாரணத்தைச் சொல் கிறேன் - தமிழ்நாட்டு அரசியலை எடுத்துக்கொண்டால், ஒரு காலத்தில் நீதிக்கட்சி ஆண்டது.  சிறைச்சாலையில் இருந்த தந்தை பெரியாரை அவர்கள் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். பெரியாரோ அரசியல் வேண் டாம் என்று சொன்னவர்; தலைமைப் பதவி வேண்டாம் என்று சொன்னவர்.

அரசியலைத் துரத்திக் கொண்டு இன்று பல பேர் போகிறார்கள். நிறைய பேர் இடைக்காலம், தற்காலம், கடைக்காலம் எல்லாம் டில்லிக்காலம் என்று போய்க் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தையும் நீங்கள் நன்றாக எண்ணிப்பார்க்கவேண்டும்.

சிறைச்சாலையில் இருந்த தந்தை பெரியார் அவர்களை, நீதிக்கட்சியில் இருந்த பொறுப்பாளர்கள் எல்லாம் சந்தித்து, நீங்கள்தான் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று கேட்டபொழுது, ‘‘நான் யோசிக் கிறேன்’’ என்றுதான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.

பெரியாரால்தான், 

நீதிக்கட்சிக்குப் பாதுகாப்பு - அதற்குப் புத்துயிர் கொடுத்தவரும் அவரே!

அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் தலைமை ஏற்ற பிறகு, ஆட்சித் தலைவர்கள் அனைவரும் பெரியாரிடம் வந்தார்கள்.

ஆகவே, நீதிக்கட்சியை பெரியார் தொடங்க வில்லை. ஆனால், பெரியாரால்தான், நீதிக்கட்சிக் குப் பாதுகாப்பு - அதற்குப் புத்துயிர் கொடுத்தவர்.

அதற்குப் பிறகு, தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியே வந்தார்; அதை எதிர்த்து சமூகநீதிக்காகப் போராடினார்.

அவ்வளவு பெரிய எதிர்ப்பை எல்லாம் காட்டிய பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. முதலமைச்சராக ஓமாந்தூர் ராமசாமி இருக்கிறார். அவர் திருவண்ணாமலைக்குச் சென்று ரமண ரிஷியைப் பார்த்துவிட்டு வருகிறவர். அமாவாசை பக்தர் அவர்.

‘‘கருப்புச் சட்டை போடாத ராமசாமி; 

தாடியில்லாத ராமசாமி!’’

அவர் முதலமைச்சரானவுடன், பார்ப்பன பத்திரிகை யான சுதந்திரா என்ன எழுதியது என்றால், ‘‘கருப்புச் சட்டை போடாத ராமசாமி; தாடியில்லாத ராமசாமி'' என்று எழுதியது.

‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள், ஓமந் தூரார் அவர்களுடைய சிறந்த உணர்வுகள், வகுப்புரிமை, சமூகநீதி உணர்வுகளைப் பார்த்து, பாராட்டி எழுதினார்.

இதைப் பார்த்த ஓமாந்தூரார், ‘‘தயவு செய்து ‘விடுதலை’யில் என்னைப் பாராட்டி எழுதவேண்டாம்; அதனால், எனக்கு தொந்தரவு அதிகமாக இருக்கிறது. முடிந்தால், என்னை தாக்கி எழுதுங்கள்;  ஏனென்றால், பார்ப்பனர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது’’ என்று ஒருவரிடம் சொல்லி அனுப்பியிருந்தார்.

அதேபோன்று, இராஜகோபாலாச்சாரியார் ஆட்சி, குலக்கல்வித் தொல்லை எல்லாம் முடிந்தவுடன், கல்வி வள்ளல் காமராசர் முதலமைச்சராகிறார்.

‘‘காரியம் காமராசர்; காரணம் பெரியார்!’’

காமராசரை என்ன சொன்னார்கள் என்றால், ‘‘பெரியார் வழியில் காமராசர்’’ என்றார்கள்.

‘‘காரியம் காமராசர்; காரணம் பெரியார்’’ ‘ஆனந்த விகடன்' தலையங்கம் எழுதியது.

உடனே ஆசிரியர் கடிதம் பகுதியில் ஒருவர் எழுதினார். ஆசிரியருக்குக் கடிதம் அல்ல; ஆசிரியர் கடிதம் எழுதினார்.

