‘‘மாமனிதன் வைகோ'' ஆவண திரைப்பட வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

‘‘மாமனிதன் வைகோ'' ஆவண திரைப்பட வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 வைகோ அவர்களுடைய வாழ்க்கை வரலாறு - சோதனைகளை சந்திக்க வழிகாட்டியாக, ஒளியூட்டியாக இருக்கும்!

புதுடில்லி பெரியார் மய்யம் பிரச்சினையில் ஆதரவுக் கரம் நீட்டிய வைகோ அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்!

சென்னை செப்.12  எத்தனை இன்னல்கள், சோதனைகள், வேதனைகள் வந்தாலும், அதனை சாதனைகளாக ஆக்குவதற்கு, யாருக்காவது சங்கடம் இருக்குமேயானால், தயவு செய்து வைகோ அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்; உற்சாகத்தைப் பெறுவீர்கள்! வைகோ அவர்களுடைய வாழ்க்கை வரலாறு - உங்களுக்கு வழிகாட்டியாக, ஒளியூட்டியாக இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

‘‘மாமனிதன் வைகோ'' 

வரலாற்று ஆவணப் படம் வெளியீடு

நேற்று (11.9.2022) மாலை  சென்னை சத்யம் திரை யரங்கில் ‘‘மாமனிதன் வைகோ'' என்ற வரலாற்று ஆவ ணப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  இவ்விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கி, வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

வாழ்க்கையே போராட்டம் - 

போராட்டமே வாழ்க்கை

‘‘திராவிட இயக்கத்தின் போர் வாள்'' என்று நம்மால் அழைக்கப்படக்கூடிய, பெருமைப்படுத்தப்படக்கூடிய அருமைச் சகோதரர் மானமிகு மாண்புமிகு வைகோ அவர்களுடைய ஆவணப் படம் - அவருடைய பொதுவாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு முள்நிறைந்த படுக்கையாக இருந்தது - வாழ்க்கையே போராட்டம் - போராட்டமே வாழ்க்கை என்ற அளவில் இருக்கக்கூடிய இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு, ஓர் அற்புதமான உரையை ஆற்றி, எல்லாவற்றையும்விட, வைகோ அவர்கள் ஒரு தனி மனிதரல்ல - தனிச் சொத்தல்ல - திராவிட இயக்கத்தினுடைய போர் வாள் என்பது எப்படி உண்மையோ, அப்படி திராவிட இயக் கத்தின் பொதுச் சொத்து. எனவே, அந்தப் பொதுச்சொத்து காப்பாற்றப்படவேண்டும்; பாதுகாக்கப்படவேண்டும். அவருக்காக அல்ல, அவருடைய குருதிக் குடும்பத் திற்காக அல்ல - தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காக மட்டுமல்ல - உலகெங்கும் வாழக்கூடிய மனித உரிமைப் போராளிகளுடைய நலனைப் பாதுகாப்பதற்காக ‘‘வைகோக்கள்'' பாதுகாக்கப்படவேண்டும் என்ற உணர் வோடு, இந்த வரலாற்று உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துச் சென்றிருக்கக்கூடிய ஒப்பற்ற முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி என்ற இணையற்ற ஆட்சியைத் தந்து கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களே,

இந்த ஆவணப் படத்தைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய எங்களுடைய ஒப்பற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே,

அதேபோல, இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள, காலத்தின் அருமையைக் கருதி, ஒவ்வொரு வரையும் அழைத்ததாக அவர்கள் கொள்வார்கள் என நான் கருதுகின்றேன்.

அருமைத் தோழமைக் கட்சித் தலைவர்களே, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்கள் உள்பட அனைத்துப் பொது மக்களே, சான்றோர்களே!

எண்ணற்ற தியாகங்களை செய்துள்ள ஒரு தன்னலமறுப்பு - பொதுநலக் குடும்பம்

வைகோ அவர்களுடைய வாழ்க்கையில் எத்த னையோ சிறப்புகள் இருந்தாலும் - அத்தனைக்கும் காரணமாக இருக்கக்கூடிய, வைகோ அவர்களை பாராட்டிக் கொண்டிருக்கின்றோம்; ஆனால், உள்ளே ஓர் அஸ்திவாரம் புதைந்திருக்கிறது, அதுதான் அவரு டைய வாழ்விணையராக இருக்கக்கூடிய அன்பிற்குரிய சகேதாரியார்; அவர்களைப் பாராட்டவேண்டும். அதே போல, அவருடைய தாயார் அவர்கள் செய்திருக்கின்ற தியாகம்; இந்தக் குடும்பத்தில் அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் போன்றவர்கள் செய்திருக்கின்ற தியாகம் என்று எண்ணற்ற தியாகங்களை செய்துள்ள ஒரு தன்னலமறுப்பு - பொதுநலக் குடும்பம் இந்தக் குடும்பம்.

ஒரு நல்ல சுயமரியாதை, பகுத்தறிவு- இது ஒரு பல்கலைக் கழகம்.

அப்படிப்பட்ட வைகோ அவர்களைப்பற்றி நிறைய சொல்லவிருக்கிறார்கள் - இங்கே தலைவர்கள் எல்லாம்.

இரண்டொரு செய்தியைச் சொல்லி என்னுரையை நான் நிறைவு செய்கிறேன்.

இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய துரைவையாபுரி

காரணம், இங்கே மிக முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியவர், வரலாற்று நிகழ்வை அளிப்பதற்காக, இந்த வரலாற்று ஆவணப்படத்தை இயக்கியவர் யார் என்றால், நம்முடைய  துரை வையாபுரி அவர்கள். இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, அவர் ஆவணப்படத்தின் இயக்குநர் மட்டுமல்ல; இந்த அவைக்கும் இயக்குநராகவும், அதேபோல, இந்தக் கொள்கையில் எதிர்கால இயக்குநராகவும், நிகழ்கால இயக்குநராகவும் இருந்து சிறப்பான ஒரு ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

திராவிடர் இயக்க வரலாற்றுப் பெருமைகள் நிலைக் கப்படவேண்டும். தமிழர்களுக்கு இருக்கின்ற மிகப் பெரிய குறைபாடே, வரலாறு இல்லை. வரலாற்றை மறைத்திருக்கிறார்கள்; வரலாற்றைக் குறைத்திருக்கிறார் கள். புதைந்திருக்கின்ற வரலாற்றை நாம் வெளியில் கொண்டுவரவேண்டும் என்ற அவசியத்தில் இருக் கின்றோம். ஆனால், வரலாறு புதைக்கப்படுவதற்கு முன்னால், இங்கே விதைக்கப்பட்ட வரலாறுகளும் மிகப்பெரிய அளவிற்கு எத்தனையோ நாம் சொல்லலாம். வரலாறாக இருந்து எல்லாவற்றையும் செய்துகொண்டி ருக்கக் கூடிய நம்முடைய அருமைச் சகோதரர் திரா விடர் இயக்கத்தின் போர் வாள்பற்றி - இங்கே வெளி யிடப்பட்ட வரலாற்று ஆவணப்படத்தில் பல்வேறு அம்சங்களைப் பார்த்தோம். எல்லா அம்சங்களிலும் தலைசிறந்த ஓர் அம்சம் என்னவென்றால், மனிதம். 

மனிதர்கள் தேவை - மனிதம் தேவை - 

மிக மிகத் தேவை!

‘மனிதனாக' இருப்பதே மிகப்பெரிய சிறப்பு. அதைவிட ‘‘மாமனிதன்'' என்றால், அதைவிடச் சிறப்பு.

நம்முடைய நாட்டில் இன்றைக்குத் தேவை என்னவென்றால், ‘மக்கள்' இருக்கிறார்கள்; ஆனால், ‘மனிதர்கள்' இல்லை. ஆகவே, மனிதர்கள் தேவை - மனிதம் தேவை - மிக மிகத் தேவை!

இன்றைக்கு மனிதமே தேவை என்று சொல்கிற பொழுது, இங்கே மாமனிதத்தைப் பார்க்கிறோம்; இதை விட வேறு பெருமைமிக்க, வார்த்தைகளால் அலங்கரிக்க முடியாது.

வைகோ என்ற இரண்டு எழுத்துகளுக்குள் எத்தனை அர்த்தங்கள்!

நல்ல தலைப்பு - சிறந்த ஆய்வுத் தொகுப்பு. இவை யெல்லாவற்றையும்விட, இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும், ஓர் இயக்கத்திற்கு வரும்பொழுது, என்ன கிடைக்கும்? என்று வராதீர்கள். மாறாக, எது கிடைக்கும்? சிறைச்சாலை கிடைக்கும்.

இதோ நான் பார்த்திருக்கிறேன்; வைகோ என்ற அந்த இரண்டு எழுத்துகளுக்குள் எத்தனை அர்த்தங்கள் இருக்கின்றன  என்று சொன்னால்,

‘மிசா', ‘தடா', ‘பொடா' -  ‘‘எல்லாவற்றையும் போடா'' என்று சொல்லக்கூடிய ஓர் உணர்வுதான், அந்தப் பெயர்தான், அந்த உருவம்தான் வைகோ!

லட்சியம் என்று சொன்னால், அதை அடைவதற்கு கஷ்ட நஷ்டங்கள் என்ற விலை கொடுக்கவேண்டும் என்றார்  அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்! அதற்கு முழு இலக்கணம் நம்முடைய அருமை திராவிட இயக்கத்தினுடய போர்வாள் வைகோ அவர்கள்.

அவருக்குப் பாராட்டுகள் - அதேநேரத்தில், திரா விடர் கழகத்தினுடைய மிக முக்கியமான ஒரு நன்றி யையும் இந்த நேரத்தில் அவருக்குச் சொல்லவேண்டும். அதை தவறாமல் சிறப்பாக இயக்குநர் துரை வையாபுரி அவர்கள் காட்டியிருக்கிறார்.

டில்லி பெரியார் மய்யம்!

டில்லிக்குச் சென்றால், இன்றைக்கு முழு வீச்சாக திராவிடக் கொள்கையைப் பரப்பிட, அய்ந்து மாடி கட்டடம் இருக்கிறது - பெரியார் மய்யம் என்ற பெயரில்.

அந்த அய்ந்து மாடி கட்டடம் எழும்புவதற்கு உதவிகரமாக இருந்தோர் என்று சொன்னால், மறுமலர்ச்சி திராவிடர் கழகத்தைச் சார்ந்த வைகோ அவர்களும்,  அமைச்சராக இருந்த தோழர் கண்ணப்பன் போன்றவர்களும்தான்.

டில்லி, பாம்னோலி என்ற பகுதியில் பெரியார் மய்யம் தொடங்கப்பட்டு, அது வளர்ந்து வந்து மக்களுடைய ஆதரவைப் பார்த்தவுடன், அன்றைக்கு மூத்த ஒன்றிய அமைச்சர் அத்வானி அவர்களும், கருநாடகத்தைச் சார்ந்த ஒருவர் இணையமைச்சராகவும் இருந்தார்கள்;  உச்சநீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தும், வழக்குரைஞர் சொன்னதையும் கேட் காமல், புல்டோசரை விட்டு, அந்த பெரியார் மய்யத்தை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.

அந்த நேரத்தில், நாங்கள் பதற்றப்பட்டு இருந்த நேரத்தில், நான் தொடர்பு கொண்ட ஒரே ஒருவர், நம்முடைய சகோதரர் வைகோ அவர்கள்தான்! 

உடனே புறப்பட்டுச் சென்று, வேக வேகமாக பேசி னார்கள். ஆனால், உடனடியாக அதற்குப் பலனில்லை என்றவுடன், எங்களை டில்லிக்குச் வரச் சொன்னார்கள். நாங்கள் சென்றோம். அப்பொழுது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தார்கள்.

பொதுமக்களின் உரிமைக்காகப் 

போராடக் கூடியவர்கள் என்று 

பிரதமர் வாஜ்பேயிடம் அறிமுகப்படுத்தினார்!

நாங்கள் எல்லாம் சென்று, பிரதமர் வாஜ்பேயி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம்இருந்தார்கள். அப்பொழுது என்னை அறிமுகப்படுத்திய பொழுது, என்னை சாதாரணமாகச் சொல்லவில்லை. பிரதமர் வாஜ்பேயி அவர்களிடம், ‘‘நாங்கள் எல்லாம் அரசியலில் நிற்கக் கூடிவர்கள்; சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் போகக்கூடியவர்கள். இவர்கள், தந்தை பெரியார் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப் பவர்கள். இவர்கள் வாக்குக் கேட்கக்கூடியவர்கள் அல்ல; பொதுமக்களுக்காக, அவர்களின் உரிமைகளுக் காகப் போராடக்கூடியவர்கள்'' என்று சொன்னார். ‘மிலி டண்ட் கேடர்கள்' (militant caders) என்றார்.

வி.பி.சிங் அவர்களும், வைகோ அவர்களும், பிரதமர் வாஜ்பேயியிடம் பெரியார் மய்யக் கட்டடம் இடித்த விஷயத்தைச் சொன்னார்கள்.

வைகோ அவர்களுடைய சரித்திர சாதனைக்கு நாங்கள் எப்படி கைமாறு செலுத்துவோம்!
எந்த இடத்தில் அவர்கள் நிலம் கேட்கிறார்களோ, அந்த இடத்தில் நிலம் தரவேண்டும் என்று பிரதமரை சொல்ல வைத்த பெருமையும், அங்கே அய்ந்து மாடி கட்டடம் எழுந்து நிற்கிறது என்றால், அதைவிட வைகோ அவர்களுடைய சரித்திர சாதனைக்கு நாங்கள் எப்படி கைமாறு செலுத்துவோம். அவருக்கு நன்றி செலுத்தத் தான் இந்த விழாவிற்கு வந்தோம்.
அந்த காலத்தைத் தாண்டிய, காலம் அறிந்து செயல் பட்டு, அவர் தந்தை பெரியாருக்கு நீங்கள் செய்திருக்கிற மரியாதை இருக்கிறதே, அது வரலாற்று ஆவணத்திலும், ஆவணம் என்பதை எடுத்துக் கூறி, மற்றவர்கள் உரையாற்ற வழிவிட்டு, 
எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், உங்களு டைய அடக்கம்மூலம், உங்கள் ஆற்றல்மூலம், உங்கள் வீரத்தின் மூலம், எல்லாவற்றையும் தாண்டி, கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றினீர்களே அந்த மாமனிதத்தின் மூலமாக, என்றைக்கும் நீங்கள் வழிகாட்டியாக இருப்பீர்கள்.
வரலாற்றுக்கு வரலாறு படைக்கக் கூடியவராக இருப்பீர்கள்.
வாழ்க, வளர்க!

திராவிட இனத்தினுடைய வரலாற்றைப் 
பதிவு செய்யவேண்டும்
அதேநேரத்தில், உங்கள் உடல்நலன் முக்கியம்.  நடந்தது போதும் - நடக்க வையுங்கள் மற்றவர்களை! நடக்க வேண்டியவைகளை நடத்துங்கள் - அதற்கு உங்களுடைய ஆலோசனைகளும், உங்களுடைய கருத்துதுரைகளையும், உங்களுடைய கொள்கைப் பார்வைகளும் என்றைக்கும், எல்லோருக்கும், தமிழர்க ளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்களுக்கு மட்டுமல்ல - மனித உரிமைகள் பறிக்கப்படக் கூடிய நேரத்தில், அவர்கள் அத்துணைப் பேருக்கும் தேவை என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இதுபோன்ற ஆவணப்படங்கள் திராவிட இனத்தினுடைய வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால், வரலாற்றுத் திரிபுவாதிகள்தான் இப்பொழுது மிகப்பெரிய அளவிற்குப் புது வரலாறாகவே புனைந்து கொண்டிருக்கிறார்கள். வரலாற்றை மறைக் கக்கூடிய நிலைகள் வந்திருக்கின்றன.

எனவேதான், இந்தப் பணி, காலத்தால் கருதி, மிக முக்கியமாக சிறப்பாக செய்யப்பட்ட பணி. இதற்கு ஒத்துழைத்த அத்துணை பேருக்கும் நன்றி!
வைகோவிற்கு வாழ்த்துகள்!
அவருடைய வாழ்விணையருக்கும், குடும்பத்தவ ருக்கும் - அவர் எந்த அளவிற்கு சிறைச்சாலையில் கொடுமையை அனுபவித்தபொழுது, வெளியில் இருந்து அதைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள் அல்லவா - அவர்கள் அத்துணைப்  பேருக்கும் பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து, எத்தனை இன்னல்கள், சோதனைகள், வேதனைகள் வந்தாலும், அதனை சாதனைகளாக ஆக்குவதற்கு, யாருக்காவது சங்கடம் இருக்குமேயானால், தயவு செய்து வைகோ அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்; உற்சாகத்தைப் பெறுவீர்கள்! வைகோ அவர்களுடைய வாழ்க்கை வரலாறு - உங்களுக்கு வழிகாட்டியாக, ஒளியூட்டியாக இருக்கும் என்று சொல்லி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க வைகோ!
வளர்க திராவிடம்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டுரையாற்றினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணத்தை விரிவாக விளக்கும் வகையில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தயாரித்து, இயக்கிய 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று (11.9.2022) நடைபெற்றது. 

விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். கவிஞர் வைரமுத்து முன்னிலை வகித்தார்.
அதைத்தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப் பட்டது. ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் ஒளிபரப்பானது.  இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைசாற்றினார்.

விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலா ளர்கள் ஜீவன், கழகக்குமார், வழக்குரைஞர் எஸ்.வெற்றிவேல், மாநில இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment