கிருஷ்ண ஜெயந்தியும் தீண்டாமையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

கிருஷ்ண ஜெயந்தியும் தீண்டாமையும்

கிருஷ்ணஜெயந்தி என்னும் விழா முடிந்த உடன்  தொலைக்காட்சிகளில் முக்கியமாக மும்பை, புனே, சூரத் போன்ற மேற்கிந்திய பகுதியில் உள்ள பெருநகரங்களில், உறியடி குறித்து பரபரப்பு செய்திகள்! பல அடி உயரத்தில் கட்டியிருக்கும் பானையை 5, 10 அடுக்குகளாக ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று உடைப்பார்கள்  

சாலைக்குச் சாலை, ஒவ்வொரு அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலுமே மிகவும் உயரத்தில் தயிர்ப் பானையை கட்டியிருப்பார்கள்; தயிர்ப் பானைக்கு ஹிந்தியில் 'தஹி ஹண்டி' என்று பெயர். ஆகவே இதை மகாராட்டிரா, குஜராத் பகுதிகளில் 'தஹிஹண்டி' என்று அழைப்பார்கள்;  அதில் தங்கம் மற்றும் பண முடிப்புகள் இருக்கும்.  இதை உடைப்பதற்கு என்றே பல  குழுக்கள் மும்பையில் உண்டு. அதில் பல பிரச்சினைகள் ஏற்பட்ட தால் தற்போது அனைத்துக் குழுக்களையுமே பதிவு செய்ய உத்தரவிட்டார்கள். 

மும்பை, தானே, புனே, நாசிக், நாக்பூர் மற்றும் குஜராத் தில் உள்ள சூரத், வடோதரா மாநகராட்சிகளில் மட்டும் 2,000 குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுக் களை மண்டல் என்று அழைப்பார்கள். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களின் பெயர்கள் மூலம் தெரியவந்த ஓர் உண்மை என்னவென்றால் தயிர்ப் பானை உடைக்க  பதிவு செய்த குழுக்களில் உள்ள அனைவருமே உயர்ஜாதியினர்  என்பது தான், 

அதில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைச் சேர்க்க மாட்டார்கள். இதனால் அந்த இளைஞர்கள் தாங்களே சில மண்டல்களை அமைத்தனர். பிறகு கை விட்டனர்.

ஏன் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அழைக்க மாட்டார்களாம்?

பானை உடைக்கும் போது ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்றுதான் உடைக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒருவர் அங்கு நின்றால், அவரைத் தொட்டு மேலே ஏறவேண்டும் அல்லது அவர் உயர்ஜாதியினர்மீது ஏறுவார்; அத்தனை உயர்ஜாதியினருக்கும் தீட்டு ஆகிவிடும். ஆகவே தான் இந்தக் குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்ப்ப தில்லை. இன்றும் இந்த நடைமுறை உள்ளது. 

அதே நேரத்தில் மும்பையில் கணபதி விழாக்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அம்பேத்கர் படம் போட்ட 'டி'சர்ட்டுகளோடு பங்கு கொண்டிருப்பதைப் பார்க்கலாம். 

அது என்ன கணபதி ஜாதி பார்க்கமாட்டாரா? கிருஷ்ணன் மட்டும். ஜாதி பார்க்கிறாரா? என்றால் "அம்பாள் என்றைக்கடா பேசினாள்"  என்ற கலைஞரின் பராசக்தி வசனம்தான் நினைவிற்கு வருகிறது.

கணபதிக்கு மட்டும் அனுமதி - ஏன் என்றால் கனமான பிள்ளையார் சிலைகளைத் தூக்க ஆள் வேண்டுமே, தூக்கிக் குளத்தில், கடலில் போடும் சிலைதானே, எவன் தொட்டால் என்ன? அப்படியே தாழ்த்தப்பட்டவர்கள் உயர்ஜாதியினரைத் தொட்டுவிட்டால்கூட கடலிலோ, குளத்திலோ சிலையோடு சென்று முழுக்குப் போட்டு தீட்டுக்கழித்துவிட்டு வருவார்கள்

2007 ஆம் ஆண்டு மறைந்த விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராட்டிர முதலமைச்சராக இருந்த போது, "இது ஒரு தீண்டாமை நடவடிக்கை; இதை ரத்து செய்யவேண்டும்" என்று பகுஜன் சோசித் என்ற ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், வெகுஜன நம்பிக்கை என்ற பெயரில் இதை இன்றும் தொடர்கின்றனர்.

ஆயிரம் மடங்கு பக்தி காட்டினாலும், உயர்ஜாதி ஹிந்துக்களைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள்  தீண்டத்தகாதவர்கள் தான் ஹிந்துக்களாக இருக்கும் வரை....

ஒரே மதம் என்கிறார்கள். ஆனால் அந்த ஒரே மதத்தில் கூட ஒரே கடவுள் இல்லை; அந்தக் கடவுளர்களிலும் பூணூல் போட்ட கடவுள், பூணூல் போடாத கடவுள், தாழ்த்தப்பட்டவர்கள் நெருங்கும் கடவுள், அவர்கள் நெருங்கக் கூடாத கடவுள் என்று இருப்பானேன்?

சுருக்கமாகச் சொன்னால், ஹிந்து மதம் என்றாலும் ஹிந்துக் கடவுள் என்று சொன்னாலும், ஹிந்து சாஸ்திரங்கள் என்று சொன்னாலும் - இவை அனைத்துமே பார்ப்பன பிறவி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவனதான்! இதனைப் பார்ப்பனர் அல்லாதார் - தங்களை ஹிந்துக்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் சிந்திப்பார்களா?

No comments:

Post a Comment