மானமிகு வீரமணி பூனைக்கு மணி கட்ட - சிறுத்தைகள் கர்ச்சிக்க - சூரியன் சுட்டெரிக்கும் ஒரு புரட்சிகர மணிவிழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

மானமிகு வீரமணி பூனைக்கு மணி கட்ட - சிறுத்தைகள் கர்ச்சிக்க - சூரியன் சுட்டெரிக்கும் ஒரு புரட்சிகர மணிவிழா!

மின்சாரம்

சென்னை - கலைவாணர் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழாவின் நாதம் அனேகமாக நேற்றிரவே 'சங்பரிவார்களின் நாக்பூர் கதவைக் குடைந்தெடுத்திருக்கும்!

ஆட்சித் தலைநகரமான டில்லிக் கோட்டை அதிகார பீடத்தை ஓர் உலுக்கு உலுக்கி இருக்கும்.

'சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்! சனநாயக சக்திகளை அய்க்கியப்படுத்துவோம்!" என்ற சங்கநாதம்தான் எழுச்சித் தமிழரின் மணி விழா-வின் போர் முரசமாக ஒலித்தது.

வாழ்த்தினார் 'தகைசால் தமிழர்'

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் வாழ்த்துரை:

"எழுச்சித் தமிழர் திருமாவளவன் கற்றறிந்த ஞானி, அறிவாளி, அரசு வேலையைத் துறந்து பொதுப் பணிக்கு வந்தவர் - சிறந்த போராளி!

இளைஞர் ஒருவர் நம் நாட்டுக்குக் கிடைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டோம் - பொறாமைப்படவில்லை. அவர்மீது எனக்குத் தனிப்பட்ட அக்கறையும், ஆர்வமும் உண்டு.

மீனாட்சிபுரத்தில் நடந்த ஜாதிக் கலவரம்பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றதை மிகவும் பாராட்டுகிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் தொண்டு செய்ய வேண்டும்" என்று வாழ்த்தினார்.

விழாவில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பூனைக்கு மணியைக் கட்டினார் - சிறுத்தை உறுமியது - சூரியன் சுட்டெரித்தது. 

இது எழுச்சித் தமிழரின் வெறும் மணி விழா மட்டுமல்ல; எங்கும் மணி ஓசை கேட்கும் விழா! இந்த விழா நாயகர் - நமது மூன்றாவது குழல்!

"ஈன்ற பொழு திற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய்"

என்ற திருவள்ளுவரின் இலக்கணத்தை அந்த இடத்தில் கழகத் தலைவர் சுட்டிக் காட்டியதுதான் என்னே பொருத்தம்!

ஆம், மானமிகு தொல். திருமா அவர்களின் அன்னையார் அந்த மேடையில் வீற்றிருந்தார். முதலமைச்சர் உள்பட அவர்களிடத்தில் தங்கள் மதிப்பையும், அன்பையும் பொழிந்தபோது - தன் மகன் மீதான அன்பின் அடையாளம் என்பதை அறிந்தபோது, அந்த தாயிடம் வழிந்த ஆனந்தக் கண்ணீரை அளவிடவும் கூடுமோ!

அதைத்தான் தமிழர் தலைவர் அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.

இங்கே நாங்கள் கூடியிருக்கும் அணி வெறும் அரசியல் கூட்டணியல்ல. கொள்கைக் கூட்டணி! பிணி நீக்கும் அணி - மதவெறி மாய்க்கும் அணி! அரசியல் கூட்டணியில் பின்னடைவு ஏற்படக் கூடும்; கொள்கைக் கூட்டணியில் பின்னடைவுக்கு வேலையில்லை என்றார்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அந்தத் தலைவர்களின் கொள்கைக் குருதி ஓட்டமாக இருப்பதால் கொள்கையில் சமரசத்துக்குக் கிஞ்சிற்றும் இடமில்லை என்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாடுகள் எத்தகையவை -  அந்த மாநாட்டின் பெயர்களிலேயே அவர்கள் எத்தகைய கொள்கைகளுக்குச் சொந்தக் காரர்கள் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

"இந்துப் பெயர்களை மாற்றுவோம்! தமிழ்ப் பெயர்களை சூட்டுவோம்" என்று சொன்னதோடு மட்டுமல்ல; 5,000 இந்துப் பெயர்களை - சமஸ்கிருதப் பெயர்களை மாற்றியும் காட்டினார்கள் (6.12.2002). (தம் தந்தையார் பெயரையே தொல் காப்பியர் என்று மாற்றினார்). நெல்லையில் மண்ணுரிமை மாநாட்டை நடத்தியதோடு அதில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞரையும் பங்கேற்கவும் வைத்தார் எழுச்சித் தமிழர் (7.6.2007). மாநில சுயாட்சி மாநாட்டையும் நடத்தியதுண்டு (21.9.2017) சென்னை ஓய்.எம்.சி.ஏ. திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் நடத்தப்பட்ட அம்மாநாட்டில் தளபதி மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி முதலியோரும் பங்கு கொண்டு எழுச்சி முழக்கமிட்டனர்.

