’விடுதலை’ நாட்டுக்கு மட்டுமல்ல - எனக்கும் பிணி போக்கும் அருமருந்தே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

’விடுதலை’ நாட்டுக்கு மட்டுமல்ல - எனக்கும் பிணி போக்கும் அருமருந்தே!

 கி.வீரமணி

ஆசிரியர், விடுதலை

நமது அறிவாசான் நம் இனத்திற்கும், ஏன் மனித குலத்திற்கும் தயாரித்துத் தந்துள்ள அறிவாயுதம்தான் 88 வயதிலும் ‘இளமைக்குப் பாலாக’ உள்ள நமது ‘விடுதலை’ நாளேடு!

கடலூரில் என்னைப் பொது வாழ்விற்குக் கொண்டு வந்த எனது பள்ளி ஆசான் ஆ.திராவிடமணிதான் ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘திராவிட நாடு’ (அறிஞர் அண்ணாவின் வார ஏடு) - இவற்றை மாலை நேர ‘டியூசன்’ வகுப்பில் பாடம் முடிந்து இயக்கப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தபோது, பள்ளிப் பருவத்துப் பிள்ளைகளான எங்களுக்கு அறிமுகப் படுத்தி, உரக்கப் படிக்கச் சொல்வார்.

அய்யாவின் அறிக்கைகளும், தலையங்கங் களும் பெரிதும் அப்போது புரிந்துகொள்ள முடியாத நிலையில், அவரே எங்களுக்குப் பதவுரை, பொழிப்புரை எல்லாம் கூறி, விளக்கி, மனதில் ஓரளவு பதிய வைப்பார்.

78 ஆண்டுகள் 'விடுதலை'யின் தொடர் வாசகன்!

இது சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்பு! அன்றுதொட்டு ‘விடுதலை’யின் “தொடர் வாசகன்” நான்! அந்த உரிமை என்றும் உண்டு!! திராவிட மாணவர் கழகத்தின் பயிற்சி முகாம்களும், பாசறை போன்ற பிரச்சார மேடைப் பேச்சுகளும் எங்களை வளைத்த போது, எங்களது பாடநூல் இந்த அறிவுப் பண்ணையின்மூலம்தான் கிடைத்தது!

அவைதான் என்னை தடம் புரளாத, தகாத செயல்களில் ஈடுபட எண்ணாத, ஒரு தனி வாழ்க்கையையும் தருவதற்குத் தகுந்த பாதுகாப்பு அரணாகவும் அமைந்தது!

‘பற்றற்ற அறிவுப் பற்றாளரைப் பற்றிக் கொண்டு பணி செய்து கிடப்பதற்கு’ பாதை போட்டுத் தந்தது!

‘விடுதலை’தான் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ‘விவேக சிந்தாமணி’ - அன்றுமுதல் இன்றுவரை! 1925இல் அய்யா எழுதினார் - தனது கொள்கைப் பணிபற்றி. “எனது நினைவு தெரிந்த நாள் முதல் இந்தக் கொள்கை (சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மனிதநேயம்) தான் என்பது மட்டுமல்ல, எனது நினைவு தப்பும்வரை - இப்பணியே எம் பணி” என்றார்!

அவர் தந்த புத்திதானே எம்மை வழி நடத்துகிறது! அதனால்,  யானும் அவ்வாறே நாளும் ‘விடுதலை’ப் பணியைத்தான் மூச்சுக் காற்றுபோல் செய்வதில் முழு மன நிறைவும், எல்லையற்ற மகிழ்ச்சியையும் நாளும் பெறுகிறேன் - கடந்த 60 ஆண்டுகளாக!

எனது பணியான 60 ஆண்டு - ‘விடுதலை’ யின் 88 ஆண்டுகால வளர்ச்சி - வாழ்வில் என்று தோழர்கள் குறிப்பிட்டாலும், இது (2022) ‘விடுதலை’ மலர்களின் மணிவிழாக் கொண்டாட்டம் - 1962 முதல் இன்றுவரை மலராத ஆண்டில்லை! அதன் விளையாத வெற்றி இல்லை!!

அந்த விலை மதிப்பற்ற வேலைகளின் விளைச்சல் மகிழ்ச்சியை வாசகநேயர் களுடன் சற்றுப் பகிர்ந்துகொள்ளலாமா?

அண்ணாவின் பாராட்டு!

மறைந்த ‘விடுதலை ஆசிரியர்’ குத்தூசி சா.குருசாமி அவர்கள் எனக்கு முன்னோடியாக இருந்து அவர் காலி செய்த பிறகே, திடீர் மின்னல் மழைபோல் என்மேல் வந்து விழுந்த பொறுப்புச் சுமை - அறிவீர்கள் நீங்கள்.

அவரது இறுதி ஊர்வலத்தில் நமது அறிஞர் அண்ணா, என்.வி.நடராசன் மற்றும் தி.மு.க.வினருடன் நானும் நடந்து செல்லும்போது, (அண்ணாவை நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கும் வாய்ப்பு அது) “என்ன அண்ணா, ‘விடுதலை’ நாளேட்டினைப் பார்த்தீர்களா? ‘விடுதலை’ மலர்களைப் பார்த்தீர்களா? மல்டி கலரில் வருகிறதே” என்று என்.வி.என். பேச்சைத் தொடங்கியவுடன், 

அறிஞர் அண்ணா, மேனாள் ‘விடுதலை’ ஆசிரியர் அல்லவா! (1939 முதல் 1941 வரை ஈரோட்டில்) லேசாக சிரித்துக்கொண்டே, “ஆமாம், நானும் பார்த்தேன் வீரமணி, அய்யா எங்களுக்கெல்லாம் கொடுக்காத உரிமையை உனக்குத் தந்திருக்கிறாருப்பா! நினைத்தே பார்க்க முடியாது ஆஃப்செட் கலரில் ‘விடுதலை மலர்’ வருகிறது என்பதை!” என்று அங்கே அண்ணா சொன்னதைக் கேட்டு மவுனம்தான் சாதித்தேன் - லேசாக புன்னகையுடன் நன்றி என்று சொல்லாமல் சொன்னேன்!

அய்யாவுடன் இருந்த காலத்தையே தமது ‘வாழ்வின் வசந்தம்’ என்ற அறிஞர் அண்ணா - ‘விடுதலை’ ஆசிரியரான முன்னோடியின் மூதுரை என்னை “மேலும் கவனமாகப் பணியாற்று; அய்யாவின் நம்பிக்கைப் பெறுவது எளிதல்ல, அதனை நீ பெற்றிருக்கிறாய்; அதனை விட்டுவிடாமல் காப்பாற்றிக் கரை சேர்” என்று அறிவுறுத்துவதாகவே நான் அந்தப் பாராட்டை பாடமாக்கிக் கொண்டேன்!

‘விடுதலை’ நாளேட்டின் வரலாற்றில் அதற்கென இறக்குமதி செய்யப்பட்டு, ஒரு ‘ஜெர்மன் விக்டோரியா 820’ அச்சு ஆஃப்செட் இயந்திரத்தைப் பெற்றது ஒரு பெரிய திருப்பம்.

அதன் பின்னணி நீண்ட கதை. அதற்கு எங்களுக்கு வங்கிக் கடன் தந்து, அதனை வாங்கிட அய்யாவின் இசைவையும் பெற்றுத் தர ஒத்துழைத்தவர் மறைந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (அய்.ஓ.பி.) நிர்வாகி, பிறகு செயல் இயக்குநராக உயர்ந்த நண்பர் திரு.ஏ.நமசிவாயம்!

அச்சு இயந்திர தொடக்க விழாவும் - 

டீ பார்ட்டியும்!

அந்த அச்சு இயந்திரம் தொடக்க விழா - முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் என்.வி.என்., செ.மாதவன் ஆகியோர் வருகை தந்தனர். மேடைக்குப் பின்னால், முக்கிய அழைப்பாளர்களான தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவர் ஆர்.ராமசுப்ரமணியம் மற்றும் பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சுமார் 100 பேருக்கு தேநீர்விருந்து - நிகழ்ச்சி தொடங்குமுன்!

விழாவிற்கு வந்த முதலமைச்சர் கலைஞர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் எல்லோரையும் அழைத்து, தேநீர் விருந்து கொடுத்துவிட்டு, நிகழ்ச்சியைத் தொடங்கினோம்!

