தோல்வியடைந்த மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இந்திய ராணுவத்தில் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

தோல்வியடைந்த மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இந்திய ராணுவத்தில் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு!

புதுடில்லி, செப்.13- ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம், ராணு வத்திற்குத் தேவையான ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று மோடி அரசு ஜம்பம் அடித்தது. ஆனால், ஏனைய திட்டங்களைப் போலவே மோடி அரசின் இந்தத் திட்டமும் தோல்வியில் முடிந்துள்ளது. 

‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம், போதுமான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படாத நிலையில் தற்போது இந்தியா ஆயுத பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 மே மாதம் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி 2014 செப்டம்பரில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிவித்தார். குறிப்பாக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறை சார்ந்த ஆயுதங்கள், தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். இதன்மூலம்  வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். ஆனால், மோடி அரசின் இந்த திட்டம் வெற்றுப் பேச்சாகவே முடிந்து போனது. தற்போது, இந்தியாவில் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டில் முப்படைகளிலும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். ராணுவம், கடற்படை, விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள இலகுரக ஹெலிகாப்டர்களில் 80 சதவிகிதம் 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. பழைய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதால் கடந்த 2017 முதல் இதுவரை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்துகளில் 31 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட போர் விமானங்களின் ஆயுட்காலம் முடிவடைவதால் அவை விமானப்படையில் இருந்து படிப்படியாக நீக்கப்பட உள்ளன.  அதற்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பான ‘தேஜாஸ்’ போர் விமானத்தை அதிக அளவில் விமானப்படையில் சேர்க்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆனால், பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்’ ஆண்டுக்கு 8 தேஜாஸ் போர் விமானங்களை மட்டுமே தயாரிக்கிறது. இது போதுமானதாக இல்லை. ரஷ்யாவிடம் இருந்து காமோவ்-226டி வகை ஹெலிகாப்டர்களை வாங்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது என்றாலும், பல்வேறு காரணங்களால் அது இழுபறியாக உள்ளது. உக்ரைன் - ரஷ்ய போரால் ரஷ்யாவிடம் இருந்து போர் தளவாட உதிரிப் பாகங்களை இறக்குமதி செய் வதிலும் சிக்கல் நீடிக்கிறது.  கடற்படையிலுள்ள  நீர்மூழ்கி கப்பல்களுக்கு உள்நாட்டு  தயாரிப்பு உதிரிப் பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால்  உள்நாட்டு உதிரிப் பாகங்களின் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால் ஒட்டுமொத்தமாக இந்திய ராணுவத்தில் ஆயுதங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட் டிருக்கிறது.


No comments:

Post a Comment