பெண்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆண்கள் பதவி ஏற்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

பெண்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆண்கள் பதவி ஏற்பதா?

மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க அரசு ஆலோசனை நடத்திவருகிறதாம்.

அரசமைப்பு சட்டத்தின் 243ஆம் பிரிவு பெண் களுக்கான இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது. நாட்டிலுள்ள 20 மாநிலங்களில் உள்ளாட்சிப் பதவியிடங்களில் பெண் களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனினும், பெரும்பாலான இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது குடும் பத்தைச் சேர்ந்த ஆண்களே பணிகளில் ஈடுபடுகின்றனர். பெண்கள் வெறும் கையெழுத்து போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பெண்கள் சுயமாக செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுக்கின்றன.

இது ஒரு வகையில் அத்துமீறல் என்றால், அதைவிட கேடு கெட்ட ஆண் ஆதிக்கத் திமிர் அரங்கேறியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான பெண்களுக்கு பதிலாக ஆண்களே பதவிப் பிரமாணம் எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சிப் பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் தார், தமோ, சகார் மற்றும் பண்ணா ஆகிய இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சாகரில் ஜெய்சிங் நகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் வெற்றிபெற்ற 10 பெண்களில் 3 பெண்கள் மட்டுமே பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். மற்ற பெண்களுக்கு பதிலாக ஆண்களைப் பதவியேற்க அனுமதித்த ஊராட்சி செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இவை மீண்டும் நிகழாமல் இருக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, விதிமுறை மீறலும் கூட - சரியான பிரதிநிதிகள் பதவிப் பிரமாணம் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மத்தியப் பிரதேச ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் தெரிவித்தார்.

அர்த்தமுள்ளதாகக் கூறப்படும் ஹிந்து சமூக அமைப்பில் பெண்களின் நிலை இதுதான். சட்டம் இருந்தாலும், அது போதுமானதல்ல. மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பெண்கள்  அமைப்புகளும் இதுகுறித்த பேரணிகள், கருத் தரங்குகள், மாநாடுகள், போராட்டங்கள் உள்ளிட்ட செயல்களில் திட்டமிட்ட வகையில்  இறங்க வேண்டும்.

தமிழ்நாட்டில்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்று வந்த செய்தி பெரும் பிரச்சினையாகி விட்டது. அத்தோடு அது முடிவுக்கு வந்தது.

வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு எத் தனையோ மடங்கு விழிப்புடன் இருப்பது மகிழ்ச்சிக் குரியது. அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், அவர்கள் மேற்கொண்ட இடையறாத இயக்கப் பணிகளுமே!

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் மாநிலங் களவையில் நிறைவேறியதோடு நின்று விட்டது. பல பிரதமர்களும் மாறி மாறி வந்தும் பிரச்சினைக்குத் தீர்வுதான் எட்டப் படவில்லை.

இனியும் தாமதிக்க அனுமதிக்கக் கூடாது. பெண்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். சரி பகுதி எண் ணிக்கையுள்ள பெண்களின் வாக்குகள் மட்டும் வேண்டும்; அவர்களுக்கான நியாயமான பிரதிநிதித்துவம் கூடாதா? 

பெரும்பாலான கட்சிகளில் உள்ள ஆண்களின் ஆதிக்க உணர்வுதான் இதற்குக் காரணம். பெண்களிடம் தேவை விழிப்புணர்வே! போராட்ட உணர்வே!!


No comments:

Post a Comment