தேநீர் விருந்தில் ஒரு இனிப்பு, ஒரு காரம், ஒரு காப்பி (அ) தேநீர்  இவ்வளவுதான்!

இறுதியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பேசியபின், தந்தை பெரியார் பேச ஆரம்பித்தார்.

“லட்சம் ரூபாய்க்கு வங்கியில் வட்டி வந்துகொண்டிருந்தது; அதில் இவர் இந்த மிஷினை வாங்கி - அதுவும் கடனுக்கு வாங்கி, வெறும் இரும்பாக்கிப் போட்டுவிட்டார்! நான் இத்தனை ஆண்டுகள் பழைய அச்சு இயந்திரத்தை ஏலத்தில் எடுத்து, ரீ-கண்டிஷன் செய்துதான் ஓட்டியிருக்கிறேன். இப்போ, ஆசிரியர் தடபுடலாக பண்ணி இருக்கிறார்! அதை நினைத்துக்கொண்டே நிகழ்ச்சிக்கு வந்தேன். இங்கே பார்த்தால், பெரிய டீ பார்ட்டி! என் வாழ்நாளில் நான் தேநீர் விருந்தை யாருக்கும் கொடுத்ததேயில்லை. வேண்டுமானால், பலவற்றில் கலந்துகொண்டிருப்பேன். இந்தச் செலவும் கூடுதல் தடபுடல். உம், தலைக்குமேலே வெள்ளம் போயிற்று; இதுபற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்” என்றார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் என்னை மெதுவாகக் கிள்ளி, மெல்லிய குரலில் “ஏய்யா, இப்படி டீயையும் கொடுத்துட்டு கலாய்க்கிறாரே” என்று சிரித்துக்கொண்டே கூறினார். நானும் லேசாக சிரித்தேனே தவிர, வேறு பதில் கூறவில்லை.

மானமிகு கலைஞர், தான் எப்படி முதல மைச்சர் பதவியை அய்யா ஆணைப்படி ஏற்றதை விளக்கி, அருமையான வரலாற்று உரையாற்றினார் அன்று!

இரவே அய்யா திருச்சிக்கு வேனில் புறப்பட்டார். அன்னை மணியம்மையார், புலவர் கோ.இமயவரம்பனுடன்! என்னை அடையாறு வீட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போவார்; மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வந்தார்; வீட்டருகே ‘வேன்’ நின்று, விடைபெறத் தயாரானபோது, அம்மா, அய்யாவைப் பார்த்து, “ஒரு சேதி தெரியுமா? என்னமோ பெரிசா இவன் தேநீர் விருந்து கொடுத்து, காசு, பணத்தைச் செலவழித்துவிட்டான் என்று மேடையில் பேசினீர்களே, அவன் எப்படி டீ பார்ட்டி கொடுத்தான் - அந்தக் கதை தெரியுமா?”

“முதல் நாள் அதே மன்றத்தில் நமக்கு வேண்டிய வக்கீல் வீட்டு நிகழ்ச்சி நடந்ததல்லவா, அதில் மீதியான சுவீட்டு, காரம் பொட்டலங்கள் அத்தனையும் அவன் பெற்று வைத்து, வெறும் டீ, காபி மட்டும் செலவு செய்தான்! ஏதோ பெரிசா டீ பார்ட்டி நீங்க கொடுத்திட்ட மாதிரி சி.எம். முன்னாலே, மந்திரிகள் முன்னாலே பேசினீர்களே” என்றார், சிரித்துக்கொண்டே!

அய்யா ஆச்சரியத்துடன், “அப்படியாம்மா? இது எனக்குத் தெரியாதும்மா?” என்றார் சிரித்துக்கொண்டே.

“பரவாயில்லை, உங்களை விட உங்க பையன் ‘ஆசிரியர்’ சிக்கனத்தில் உங்க ளையும் மிஞ்சிவிட்டான்” என்றவுடன், அய்யா மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!

காலையில் திருச்சி மாளிகைக்கு வந்த அன்பில் தர்மலிங்கம், “அய்யா, நேற்று நீங்கள் கொடுத்த டீ பார்ட்டி பற்றி தொலைப்பேசியில் இன்று முதலமைச்சர் (சி.எம்.) என்னிடத்தில் சிரித்துக்கொண்டே, நீங்கள் பேசியது உள்பட கூறினார்” என்றவுடன்,

அய்யா, “அதுபற்றி ஒரு சேதி எனக்குப் பிறகுதான் தெரியும்” என்று அம்மா சொன்னதையும் சொல்லி, அவர்கள் இருவரும்  அம்மாவுடன் மகிழ்ந்து, அந்தச் செய்தி சி.எம்., அமைச்சர் வரை பரவியும் விட்டது!

‘விடுதலை'யின் தேநீர் கச்சேரி எவ்வளவு பிரபலம் - சிக்கனத்தின் சிறப்புப் பார்த்தீர்களா?

அந்தப் புதிய ஜெர்மன் ஆஃப்செட் விக்டோரியா 820 (அதன் பிறகு ஜப்பான் மிஷின் இப்படி பல வளர்ச்சிக் கட்டங்கள்) அச்சு பொலிவுடனும், நேர்த்தியாகவும் வந்தது - வண்ணங்களிலும்கூட. அன்றைய முதலமைச்சர் கலைஞர் வெகுவாகப் பாராட்டி,  ‘முரசொலி’யையும்கூட அப்படிப்பட்ட பல வண்ணம் ஆஃப்செட்டில் தயாரிக்கத் திட்டமிட, ஒரு தூண்டுதலாகவும் அமைந்தது!

எப்போதும் ‘விடுதலை’யின் நட்டத் தொகையை - அய்யா காகிதச் செலவு முழுவதும் டிரஸ்ட்டிலிருந்து தந்து நட்டத்தை ஏற்பார்.

அய்யாவின் செல்லமான பாராட்டு!

பிறகு, சில ஆண்டுகள் நானும், நிர்வாகி சம்பந்தம் அவர்களும் (புலவர் கோ.இமயவரம்பன் - அம்மாவுடன் இருக்க) சென்னை பெரியார் திடலில் கட்டிலில் அமர்ந்திருந்த அய்யாவிடம் அந்த ஆண்டு அய்யா தந்த இரண்டரை லட்சம் ரூபாயை (காகிதச் செலவு பணம்) ஒரு காசோலை(செக்)மூலம் அவ ருக்கே பழங்களை வைத்துத் திருப்பிக் கொடுத்தோம்.

என்ன இது? என்றார்.

தாங்கள் கடனாகத் தந்த பணத்தைத் திருப்பித் தருகிறோம் என்றோம்.

அய்யாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. சிரித்துக்கொண்டே, “இப்போ உங்க அந்தஸ்து உயர்ந்து போச்சுபோல இருக்கிறது; அதுதான் ‘திமிருடன்’ இந்தப் பணத்தைத் திருப்பித் தருகிறீர்கள்” என்று செல்லமான பாராட்டைத் தெரிவித்தார் - யாம் பெற்ற பெரும்பேறு அது!

'விடுதலை’யில் பணியாற்றிய 

சக தோழர்கள்!

நான் சிந்தாதிரிப்பேட்டை எண்.2 பாலகிருஷ்ணன் பிள்ளை அலுவலகக் கட்டடத்தில் பொறுப்பேற்ற நிலையில், 2 ஆசிரியர் குழுதான் - நானே செய்தியா சிரியர் முதல் புரூப் ரீடர் வரை!

அச்சுக் கோர்ப்பவர், நிர்வாகிகள் பலர் - கோதண்டபாணி, என்.எஸ்.சம்பந்தம், ஈ.வெ.கி.சம்பத் மைத்துனரான தாதம்பட்டி ராஜூ, சக நிர்வாக பணித் தோழர்கள் ரா.ப.அழகுக்கரசு, திராவிட அரசு, இ.பி..நாதன், சுதர்சனம், ‘விடுதலை’ ராதா, ஆசிரியர் குழுவில் திருச்சி மாணிக்க வாசகம், கடலூர் துரைராஜ், சாரங்கபாணி (நாயுடு), மணல்மேடு சேது, ரங்கசாமி, பிறகு நிர்வாகி இரயில்வே சி.ஆளவந்தார், கடலூர் துரைராகவன், பொன்மலை மாசிலாமணி, ‘போரூரான்’, கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, இவர்களுடன், திடலில் பேராசிரியர் அ.இறையன், பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், பேராசிரியர் ந.இராம நாதன், பேராசிரியர் மு.நீ.சிவராசன், திருமகள் இறையன்.

இதிலிருந்து பத்திரிகை, எழுத்துப் பணியில் (எனக்கு முன்பு) புலவர் ‘முகம்’ மாமணி, அதற்குப் பிறகு கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், அதற்குமுன் நிலவு பூ.கணேசன், இராம.அரங்கண்ணல் இப்படி ஒரு நீண்ட சக பயணத் தோழர்கள் நினைவுக்கு மரியாதை கலந்த நன்றியைத் தெரிவித்து, நெருக்கடி காலத்தில் தன்னையே அர்ப்பணித்த நமது கவிஞர் கலி.பூங்குன்றன்வரை எண்ணற்றவர்கள்.

அன்னை மணியம்மையார் 

தந்த வெளிச்சம்!

இவை எல்லாவற்றையும்விட, ‘கே.ஏ.மணியம்மையார்’ என்று இருந்து - தொண்டறப் பணிக்காக தன்னை எரித்து, நமக்கும், ‘விடுதலை’க்கும் வெளிச்ச வாழ்வு தந்த எம் அன்னை - எழுத்துகள் கண்ணீரை வரவழைக்கும் புரட்சிக்கவிஞரின் பொன் வரிகளாக.

அவர்களது கருப்பு மெழுகுவத்தியின் ஒளியே எம் வாழ்வின் இருட்டைப் போக்கி, இனம் காக்கும் எளிய பணியை இன்றளவும் சோர்வின்றி, முழு ஊக்கத்தோடு செய்து சக பயணியாக உங்களோடு பயணிக்கிறேன்.

‘விடுதலை’யின் 88 ஆண்டுகால பயணத் தில் திருவாளர் டி.ஏ.வி.நாதன், பண்டித முத்துசாமி, ஈ.வெ.கிருஷ்ணசாமி, பொன்னம்பலனார், அறிஞர் அண்ணா, கரிவரதசாமி, சா.குருசாமி, சாமி.சிதம்பரனார் போன்ற அறிஞர்கள் இதன் ஆசிரியர் மற்றும் ஆளுமைக் குழுவினர்களில் முக்கியமானவர்களாக இருந்து தமது தொண்டைத் தந்தவர்கள்!

நான் பொறுப்பேற்றபோது ஆசிரியர் குழு எல்லாம் இணைந்து 8, 9 பேர்தான்.

இன்றோ 120-க்கும் மேற்பட்ட கூட்டுப் பணித் தோழர்கள்!

இன்றும் எமது சுமைதாங்கிகளாக இருந்து ‘விடுதலை’யை நாள்தோறும் வளர்த்து வருகின்ற என்னருந்தோழர்கள் - இருபாலரிலும் ஏராளம். அவர்கள் அனைவருக்கும், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், பணியாளர் குழுவினர் அனை வருக்கும் எனது உளமார்ந்த பாராட்டும், நன்றியும்!

இங்கே உள்ள கூட்டுப் பணித் தோழர்கள் ஊதியக்காரர்கள் அல்ல; தொண்டறச் செம்மல்கள்! அவர்கள் அனைவரது உழைப்பே எனது மை கூடு!

பிணி போக்கும் மருந்து

நிச்சயம் இந்தப் பணிதான் என் அணி!

பிணி போக்கும் அருமருந்து - 

நாட்டுக்கும், இனத்திற்கும் மட்டுமல்ல, எனக்கும் கூடத்தான்!

நன்றி, வாசகர்களே, நன்றி!

நன்றி, தோழர்களே, நன்றி!

நன்றி, என் கூட்டுப் பணித் தோழர்களே, நன்றி!

எல்லாவற்றிலும் என்னை ஈடுபடுத்தி தன் வளத்தை, வாழ்வைப் பெரிதுபடுத்தாத எனது இல்லறத் தொண்டறத் துணைவர்  திருமதி மோகனா, அவர்மூலம் கிடைத்த தொண்டு, திறவுகோல்களான  குடும்பத்தவர் அனைவருக்கும் மகிழ்ச்சிக் கண்ணீருடன், நன்றி கூறுகிறேன்!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment