அக்டோபரில் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

அக்டோபரில் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

 சென்னை,செப்.21- சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரை அக்டோபர் 2 அல்லது 3 வாரத்தில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பிறகு, இதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீது ஜன. 6, 7ஆம் தேதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர், 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பொது நிதி நிலையறிக்கையை  மார்ச் 18ஆம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. பின்னர், மார்ச் 24ஆம் தேதி வரை நிதி நிலையறிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டது.

மார்ச் இறுதியில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை துறைகள்தோறும் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படியே, விவாதம் நடத்தி முடிக்கப் பட்டது. சட்டப்பேரவை விதியின்படி, ஒரு பேரவைக் கூட்டம் முடிந்து அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, வரும் நவ. 10ஆம் தேதிக்குள் பேரவைக் கூட்டத்தைநடத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. இதையடுத்து, இதற்கான பணிகளை சட்டப்பேரவைச் செயலகம் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பேரவை உறுப்பினர்கள் இருக்கை அமைப்பு தொடர்பாக பொதுப்பணித் துறையின ருடன், சட்டப்பேரவைச் செயலகம் ஆலோசனை நடத்தியுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரை வரும் அக்டோபர் 2 அல்லது 3-ஆவது வாரத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஏற்கெனவே முதலமைச்சர் அறிவித்தபடி, மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.

அத்துடன், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment