பெருமகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்க நேரில் வருகிறேன், தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

பெருமகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்க நேரில் வருகிறேன், தோழர்களே!

‘விடுதலை' சந்தா திரட்டல் தொண்டின் சின்னங்களான எம் உழைப்புத் தேனீக்களான கழகப் பொறுப்பாளர்களே,

களத்தில் களைப்பின்றி உழைத்து இலக்கை மட்டுமே குறி வைத்து பருவம் பாராது, மானம் பாராது உழைக்கும் எம் அரும் ‘விடுதலை'ப் பாசறை வீரர்களே, வீராங்கனைகளே!

நாளை 11.8.2022 முதல் மீண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நான் வரவிருப்பது, நீங்கள் ‘வியர்வைத் துளியாக' சேர்த்த சந்தாக்களைப் பெறுவதற்காக மட்டும் அல்ல தோழர்களே!

இப்பெரும் பணி, நம் இயக்க வரலாற்றில் இனிவரும் காலத்திற்கும் இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது, திராவிடர் இலட்சியங்கள் ஆயிரங்காலத்துப் பசுமைப் பயிர்கள் என்பதை நிலைநிறுத்திடும் ஆக்கப்பணி - எனவேதான் நாம் நம் சக்திக்கு மீறி உழைக்கிறோம் - சோர்வின்றி - உற்சாகத்துடன்!

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இன்று நம்முடன் உருவமாக இல்லை (உணர்வின் கொள்கையாக வழிநடத்துவது அறிந்தது என்றாலும்).

அதுபோல நாளை நாம் - நம்மில் பலர் இருக்க மாட்டோம். ஆனால், நம் பணியின் கனிந்த பலன் - ‘விடுதலை' போன்ற பேராயுதம் மூலம் - ஓர் ஆயுதத் தொழிற்சாலையாகவே பெருகி வருங்காலத்திலும் வாழும்; வளரும் இயக்கக் கொள்கை! "பெரியார்  உலகமயமாவார், உலகம் பெரியார் மயமாகும்."

அதற்கான திட்டமிட்ட பணிதான் தோழர்களே இந்த 60,000 சந்தா திரட்டல் என்ற மலையேறும் பணி!

இதுவே "திராவிடத்தை" அழிக்க நினைக்கும் அற்பர்களுக்கு, ‘திராவிட மாடல்' நிலையானது - நீடித்தது - என்றும் இதுதான் எதிர்கால இந்தியா, எதிர்கால உலகம் - புத்துலகம் என்று வரலாற்றுப் பதிவு செய்வதற்கு நாம் நம் உழைப்பு மூலம் தந்துள்ள உன்னத வாய்ப்பு என்பதாகும்!

எனவே அயராது, அணுகுங்கள் மக்களை,!

சுற்றுப்பயணம்

11.8.2022 - காலை ஈரோடு

12.8.2022 - காலை திண்டுக்கல், மாலை திருச்சி

13.8.2022 - காலை மன்னார்குடி

14.8.2022 - காலை ஆத்தூர், மாலை திருப்பத்தூர்

15.8.2022 - சென்னை

16.8.2022 - புதுச்சேரி

(அனைத்து மண்டலப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல்)

நன்றி! நன்றி! நன்றி! தோழர்களே!!

சென்னை உங்கள் ஆசிரியர்

10.8.2022 - கி.வீரமணி

No comments:

Post a Comment