அது மட்டுமல்ல. உழைக்கும் மகளிர் உரிமை மாநாட் டையும் நடத்திக் காட்டிய பெருமை விடுதலைச் சிறுத்தை களுக்கு உண்டு (நெல்லை - பாளையங்கோட்டை 8.3.2010).

சனாதனத்தை அரசியல் சட்டமாக்கி, ஆட்சிப் பீடத்தில் கொலுவேற்றலாம் என்று குதித்தாடும் கூட்டத்தை எச்சரிக்கும் வகையில் திருச்சியில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்திய சரித்திர பெருமையும் எங்கள்  சகோதரர் எழுச்சித் தமிழருக்கு உண்டு.

2006இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற போது ஒரு கருத்தைச் சொன்னார் தோழர் திருமா.

"சூத்திரர்களும், பஞ்சமர்களும் ஒன்று சேர்ந்தால் 'நரகாசுரன் வதம் நடக்காது!" என்றாரே! ஆம், அங்கே தான் தந்தை பெரியாரின் தொண்டர் - அண்ணல் அம்பேத்கரின் அருமருந்தன்ன சீடர் என்பதற்கான அச்சுப் புள்ளி அடையாளமாகும்.

இது அந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டுமல்ல - நடக்கப் போகும் தேர்தலுக்கெல்லாம்கூட அறிவுறுத்தும் தொலைநோக்குச் சங்கொலி!

இவற்றையெல்லாம் சீர்தூக்கித்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுச்சித் தமிழரின் மணிவிழா மணியோசை விழா என்று படம் பிடித்துக் காட்டினார். 

தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல- இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகின்ற 'திராவிட மாடல்' என்றார் ஆசிரியர்.

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அறிவித்ததைச் சுட்டிக் காட்டிய திராவிடர் கழகத் தலைவர் சமூகநீதியும் சமத்துவமும் சேர்ந்ததுதான் 'திராவிட மாடல்' என்றும் எளிதில் புரியும்படிச் சொன்னார்.

இந்தத் திராவிட மாடல் பரவினால்தான் சனாதனம் சாம்பலாகும் - இந்தியாவுக்கு நேரும் ஆபத்தும் ஒழியும்.

இந்தத் திராவிட மாடல் அரசுக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதுதான்! (பலத்த கரஒலி!)

எங்களைப் போன்றவர்கள் அதனைச் செய்வோம் - தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்! மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே! திராவிட மாடலை நாடெங்கும் எடுத்துச் செல்லுங்கள் - துணிவாகச் செய்யுங்கள் - வேகமாகச் செய்யுங்கள் - செல்லுங்கள்.

எதிரிகளின் வித்தைகள் எல்லாம் சொத்தையாகும்! திராவிட இயக்கப் பட்டாளமும், விடுதலைச் சிறுத்தைகள் பட்டாளமும் உங்களுக்கு அரணாக இருக்கும்.

எத்தனை அனுமார்களும், விபிஷணக் கூட்டமும் தான் அணி திரண்டு வரட்டுமே - நம்மை அசைக்க முடியாது - எதிரிகள் ஊடுருவவும் முடியவே முடியாது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் அழகாகப் பாடினார். 

காட்டிலொரு முயல்குட்டித் துள்ளக் கூடும்.

கறுஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி!

தோட்டத்துப் புடலங்காய் தமிழர்நாடு

தூங்கி விழித்தால் உடையோன் உரிப்பான் தோலை!

என்ற புரட்சிக் கவிஞரின் பாடலை எடுத்துக்காட்டி சூடேற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் பூனைக்கு மணி கட்டியதுதான் தாமதம் - எழுச்சித் தமிழர் விடுதலைச் சிறுத்தையின் தலைவர் அல்லவா கண் சிவந்து உறுமினார்.

நாட்டில் நடக்கும் போர் இன்று, நேற்று அல்ல - பல்லாயிரக்கணக்காண்டாக நடக்கும் ஆரியர் - திராவிடர் போர்!

கவுதமப் புத்தர் ஆரியத்துக்கு எதிராகப் போராடினார். தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அதே போரைத்தான் தொடர்ந்தார்கள். அதுதான் இன்று வரையும் நடக்கிறது - தொடர்கிறது.

பெரியார் என்னும் ஊழித்தீ இந்த மண்ணில் தோன்றியது. இதனை வீழ்த்திட முடியாது.

பெரியார் இல்லை! அண்ணா இருந்தார், அண்ணா மறைந்தார் - தீர்ந்தது திராவிட இயக்கம் - என்று மனப்பால் குடித்தார்கள். சுயம்புவாகத் தோன்றினார் கலைஞர்!

50 ஆண்டு அரசியல் கலைஞரைச் சுற்றியே நடந்தது. இன எதிரிகள் 360 டிகிரி நெருப்பில் அவரை எரித்தனர்.

தந்தை பெரியார் என்னும் ஊழித்தீ; அண்ணா செழுமைப்படுத்தினார். கலைஞர் வலிமைப்படுத்தினார். முதலமைச்சர் அவர்களே நீங்கள் அதனை முழுமைப்படுத்த வேண்டும் - முதன்மைப்படுத்த வேண்டும் என்று எழுச்சித் தமிழர் போர் முரசு அறைந்தபோது மக்கள் கடல் ஆர்ப்பரித்தெழுந்தது.

தாங்கள் தயங்க வேண்டாம் - தி.மு.க. வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறது என்றால் அதற்குக் காரணம் தந்தைபெரியாரே - அவர் போட்ட அஸ்திவாரம்தான் சனாதன எதிர்ப்புதான்.

பெரியாரை எதிர்ப்பது என்பது தி.மு.க.வை எதிர்ப்பது என்றுதான் அர்த்தம்!

(எண்ணூரில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த எழுச்சித் தமிழர், இனி அண்ணல் அம்பேத்கர் சிலை திறக்கப்படும் இடங்களில் எல்லாம், தந்தை பெரியார் சிலையையும் திறப்போம் என்று பிரகடனப் படுத்தினார்).

இந்தியாவிலேயே முற்றும் மாறுதலான மாநிலம் தமிழ்நாடுதான். பிஜேபியும், காங்கிரசும் ஒன்றுதான் என்று இடதுசாரிகள் சொன்னதுண்டு. அந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் பிஜேபி தனிமைப்படுத்தப்பட்டு காங்கிரஸ், இடதுசாரிகள் ஒன்றிணைந்த வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ள பெருமையும், ஆற்றலும் நமது முதலமைச்சருக்கே உண்டு.

இப்பொழுது ஒரு பெரிய ஆபத்து - நமது தலைக்கு மேல் வாளாகத் தொங்குகிறது. அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, வருணாசிரமத்தைச் கட்டிக் காக்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் இருக்கலாம். கிறிஸ்தவர்களும் இருக்கலாம் - வாழலாம். ஆனால்  - ஓட்டுரிமை மட்டும் கிடையாதாம்.

இதனை அனுமதிக்கலாமா? இவற்றை மாற்றும் ஒரே கதி முதலமைச்சர் அவர்களே நீங்கள்தான்.

விருந்தினர் பெரு மக்களுக்குச் சிறப்பு

விழாவிற்கு வருகை தந்த பெரு மக்களுக்கு மணி விழா நாயகர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சிறப்பு செய்தார். முதலமைச்சருக்கு திருமா அவர்களின் அன்னையார் சால்வை அணிவித்தார். ஏலக்காய் மாலையை தோழர் திருமா அணிவித்தார். கவுதம புத்தர், அண்ணல் அம்பேத்கர் முறையே முதல் பக்கத்திலும் பின் பக்கத்திலும் பொறித்திருந்த நினைவுப் பரிசையும் முதலமைச்சருக்கு வழங்கினார். மூத்த தலைவர் ஆர்.என்.கே. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோருக்கு பொன்னாடையையும், ஏலக்காய் மாலையையும், அணிவித்தார். மணிவிழா நாயகருக்கு முதலமைச்சரும், திராவிடர் கழகத் தலைவரும் அமைச்சர் பெரு மக்களும் பொன்னாடைகள் - சால்வைகள் அணிவித்தனர்.

நீங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய தேசியத்துக்கே வழிகாட்ட வேண்டிய தலைவர் என்று போர் முரசு கொட்டினார் எழுச்சித் தமிழர்.

இவ்வளவுக்குப் பிறகும் விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த முதலமைச்சர் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா? என்ன சொல்லப் போகிறார் என்று பரபரப்பான எதிர்பார்ப்புக்கிடையே முதலமைச்சர் தன் உரைவாள் வீச்சைத் தொடங்கினார். வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும் இடி முழக்கம்தான்.

திருமா அவர்களை எடுத்த எடுப்பில் பாராட்டினார். வயதுதான் 60 - தோற்றத்தில் அப்படி இல்லை; இளைஞராகத் தான் காணப்படுகிறார். 20 வயது சிறுத்தையாகச் சீறுகிறார்.

இவரது பொன் விழாவில் தலைவர் கலைஞர் வாழ்த்தினார். பொன் விழாவில் அப்பா பேசினார் என்றால் - மணி விழாவில் மகன் பேசுகிறேன் என்று சொன்ன பொழுது ஒரே கலகலப்பு - சிரிப்பு!

தந்தை பெரியார் 95 ஆண்டு வாழ்ந்தார். தலைவர் கலைஞர் 95 ஆண்டு வாழ்ந்தார். தங்களுக்காக அல்ல - இந்தச் சமுதாயத்துக்காகவே வாழ்ந்தனர் - தொண்டாற்றினர்.

தி.மு.க. மாணவர் கழகத்தில் பணியாற்றியவர்தான் நமது திருமா - என்ற தொடக்கக் கால வரலாற்றையும் நினைவுபடுத்தினார்.

தி.மு.க. கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்காக அல்ல - கொள்கை உறவு. அதனால் யாராலும் பிரிக்க - முடியாத ஒரு தாய்ப் பிள்ளைகளாக இருந்து வருகிறோம் என்று முதலமைச்சர் சொன்ன பொழுது ஒரு நெகிழ்ச்சியின் மவுனம்!

மணி விழா நிகழ்ச்சி

எழுச்சித் தமிழர் மணிவிழா நிகழ்ச்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் தகைகால் தமிழர் ஆர். நல்லகண்ணு தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் எம்.பி. வரவேற்புரையற்றினார்பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் இணைப்புரை வழங்கினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு மற்றும் .சி. பாவரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், .பாலசிங்கம், இளஞ்சேகுவேரா முதலியோர் முன்னிலை வகித்தனர். முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் அனைவரையும் வரவேற்றார். நன்றியுரை: மாநில செய்தித் தொடர்பாளர் கு.கா. பாவலன் தொடர்ந்து முத்துலிங்கம் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிப்பேரரசு வைரமுத்து கவியரங்கைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். சிறப்புக் கவிதை: மக்கள் கவி கபிலன் - கவிஞர்கள் என்.டி. ராஜ்குமார், நெல்லை  ஜெயந்தா, பேராசிரியர் ஹாஜாகனி தமிழ் மணாளன், பேரா. இரவிக்குமார், அம்பிகாகுமரன் ஆகியோர் கவிதை பாடினர். தோழர் வன்னிஅரசு வரவேற்புரையாற்றினார்.

கருத்தரங்கம் திண்டுக்கல் அய். லியோனி தலைமையில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஆர். மணி, மை.பா. நாராயணன், எழுத்தாளர் மீனாகந்தசாமி, பேராசிரியர் பர்வின் சுல்தான், கவிதா முரளிதரன், தமிழர் கேள்வி தி. செந்தில்வேல் ஆகியோர் கருத்துரையாற்றினார். இரண்டு அமர்வில் மற்றொரு பொழிவுக்கு கல்கி பிரியன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் . பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சமூகக் காப்பு அணியின் மாநில அமைப்பாளர் சோ. சுரேஷ்,. தோழர்கள் உடுமலை வடிவேலு, கலைமணி, சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

திராவிட இயக்கத்தில் சேர்ந்தால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம் என்று ஒரு முறை தந்தை பெரியாரிடம் ஒரு தோழர் கேட்டபோது, லாபம் இல்லை; நஷ்டம்தான் என்றார் தந்தை பெரியார். 'ஆதி' என்ற சொல் நட்டம் - நாம் எல்லோரும் திராவிடர்தான் என்று அவருக்கே உரித்தான முறையில் பதில் சொன்னார் தந்தை பெரியார்.

இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் - நாகர்களும் திராவிடர்களே என்றார் அண்ணல் அம்பேத்கர்.

'திராவிட மாடல்' பற்றி எல்லாம் இங்கே பேசினார்கள். 

'திராவிட மாடல்' என்றால் ஆரியத்துக்கு எதிரானதுதான் திராவிடம்! இதைவிட சிறப்பாகப் பொட்டில் அடிக்குமாறு சொல்ல வேண்டும் என்றால் 'பெரியார் எதிர்ப்பு' என்றால் 'திமுக எதிர்ப்பு' என்று பொருள். பெரியாரை எதிர்க்கிறவர்கள் தி.மு.க.வையும் எதிர்க்கிறார்கள் - எதிர்ப்பார்கள்.

ஸ்டாலினை அதிகமாக தாக்குகிறார்கள் - மோசமாக விமர்சிக்கிறார்களே - பெரியாரை அவமதிக்கிறார்களே  - அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன் "இந்த ஆட்சியே பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அடித்தளத்தில் வலிமையாக எழுந்து நிற்பதுதான் (கரஒலி அடங்க வெகு நேரமாயிற்று).

எங்கள் கொள்கையில் குறைந்த அளவுக்குக்கூட சமரசம் கிடையவே கிடையாது. இன்று இரவு டில்லிக்குப் போகிறேன் காவடி எடுக்க அல்ல! உறவுக்குக் கைகொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஒன்றிய அரசு  - மாநில அரசு என்ற நிலையில் தொடர்பு என்பது வேறு - திமுக -பிஜேபி கட்சி என்ற நிலை என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல.

2009இல் கலைஞர்  சொன்னது என்ன?

கூட்டணிக் கட்சிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தி.மு..வுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது அவர்களது எண்ணம். அதுபோல் 2009இல் ஒரு முயற்சி நடந்தது. அறிவாலயத்தில், தலைவர் கலைஞரைப் பார்த்து பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், 'விடுதலைச் சிறுத்தைகள் இந்தக் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா?' என்று.இதனைப்புரிந்து கொண்ட தலைவர் கலைஞர் சொன்னார். 'விடுதலைச் 'சிறுத்தைகள் இந்தக் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். எங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான உறவு என்பது வெறும் தேர்தல் உறவு அல்ல; இது கொள்கை ரீதியான உறவு' என்றார்.

 கலைஞர் அளித்த அங்கீகாரம்

"நாங்கள் பேசுகிற சமூகநீதியைத்தான் விடுதலைச் சிறுத்தைகளும் பேசுகிறார்கள். நாங்கள் விரும்புகிற சமத்துவத்தைத்தான் விடுதலைச் சிறுத்தைகளும் விரும்புகிறார்கள்என்று விளக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். எனக்குத் தெரிந்து 30 ஆண்டுக்காலம் அரசியல் பொதுவாழ்வில் நான் இருக்கிறேன். 'கூட்டணிக் கட்சியில் கொள்கை ரீதியான உறவு கொண்ட கட்சி' என்று தலைவர் கலைஞர் அவர்கள் எந்தக் கட்சிகளுக்கும் சான்றளிக்க வில்லை. ஆனால், 'விடுதலைச் சிறுத்தைகள் கொள்கை அடிப்படையில் உறவுகொண்ட கட்சி' என்று சான்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள்.'' விக்கிரவாண்டி செயல் வீரர்கள் கூட்டத் தில் எழுச்சித் தமிழர் திருமா.

- என்ன ஆச்சரியம்! இதே கருத்தை அட்சரம் பிறழாமல் முதலமைச்சரும் எழுச்சித் தமிழரும் திராவிடர் கழகத் தலைவரும் சொன்னதுதான்.

இந்த மணி விழாவின் செய்தியாக என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது மிக முக்கியம்.

"சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்!

சனநாயக சக்திகளை அய்க்கியப்படுத்துவோம்!"

இதைத்தான் பிறந்த நாள் மணி விழா செய்தியாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனை முற்றிலுமாக நான் வழி மொழிகிறேன். கொள்கையாகப் பிரகடனப்படுத்துகிறேன் என்று வரலாற்றைச் சிறப்பு மிக்க உரை ஒன்றை நிகழ்த்தினார். நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி அவர்கள்.

எழுச்சித் தமிழர் மணிவிழா  எழுச்சிக் காவியமாக அமைந்தது என்று ஒரு வரியில் கூறி அடக்கி விட முடியாது!

ஆசிரியர் வீரமணி 'எடுப்பு' - திருமாவளவன் 'தொடுப்பு' - முதலமைச்சரின் 'முடிப்பு' வெகு சிறப்பு! வெகு சிறப்பு!!

வெல்க திராவிட மாடல்!

No comments:

Post a Comment