‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா சிறப்புரை

  ‘விடுதலை’யை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமை, ஒவ்வொரு தமிழனுடைய தோளின்மீதும் சுமத்தப்பட்டு இருக்கிறது;

அந்தக் கடமையை நிறைவாகச் செய்யவேண்டிய பணியில்,

திராவிடர் கழகத்திற்கு-அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு ம.தி.மு.க. துணை நிற்கும், தோள் கொடுக்கும்!

சென்னை, செப்.19   ‘விடுதலை’யை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுடைய தோளின்மீதும் சுமத்தப்பட்டு இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவாகச் செய்யவேண்டிய பணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செய லாளர் அன்புத் தலைவர் வைகோ அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரும், திராவிடர் கழகத்திற்கு, அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களுக்குத் துணை நிற்போம், தோள் கொடுப்போம்  என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள்.

‘விடுதலை' சந்தா வழங்கும் விழா!
கடந்த 6.9.2022 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
அடடா தமிழா
எடடா படை நீ
அடிமை விலங்கை உடைத்தெறி
இடடா ஆணை
கொடடா செந்நீர்
இனத்தை காப்போம்
நாள்குறி
நடடா களத்தே
எடடா கை வாள் நட
உன் பகைவன் தலை பறி
தொடடா போரை
விடடா கணைகள்
சுடடா எழட்டும் தீப்பொறி நீ
சுடடா எழட்டும் தீப்பொறி!
என்ற வார்த்தைக்கு வரிவடிவம் கொடுக்கும் விதத் தில், பெரியார் திடலில் ‘விடுதலை' ஏட்டின் 88 ஆண்டுகால தொடர் பணியைப் பாராட்டி, அதில் 60 ஆண்டுகால நிறைபணியை ஆற்றியிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களுடைய பணிகளையும் பாராட்டி, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த உன்னதமான நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நெறியாள்மை செய்துகொண்டிருக் கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு அய்யா கலி.பூங்குன்றன் அவர்களே,
பாராட்டுரை வழங்க வருகை தந்திருக்கின்ற -  ஒதுக்கி வைக்கப்படுகின்ற இடதுகை போல் இட்டு வைக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை கீதமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற - கற்பி - புரட்சி செய் - ஒன்று சேர் என்ற தாரக மந்திரத்தை வார்த்தை வரியாக அல்லாமல், வாழ்க்கை நெறியாகக் கொண்டிருக் கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய நிறுவன தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தக் காத்தி ருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் ஆ.இராசா அவர்களே,
நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அன்புத் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர் களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக் கின்ற, இரண்டொரு நாள்களுக்கு முன்புகூட சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு இருக்கின்ற எனது இனிய தோழமைக்குரிய வீரபாண்டியன் உள்ளிட்ட, அரங்கம் முழுவதும் நிரம்பியிருக்கின்ற கருஞ்சட்டைப் போர்ப் படையின் வீரமிக்கத் தோழர்களே, அன்புத் தாய் மார்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த சகோதரர்களே - உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் உரித்தாக்கு கின்றேன்.

கருஞ்சட்டைப் போர்ப்படையின் 
60 ஆயிரம் சந்தாக்களை செலுத்துகின்ற விழா!
‘விடுதலை' ஏட்டில் 60 ஆண்டுகால  ஆசிரியர்ப் பணியை நினைவுகூருகின்ற விதத்தில், கருஞ்சட்டைப் போர்ப்படையினர் 60 ஆயிரம் சந்தாக்களை செலுத்து கின்ற அந்த முன்னேற்பாட்டில், இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோல் ஒரு தொடக்கம் எப்பொழுதும் இருந்த தில்லை; இதுபோன்ற ஓர் எழுச்சி எப்பொழுதும் பூத்துக் குலுங்கியதில்லை என்கின்ற அளவிற்கு, இளமையும், எழுச்சியும் பொங்க இந்த விழா நடந்துகொண்டிருக் கின்றது.

எங்கள் அன்புத் தலைவரின் சார்பில், அய்யா ஆசிரியர் அவர்களை வாழ்த்துகின்றேன்-வணங்குகின்றேன்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எங்கள் அன்புத் தலைவர் வைகோ அவர்களின் சார்பில், அய்யா மானமிகு ஆசிரியர் அவர்களை வாழ்த்துகின்றேன், வணங்குகின்றேன்.
திராவிட இயக்கத்தின் பேராயுதமாக ‘விடுதலை' இன்றும் நடை பயின்றுகொண்டிருக்கின்றது. திராவிட இயக்க வரலாற்றில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட பத் திரிகைகள் வந்திருக்கின்றன. அத்தனை பத்திரிகைகளும் இன்றைக்கு இருக்கின்றதா என்று சொன்னால், பெயர் சொல்லி எண்ணிவிடுகின்ற இடத்தில்தான், பத்திரிகைகள் குறைந்திருக்கின்றன.
ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை;
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!
வான் தவழும் வெண்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை!
நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!
ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழைமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார் -
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!
அய்யா தந்தை பெரியார் அவர்கள்
‘உண்மை', ‘குடிஅரசு‘, ‘பகுத்தறிவு',  ‘விடுதலை' என்கின்ற பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார்.
தமிழ்த் தாய்மகன் பேரறிஞர் அண்ணா அவர்கள்,  ‘காஞ்சி', ‘திராவிட நாடு' உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தினார்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், ‘முரசொலி', ‘முத்தாரம்', ‘மறவன் மடல்' உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திராவிடர் இயக்கத்தின் போர்வாள் எங்கள் அன்புத் தலைவர் வைகோ அவர்கள், ‘சங்கொலி' என்ற இதழை நடத்திக் கொண்டிருக்கின்றார்.
தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற மாண்புமிகு அண்ணன் தளபதி அவர்கள், ‘இளைய சூரியன்' என்ற பத்திரிகையை நடத்தினார்.

பத்திரிகைகள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றன!
நூற்றுக்கணக்கான பத்திரிகைகள், தொடக்கத்தில் நான் சொன்னதுபோன்று, ஏறக்குறைய 300-க்கும் மேற் பட்ட பத்திரிகைகள் இந்த மண்ணில் வந்து பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, ஒரு மிகப்பெரிய மாற் றத்தை உருவாக்கி இருக்கின்றன.
அந்த வகையில்தான், ‘விடுதலை'யும் தன்னுடைய பங்கை தமிழ் மண்ணில் செம்மையாக தன்னுடைய பணியை நிறைவாகச் செய்துகொண்டிருக்கிறது.
இங்கே உரையாற்றுகின்றபொழுது, பொதுச்செயலா ளர் அண்ணன் அவர்கள் சொன்னார்,  60 ஆண்டுகள் ஒரு பத்திரிகையினுடைய ஆசிரியராக இருந்த ஒரே தலைவராக, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் இருக்கிறார் என்று. அது ஒரு கின்னஸ் சாதனையாக நிச்சயமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது, நாள்தோறும் அது ஒரு பிரசவ வேதனையாகத்தான் நிச்சயமாக இருக்க முடியும். அந்தப் பிரசவ வேதனையில்தான், நாள்தோறும் அவர் ‘விடுதலை’ ஏட்டைப் பிரசவித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நான் உள்ளீடாகக் கொள்கின்றேன்.

கவிஞர் கண்ணதாசனின் கூற்று!
கவிஞர் கண்ணதாசன் சொல்வார், ‘‘நன்றாக இருக் கின்ற ஒரு மனிதனை அல்லது நன்றாக இருக்கின்ற நண்பனை - அவருடைய வாழ்க்கையில் இடையூறு செய்யவேண்டும் என்று நீ விரும்பினால், ஒன்று திரைப்படம் எடுக்கச் சொல்லுங்கள்; அல்லது ஒரு பத் திரிகை நடத்தச் சொல்லுங்கள், அவன் கதை முடிந்து விடும்'' என்று சொல்வார்.
அதே நிலைமை, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கு உருவாகிறது; அவருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. உங்களுக்கு நிதி தருகிறோம்; ஆனால், கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து பின் வாங்குங்கள் என்று சொன்னார்கள்.

நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக நான் தொடங்கி நடத்துகின்ற இதழ்!
‘‘இது எனக்காகவோ அல்லது என்னுடைய சிறப்பு களை எடுத்துச் சொல்வதற்காகவோ நடத்தப்படுகின்ற இதழ் அல்ல. இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக நான் தொடங்கி நடத்துகின்ற இதழ்.
எனவே, தனி ஆளாக  நான் எழுதி, அதை அச்சில் கோர்த்து, தனி ஆளாகவே திண்ணையில் உட்கார்ந்து அதை உரக்கப் படித்துக் கொண்டிருப்பேனே தவிர, ஒருபோதும் இதை நான் நிறுத்திவிட மாட்டேன்'' என்று சூளுரைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய தீர்க்கத்தரிசனம்தான் 88 ஆண்டு களைக் கடந்து இன்றைக்கு நடைபயின்றுக் கொண்டி ருக்கின்றது.

பத்திரிகையை ‘மெகசின்’ என்று 
அழைப்பதற்கு என்ன காரணம்? 
‘விடுதலை' ஒரு வாரப் பத்திரிகையாகத் தொடங் கப்பட்டது. பத்திரிகை என்று சொல்லுகின்றபொழுது, அதை ஆங்கிலத்தில் ‘மெகசின்' என்று சொல்வார்கள். இங்கே காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அய்யா இராமநாதன் அவர்கள் அமர்ந்திருக்கிறார். காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அல்லது பாதுகாப்புப் படையில் இருப்பவர்களுக்குத் தெரியும் - துப்பாக்கியில், அந்தத் தோட்டாக்களை வைக்கின்ற இடத்திற்குப் பெயர் ‘மெகசின்' என்று சொல்வார்கள். துப்பாக்கியில், அந்தத் தோட்டாக்களைப் பாதுகாக்கின்ற இடத்திற்கு ‘மெகசின்' என்று சொல்வார்கள்; அது போன்றுதான், எழுத்துக்கள், பத்திரிகைகள் தோட்டாக் களைவிட வீரியமாகச் சொல்லக்கூடிய அந்த நிகழ் விற்காகத்தான் பத்திரிகையை ‘மெகசின்' என்று அழைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
எனவேதான், ஆயிரம் குத்து வாள்களைக் காட்டிலும், ஒரு பத்திரிகை வலிமையானது என்று நெப்போலியன் போர் முனையில் சொன்னான்.
எனவே, இந்தப் போர் முனையில் நிற்கின்ற இந்த இதழ்களை, முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமை தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு இருக்கிறது.

சந்தா சேர்க்கின்ற பணியில் என்னையும் நான் இணைத்துக் கொண்டேன்!
நான் சார்ந்திருக்கின்ற செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சுந்தரம் அவர்கள், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தொலைப்பேசியில் அழைத்து, ‘‘சந்தாக்கள் சேர்க்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது; அதற்காக உங்களைச் சந்திக்கவேண்டும்'' என்று சொன்னார்.
நான் தற்காப்புக் கலையின் சிறப்பு முகாமிற்காக கேரளாவிற்குச் செல்லுகிறேன்; திரும்பி வந்தவுடன் சந்திக்கிறேன் என்று சொன்னேன்.
இங்கே வந்தவுடன், ஆசிரியர் அய்யாவிடம் அழைத் துச் சென்று, சந்தா சேர்க்கின்ற பணியில் என்னையும் நான் இணைத்துக் கொண்டேன்.
எனவே, இதற்காக, எங்கள் தோழர்களிடம், நண்பர்களிடம் சந்தா சேர்க்கின்ற பணியில் நானும் என்னை இணைத்துக் கொண்டேன் என்ற செய்தியை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
‘விடுதலை' நாளேடு நடைபெறுவதன்மூலமாக, நம்முடைய தமிழ்ச் சமுதாயம் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு வரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்க முடியாது.

அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களுக்குத் 
துணை நிற்போம், தோள் கொடுப்போம்!
எனவே, ‘விடுதலை'யை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுடைய தோளின் மீதும் சுமத்தப்பட்டு இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவாகச் செய்யவேண்டிய பணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் அன்புத் தலைவர் வைகோ அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்திற்கு, அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களுக்குத் துணை நிற்போம், தோள் கொடுப்போம் என்று காலத்தின் அருமைப்பாட்டைக் கருதி, இன்னும் நீங்கள் நிரம்ப எழுதவேண்டும்; எல்லோருடைய விருப்பத்தைப் போன்று, நீங்கள் 90 ஆண்டைக் கடக்கின்ற இந்த வேளையில், நூறாண்டுகளைக் கடக்கவேண்டிய அந்தப் பிறந்த நாள் விழாவிலும், உங்களை வாழ்த்துவதற்காக நாங்கள் எல்லாம் திரண்டிருப்போம் என்கிற செய்தியை இங்கே பதிய வைத்து, அய்யா அவர்கள் நீண்டு வாழ்ந்து, உங்கள் விரல் ரேகை தேய, குரல்வளை வலிக்க நீங்கள் பேசியதையும், சிந்தித்ததையும் எழுதிக் கொண்டு வருகிறீர்கள் - அந்தப் பணி தொடருவதற்கு இயற்கைத் துணை புரியட்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
நன்றி! வணக்கம்.
- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உரையாற்றினார்.

No comments:

Post a Comment