தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பிதழ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பிதழ்

நடிகவேள் எம்.ஆர். ராதா நினைவு நாள் [17.9.2022]

தந்தை பெரியாரின் 101ஆவது பிறந்த நாளாகிய செப்டம்பர் 17ஆம் நாள் அன்று இயற்கை எய்திய பெரியாரின் தொண்டர் பெரியாரின் போர் வாள் நடிகவேள் எம்.ஆர். ராதாவைப் பற்றிய நினைவுகள் சில:-

நடிகவேள் எம்.ஆர். ராதாவைப் பற்றி 

தந்தை பெரியார்

நான் எப்படி சமுதாயத் துறையில் மாறுதல் எண்ணமும், புரட்சிக் கருத்துகளும் கொண்டு பாடு பட்டு வருகிறேனோ, அப்படியே ராதா அவர்களும் நமது கருத்துகளை நாடகத் துறையில் விடாப்பிடியாக நடத்திக் கொண்டு வருபவர் ஆவார்.

ராதாவைப்பற்றி அறிஞர் அண்ணா:

ராதாவின் ஒரு நாடகமும் சரி எங்கள் 100 மாநாடு களும் சரி. திராவிட வரலாற்றை நான் எழுதும்போது ராதாவைப் பற்றி அதில் அவரது மகத்தான சாதனை களைக் குறிப்பிடுவேன். நமது இயக்க ஆட்சி ஏற்படும் போது ராதாவை கலைத்துறைக்கு அமைச்சராக்குவேன்.

ராதாவைப்பற்றி கலைஞர்

திராவிடர் கழகம் பெரியார் அவர்கள் தலைமையில் வீர  நடைபோட்ட 1940-1942ஆம் ஆண்டுகளில் முதன் முறையாக இந்த இயக்கத்தோடு தொடர்புடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி இந்த இயக்கம் வளருவதற்கு ஒரு வகையில் பக்கபலமாக இருந்தவர் - இன்னும் இருப்பவர் நடிகவேள். பெரியார் - அண்ணா இலட்சியங்களை நாடகம் மூலம் பல எதிர்ப்புகளுக் கிடையே சொல்லியே தீருவேன் என்று திட உள்ளத்தோடு தன் நாடகங்களை நடத்தி வருபவர் - அவரது முடிகூட நடிக்கும்.

1) ராதாவைப் பற்றி தமிழர் தலைவர், 

ஆசிரியர் கி. வீரமணி

ஒரு நடிகரை எதிர்த்து ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது என்றால் - இதுவரையில் ஒரு நடிகரை எதிர்த்து ஒரு சட்டம் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதென்றால் அது  நடிகவேள் ராதா அவர்கள் செய்த புரட்சியின் விளைவு. மிகப் பெரிய சரித்திரம் இது.

2) ராதாவின் துணிச்சல் சாதாரண துணிச்சல் அல்ல அவரிடம் சமயோசித புத்தி உண்டு

ஒரு முறை தந்தை பெரியார் தலைமையில் நாடகம் நடைபெறும் என்று ராதா அறிவித்தார்.

நாடகத்தின் இடையில் பெரியாரை பேசுமாறு ராதா அழைக்க பெரியார் பேச ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு கதர் சட்டைத் தோழர் எழுந்து "ஏய்! ராதா! உன்னுடைய நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். இவருடைய பேச்சைக் கேட்க நாங்கள் வரவில்லை. நாடகத்தை நடத்து" என்று சத்தம் போட்டார்.

எல்லாரும் கொஞ்சம் பதற்றப்பட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.  ஆனால் அய்யா பேசுமுன் கொஞ்சமும் பதற்றப்படாமல் ராதா "நீங்கள் நாடகத்துக்குத்தானே டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்ததாக சொல்லுகின்றீர்கள்.  பெரியார் தலைமையில் நாடகம் என்று நான் போட்டிருக்கிறேன். நீங்கள் நாடகம் மட்டும்தான் பார்த்து விட்டு  செல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு சொல்கிறேன். நாடகம் முடிந்து விட்டது (பலத்த கைதட்டல்) இப்போது பெரியார் பேச்சு மட்டும்தான்.  இதற்கு மேல் நாடகம் கிடையாது. நாடகம் பார்த்து விட்டதால் நீங்கள் போகலாம்" என்று சொல்லிவிட்டு அடுத்து பெரியார் பேசுவார் என அறிவித்தார். ராதா அவர்களுக்கு எவ்வளவு அற்புதமான சமயோசிதபுத்தி இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

3. மிசா காலம் - சிறையில் நடந்தது

சிறையில் ராதா அவர்களைக் காண அவரது துணைவியார் வந்தார். வந்தவர் "ஏதோ எழுதிக் கொடுத்தால் சிறையிலிருந்து விட்டு விடுவதாகக் கூறுகிறார்களே! நீங்களும் வெளியே வரலாமே" என்றார். ராதா, "என்னவென்று எழுதிக் கொடுப்பது" என்று கேட்டார். "இனிமேல் அந்த தப்பைப் பண்ண மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் விட்டு விடுவார்களாமே!" என்று வெகுளித்தனமாகக் கூறினார்.

"இதோ பாரும்மா! எதற்காக என்னை சிறையில் கொண்டு  வந்து வைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. என்னைப் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடைத்தவருக்கும் தெரியாது.  யாருக்கும் தெரியாது. அதுதான் 'மிசா' - நான் தூங்கிக் கொண்டிருந்தேன். என்னை எழுப்பிக் கொண்டு வந்து உள்ளே தள்ளினார்கள். இனிமே அதைச் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுக்கச் சொல்கிறாயே! நான் வாழ்நாள் முழுவதும் அதை செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க சொல்கிறாயே! நான் வாழ்நாள் முழுவதும் தூங்காமல் இருப்பதா?" என்று கேட்டார். இதை எழுதிக் கொண்டிருந்த போலீசு இன்ஸ்பெக்டர் முதல்அனைவரும் சிரித்தனர். இந்த மாதிரி ராதா அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு தண்ணீர் பட்டபாடு.

4) ராதா காரில் பெரியார் ஏற மறுத்தது

எம்.ஆர். ராதா விலையுயர்ந்த கார் ஒன்று வாங்கியிருந்தார். அதை ஓட்டிச் சென்று பெரியாரைப் பார்த்து அய்யா புதுக்கார் வாங்கியிருக்கேன். அதில் நீங்கள் ஏறி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அய்யாவும் காரில் ஏற வந்தவர் ராதாவிடம் "இந்தக் கார் என்ன விலை" என்று கேட்டார். ராதா "ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்" என்று சொன்னார் உடனே பெரியார் காரில் ஏறாமல் இறங்கி விட்டார். உடனே ராதா "ஏன் இறங்கி விட்டீர்கள். ஏறுங்கள்" என்றார். அதற்குப் பெரியார் "இந்தக் காரில் ஏறும் யோக்கியதை எனக்கு இல்லை" என்று கூறி ஏற மறுத்தார். உடனே ராதா "இந்தக் கார் வாங்கும் யோக்கியதை தங்களால்தான் வந்தது" எனக் கூறி பெரியாரைக் காரில் ஏற்றிக் காரை ஒட்டிச் சென்றார்.

தஞ்சை திருக்குறள் ச. சோமசுந்தரம்


No comments:

Post a Comment