பள்ளிக்கூடங்கள் வைத்ததெல்லாம் முதலமைச்சர் காமராசர்தானே வைத்தார்; இதற்குப் பெரியார் எப்படி காரணமாவார்? என்று.

உடனே அதற்கு விளக்கம் எழுதிவிட்டு, பெரியார் சொன்னதினால்தான், காமராசர் பள்ளிக்கூடங்களை வைத்தார்.

காரியம் காமராசர்; காரணம் பெரியார் என்று.

ஆகவே, பெரியாரைப் பாதுகாப்பது யார் என்றால், கருப்புச் சட்டை போடாத காமராசர்.

பெரியார் அவர்கள், ‘‘காங்கிரசை ஒழிப்பேன் என்று சொன்னார். நான் ஆதரிப்பது காமராசரைத்தான், காங்கிரசை அல்ல'' என்று விளக்கம் சொன்னார்.

ஆனால், அரசியல் வேறு; அதைத்தாண்டி பெரியார் நிற்கிறார்.

அதற்கடுத்து அண்ணா முதலமைச்சராகிறார். முதல மைச்சராகப் பதவியேற்றவுடன், நேரே திருச்சி  பெரியார் மாளிகைக்குத்தான் வந்தார். தந்தை பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இராஜகோபாலாச்சாரியாரும், 

ஆரியமும் தப்புக் கணக்குப் போட்டனர்

அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடனே, ஆரியம் என்ன நினைத்தது தெரியுமா? இனிமேல் பெரியாரை எதிர்ப்பதற்கு அண்ணா ஒரு நல்ல வாய்ப்பு என்று இராஜகோபாலாச்சாரியாரும், ஆரியமும் தப்புக் கணக்குப் போட்டனர்.

ஆனால், அந்த அறிவாயுதம் எதற்குப் பயன்பட்டது?

இன உணர்ச்சியைக் காட்ட - நம்முடைய சமூக இழிவைப் போக்குவதற்கு. சமூகநீதியை நிலைநாட்டு வதற்கு - பெரியார் எங்களை வழிநடத்தவேண்டும்; வழி காட்டவேண்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொன்னார், ‘‘இந்த அமைச்சரவையே தந்தை பெரி யாருக்குக் காணிக்கை’’ என்று.

பெரியாருடைய கருத்துப்படிதான் சட்டம் இருக்க வேண்டும். சுயமரியாதைச் சட்ட வடிவை பெரியாரிடம் காட்டினார்கள்; அந்த சட்டத்தைத் திருத்திக் கொடுத்தார்.

பெரியார், என்றைக்கும் பெரியாராகவே மதிக்கப்படுகின்றார்!

அரசியலில் ஓர் அரசு போகும்; ஒரு கட்சி தோல்வியுறும்; ஒரு முதலமைச்சர் வீட்டிற்குப் போவார்; இன்னொரு புது முதலமைச்சர் வருவார்.

ஆனால், பெரியார், என்றைக்கும் பெரியா ராகவே மதிக்கப்படுகின்றார் என்றால், இந்திய வரலாற்றில் மட்டுமல்ல - உலக வரலாற்றில் இப்படி ஒரு ஈர்ப்பு - ஏறத்தாழ ஒரு 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்குரிய சூழலில் வேறு எங்காவது உண்டா?

அறிவாயுதம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், எப்பொழுதும் அது சுழன்று கொண்டே  இருக்கும்.

யாருக்காக?

மக்களுக்காக - 

அவருக்காக அல்ல; தனக்காக அல்ல.

பதவிகளைத் துறந்துவிட்டு, 

பொதுவாழ்க்கைக்கு வந்தார்

அவர் எந்தப் பதவியையும் விரும்பியவர் இல்லை. 29 பதவிகளை ஒரே தாளில் எழுதி, நான் ராஜினாமா செய்கிறேன் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்தவர்.

மற்றவர்கள் பதவிக்காகப் பொதுவாழ்க்கைக்குப் போவார்கள். ஆனால், பெரியார் அவர்கள், பதவிகளைத் துறந்துவிட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்தார்.

இரண்டுமுறை கவர்னர் ஜெனரல் பதவி தேடி வந்தது; நீங்கள் தான் முதலமைச்சராக வேண்டும் என்று நீதிக்கட்சித் தலைவராக இருந்தபொழுது அவரை வற்புறுத்தினார்கள்.

வேடிக்கையாக அய்யா சொல்லுவார், அது என்ன வென்றால், ‘‘என்ன நாயக்கரே, நீங்களே யோசிக்கிறீங்க? நாங்கள் எல்லாம் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம்; நீங்கள் முதலமைச்சராக வேண்டும்'' என்று.

இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொன்னார், ‘‘நீங்கள் முதலமைச்சராகுங்கள்; நானும் உங்கள் அமைச்சரவையில் இருக்கிறேன்; நீங்கள் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்று.

இதுபோன்ற ஒரு வாய்ப்பு அரசியலில், இந்திய வரலாற்றில், உலக வரலாற்றில் கிடையாது.

தந்தை பெரியாரை கடுமையாக  எதிர்த்தவரே, பெரியாரை முதலமைச்சராக வேண்டும் என்று சொல்கிறார்.

அப்பழுக்கற்ற நாணயம் - கொள்கையில் பெரியாருக்கு இருக்கின்ற உறுதி!

ஏனென்று கேட்டால், அவ்வளவு அப்பழுக்கற்ற நாணயம். எடுத்த கொள்கையில் அவருக்கு இருக்கின்ற உறுதி - அதில் மிகவும் தீவிரமானவர்.

எனவே,  அறிவாயுதம் என்று சொல்வது இருக்கிறதே, அது ஒருபோதும் பிறழாமல் நின்றது.

மற்ற ஆயுதங்களால் ரத்தம் சிந்தக்கூடிய வாய்ப்பு உண்டு. அறிவாயுதத்தால் ரத்தம் சிந்தக்கூடிய வாய்ப் பில்லை என்று சொன்னதின் அடிப்படைதான் இந்த சமூக மாற்றம்.

பெரியாருடைய தத்துவங்கள் என்னவென்றால், அரசியல்வாதிகள் அரசியல் மாற்றங்களை விரும்பு வார்கள். ஒரு கட்சி போனால், இன்னொரு கட்சி வரலாம்; ஒரு முதலமைச்சர் போனார்; இன்னொரு முதலமைச்சர் வருகிறார். ஆனால், இது அரசியல் மாற்றம்.

பெரியார் விரும்பியது சமூக மாற்றம்

ஆனால், பெரியார் விரும்பியது சமூக மாற்றம். அந்த சமூக மாற்றம் யார் முதலமைச்சராக வந்தாலும் தொடர்ந்து நடக்கிறது. ஜெயலலிதா உள்பட - 69 சதவிகித இட ஒதுக்கீடு அரசு ஆணை என்று சொல்லக்கூடிய வகையில்.

இந்த இயக்கம், அறிவாயுதத்தினுடைய வீச்சு, பேச்சு எப்படிப்பட்டது என்பதற்கு இதுதான் அடையாளம்.

இப்படிப்பட்ட பெருமையுள்ள ஒரு தலைவர் வேறு எங்கேயாவது இருக்கிறார்களா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

நேற்றைக்கு முன்தினம்கூட ‘விடுதலை'யில் அறிக்கை எழுதியிருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் பல பேருக்குத் தெரியாது. காந்தியாரைக் கொன்றவன் கோட்சே என்ற மராத்திய பார்ப்பான். ஆனால், முதலில் இஸ்லாமிய மதவெறியனால் கொல்லப்பட்டார் காந்தியார் என்று ஒரு பொய்யைக் கிளப்பிவிட்டனர்.

அன்றைய தினம் இதே திருச்சியில்தான் ஒரு முக்கியத்துவமான நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றக் கூடிய நிகழ்ச்சி அது. தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று சொல்கிறோமே, அன்றைக்கு ரத்தக் களறி ஏற்படாமல், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கு ஆபத்தில்லாத ஒரு சூழல் அன்றைக்கு ஏற்பட்டது.

காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தில், இவர் பெரியார் மாளிகையினுடைய சிறப்பைப்பற்றி எழுதி யிருக்கிறாரே, அங்கே ஒரு சம்பவம் நடைபெற்றது.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஓமாந்தூரார் அவர்கள் திருச்சி வானொலி இயக்குநரை அழைத்து சொல்கிறார். அந்த நிகழ்வைப்பற்றியும், 1939 இல் நடைபெற்ற வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகத்தைப்பற்றி பேசினால், பல மணிநேரம் பேசவேண்டும். 34 கட்டுரைகளிலும் அவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.

பெரியார் ஒருவர்தான் 

மக்களை அமைதிப்படுத்த முடியும்

முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார் அவர்கள்,  திருச்சி வானொலி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசுகிறார். ‘‘பெரியார் ஒருவர்தான் மக்களை அமைதிப் படுத்த முடியும். திருவண்ணாமலை, ஈரோடு போன்ற இஸ்லாமியர்கள் வசிக்கின்ற பகுதிகளில் மதக் கலவரங்கள் ஏற்படுகின்ற ஆபத்துகள் இருக்கின்றன. ஏனென்றால், எல்லோரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

ஆகவே, உடனே தந்தை பெரியாரை சந்தித்து, அவரது உரையைப் பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புங்கள்'' என்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் பேசுகிறார், ‘‘யார்மீதும் தனிப்பட்ட முறையில் பழி தீர்த்துக் கொள்வதற்கு இது சந்தர்ப்பம் என்று  நினைக்கக் கூடாது. மனிதர்களை, மனிதர்கள் பழிவாங்கக் கூடாது.

நோய்நாடி, நோய் முதல் நாடவேண்டும்!

அதற்கு எது காரணம்? அந்தக் காரணத்தை நோக்க வேண்டும். நோய்நாடி, நோய் முதல் நாடவேண்டும்'' என்கிற கருத்தைப் பொறுமையாக ஒரு 10 நிமிடம் பேசி, மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

அதுவரை கோட்சே மராத்திய பார்ப்பான் என்கிற தகவல் வரவில்லை. அதற்குப் பிறகுதான் அந்தத் தகவல் வெளிவருகிறது. அதைக் கேள்விப்பட்ட பிறகு, மக்கள் ஆவேசப்பட்டனர்.

மராட்டியத்தில் உள்ள அக்கிரகாரங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சினுடைய தலைமையகத் தைத் தாக்குகிறார்கள். அதுகுறித்து புத்தகம் எழுதி யிருக்கிறார் கோல்வால்கர்.

ஆனால், தமிழ்நாட்டில், ஒரு பார்ப்பனருக்குக்கூட ஆபத்து ஏற்படவில்லை. காரணம், தந்தை பெரியார் அவர்கள்தான்.

பெரியார் சொன்னார், எந்தத் தனி மனிதனும் அதற்குக் காரணம் இல்லை. கோட்சே காந்தியாரை சுட்டான் என்றால், துப்பாக்கியால்தானே சுட்டான். அந்தத் துப்பாக்கி மீது நீங்கள் கோபித்துக் கொள்வீர்களா? ஆத்திரப்படுவீர்களா?

அதுபோன்றே, கோட்சேவும் துப்பாக்கிப் போன்று மதவெறிக்கு ஒரு கருவிதான்.

பார்ப்பனர்களுக்கும் ஆபத்து வராமல் காப்பாற்றிய மனிதாபிமானப் பெருமை 

தந்தை பெரியாருக்கு உண்டு

எனவே, மதவெறியைப் போக்குவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? அந்த ஆபத்தை நீக்குவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்று சொல்லி, அன்றைக்குப் பார்ப்பனர்களுக்கும் ஆபத்து வராமல் காப்பாற்றிய மனிதாபிமானப் பெருமை தந்தை பெரியாருக்கு உண்டு.

எனவே, தந்தை பெரியாரால் பயன்படாதவர்கள் என்று யாருமே இல்லை, தமிழ்நாட்டில் - எதிரிகள்கூட, இன எதிரிகள்கூட!

நான் இதைப் பல நேரங்களில் சொல்லியிருக்கிறேன். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்கிற புத்தகத்தில் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

பிராமணப் பெண்களாக இருந்தாலும்கூட, அவர்களும் நமோ சூத்திரர்கள்தான்!

மனுதர்மத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சொன்னால், ‘‘பிராமணப் பெண்களாக இருந்தாலும்கூட, நமோ சூத்திரர்கள்தான் அவர்களும்.''  சூத்திரர்களுக்குக் கீழேதான் - அவர்களை சமமாக நினைப்பதில்லை.

ஆனால், இன்றைக்கு திடீர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள், ‘‘பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்து, சமத்துவம் வரவேண்டும் என்கிறார்.

பெரியார், அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் புகுந்து, அதற்கு அப்பாலும் புகுவார் என்று சொன்னார் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சுக்குள்ளேயும் 

பெரியார் தேவைப்படுகிறார்

இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.சுக்குள்ளேயும் பெரியார் தேவைப்படுகிறார். வேஷத்திற்காகத் தேவைப்படு கிறாரா? விவகாரத்திற்காக தேவைப்படுகிறாரா? என்பது பிறகு.

பெண்களுக்கு இடமே இல்லை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில். 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபொழுது. 1936 இல்தான் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்மானம் போடுகிறார்கள்.

இன்றைக்குப் பாருங்கள், காலையில் வந்த செய்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள செய்தி.

பெரியாரின் அறிவாயுதத்தினுடைய வீச்சு!

திடீரென்று அவருக்கு என்ன ‘ஞானோதயம்' - வேறு ஒன்றும் இல்லை -  பெரியாரின் அறிவாயுதத்தினுடைய வீச்சு இந்தியா முழுவதும் வந்துவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்புகள் இருக்கிறது பாருங்கள் - சேலம் தீர்மானத்தைவிட மிக வேகமாகப் போகிறது.

பெண்களுக்கு மட்டும்தான் கற்பு என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆண்களுக்கு அதுபற்றி கவலையில்லை என்று சொன்னார்கள். ஆனால், இப் பொழுது  ஆணும், பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழ லாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. பெரியாருடைய கருத்து உச்சநீதிமன்றத்திற்குள் இருக் கிறது.

பெரியாருடைய சீடர் இவர், அதனால்தான், இது போன்ற செய்திகளை சொல்கிறார் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பெரியாருடைய கருத்துகள் பரவுவதற்குக் காரணம் விஞ்ஞானம் - விஞ்ஞானத்தை யாராலும் தடுத்துவிட முடியாது.

2 ஜியைப்பற்றி தவறான பிரச்சாரம் செய்து, நிறைய பேர் ஆட்சிக்கு வந்தார்கள்.

ஆனால், அதிலும் வெற்றி பெற்றவர்தான் நம்முடைய ஆ.இராசா அவர்கள்.

அந்த 2ஜியைவிட, இன்றைக்கு 5ஜியை குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார்கள்; அதைப்பற்றி தனியே பேசவேண்டும்.

ஆயுத பூஜை கொண்டாடதவன் கண்டுபிடித்தது 5 ஜி அலைக்கற்றை!

இன்றைக்கு 5ஜி வந்தாகிவிட்டது. நம்முடைய பேரன் காலத்தில் எந்த ஜி வருமோ தெரியவில்லை. ஆனால், நம்மாள் என்ன செய்கிறார்கள், இன்னும் கோபால்ஜி, அந்த ஜி, இந்த ஜி  என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயுத பூஜை கொண்டாடதவன் கண்டுபிடித்தது 

5 ஜி. ஆயுத பூஜையைக் கொண்டாடுகிறவர்கள் கண்டு பிடித்தது வெறும் ஜி - பெயருக்குப் பின்னால் சேர்த்து ஜி, ஜி என்று சொல்பவர்கள்.

இதைத்தான் நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார், பகுத்தறிவுப் பணியை செய்யக் கூடிய எல்லா துறைகளிலும் அந்த எண்ணத்தை உருவாக் கினார்.

பெரியார் சொன்னார், ‘‘எனக்கு எந்தப் பற்றும் இல்லை. எனக்கு உள்ள பற்றெல்லாம் மானுடப் பற்று, மனிதப் பற்று, வளர்ச்சிப் பற்று, அறிவுப் பற்று மட்டும்தான்'' என்றார்.

இந்தப் பற்றுகள் எல்லோருக்கும்தானே பொது வானது. இந்த ஜாதிக்கு மட்டும்தான் என்று உண்டா? - இந்த சமூகத்திற்கு மட்டும்தான் என்று உண்டா? இந்த இனத்திற்கு மட்டும்தான் உண்டா?

எனவேதான், பெரியார்,  உலகப் பெரியார்!

எனவேதான், பெரியார் உலகமயம் - உலகம் பெரியார் மயம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்து கொண்டிருக்கின்றது.

மிகப்பெரிய அளவிற்கு 

மாற்றம் ஏற்படும்

எனவேதான், பெரியாரை நீங்கள் என்ன செய்தாலும், இந்த மண் மட்டுமல்ல, உலகமே பெரியார் மண்ணாக ஆகக்கூடிய காலத்தை, 23 ஆம் நூற்றாண்டு பார்க்கப் போகிறது.

இன்றைக்கு 21 ஆம் நூற்றாண்டு, இதைத் தாண்டி, இன்னும் இரண்டாண்டு காலத்தில், மிகப்பெரிய அளவிற்கு மாற்றம் ஏற்படும்.

விஞ்ஞானத்தை யாராலும் தடுக்க முடியாது. இன் றைக்குக் காலையில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.

செவ்வாய்க்கோளில் நீர்வளம் இருக்கிறது. நம்மூரில் நீர்வளம் இருக்கிறதோ, இல்லையோ - செவ்வாய்க் கோளில் நீர்வளம் இருக்கிறது. ஆகவே, அங்கே செல்லப் போகிறார்கள். செவ்வாய்க் கோளுக்கு வேண்டுமானா லும் போகலாம்; ஆனால், கோவில் கருவறைக்குள் நம்மாட்களால் அவ்வளவு எளிதில் போக முடியவில்லை.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்குப் பெரியார் என்ற பேராயுதத்தினுடைய வீச்சு இருக்கிறதே, அந்த வீச்சு வெறும் பூச்சு அல்ல - வெறும் விளம்பரப் பகட்டு அல்ல - அல்லது வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல.

அத்தனைக்கும் உருவம் கொடுக்கின்ற ஆட்சிதான் இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி!

வாழ்க்கையினுடைய ஒவ்வொரு அம்சத்திலும் சமத் துவம், சமூகநீதி என்பதுதான். இரண்டே வார்த்தைகளில் தந்தை பெரியார் சொன்னார் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று.

இவை அத்தனைக்கும் உருவம் கொடுக்கின்ற ஆட்சிதான் - இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண் டிருக்கின்ற ‘திராவிட மாடல்' ஆட்சியாகும்.

ஆகவேதான் நண்பர்களே, இன்றைக்குப் பெரியாருடைய சிந்தனைக்காக ஒரு நிகழ்ச்சி நடத்து கின்றோம்; பெரியாருடைய கருத்துகளைப் பரப்புகின் றோம் என்பது இருக்கிறதே, அது பெரியாருக்காக அல்ல.

வழக்கமாக சொல்லுகின்ற உதாரணத்தை இங்கேயும் நான் சொல்கிறேன்.

மருந்து சாப்பிடுகிறோம் - மருந்தைக் கண்டுபிடித்த வரை திருப்தி செய்வதற்காகவா? அல்லது அவருடைய ஆத்மா சாந்தியடையவேண்டும் என்பதற்காகவா? 

மருந்து கடைக்காரருக்கு வியாபாரம் நடக்காமல் போய்விடுமே என்கிற அனுதாபத்தினாலா?

அல்லது கையில் காசு இருக்கிறதே, அதனால், மருந்தை வாங்கலாம் என்பதற்காகவா?

இல்லை நண்பர்களே! நம்முடைய நோய் தீருவதற்காகத்தான்!

பெரியாருடைய தத்துவங்கள் 

வாழ்வியல் தத்துவங்கள்!

ஆகவே, பெரியார் தேவைப்படுகிறார்! இன்றைக்கும் தேவைப்படுவார்! நாளைக்கும் தேவைப்படுவார்! என் றைக்கும் தேவைப்படுவார், மருத்துவத்தைப் போல, மருந்தைப் போல - அவருடைய தத்துவங்கள் வாழ்வியல் தத்துவங்கள்!

எனவே, பயன்பெறுகிறவர்கள், பெரியாருக்காகப் பயன் பெறவேண்டாம்! பெரியார் பார்த்துக் கொண் டிருக்கின்றார் என்று நினைக்கவில்லை. 

பெரியாருடைய தத்துவம்தான் நமக்கு விழியூட்டக் கூடிய தத்துவம். அதனை உணரச் செய்த பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும், பங்கேற்ற தோழர்களுக்கும் நன்றி கூறி முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment