மக்கள் தொகைக் கட்டுப்பாடு எனும் அரசின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாநிலங்களுக்கு ''தண்டனையா?'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

மக்கள் தொகைக் கட்டுப்பாடு எனும் அரசின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாநிலங்களுக்கு ''தண்டனையா?''

தென்மாநிலங்களில் 33 எம்.பி., இடங்கள் குறைக்கப்படுகின்றன! தென்மாநில முதலமைச்சர்கள் ஒன்றிணைந்து தடுத்திடுக!

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பது ஒன்றிய அரசின் கொள்கை. அந்தக் கொள்கையை சரி வர கடைப்பிடிக்கும் மாநிலங்களுக்கு விசித்திர தண்டனையை ஒன்றிய அரசு அளிக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிர்ணயிக்கப்படுமாம். இதனால் தென்மாநிலங்கள் 33 இடங்களை இழக்கும் நிலை; கொள்கையைக் கடைப்பிடித்தால் தண்டனையா என்ற கேள்வி எழுகிறது. இந்த இழப்பை எதிர்த்துத் தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஒன்றிணைந்து எதிர்த்து முறியடிக்கவேண்டும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நம் நாட்டைப் போல விசித்திர அரசியல் நடக்கும் நாட்டை உலகிலேயே எளிதில் காண முடியாது!

சுதந்திர பவள விழாவும் -அரசமைப்புச் சட்ட வழுவல்களும்!

75 ஆம் ஆண்டு சுதந்திரம் பவள விழா ‘‘அமுதப் பெரு விழா'' நடத்தும் நாட்டின் அரசமைப்புச் சட்டம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் அதன் தத்துவங்கள் - கடைப்பிடிக்கப்படுவதைவிட மீறுவதே காட்சியாக உள்ளது!

அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூறு  (First Article)  ‘‘இந்தியாவென்னும் பாரதம் பல மாநிலங்களைக் கொண்ட ஒரு ஒன்றியம்'' என்றுதான் தொடங்குகிறது!

அதனை உறுதிப்படுத்தவே அதிகாரப்பட்டியல்களை வரையறுத்துக் கூறுவதில்,

1. ஒன்றியப் பட்டியல் (Union List)

2. மாநிலப் பட்டியல்  (State List)

3. ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent List)

ஆனால், இவற்றை அப்படியே புறந்தள்ளுவதுபோல, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு கூறி, தற்போது அரசமைப்புச் சட்ட முகப்புரையில் உள்ள ‘‘முழு உரிமை, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு'' என்பவை நீர்த்துப் போக வெளிப்படையாகவே செயல்களில் ஈடுபட்டு வருகின்றது!

தென்மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைப்பு

மாநிலங்களின் கல்வி, அரசு நியமனங்களில் சமூகநீதி போன்ற பல அதிகாரங்களை நாளும் பறிக்கும் முயற்சி கள் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமான, ‘‘மாகாணங்களே இருக்கக் கூடாது. கூட்டாட்சிக்குப் பதில் ஒற்றை ஆட்சி (Unitary) தான் செயல்படும்'' என்றும் உணர்த்தி வரப்படுகிறது!

இன்று (27.8.2022) வந்துள்ள ஓர் அதிர்ச்சிக்குரிய செய்தி.

தென் மாநிலங்களில் தற்போதுள்ள 129 மக்களவை உறுப்பினர்களில், வருகிற காலகட்டங்களில் 33 இடங் களை இழக்க ஏற்பாடுகள் விரைவாக நடந்துகொண் டுள்ளன என்பதுதான் அந்தச் செய்தி!

இந்த நட்டம் - 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி இழப்பு ஏன் தெரியுமா?

எப்படி சிரிப்பதென்றே தெரியவில்லை!!

மக்கள்தொகை கட்டுப்பாடு என்ற ஒன்றிய அரசின் கொள்கைகளை சிறப்பாக - வலிமையாகக் கடைப் பிடித்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்கான ‘‘பரிசு''தான் இந்த இழப்பு!

வளர்ச்சிக்கான 'தண்டனையா?'

அது மட்டுமா?

நிதி நிர்வாகத் துறையில் வளர்ச்சி பெற்று, அவற்றை சிறப்பாகக் கொண்டு வருவதால், அம்மாநிலங்களுக்கான நிதி - மானிய ஒதுக்கீடு - வெகுவாகக் குறைக்கப்படும் வகையில் புதிய அளவுகோல் புகுத்தப்பட்டுள்ளது!

129 இடங்களில் 33 இடங்களை இழக்கும் மாநிலங்கள் கேரளா, கருநாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்கள்.

15 ஆவது நிதிக் கமிஷன் 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பழைய ஆதார அடிப்படையை நீக்கிவிட்டு, 2021 ஆம் ஆண்டின் ஆதார் குறியீட்டை அடிப்படையாகக் கொள்வதால், அரசியலிலும், ஜனநாயகத்திலும் இந்த விசித்திர ‘‘வளர்ச்சி''க்கான தண்டனை போலும்!

நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரை (தமிழ்நாடு தவிர) மற்ற தென்மாநிலங்களுக்கு ஆந்திரா, 14 ஆவது நிதிக் குழுமூலம் பெற்ற நிதி மானிய பங்கு - 1.69 விழுக்காடு என்றால், அதே மாநிலம் 15 ஆவது நிதிக் குழுவின் மதிப் பீடுபடி பெற்ற தொகை 1.02 சதவிகிதமாகக் குறைந் துள்ளது.

இதில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற (ஒன்றிய அரசின்) கொள்கையைக் கடைப்பிடிக்காத வட மாநிலங் களுக்கு நாடாளுமன்ற இடங்கள் குறைக்கப்படாதது மட்டுமல்ல; கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பும் உண்டாம்!

'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்பது இதுதானா?

எப்படிப்பட்ட ‘சப்கா சாத், சப்கா விகாஸ்' பார்த் தீர்களா?

வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கான ஆளுமைக்கு பரிசு வழங்காவிட்டால்கூட பரவாயில்லை, இப்படியா மக்களாட்சியின் மாண்பை நாடாளுமன்ற இடங்கள் இழப்புமூலம் பறிப்பது?

தென் மாநில முதலமைச்சர்கள் இதுபோன்ற பொது பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து ‘உரிமைக்குரல்' கொடுத்து இந்த ஆபத்துகளைக் களைய முன்வருதல் அவசரம், அவசியம்!

இதிலும் தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியும், அதன் ஒப்பற்ற முதலமைச்சரும் முயற்சிகளை முன்னெடுப்பதும் இன்றியமையாததாகும்!

இது காலத்தின் கட்டாயம் ஆகும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.8.2022


No comments:

Post a Comment