வேதம் படித்தால் நேரடியாக 10, 12 ஆம் வகுப்புக்குச் சமமாம் - பொறியியல் படிப்பில் நேரே சேரலாம்! (AICTE ஆணை): தேசியக் கல்வி என்பதன் சூட்சமம் இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

வேதம் படித்தால் நேரடியாக 10, 12 ஆம் வகுப்புக்குச் சமமாம் - பொறியியல் படிப்பில் நேரே சேரலாம்! (AICTE ஆணை): தேசியக் கல்வி என்பதன் சூட்சமம் இதுதான்!

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ‘இந்து' என்ற சொல்லே கிடையாதே-  இந்த நிலையில் இராஜராஜ சோழன் எப்படி ‘இந்து' ஆவான்?

இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் கமலகாசன் கூற்று சரியானதே!

திருச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

திருச்சி, அக்.7  சமஸ்கிருதம் படித்தேன் என்று சான்று வைத்திருந்தால், நேரடியாக 10, 12 ஆம் வகுப்பில் சேரலாம் என்பதிலிருந்தே தேசிய கல்வியின் சூட்சமம் புரியுமே என்றும், இராஜராஜ சோழன் ‘இந்து' என்பது எப்படி சரி? ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ‘இந்து' என்ற சொல்லே கிடையாதே! என்றும் செய்தியாளர் களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருச்சியில் செய்தியாளர்களிடையே 

தமிழர் தலைவர்

நேற்று (6.10.2022) மாலை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது  பேட்டி வருமாறு:

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 

தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு 

பிறந்த நாள் கருத்தரங்கம்!

தந்தை பெரியார் அவர்களுடைய 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா திருச்சி மாநகரில் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பாக - கருத்தரங்கமாக நடை பெறவிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள் இன்றைக்குத் தமிழ்நாடு தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றது.

அதனால்தான், ‘திராவிட மாடல்' ஆட்சியில், முதல மைச்சர் அவர்கள் 21 மொழிகளில் தந்தை பெரியாரு டைய கருத்துகள் இந்திய மொழிகளில் மட்டுமல்ல, உலக மொழிகளான ஸ்பானிஷ், பிரெஞ்ச், ஜெர்மனி போன்ற மொழிகளில் பரப்பப்படவேண்டும் என்பதற் காக ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தன்னுடைய பணிகளை செய்து வருகிறது.

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு - பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி அடிக்கல் நாட்டியுள்ளார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘பெரியார் உலகம்' பணி 

10 ஆண்டுகள் நடைபெறும்

அரசாங்கத்தின் எல்லாத் துறைகளுடைய அனுமதி யும் பெற்று விரைவில் பணி தொடங்கவிருக்கிறது. அந்தப் பணி ஏறத்தாழ 10 ஆண்டுகள் நடைபெறும்.

காரணம் என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தைக் குறிப்பிடும் வகையில் 95 அடி உயர சிலையும், 60 அடியில் பீடமும் அமையவிருக்கிறது. அதற்குப் பக்கத்திலேயே நூலகம், ஆய்வகம், பெரியாரியல் பயிற்சியகம், குழந்தைகளுக் கான காட்சியகம், ஒளி, ஒலி காட்சிகள் அமைய விருக்கின்றன. டிஸ்னி வேர்ல்ட் என்று அழைக்கப்படக் கூடிய அளவிற்கு அமையவிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைவரும்  பார்த்துப் பயனடையக் கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

செப்டம்பர் 24, 25 இல் 

கனடாவில் பன்னாட்டு மாநாடு!

எனவே, பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்கள். அந்த அளவிற்கு, உலகம் முழுவதும் இன்றைக்குப் பெரியாரு டைய கருத்துகள் தமிழ்நாட்டைத் தாண்டி, இந்தி யாவைத் தாண்டி வேகமாகப் பரவிக் கொண்டிருக் கக்கூடிய  இந்தக் காலகட்டத்தில், அண்மையில் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், அமெரிக்கா வில் இருக்கக் கூடிய மனிதநேய அமைப்புகள், கனடா நாட்டில் இருக்கக் கூடிய மனிதநேய அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 24, 25 ஆம் தேதிகளில் கனடா நாட்டின் டொராண்டாவில் மூன்றாவது பன்னாட்டு சமூகநீதி மாநாட்டினை நடத்தின.

முதலில் ஜெர்மனி, இரண்டாவது அமெரிக்கா, மூன்றாவதாக கனடா நாட்டில்.

மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைக்காகவும் பாடுபட்டவர் பெரியார்!

பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியார் அல்ல - அவர் உலக மக்களுக்கு உரியவர். காரணம், மனித நேயத்திற்காகவும், மனித உரிமைக்காகவும் பாடு பட்டவர் என்ற முறையில், அவருடைய கொள்கைகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

எனவே, ‘‘பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம்'' என்ற தத்துவத்தை இன்றைக்குக் கையாண்டு கொண்டிருக்கின்றோம். அதை விளக்குவதற்காக, அவருடைய நூல்களைப் பரப்புவதற்காக - எனக்குப் பின்னால் என்னுடைய நூல்கள் தெளிவாக என்னு டைய கொள்கைகளை விளக்கும் என்று அய்யா அவர்கள் சொன்ன காரணத்தினால், அதற்கான ஏற் பாடுகளை - வெறும் பாராட்டு விழாவாக - சொற்பொழி வாக நடத்தாமல், நூல்களைப் பரப்பக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதற் காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஆகவே, முன்பு எப்போதும் தேவைப்பட்டதைவிட, பெரியார் இன்றைக்கு அதிகம் தேவைப்படுகிறார்.

காரணம் என்னவென்றால், மதவாதம் தலைதூக்கி ஆடுகிறது. புதைந்திருந்த ஜாதி வெறி, மீண்டும் புதுப்பிக்கப்படக் கூடிய பேரபாயம் ஏற்பட்டு இருக்கி றது.

அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் கல்வி என்று மறுக்கப்பட்ட மனிதர்கள் அமைந்த நாட்டில், தந்தை பெரியாருடைய இயக்கம் - திராவிட இயக்கம் வந்த பிறகுதான், எல்லோருக்கும் எல்லாம் - அனைவருக்கும் கல்விக் கண் அளிக்கவேண்டும் என்று மிகப்பெரிய அளவிற்குப் பாடுபட்டது.

ஒரே ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன், புதியக் கல்விக் கொள்கை என்ற பெயராலே, ஒன்றியத்தில் உள்ள மோடி அரசு,  இன்றைக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

வேதம் படித்தால் பொறியியல் கல்லூரியில் சேரலாமாம்!

என்ன அறிவிப்பு என்றால், வேத பாட சாலையில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வேதம் படித்தாலே, அவர் கள் பத்தாம் வகுப்பு படித்ததற்குச் சமம்; பனிரெண்டாம் வகுப்புக்குச் சமம். நேரிடையாக பொறியியல் கல்லூரியில் சேரலாம். அதை எந்தக் கல்லூரியும் மறுக்க முடியாது என்று சொன்னால், என்ன அர்த்தம்?

சமஸ்கிருதம் படித்திருந்தால், நேரிடையாக கல் லூரிகளில் சேரலாம் என்பதுதான்.

அவர்களைக் கேள்விக் கேட்கக்கூடாது கல் லூரிகள்; அவர்கள் என்ன சிலபஸ் படித்தார்கள் என்று கேட்கவேண்டிய அவசியம் கிடையாது என்று சொன் னால், முழுக்க முழுக்க இதைவிட ஒரு பிற்போக் குத்தனமான கண்டனத்திற்குரியது வேறு இருக்க முடியாது.

இதைத் தந்தை பெரியார் அவர்கள் உணர்ந்த காரணத்தினால்தான், மருத்துவக் கல்லூரிக்கு சமஸ்கிருதம்  தெரிந்திருந்தால்தான் மனு  போட முடியும் என்று இருந்த நிலையை நீதிக்கட்சி காலத்திலேயே அதை அப்புறப்படுத்தினார்.

எப்பொழுது தாழ்ந்தது? யாரால் தாழ்ந்தது?

இப்போது அதுபோன்ற நிலை வந்திருக்கிறது; பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்தால் போதும்; ஒரு சான்றிதழ் வாங்கினால் போதும். ஆர்.எஸ்.எஸ். நடத்தக்கூடிய பள்ளிக்கூடங் களிலிருந்து ஒரு சான்றிதழ் வாங்கினால், பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு அதுவே போதும் என்று சொல்லக்கூடிய நிலை வந்தால் - கல்வியின் தரம் தாழ்ந்துவிட்டது என்று சொன்னார்களே - எப்பொழுது தாழ்ந்தது? யாரால் தாழ்ந்தது? இப்போதுதான் தாழ்கிறதா? என்பது தெளிவாகத் தெரியும்.

எனவே, இதுபோன்ற பல நிகழ்வுகள் இப்பொழுது நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றையெல் லாம் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்பாக ‘திராவிட மாடல்'  ஆட்சி நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், எப்படியும் இந்த ஆட்சியின்மீது குற்றம், குறை சொல்லி, இடையூறு செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

அதைப் பாதுகாப்பது திராவிடர் இயக்கத்தின் கடமை - குறிப்பாக திராவிடர் கழகத்தினுடைய பணி. அதை விளக்குவதற்காகத்தான் இந்தப் பொதுக்கூட்டம்.

தடுக்கப்படவேண்டியது மட்டுமல்ல; 

அது கிரிமினல் குற்றம்

செய்தியாளர்: சிதம்பரத்தில் 13 வயது பெண்ணுக்குத் திருமணம் நடந்திருக்கிறதே?

தமிழர் தலைவர்: இந்த நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த குழந்தைத் திருமணம் என்பது சட்டப் பூர்வமாகத் தடுக்கப்படவேண்டியது மட்டுமல்ல; அது கிரிமினல் குற்றமும் ஆகும்.

அப்படிப்பட்ட சூழல்நிலையில், ‘‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்;  திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;   இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்''  என்று நாங்கள் தான் நேரடியாக வந்தவர்கள் என்று சொல்லக்கூடிய சிதம்பரத்தில், அவர்கள் எந்த சட்டத் திட்டத்திற்கும் கட்டுப்படாமல், அங்கே அடிக்கடி இதுபோன்ற குழந் தைத் திருமணம் நடைபெறுவதைக் கண்டித்துத் தொடர்ந்து கூட்டங்களை நாங்கள் நடத்தியிருக் கின்றோம்.

அண்மையில் பல குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. அதற்காக இப்போது நடவடிக்கை எடுத்திருக்கின்ற அரசைப் பாராட்டுகிறோம், வரவேற் கிறோம்.

ஆனால், பெயரளவில் அது கண்துடைப்புப் போல இருக்கக் கூடாது. மாறாக, அது இன்னும் வேகமாக செயல்படவேண்டும். குற்றவாளிகள் யார் என்று பார்க்காமல், குற்றத்தை மட்டுமே பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேடப்பட்ட குற்றவாளிகள் - தேடப்படுகின்ற குற்றவாளிகள் - தேடப்படக்கூடிய குற்றவாளிகள்!

செய்தியாளர்: ‘கைலாச தர்மரட்சகர் விருதை'  நித்தியானந்தா கொடுத்திருக்கிறாரே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கைலாசத்தில் இருக்கிறேன் என்று அவர் சொன்னார். கைலாசம் எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் ஆனந்தா என்று ஒருவர் இருந்தார். அவர் தேடப்படுகின்ற குற்றவாளி.

இந்த நாட்டில், யார் யார் சாமியார்கள் என்று காவி போட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் பெரும்பாலும், தேடப்பட்ட குற்றவாளிகள் - தேடப்படுகின்ற குற்றவாளிகள் - தேடப்படக்கூடிய குற்றவாளிகள் என்று மூன்று வகைகளில் வருகிறார்கள்.

இராஜராஜ சோழன் இந்துவா - 

இந்து இல்லையா?

செய்தியாளர்: இராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறதே?

தமிழர் தலைவர்: இன்றைக்குக்கூட நண்பர் கமலகாசன் சொன்ன கருத்து நூற்றுக்கு நூறு சரியான கருத்தாகும்.

ஏற்கெனவே இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பொதுவான கருத்தைச் சொல்லியிருந்தார்.

இராஜராஜ சோழனுடைய ஆட்சிக் காலம் ஆயிரம் ஆண்டிற்கு முந்தையது. ஆயிரம் ஆண்டிற்கு முன்பு இந்து என்ற வார்த்தையே கிடையாது.

ஆகவேதான், இராஜராஜ சோழன் இந்து இல்லை என்பதை ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார். அதை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே, இதை வைத்துக்கொண்டு, அவர்கள் ஒரு வெறித்தனத்தை தமிழ்நாட்டில் பரப்பலாம் என்றால், அந்தப் பருப்பு வேகாது.

செய்தியாளர்: இராஜராஜ சோழனை இந்து என்றுதானே கூப்பிட முடியும்?

தமிழர் தலைவர்: முழுக்க முழுக்க இயக்குநர் வெற்றிமாறன் கருத்தை ஆதரிக்கிறோம். அதை ஆதரித்து, நடிகர் கமலகாசன் சொன்ன கருத்துகள் நியாயமானவையாகும்.

என்னுடைய உரையில் இதுகுறித்து விளக்கமாக சொல்லவிருக்கிறேன்.

வேதங்களில்கூட இந்து என்கிற வார்த்தை கிடையாது. வேத மதம் என்றுதான் இருக்கிறது. நான்கு வேதங்களில், இந்து என்கிற வார்த்தை இருக்கிறதா?

வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர்தான் இந்து என்பதை சங்கராச்சாரியாரே சொல்லியிருக்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது

செய்தியாளர்: சைவ மதம், வைணவ மதத்தில் இருந்தவர்களைத்தான் இந்து என்று அழைக்கிறோம் என்று சொல்கிறார்கள்?

தமிழர் தலைவர்: இயக்குநர் வெற்றி மாறன் சொன்ன கருத்து வரலாற்று ரீதியானது. அந்த மதத்திற்குரிய பெயரே அப்படி கிடையாது என்பது நீதிமன்றத் தீர்ப்பு உள்பட இருக்கிறது.

தேர்தல் ஆணையம் யாருடைய கைப்பாவையாகவோ இருக்கிறது!

செய்தியாளர்: அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை, தேர்தல் ஆணையத்தில், தேர்தலுக்கு முன்பே தாக்கல் செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பது குறித்து தங்கள் கருத்தென்ன?

தமிழர் தலைவர்: மத வாதத்தை முன்னிறுத்தியே தேர்தல் பிரச்சாரத்தை சில கட்சிகள் செய்கின்றன. அதைப்பற்றித் தேர்தல் ஆணையம் கவலைப்படவில்லை. அப்படியென்றால், தேர்தல் ஆணையம் யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!

தேர்தல் ஆணையம், சுதந்திரமான ஆணையமா?

அல்லது யாருக்காவது கட்டுப்பட்ட ஆணையமா? யாருடைய உத்தரவை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்.

ஆகவே, அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

பல்லில்லாத ஆணையமாக இருக்கிறது தேர்தல் ஆணையம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment