விஞ்ஞானிகளுக்குத் தேவை விஞ்ஞான மனப்பான்மை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

விஞ்ஞானிகளுக்குத் தேவை விஞ்ஞான மனப்பான்மை!

'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மய்யம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை தயாரித்து, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது. 500 கிலோ எடை கொண்ட இந்த  ராக்கெட்டுகள், 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் உடையவை - அவற்றை விட குறைந்த செலவில் சிறிய, மிக சிறியதான, 500 கிலோ எடை வரை உள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், எஸ்.எஸ்.எல்.வி., அதாவது, 'ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்' என்ற சிறிய வகை ராக்கெட்டுகளையும் இஸ்ரோ வடிவ மைத்துள்ளது.

ஆந்திர மாநிலம், சிறீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., - டி1 ராக்கெட், 'இ.ஓ.எஸ்., - 02, ஆசாதிசாட்' என்ற இரு செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி, 7.08.2022 அன்று காலை 9:18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.  இதற்கான, 6.52 மணி நேர, 'கவுன்ட் டவுன்' அதிகாலை, 2:26  மணிக்கு துவங்கியது. இந்த நேரத்தை ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்ததாக  தகவல்கள் வருகின்றன.

பூமியில் இருந்து புறப்பட்ட, 12ஆவது நிமிடத்தில், எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்று நிலைகளும் திட்டமிட்டபடி விண்ணில் பிரிந்தன. இறுதியாக, வி.டி.எம்., கருவி உதவியுடன் இரு செயற்கைக்கோள்களும், புவி சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக, தகவல் பலகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனால், அரங்கில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். அடுத்த சில நிமிடங்களில், செயற்கைக் கோள்களில் இருந்து குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானது.இதனால், அரங்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு, அமைதியான சூழல் உருவானது. 

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: "சிறிய வகை ராக்கெட், வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உதவியாக இருக்கும். பரிசோதனை முயற்சிக்கான முதலாவது, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், இரு செயற்கைக் கோள்களை சுமந்தபடி திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது நிலைகள் திட்டமிட்ட இலக்கில் தன் பயணத்தை நிறைவு செய்தன. இறுதி நிலையில் தகவல் தொடர்பு தடைபட்டது. தகவல் தொடர்பை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில், சில மாறுதல்களுடன் எஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

நீள்வட்டப் பாதை என்பது, பூமிக்கு மிக அருகில் உள்ளது. இதனால், அந்தப் பாதையில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் கீழே விழ வாய்ப்பு உள்ளது.எனவே, அங்கு நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாது.

முன்னதாக செயற்கைக்கோள் ஏவப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக 6.08.2022 அதிகாலை குடும்பத்துடன் வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்  ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள் திட்டம் வெற்றியடைய, அதன் மாதிரிகளை வைத்து சிறப்புப் பூஜை நடத்தினார்.  மேலும் விலை உயர்ந்த உலோகத்தால் செய்யப்பட்ட  எஸ்.எஸ்.எல்.வி. டி1 ராக்கெட்டின் மாதிரியை காளகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினார். 

ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து பி.எஸ். எல்.வி.சி-49 ராக்கெட், 6.11.2020 அன்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதற்காக இஸ்ரோ அதிகாரிகள் ராக்கெட் மாதிரிகளை எடுத்துவந்து ஏழுமலையான் கோவிலில்  ராக்கெட் ஏவப்படுவதற்கு முதல் நாள் (5.11.2020) அன்று 'சாமி' சிலையின் பாதத்தில் வைத்து ஆசிர்வாதம் பெற்றதாக எடுத்துச் சென்றனர்.

இதே போல் 1.11.2017ஆம் ஆண்டு அய்.ஆர். என்.எஸ்.எஸ்.1எச். என்ற செயற்கைக்கோள் மாதிரியும் பூஜை செய்யப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது. 

12.7.2010 சிறீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-15 ராக்கெட்  ஏவப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்குச் சென்று வழிபட்டிருக்கின்றனர். அன்றைய இஸ்ரோவின் தலைவர் 

கே.ராதாகிருஷ்ணன் உள்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழு மலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்.

இவ்வளவு செய்தும் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே!

விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு பணியில், மூடத்தனத்தை நுழைப்பது எத்தகைய கேடு கெட்ட செயல்! பார்ப்பனீயம் என்பது அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவிக் கிடக்கிறது என்பதற்கு இவை தவிர வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51கி-லீ). முதலில் விஞ்ஞானிகளுக்கே இது தேவைப்படுவது என்பது கடைந்தெடுத்த வெட்கக் கேடு அல்லவா! 


No comments:

Post a Comment