60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 5, 2022

60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்!

கி.வீரமணி

'விடுதலை' ஆசிரியப் பொறுப்பு மட்டுமல்ல, ஆளுமையின் முழுப் பொறுப்பையும்கூட தந்தை பெரியார் அவர்கள் என்னிடம் விட்டு 'வேலை வாங்கினார்'!

'விடுதலை'யை வீரமணியிடம் ஏகபோகமாக விடுகிறேன்' என்று அய்யா விடுத்த அறிக்கை ('விடுதலை' 6.6.1964) வெறும் வார்த்தை ஊக்கமல்ல -  அவர் அனைத்துப் பணிகள் பொறுப்புகளையும் என்னிடமே விட்டு விட்டார்.

தந்தை பெரியாரிடம் இருந்த தலைசிறந்த பண்பு அது! அவர் எளிதில் யாரையும் 'நம்ப' மாட்டார். ஆனால் நம்பிய பிறகு அவ்வப்போது அவர்களது நிர்வாகத்திலும் குறுக்கிட மாட்டார். எளிதில் அவர்களைச் சந்தேகமும் பட்டு, 'எடுத்தேன் - கவிழ்த்தேன்' என்று சிலரைப் போல நடந்து கொள்ளவும் மாட்டார்! அவர்கள் தவறுகளைச் செய்தார்கள் என்ற செய்தியும் தகவலும் அவர் காதுகளுக்குச் சென்றாலும்கூட, போதிய சாட்சியங்களோ, சான்றாவணங்களோகூட இருந்தன என்று அவரே உணர்ந்த நிலையிலும் கூட, அவரே அடிக்கடி கூறியதுபோல ஒரு 'லாங் மார்ஜின்' - நீண்ட இடைவெளி வாய்ப்பு (Long Margin) கொடுத்துத்தான் பார்ப்போமே, அதே தவறை அவர் மீண்டும் செய்கிறாரா என்று பார்ப் போம், பார்ப்போம் என்று பொறுமை காட்டுவார்!

இயக்க நடவடிக்கை வரலாற்றில் இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. 

அக்காலத்திய நாளேடு அச்சிடப்படும் 'நியூஸ் பிரிண்ட்'தாள் அரசு ஒதுக்கீட்டிற்குரியது. அதன் (Allotment Quota) ஒதுக்கீட்டினைப் பெற்ற பிறகு மொத்தமாக அந்த ஒதுக்கீட்டிற்குரிய (லட்சக் கணக்கில்) முழுத் தொகையையும் கட்டி எடுக்க வேண்டும்; அல்லது வங்கிகளில் பொறுப்பில் கடன் வாங்கி, அவர் பொறுப்பில் நியூஸ் பிரிண்ட் பேல்களை குடோன்களில் வைத்து, தேவைப் படும்போது காகித அளவிற்கு எடுக்க, வங்கியில் அதற்குரிய தொகையைச் செலுத்தியே எடுக்க முடியும்.

நட்டத்தில் நடக்கும் நாளேடு 'விடுதலை';  மற்ற செலவினங்களுக்கு நாங்கள் எப்படியோ வரவு - செலவுகளை 'விடுதலை'யைப் பரப்புவதன்மூலம்  சரிக் கட்டிக் கொண்டாலும், பெரிய செலவு - அன்றாடம் நாளிதழாக அச்சிட்டு வெளியிட நியூஸ் பிரிண்ட் வாங்கும் பெரிய தொகை அய்யா அவரது டிரஸ்ட் மூலம் அளிக்கும் நன்கொடை போன்றதே! திருப்பி அவர்களுக்கு தர முடியாத அளவுதான் அதன் நிதி நிர்வாக மேலாண்மை அமைந்திருந்தது!

'பேப்பர் கோட்டா'வை வாங்க அய்யாவிடம் செக் கேட்டு கடிதம் எழுதுவோம்.

'விடுதலை'யின் நிர்வாகத்தில் உள்ள வரவு - செலவு வங்கி இருப்புகளை நாள்தோறும் அய்யாவுக்கு அனுப்பி வைக்கத் தவற மாட்டோம். அதை நுண்ணிய முறையில் பார்த்து சிற்சில நேரங்களில் நேரில் விளக்கமும் கேட்டு திருப்தி அடைவார்.

எனது ஆசிரியப் பணியுடன் மேலும் தாங்கும் கூடுதல் சுமை இது! அய்யாவின் இந்த நம்பிக்கை காரணம், நமக்கு தவறு  நடக்காமல் பார்க்க ஒரு எச்சரிக்கை மணி போன்றது; பாதுகாப்பு கேடயமும் ஆகும். அடிக்கடி, பேப்பர் எடுக்க அய்யாவிற்கு எழுதி 'செக்' வாங்கும் முறைதான் அப்போது இருந்த நடைமுறை.

அய்யா ஒருமுறை சென்னை  வந்தபோது - நான் பொறுப்பேற்ற சில மாதங்களில் - என்னை அழைத்து, 'உங்க பேரில் சென்னை கூட்டுறவு வங்கியில் ஒரு கணக்கு திறங்க, அதில் ஒரு தொகையை நானே போட்டு விடுகிறேன்; அதை வைத்துக் கொள்ளுங்கள். என்னிடமிருந்து செக் வர கால தாமதம் ஆனாலோ அல்லது அவசரச் செலவுக்கு பணம் ஏதும் தேவைப்பட்டால்  - 'விடுதலை' சம்பந்தமாகத்தான்;  அதிலிருந்து எடுத்துக் கொடுத்து, பணம், வந்த பிறகு அதிலேயே போட்டு, ஒரு தயார் நிலை கணக்கு மாதிரி வைத்துக் கொள்ளுங்கள் என்று 'செக்' எழுதிக் கொடுத்து கணக்குத் திறக்கச் செய்தார். கணக்குத் திறந்து அதை நான் பயன்படுத்தியது வெகு, வெகு சொற்ப தடவைகள்தான்!

திடீரென்று ஒரு நாள் எனக்கு வருமான வரித்துறையிலிருந்து - நீங்கள் கோவை மில் ஒன்றில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளீர்களே - அதற்கான விளக்கம் (Sources) எங்கிருந்து வந்த வருமானத்தின் மூலம் நீங்கள் அங்கே முதலீடு செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டு "நோட்டீஸ்" வந்தவுடன் எனக்குப் பெரும் அதிர்ச்சி!

உடனே எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன்.

அப்போது மாதா மாதம் எனது மாமனார் - எங்கள் வீட்டுப் பராமரிப்புச் செலவுக்கு வெகு குறைந்த தொகை 'செக்' அல்லது 'டி.டி.' மூலம் அனுப்புவதை ரொக்கமாக மாற்றி செலவிட அடையாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்தான் ஒரே ஒரு கணக்கு எனக்கு உண்டு. எனது வாழ் வியிணையருக்கும் வேறு எந்த தனிக் கணக்கும் கிடையாது.

அவருக்கும் புரியவில்லை; "ஒரு வேளை எங்கள் அப்பா - அம்மா உங்களுக்காக நம்மைக் கேட்காமலேயே இப்படி ஒரு முதலீடு - பாது காப்பாக இருக்கட்டுமே என்று போட்டிருப் பார்களோ, புரியவில்லை" என்று அவர்களையே கேட்டுப் பார்ப்போம் என்று அவர்களைத் தொடர்பு கொண்டு, கேட்டபோது, அப்படி ஏதும் நாங்கள் போடவில்லையே என்று பதில் கூறியதும் எனக்கு மேலும் மனக் குழப்பம் ஏற்படவே செய்தது! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று யோசித்த நிலையில் - அய்யா திருச்சியில் பெரியார் மாளிகையில் இருக்கிறார் என்று அறிந்து நான் உடனே திருச்சிக்கு, அய்யா அவர்களிடம் இந்த முக்கிய செய்தியைத் தெரிவித்து, அய்யா விடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கலாம் என்று முடிவு செய்து அங்கே கிளம்பி சென்றேன்.

'என்ன திடீரென்று அவசரமாக வந்திருக் கிறீர்கள், என்ன செய்தி? என்று கேட்டார்.

உடனே நடந்த விவரங்களை, வந்த வருமான வரி விளக்க நோட்டீஸ் பற்றியும், எல்லாவற்றையும் - மாமனாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்தி உள்பட - சொன்னேன். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த தந்தை பெரியார் சிரித்தவாறு, "நான் தான் உங்கள் பெயரில் கோவை மில்லில் பணம் போட்டேன். அது இயக்கப் பணம்தான். வங்கி வட்டிகளைவிட மில் மூலம் வரும் வட்டி கூடுதலாகும். அதைப் பெருக்குவதற்குத்தான் போட்டேன். அந்த விளக்கத்தை நானே தெரிவிக் கிறேன், அல்லது உங்களிடம் வந்து கேட்டால் நீங்களே தெரிவித்து விடுங்க" என்றார். எனக்குப் பெருமூச்சு வந்தது! எனக்கு நிம்மதி கிடைத்தது! அய்யா வைத்த நம்பிக்கை எங்கெங்கெல்லாம் சென்று என்னனென்ன விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தியது பார்த்தீர்களா?

'விடுதலை' பொறுப்பில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு காசும் எப்படிக் கவனத்தோடு செலவழிக்கப்பட வேண்டும்; வீண் செலவுகளை எப்படி  தவிர்க்க வேண்டும் என்ற கவலையும் - நம் பொறுப்பையும் என்னுள் அதிகப்படுத்தி பெரும் பாதுகாப்பு அரணாக அமைந்தது.

நம் வழிகாட்டி, அறிவு ஆசான் இத்தகைய நம்பிக்கையை நம்மீது வைத்துள்ளபோது, நமது கடமையாற்றும் நாணயமும், ஒழுக்கமும், நேர்மையும்  மிக அதிகமான - நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்பட வேண்டும் என்பதுதான் எமது உற்சாகம் குறையாத பணி யாற்றலுக்கு அடிப்படையாகும்.

மற்ற சில செய்திகளையும் வரும் தொடர் கட்டுரையில் காண்போம்.

No comments:

Post a Comment