கருநாடகாவில் பிஜேபி ஆட்சியும் கவிழும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

கருநாடகாவில் பிஜேபி ஆட்சியும் கவிழும்!

கருநாடகாவில் பா.ஜ.க. அரசு செயல்படவில்லை என்றும், 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை நிர்வாகத்தை சமாளித்து வருவதாகவும்  சட்ட அமைச்சர் ஜே.சி. மதுசாமியின் பேச்சு வெளியானதைத் தொடர்ந்து கருநாடகாவில் சர்ச்சை எழுந்துள்ளது.

அமைச்சர் மதுசாமிக்கும், சன்னப்பட்டினத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற சமூக சேவகருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடலில், அரசாங்க விவகாரங்களை நடத்துவதில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே உள்ள பிணக்குகளைக் குறிப்பிடுகிறார். மேலும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். எதையோ எதிர்பார்கின்றனர் என்று பேசிய ஒலிப்பதிவை காங்கிரஸ் கட்சியின் கருநாடக பிரிவு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

அந்த உரையாடலில் மாநிலம் முழுவதும் விவசாயிகள் வாங்கிய ரூ.50,000 மதிப்பிலான கடனை புதுப்பிக்க கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கையூட்டு கேட்டதாக சமூக சேவகர் பாஸ்கர் புகார் கூறுகிறார்.

“வட்டி செலுத்த வேண்டிய நிதிகள் கொள்ளை யடிக்கப்படுவதாகவும், கூடுதல் கட்டணம் கோரப் படுவதுமான  செய்திகள் கூட்டுறவு அமைச்சர் சோமசேகரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட விடயங்கள் அனைத்தையும் நான் அறிவேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - என்ன செய்ய முடியும்?" என்று அதில் அமைச்சர் மதுசாமி கூறுவது கேட்கிறது.

மேலும், “விவசாயிகள் மட்டுமல்ல, நான் கூட வங்கி அதிகாரிகளால் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இங்கு செயல் படுவது அரசாங்கம் இல்லை, நாங்கள்   எட்டு மாதங் களில் (2023) மாநிலத் தேர்தல் நடைபெறும் வரை எப்படியோ பதவிக் காலத்தை தள்ளுகிறோம்” என்றும் அமைச்சர் கூறுகிறார். 

கருநாடக பா.ஜ.க. அரசின் கையாலாகாத் தனத்திற்கு இந்த உரையாடல் ஓர் எடுத்துக்காட்டு  எனக் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. “அரசின் அலட்சியம், அமைச்சர்களின் திறமையின்மை, விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை அமைச்சர் மதுசாமியின் பேச்சால் அம்பலமாகியுள்ளது. ஊழல் மேலாண்மை சேவையாக மட்டுமே பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. பசவராஜ் பொம்மை அரசின் ஒழுங் கின்மைக்கும் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்கும் இதைவிட சிறந்த ஆதாரம் எதுவுமில்லை” என எதிர்க்கட்சியினர் 'ட்வீட்' செய்துள்ளனர்.

பி.ஜே.பி. ஆளும் கருநாடக மாநிலத்தில் ஜே.சி. மதுசாமி என்ற அமைச்சரே இப்படி அங்கலாய்ப்பது - ஒருபுறம் இருக்க, இன்னொரு அமைச்சர் பி. சிறீராமுலு என்பவர் என்ன கூறுகிறார் என்பதை நினைத்தால் குலுங்கக் குலுங்க சிரிப்புத்தான் பீறிட்டு வருகிறது.

கருநாடக மாநிலம் பெல்வாரி மாவட்டத்தில் வணிக வளாகம் மற்றும் மாணவர் விடுதியைத் திறந்து வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியது தான் சுவையானது.

"மற்றவர்களைப் போலவே நானும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மீண்டும் முதல் அமைச்சராக வர வேண்டும் என்றே விரும்புகிறேன். இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு எனக்கு எந்தவித பயமும் இல்லை; ஏனென்றால் நான் யாருக்கும் அடிமையில்லை" என்று ஆணி அடித்தது போல அறைந்துள்ளார்.

தென் மாநிலங்களில் பிஜேபிக்கு இருந்த ஒரே ஒரு அரசான கருநாடகாவும் கவிழப் போகிறது. இந்த இலட் சணத்தில் தமிழ்நாட்டில் காலூன்றப் போகிறார்களாம்!

No comments:

Post a Comment