தமிழர் தலைவருக்கு மனிதநேயர் சாதனை விருது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

தமிழர் தலைவருக்கு மனிதநேயர் சாதனை விருது!

பெரியார் பன்னாட்டு மய்யம், ஆய்வு விசாரணை மய்யத்தின் கனடா கிளை, கனடா மனிதநேயர் மற்றும் டொரண்டோ மனித நேயர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து  சமூகநீதி பன்னாட்டு மாநாடு செப்டம்பர் 24, 25 இரு நாள்களிலும் கனடா நாட்டில் டொரண்டோ நகரில் நடத்தியுள்ளது.

தமிழ்நாடு உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பான மாநாடு இது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொலி மூலம்  அரிய கருத்து விருந்து படைத்தனர்.

பெரியாரை உலகமயமாக்குவோம், உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம் என்ற சூளுரைகள் மாநாட்டின் தனித் தன்மையான முழக்கமாகும்.

மாநாட்டுக்குச் சிகரம் வைத்ததுபோல, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மாநாட்டில் கனடா மனிதநேயர் அமைப்பின் சார்பில் (Humanist Canada) 2022ஆம் ஆண்டுக்கான "மனிதநேயர் சாதனை விருது" (2022 Humanist Achievement) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

2019 செப்டம்பரில் (21,22) அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்காவின் மனிதநேயர் சங்கம் சார்பில் (Humanist Association) ஆசிரியர் அவர்களுக்கு "மனிதநேய வாழ் நாள் சாதனையாளர்"  (Life Time Achievement) விருது வழங்கப்பட்டது.

விருதினை இரண்டு முறை பெற்றுக் கொண்ட போதும், தனக்கே உரித்தான தன்னடக்கத்தோடு, இது எனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட விருதல்ல - என்  சக தோழர்களுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட விருது என்று அறிவித்தார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

89 வயதில் 80 ஆண்டு பொது வாழ்க்கை - இயக்கத் தொண்டு, 88 ஆண்டு 'விடுதலை'யின் 60 ஆண்டு ஆசிரியர். முப்பதுக்கும் மேற்பட்ட சிறைவாசம் என்பதிலெல்லாம் இவருக்கு இணையாக இன்னொரு வரை எடுத்துக்காட்டுதல் இயலாது.

89க்கு 80, 88க்கு 60 என்ற விகிதாசாரம் இவருக்கு மட்டுமே உரித்தான மிகப் பெரும் சாதனையாகும்.

இவ்வளவுக்கும் உடல்நலம் என்று எடுத்துக் கொண்டால் உடலில் அறுவை சிகிச்சை செய்யப்படாத இடமே இல்லை என்று சொல்லத்தக்கதாகும். 

இவ்வளவு இடர்ப்பாடுகளையும், இன்னல்களையும் சுமந்து கொண்டு மாதத்திற்கு 20 நாட்களுக்குமேல் சுற்றுப் பயணம் செய்து  அவர் மேற்கொண்டு வரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத் தொண்டு என்பது அசாதாரணமானது.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்குப் பிறகு திராவிடர் கழகம் அவ்வளவுதான்; பெரியார் என்னும் மேருமலை எங்கே  - 'இதுகள்' எங்கே என்று ஏகடியம் பேசியவர்கள் எழுதியவர்கள் ஆசைபட்டவர்கள் உண்டு.

இயக்கத்துக்குள்ளேயே முதுகில் விழுந்த குத்துகளும் உண்டு, பெரியார் உருவாக்கிய அறக்கட்டளை அவ்வளவுதான் என்று 'ஆருடம்' கணித்த 'கனவான்கள்' உண்டு. வருமான வரித்துறை மேல் முறையீட்டு மன்றம் (Income Tax  Appellate Tribunal) வரை சென்று இது அறக்கட்டளைதான் என்ற தீர்ப்பைப் பெற்று நிலை நிறுத்திய பெருமான் நம் ஆசிரியர்.

வருமான வரித்துறைக்குக் கட்டிய பணத்தை வட்டியோடு திரும்பப் பெற்ற சாதனைக்குரிய நாயகரும் இவரே!

நான்கு பக்கம் விடுதலை ஏட்டை எட்டுப் பக்கமாக்கி - எழில் வண்ணம் குலுங்க நடைபோடச் செய்தவர்! சென்னையோடு இல்லாமல் மேலும் திருச்சியிலும் ஒரு பதிப்பைக் கொண்டு வந்தவர்.

இயக்க நூல்கள் வெளியீடு என்பது ஓர் இயக்கமாகவே நடைபெறுகிறது. நாட்டில் நடக்கும் புத்தகச் சந்தைகளில் விற்பனையில் முதலிடம் நமது வெளியீடுகளுக்கே என்பது - தந்தை பெரியார்  அவர்களின் கருத்துப் பரவல் மேலோங்கியதற்கான அளவுகோல் அல்லவா!

சங்பரிவார்கள் என்னதான் சதுராட்டம் போட்டாலும், சங்கதி இங்கு எடுபடாது என்ற நிலை இறுகி நிற்பதற்குக் காரணம் பெரியார் கருத்துகள் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாகப் பிரவாகம் எடுத்து நிற்பதுதானே!  இதற்கு ஆணிவேர், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கு பட்டறையாக இருப்பவர் -  விரைவில் 90ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது ஆசிரியர் அல்லவா!

ஒரு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகளைக் கணக்கிட்டு 50 ஆயிரம் என்றும், 60 ஆயிரம் என்றும் சந்தாக்களைக் கொடுத்தது - இவருக்கல்லால் வேறு யாருக்கு?

வெள்ளியால் மட்டுமல்ல, தங்கத்தாலும் எடை போட்டு அழகு பார்த்தனர் தமிழர்கள் என்றால் அதன் பொருள் என்ன? அவை எல்லாம் இயக்கத்துக்கே அளித்தவர் - ஒரு செப்புக் காசுகூட தமக்கோ, குடும்பத் துக்கோ அல்ல!

இவருடைய தொண்டுக்கு ஆதரவாக இருக்கிறோம் - நன்றி செலுத் துகிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் அவரின் தொண்டினை எதிர்பார்க்கிறோம் என்பதற்கான அச்சாரம் தான் இவை.  பொதுநல சுயநலம் தான்!

தந்தை பெரியார் காலத்திலும், அன்னை மணியம்யை£ர் காலத்திலும் இருந்த கல்வி நிறுவனங்கள் எத்தனை? இன்றுபல்கலைக் கழகமே உருவாகும் அளவுக்கு எண்ணற்ற கல்விச் சாலைகள் நடைபெறுவது இவர் காலத்தில் அல்லவா! தந்தை பெரியார் இருந்து இவற்றைப் பார்க்கவில்லையே என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆதங்கப்பட்டதுண்டே!

ஊருக்கு நாலைந்து நரைத்த தலைக் கருஞ்சட்டையினர் இருப்பார்கள் என்று சொன்ன காலம் போய் இன்று இளைஞர்களின் பாசறையாக அல்லவா பேருரு பெற்று நிற்கிறது கழகம்.

சமூகத் துறையில் மட்டுமல்ல - அரசியலையும் திராவிட இயக்க சித்தாந்த பாதையில் வழி நடத்தும் இடத்தில் அல்லவா இருக்கிறார் இவர்.

எங்கள் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடலே என்று தி.மு.க. தலைவர் மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் பிரகடனப்படுத்தவில்லையா!

'திராவிட மாடல் அரசு' என்று மார்தட்டவில்லையா? இதே கனடா மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்கவில்லையா முதலமைச்சர்!

பெரியார் பன்னாட்டு அமைப்பை அமெரிக்காவின் சிகாகோ நகரில் உருவாக்கி இன்று உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பி பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறதே!

பன்னாட்டுப் பெரியார் சுயமரியாதை மாநாடுகள் உலகின் பல நாடுகளிலும் இரண்டாண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறதே!

உலக மனிதநேய அமைப்பில் (IHEU) திராவிடர் கழகம் முக்கிய உறுப்பாக உள்ளதே!

இன்னும் எவ்வளவு விருதுகள் கொடுத்தாலும் அந்த விருதுகளுக்குத்தான் பெருமை என்பதுதான் உண்மை.

பெரியார் பெருந்தொண்டர்கள், கருஞ்சட்டைத் தோழர்கள், உலகப் பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் - வாழ்த்துகிறோம் - பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!


No comments:

Post a Comment